Friday, April 19

Pandava Nirjala Ekadasi (Tamil)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பாண்டவ நிர்ஜல ஏகாதசி

ஆனி மாதம், சுக்ல பட்சம், ஏகாதசி திதியை நிர்ஜலா ஏகாதசியாக கொண்டாடுவர்.. பாண்டவ நிர்ஜலா ஏகாதசியின் விரத மகிமையை நாம் காண்போம். 80 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் மிகவும் விந‌யத்துடன் சுவாரசியமான, பாபங்களை அழிக்கும் ஏகாதசி விரதக் கதைகளை கேட்டு மிகுந்த மனமகிழ்ச்சியில் திளைத்து இருந்தார்கள். அப்போது அனைவரும் வைகாசி -ஆனி மாதம் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசியின் கதையைக் கேட்க விருப்பம் தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து சூத முனிவர் அதைப் பற்றி சொல்ல ஆரம்பித்தார்.

“ஒரு முறை பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமசேனர் வியாசரிடம் ‘மதிப்பிற்குரிய பிதாமகரே ! மூத்த தமையனார் யுதிஷ்டிரர், அன்னை குந்தி, திரௌபதி, தம்பி அர்ஜூன், நகுலன், சகா தேவன் ஆகியோர் ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்து வருகிறார்கள். அதனால் அவர்கள், நானும் அன்று அன்னம் உட்கொள்ளக் கூடாதென தடுக்கிறார்கள். நான் அவர்களிடம் “என்னால் பக்தி சிரத்தையுடன் இறைவனுக்கு பூஜை செய்ய முடியும், தான தர்மம் செய்ய முடியும் ஆனால் உணவு உண்ணாமல் பசியுடன் இருக்க முடியாது” என்று கூறுகிறேன்’. இதைக் கேட்டு வியாசர் சொன்னார் – ” பீமசேனா ! அவர்கள் சொல்வது சரி தான். ஏகாதசி அன்று அன்னம் உட்கொள்ளக் கூடாது என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. நரகத்தை கெட்டது என்றும், ஸ்வர்க்கத்தை நல்லது என்றும் நீ நினைத்தால், ஒவ்வொரு மாதமும் வரும் இரண்டு ஏகாதசிகளிலும் அன்னத்தை உண்ணாமல் இரு.”

இதைக் கேட்டு பீமசேனர் வியாசரிடம் “பிதாமகரே, என்னால் ஒரு நாளில் ஒரு பொழுது கூட போஜனம் உட்கொள்ளாமல் இருக்கமுடியாது என்று தங்களிடம் முதலிலேயே சொல்லி இருக்கிறேன். அப்படியிருக்க ஒரு நாள் முழுவதும் உணவு உண்ணாமல் உபவாசம் இருப்பது என்பது மிகவும் கடினமானது.என்னுடைய வயிறு அக்னி வசிக்கும் இடமாகும். நான் அதிக உணவை உட்கொண்டால் தான் அக்னி சாந்தி ஆகும். மிகவும் பிரயத்தனம் செய்தால் வருடத்தில் ஒரு ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க முடியும். எனக்கு சுவர்க்கப் பிராப்தியைத் தரும் ஒரு ஏகாதசி விரதத்தைப் பற்றி கூறுங்கள். அதைக் கடைபிடித்து நானும் பகவானின் அருளுக்கு பாத்திரமாவேன்’ என்று கூறினான்.அதற்கு வியாசர் ‘வாயுபுத்ரா ! தவத்தில் சிறந்த ரிஷிகளும் முனிவர்களும் ஏராளமான சாஸ்திர முறைகளை வகுத்துள்ளனர். கலியுகத்தில் மனிதர்கள் அந்த சாஸ்திர வழிமுறைகளை நியமத்துடன் அதற்குரிய விதிப்படி கடைபிடித்தாலே நிச்சயம் முக்தி அடையலாம். வழிமுறைகளை கடைபிடிப்பதற்காக ஆகும் சிரமமும் குறைவு தான். அந்த புராண வழிகளின் சாரமானது என்னவென்றால் மனிதர்கள் மாதத்தின் இரண்டு பட்சங்களிலும் (சுக்ல, கிருஷ்ண) வரும் ஏகாதசி அன்று விரதம் அனுஷ்டிப்பது. இதனால் அவர்களுக்கு சுவர்க்கப்பிராப்தி கிட்டும்.

