ஆதாரம் : மஹாபாரதம் ( அனுஸாஸன் பர்வம்: பகுதி 59 )
ஒரு சமயம் கிருஷ்ணர் துவாரகையில் அரசாண்ட காலம் , அரியணையில் கிருஷ்ணர் அமர்ந்திருந்த போது, அவருடைய மகனான பிரத்திம்யுனர், சில சாதுக்களால் கோபப்படுத்தப் பட்டு கிருஷ்ணரிடம் வந்து, “மதுசூதனா! சாதுக்களை வழிபடுவதால், என்ன பலன் கிடைக்கும் ?. அதன் மூலமாக இங்கும், இதற்கு பின்பும் என்ன பலனை ஒருவர் அடைய முடியும். எனக்கு தயவு செய்து , தெளிவாக விளக்கிச் சொல்லுங்கள். இவ்விஷயத்தில் என் மனம் குழப்பம் அடைந்துள்ளது” என்று வினவினார்.
இவ்வாறு பிரத்திம்யுனர் சொல்லக் கேட்ட கிருஷ்ணர், பிரத்திம்யுனரிடம், ” ருக்மணி மைந்தனே ! சாதுக்களை வழிபடுவதால், ஒருவர் அடையக்கூடிய செல்வாக்கை, நான் கூறுகிறேன். யார் ஒருவர், தர்ம, அர்த்த, காமத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது மோட்சத்தை அடைய விரும்புகின்றாரோ அல்லது புகழும், செல்வாக்கும் அடைய விரும்புகின்றாரோ அல்லது தீராத நோயை தீர்க்க விரும்புகின்றாரோ அல்லது தேவர்களையும், பித்ருக்களையும் வழிபட விரும்புகின்றாரோ, அவர் சாதுக்களை திருப்திபடுத்த வேண்டும். ஏனெனில் அவர்களே மகிழ்ச்சி யையும், துக்கத்தையும் தரக் கூடியவர்கள்.
ருக்மணி மைந்தனே, இவ்வுலகிலோ மறுஉலகிலோ எவையெல்லாம் உடன் பாட்டுக்குரியவையோ அவை எல்லாம் சாதுக்களிடம் இருந்தே தோன்றுகிறது. இதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. சாதுக்களை வழிபடுவதால், சிறந்த சாதனைகளும், பெயரும், புகழும், பலமும் கிடைக்கும். இப்பிரபஞ்சத்தை ஆள்பவர்களோ, அல்லது உலகின் குடிமக்களோ, எல்லோருமே சாதுக்களை வழிபடுபவர்களே. பின் எவ்வாறு மகனே நாம் உலகின் ஆளுநர்களாக கருதி, அவர்களை ஒதுக்க முடியும்.
மகனே! சாதுக்களைக் குறியாகக் கொண்ட கோபத்தைத் தழுவாதே. இவ்வுலகிலும் மறுஉலகிலும் சாதுக்கள் மதிக்கப்படுகின்றனர். பிரபஞ்சத்தின் அனைத்து ஞானமும் அவர்களுக்கு உண்டு. அவர்கள் கோபப்பட்டால் எல்லோரையும் பொசுக்கி சாம்பலாக்கும் சக்தி உடையவர்கள். அவர்கள் தங்கள் திறமையால், வேறு உலகங்களையும், அதன் ஆளுநர்களையும் கூட உருவாக்கக் கூடியவர்கள். பின் ஏன் ? சரியான ஞானம் உள்ளவர்கள், அவர்களை மரியாதையாக நடத்தக் கூடாது” என்று கூறினார் .
