Thursday, September 19

Spiritual eyes (Tamil) I தெய்வீகக் கண்கள்!

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஆதாரம்: மஹாபாரதம்

குருக்ஷேத்திர போர்க்களத்தில் ஒருபக்கம் பாண்டவ படைகளும், கெளரவ படைகளும் போருக்குத் தயாராக அணிவகுத்து நின்றனர். பீஷ்மர், கெளரவர் பக்கம் தலைமை தாங்க, திருஷ்டத்யும்னன் பாண்டவ படைக்கு தலைமை தாங்க, போர் ஆரம்பிக்க இருந்த நேரம்.

                போரின் மறுபக்கமோ , திருதராஷ்டிரர் அரண்மனையில் கவலைதோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தார் . அவரால் செய்யப்பட ஒன்றும் இல்லை. அவருடைய கவலையை பொதுவாக விதுரருடன் பகிர்ந்து கொள்வது வழக்கம். ஆனால் விதுரரும் அங்கிருந்து நீங்கி விட்டதால் , திருதராஷ்டிரர் சஞ்ஜயனை அழைத்தார். சஞ்ஜயனிடம், ஓ சஞ்ஜயா! , என்ன நடக்கிறது என்று எனக்கு கூறு. இரு படைகளும் குருசேத்திரத்தை அடைந்து விட்டனவா ? விதியின் சக்தி, இந்த வயதானவனின் முயற்சிகளை விட சக்தி வாய்ந்தது. என்னுடைய மகனை தடுத்து நிறுத்த முயற்சி செய்தும், நான் தோல்வி அடைந்தேன். ஏன் இந்த நிலை? துரியோதனனின் தவறுகளைத் தெரிந்திருந்தும், நான் அவனை அவற்றிலிருந்து தடுத்த நிறுத்த முடியவில்லையே? இந்த யுத்தம் தெய்வத்தினால் உண்டாக்கப்பட்டுள்ளது” என்று கூறினார்.

 சஞ்ஜயன் பதிலாக, “அரசே ! தன்னுடைய செயலின் பலனாக, துன்பங்களை அடையும் மனிதன் ஒருவன். தேவர்களையோ, விதியையோ, மற்றவர்களையோ, பழி சுமத்தக் கூடாது. நாம் ஒவ்வொருவரும், நம்முடைய செயல்களின் பலன்களை பதிலாகப் பெறுகிறோம்.

குருக்களின் தலைவனே, நீங்கள் நேர்மையாக செயல்பட தவறி விட்டீர்கள். நீங்கள் நேர்மையாக செயல்படுவீர்கள் என்று பாண்டவர்கள் நம்பியிருந்தனர். ஆனால் நீங்கள் அவ்வாறு செயல்படவில்லை. இப்பொழுது மிச்சம் இருப்பது, அனைத்து குருவம்சத்தின் வீரர்களும் மடிவதைக் கேட்பதே என்று கூறினார் .

இவ்வாறு சஞ்ஜயன் பேசிக்கொண்டிருக்கும் போது, வியாசதேவர் அந்த அறையில் திடீரென பிரவேசித்தார்.

 கடந்த, நிகழ், எதிர்காலம் என முக்காலத்தையும் பார்க்கக் கூடிய அந்த ரிஷி, திருதராஷ்டிரரிடம், “ஓ அரசே! உன்னுடைய புத்திரர்களும், மற்றைய மன்னர்களும், வாழ்வின் இறுதி நிலைக்கு வந்து சேர்ந்துள்ளனர். அவர்கள் யுத்தகளத்தில் கூடியுள்ளனர். அவர்கள் ஒருவரையொருவர் கொன்று தீர்ப்பர். காலத்தால் கொண்டுவரப்பட்ட, தவிர்க்கப்பட இயலாத இந்த மாறுதல்களை நினைவில் கொண்டு, கவலைப்படாது இருப்பாயாக. ஓ குழந்தாய் ! நீ யுத்தத்தைப் பார்க்க விரும்பினால், அதற்குரிய சக்தியை நான் தருகிறேன்’ என்று கூறினார்.

இதைக் கேட்டுப் பெருமூச்சுவிட்ட திருதராஷ்டிரர், “என்னுடைய புத்திரர்கள் இறப்பதைக் காண, நான் விரும்பவில்லை. ஒ முனிவரே ! யுத்தத்தை பற்றி நான் கேட்டால் மட்டும் போதும்” என்று பதில் அளித்தார்.

 அதற்கு பதிலாக வியாசதேவர்,

சஞ்ஜயனுக்கு நான் அந்த யுத்தத்தை பார்க்கும் சக்தியை அளிக்கிறேன். என்னுடைய கருணையால், குருக்ஷேத்திர யுத்தத்தில் நடக்கும் அனைத்தையும் சஞ்ஜயனால் பார்க்க இயலும். மறைக்கப்பட்ட விஷயங்களையோ, பகலிலோ, இரவிலோ அல்லது ஒருவருடைய மனதில் நினைக்கப்பட்ட விஷயங்களையோ, ஆக, மொத்தம் எல்லாவற்றையும் , சஞ்ஜயனுக்கு அளிக்கப்படும் தெய்வீகப் பார்வையால், சஞ்ஐயனால் அறிய முடியும். எனவே அரசே! சஞ்ஜயன் உங்களுக்கு யுத்தம் முழுவதையும் விளக்கிச் சொல்வான். யுத்தத்தில் நடைபெறும் எதுவும், சஞ்ஜயன் கண்களுக்கு புலப்படாமல் போகாது” என்று கூறினார்.