பீமசேனா, மேலும் கேள். க்ருஷ்ண மற்றும் ஜேஷ்ட மாத சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி அன்று நிர்ஜலா (நீர் அல்ல அதாவது நீர் அருந்தாமல்) விரதத்தை கடைபிடிக்க வேண்டும். ஏகாதசி அன்று ஸ்நானம் செய்யும் போதும், ஆசமனம் செய்யும் போதும் வாயில் நீர் சென்றால் அதற்கு தோஷம் இல்லை. ஆசமனத்தினால் சரீர சுத்தி ஆகிவிடுகிறது. ஆனால் ஆசமனத்தின் போது 6 தேக்கரண்டி நீருக்கு மேல் உட்கொள்ளக் கூடாது. அப்படி ஆசமனத்தில் 6 அளவிற்கு மேல் உட்கொள்ளும் நீர் மதுபானமாக கருதப்படுகிறது. போஜனம் (உணவு) உட்கொள்ளக் கூடாது. சாப்பிடுவதால் விரதத்திற்கு பங்கம் உண்டாகிறது.

ஏகாதசி தினத்தன்று சூரிய உதயத்திலிருந்து சூரிய அஸ்தமனம் வரை நீர் அருந்தாமல் உபவாசம் இருந்தால் 12 மாத ஏகாதசி விரதத்தை கடைபிடித்த பலன் கிட்டும். மறுநாள் துவாதசி அன்று சூரிய உதயத்திற்கு முன் எழுந்து குளித்து பசியுடன் உள்ள (அதாவது விரதத்தை அனுஷ்டித்த) பிராமணனுக்கு போஜனம் அளிக்க வேண்டும். பிறகு தான் உணவு உண்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். பீமசேனா, பகவான் மஹாவிஷ்ணு எனக்கு உபதேசித்ததை நான் உனக்கு கூறுகிறேன், கவனமாக கேள். ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்யம், சகல புண்ணிய தீர்த்தங்களிலும் நீராடுவதாலும், தானங்கள் செய்வதாலும் கிடைக்கும் புண்யத்திற்கு இணையானது. அன்று ஒரு நாள் நீர் அருந்தாமல் உபவாசம் இருப்பதால் அனைத்து பாபங்களிலிருந்தும் மனிதனுக்கு முக்தி கிடைக்கிறது. நிர்ஜலா ஏகாதசி விரதத்தை நியமத்துடன் கடைபிடித்தவரின் இறுதி காலத்தில் பயங்கரமான யமகிங்கரர்கள் காட்சி அளிக்க மாட்டார்கள். மாறாக சுவர்க்கத்திலிருந்து பகவான் மஹாவிஷ்ணுவின் தூதர்கள் வந்து புஷ்பக விமானத்தில் அமர்த்தி சுவர்க்க லோகத்திற்கு அழைத்துச் செல்வர். இவ்வுலகில், மிகவும் சிறந்த விரதம் நிர்ஜலா ஏகாதசி விரதமாகும். நியமத்தோடு நீர் அருந்தாமல் விரதத்தை கடைபிடிக்க வேண்டும். அன்று ” ஹரே கிருஷ்ண ” என்னும் மந்த்ரத்தை சதா சர்வ காலமும் உச்சரித்துக் கொண்டே இருக்கவேண்டும். அன்று பசு தானம் செய்ய வேண்டும். நிர்ஜல ஏகாதசி விரதத்தை தொடங்குவதற்கு முன் ஸ்ரீ விஷ்ணுவை பூஜை செய்து, விந‌யத்துடன் பகவானிடம் ” ஹே பிரபு, பரம தயாளா, கருணாமூர்த்தி, நான் இன்று நிர்ஜலா விரதம் இருக்கப் போகிறேன், இன்று முழுதும் உணவு, நீர், பானம் எதுவும் அருந்தாமல் உபவாசம் இருந்து அடுத்த நாள் தான் விதிமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி போஜனம் உண்பேன். விரதத்தை சிரத்தையுடனும், பக்தியுடனும் கடைபிடிப்பேன். நான் செய்த பாபங்களை அழித்து எனக்கு விடுதலை அளித்து முக்தி அருள வேண்டும்” என்று பிரார்த்தனை செய்ய வேண்டும்.அன்று நீர் நிரம்பிய அடர்த்தியான வஸ்த்ரத்தினால் மூடப்பட்ட சுவர்ணத்துடன் கூடிய ஏதாவது நல்ல பாத்திரத்தை தானம் செய்ய வேண்டும்.எவரொருவர் இவ்விரத வழிமுறைகளின்படி ஸ்நானம், தவம், ஜபம் முதலியவற்றை செய்கின்றாரோ, அவருக்கு கோடி பொன்னை தானம் தந்த பலன் கிட்டும். எவரொருவர் அன்று ஹோமம், யக்ஞம் ஆகியவைகளைச் செய்கின்றாரோ, அதனால் கிடைக்கும் பலன்களை பற்றி வர்ணிக்க இயலாது. நிர்ஜலா ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர், மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவார். எவரொருவர் அன்று அன்னம் உட்கொள்கிறாரோ, அவர் சண்டாளருக்கு சமமாக கருதப்படுவார். அவர் இறுதியில் நரகத்தை அடைவார். பிரம்மஹத்தி பாபம் செய்தவர், மதுபானம் அருந்துபவர், திருடுபவர், குருவை நிந்திப்பவர், பொய் பேசுபவர்கள் கூட இவ்விரதத்தை அனுஷ்டிப்பதால் சுவர்க்கப் பிராப்தி அடைவர்.