மேலும் கிருஷ்ணர் தொடர்ந்து , ” முன்னொரு முறை, என்னுடைய வீட்டில் துர்வாச முனிவர் சிலகாலம் வாழ்ந்தார். கிழிந்த உடைகளை அணிந்து , கையில் வில்வ மரக்குச்சியுடன் இருந்தார். நீண்டு வளர்ந்த தாடியுடனும், மிக மிக மெலிந்த உடலுடனும் இருந்தார். உலகத்தின் மிக உயர்ந்த மனிதரை விட உயரமாக இருந்தார். தேவ லோகங்களுக்கும் மற்றும் உயர் லோகங்களுக்கும். அவர் அலைந்து திரிந்தவண்ணம், அரச சபைகளிலும், பொது இடங்களிலும், ” யார் துர்வாச முனிவராகிய என்னை, அவர்களுடைய வீட்டில் விருந்தாளியாக சில காலம் வைத்து விருந்தோம்ப தயாராக உள்ளனர்?. நான் சிறிய குறைபாடுகளைகண்டாலும் மிக அதிகக் கோபப்படுவேன். என்னுடைய இந்நிலையை கேட்ட பின்னும், யார் எனக்கு அடைக்கலம் தர தயாராக உள்ளனர். சொல்லப் போனால், விருந்தாளியாக எனக்கு அடைக்கலம் தருபவர்கள், என்னைக் கோபப்படுத்தும் விஷயம் எதையும் செய்யக் கூடாது” என்று கூறியவாறு அலைந்து திரிந்தார்.
யார் ஒருவருக்கும், அவரைதன்வீட்டில், விருந்தாளியாக வைக்க துணிவு இல்லாததைக் கண்ட நான், என்னுடைய அரண்மனையில் அவரை என் விருந்தாளியாக ஏற்றேன். சிலநாட்களில் ஆயிரம் பேர் உண்ணக்கூடிய உணவைதான் ஒருவரே உண்பார். சில நாட்களில் மிக மிகக் குறைவாக உண்பார். சில நாட்கள், வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பி வர மாட்டார். சில சமயங்களில், வேடிக்கையாக சிரிப்பார், சில சமயங்களில் காரணமற்று அழுவார். ஒரு நாள், அவருக்காக ஒதுக்கப்பட்ட அறையில் உள்ள அனைத்து படுக்கைகளையும், விரிப்புகளையும் தீயினால் கொளுத்தி விட்டு வெளியே சென்று விட்டார்.
அதன்பின் என்னை சந்தித்து, “ஓ கிருஷ்ணா , எவ்வித தாமதமும் இல்லாமல் நான் பாயாசம் உண்ண விரும்புகிறேன்” என்றார். அவருடைய மனநிலையை ஏற்கனவே அறிந்திருந்த நான், என்னுடைய வேலையாட்களை எல்லா விதமான உணவுகளையும் பானகங்களையும் தயாரித்து வைத்திருக்கச்சொல்லி இருந்தேன். ஆகையால் என்னிடம் அவர், பாயாசத்தை கேட்டவுடன், சூடான அப்பாயாசத்தை வரவழைத்து, துர்வாச முனிவருக்கு அளித்தேன். அதில் சிறிது உண்டபின், விரைவாக என்னிடம் அவர், “கிருஷ்ணா ! இந்த பாயசத்தை எடுத்து உன் கை கால்களில் எல்லாம் பூசிக் கொள்வாயாக” என்றார். நானும் எவ்வித தயக்கமும் இன்றி, அவர் சொன்னபடி செய்தேன். என்னுடைய தலை மற்றும் உடல் முழுவதையும் , அவர் உண்டு மிஞ்சிய பாயாசத்தால் பூசிக் கொண்டேன்.
அந்நிலையில் அம்முனிவர் அழகிய முகம் கொண்ட உன்னுடைய தாயார் ருக்மணி அங்கு நின்று கொண்டிருப்பதைக் கண்டார். பின் சிரித்துக் கொண்டே, அவள் உடலையும் முழுவதும் பாயாச மயமாக்கிவிட்டார். அதன் பின் உடல் முழுவதும் பாயசத்தினால் பூசப்பட்டிருந்த உன்னுடைய தாயாரை, குதிரைக்குப் பதிலாக ஒரு ரதத்தில் பூட்டினார். பின் அந்த ரதத்தில் ஏறி, என்னுடைய அரண் மனையை விட்டு நீங்கினார். என் கண் முன்பாகவே, இளமை பொருந்திய என்னுடைய ருக்மணியை, மனிதர்களை சுமந்து செல்லும் ரதத்தை இழுத்துச் செல்லும் ஓர் மிருகமாக நடத்தினார். இதைக் கண்டும், நான் சிறிதளவு கூட வருத்தமோ அல்லது அந்த ரிஷிக்கு துன்பம் தரவோ நினைக்கவில்லை.