 மேலும் வியாசர், “ஆயுதங்கள் சஞ்ஜயனை வெட்டாது, அவனுக்குக் களைப்பும் தோன்றாது. கவல்கனியின் மகனான சஞ்ஜயன், உயிருடன் யுத்தத்தில் இருந்து திரும்பி வருவான். ஆகையால் கவலைப்படாதே, இது விதி ஆகையால் துயரத்திற்கு இடம் தராதே. இதனைத் தடுத்து நிறுத்துவது இயலாது. வெற்றியைப் பொறுத்தவரையில், அது நேர்மையானவர்களுக்கே போய்ச் சேரும்” என்று கூறி, வியாசர் அங்கிருந்து நீங்கினார்.

திருதராஷ்டிரரும், இவ்வார்த்தைகளை கேட்டபின், மறுபடியும் மறுபடியும் பெருமூச்சு விட ஆரம்பித்தார். பின் சஞ்ஜயனிடம், “சஞ்ஜயா, ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான, கோடிக்கணக்கான வீரர்கள், இந்த குருக்ஷேத்திரத்தில் ஒன்று சேர்ந்துள்ளனர். ஓ சஞ்ஜயா !நுணுக்கமான விளக்கத்துடன், அவர்களுடையநாட்டையும், நகரத்தையும், எனக்கு விளக்கிக் கூறுவாயாக. வியாசரின் அளவற்ற கருணையால் நீ தெய்வீகப் பார்வையும், ஞானக் கண்ணும் பெற்றுள்ளாய்” என்று கூறினார்.

 பின் சஞ்ஜயன், குருக்ஷேத்திரக் களத்தில் நடப்பதை, திருதராஷ்டிரருக்கு ஒவ்வொன்றையும் விளக்கத்துடன் கூற ஆரம்பித்தார்.

இவ்வாறாக வியாசரின் கருணையால், சஞ்ஜயன் தெய்வீக சக்தியை பெற்று, உள்ளும்புறமும். இரவும்பகலும் போர்க்களத்தில் நடக்கும் ஒவ்வொன்றையும் அறியும் சக்தியைப் பெற்றார்.

ஆகையால் , கிருஷ்ணர் பகவத்கீதை 11.8ல் , கூறுவதைப் போல், “உன்னுடைய தற்போதைய கண்களால் என்னை காண முடியாது. எனவே நான் உனக்கு திவ்யமான கண்களைத் தருகின்றேன்.” என்று கூறுவது போல், ஒருவர் பகவானாலோ அல்லது அவரது தூயபக்தர்களாலோ, தெய்வீக சக்தி அளிக்கப்பட்டால் ஒழிய, இவ்வாறாக தெய்வீக விஷயங்களை காண்பது அரிது.

Bhagavat Gita Tamil Full ISKCON Book 1

பகவான் கிருஷ்ணரின் கருணையால், தெய்வீக கண்கள் அளிக்கப்பட்ட அர்ஜூனன், பகவானின் விஷ்வரூபத்தை காண இயன்றது. அது போலவே பகவானின் அவதாரமான வியாசதேவர், சக்தி அளித்ததால் சஞ்ஜயனால் குருக்ஷேத்திரப் போர்க்காட்சிளை துல்லியமாக கண்டு, திருதராஷ்டிரருக்கு கூற இயன்றது.

மேலும் பகவத்கீதை 18.75 ல் சஞ்ஜயன், “வியாசரின் கருணையால், யோகங்களின் இறைவனான கிருஷ்ணர், அர்ஜூனனிடம்தாமே நடத்திய இந்த மிகமிக இரகசியமான உரையாடலை நான் நேரடியாகக் கேட்டேன்’ என்று வியாசரின் கருணையாலேயே கிருஷ்ணர், அர்ஜுனன் உரையாடலை தன்னால் கேட்க இயன்றது என்று உறுதிப் படுத்துகிறார்.

 தொடர்ந்து பகவத்கீதை 18.77 ல் சஞ்ஜயன், “மன்னனே! பகவான் ஸ்ரீ கிருஷ்ணருடைய அந்த அற்புத ரூபத்தை நினைத்து, நினைத்து, நான் மேன்மேலும் வியப்பில் மூழ்கி மீண்டும் மீண்டும் இன்பமடைகிறேன்” என்று கிருஷ்ணரின் விஸ்வரூபத்தையும் தரிசிக்கும் பாக்கியம் பெற்றதாக குறிப்பிடுகிறார்.

ஆகையால், பக்தர் அல்லது பகவானின் கருணை இல்லாது , யாராலும் பகவானை அறிய இயலாது. மேலும் பகவானின் செயல்களை புரியவோ, அறியவோ இயலாது.

1 Comment

  • S.sivapriya

    பகவான் கிருஷ்ணரின் கருணை எவ்வளவு என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியாது . ஹரே கிருஷ்ணா .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question