ஹே! குந்தி புத்ரா ! இவ்விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் ஆண், பெண் ஆக யாராக இருந்தாலும், அவர்கள் கீழ் உள்ள விதிகளை கடைப்பிடிக்க வேண்டும்.முதலில் பகவான் மஹாவிஷ்ணுவிற்குப் பூஜை செய்ய வேண்டும். பிறகு கோ தானம், பிராம்மண போஜனம், இனிப்பு பொருட்கள் தானம் அளித்தல் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.இக்கதையை பக்திபூர்வமாக‌க் கேட்பவர் மற்றும் படிப்பவர் அனைவரும் சொர்க்கத்திற்கு செல்லும் பாக்கியத்தைப் பெறுவர்.

விரதக் கதையின் சாரம்

பக்தர்கள் தங்கள் பலவீனங்களை தங்களது குரு அல்லது குடும்பத்தின் மூத்தவர்களிடமிருந்து மறைக்கக் கூடாது.நம்பிக்கையுடன் தங்களது பிரச்னைகளை அவர்களிடம் எடுத்துரைப்பதால், பிரச்னைகளுக்கு சரியான தீர்வு கிட்டும்.நம்பிக்கையுடன் அந்த தீர்வை அமல்படுத்த வேண்டும்.பீமசேனர் உபவாசம் இருக்க இயலாத தன்னுடைய பலவீனத்தை தன்னுடைய பிதாமகரிடம் மறைக்காமல் கூறியதால், சரியான தீர்வாக நிர்ஜலா ஏகாதசி விரதம் பற்றி அறிய முடிந்தது. அதை சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் கடைபிடித்ததால், அனைத்து மாதங்களிலும் ஏகாதசி விரதம் அனுஷ்டித்த பலன் கிட்டி, மற்ற பாண்டவர்களுடன் ஸ்வர்க்கத்திற்கு அதிபதி ஆக முடிந்தது. வியாசரை வணங்கிய பீமன் நிர்ஜல ஏகாதசி அன்று தண்ணீர் கூடக் குடிக்காமல் விரதம் இருந்தான். மறுநாள் துவாதசி அன்று உணவு உண்டான்.அன்று முதல் அந்த துவாதசி “பாண்டவ துவாதசி” என்றும், பீமன் விரதம் இருந்த அந்த ஏகாதசி “பீம ஏகாதசி” என்றும் அழைக்கப்படலாயிற்று. துன்பங்கள் அனைத்தையும் போக்கும் ஏகாதசி இது.

+9

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question