உண்மையில், ருக்மணியை ரதத்தில் பூட்டிய துர்வாச முனிவர், வெளியே சென்று ராஜபாட்டையில் ரதத்துடன் செல்ல விரும்பினார். வித்தியாசமான இந்த நிகழ்ச்சியைக் கண்டு கோபமடைந்த தசஹர்கள், “ருக்மணியை ரதத்தில் பூட்டிய பின் வேறு யார் இவ்வுலகில் உயிருடன் இருக்க முடியும். உலகம் இந்த சாதுக்களால் நிரம்பட்டும். வேறு யாரும் இங்கு பிறவி எடுக்க வேண்டாம். பாம்பின் விஷம் கொடியது ; ஆனால் அதிலும் கொடியவர் சாது. இந்த சாது எனும் பாம்பால் கடிக்கப்பட்ட ஒருவருக்கு வைத்தியம் செய்ய யாரும் இல்லை ” என்று புலம்பினர்.
தடுக்க முடியாத வகையில் , துர்வாசர் , ருக்மணியை குதிரையாகப் பூட்டிய ரதத்தில் அமர்ந்து, ராஜபாட்டையில் செல்லும் போது, ருக்மணி பல தடவை தடுமாறி கீழே விழுந்தார். அது கண்ட முனிவர் கோபமடைந்து , சாட்டை யால் அடித்து வேகமாகச் செல்லுமாறு கூறினார். இறுதியில் அந்த ரதத்தில் இருந்து இறங்கி, பாதையற்ற நிலத்தில் வேகமாக ஓடினார். “புனிதமானவரே ! எங்களிடம் திருப்தி அடையுங்கள்” என்று அவரைநாங்கள் பின்தொடர்ந்தோம்.
எங்களை கண்ட துர்வாசர், ” கிருஷ்ணா ! உம்முடைய இயற்கையான சுபாவத்தினால் கோபத்தை அடக்கி விட்டாய். ஓ கோவிந்தா ! உம்மிடம் சிறிதளவு குறையையும் நான் காணவில்லை. உம்மிடம் முழுவதும் நான் திருப்தி அடைந்தேன். நீ விரும்பும் வரங்களை என்னிடம் கேட்பாயாக” என்று கூறினார். மேலும், “நான் யாரிடமேனும் திருப்தி அடைந்தால், என்னுடைய முழுசக்தியையும் அவர்களுக்கு நான் கொடுப்பேன். ஒருவர் விருப்பமான உணவை எவ்வாறு விரும்புகிறாரோ, அவ்வாறே அவ்விருப்பம் இருக்கும் வரை, அவர்கள் உன்னையும் விரும்பு வார்கள். நேர்மை உலகில் இருக்கும் வரை உன்னுடைய சாதனைகளின் புகழும் நிலைத்திருக்கும். நான் அழித்தவை எல்லாம் மீண்டும் திரும்ப வரட்டும். நீ விரும்பும் வரை, பாயசத்தால் பூசப்பட்ட உன் உடலின் அனைத்து அங்கங்கள் மூலமாக , வரக்கூடிய சாவின் பயம் உன்னை அணுகாதிருக்கட்டும். மகனே உன்னுடைய உள்ளங்கால் களில் ஏன் பாயசத்தை தடவவில்லை . அவ்வாறு செய்யாததால், என் விருப்பத்திற்கு மாறாக நீ செயல் பட்டிருக்கிறாய்” என்று கூறினார். அவ்வாறு அவர் பேசி முடித்தவுடன், என்னுடைய உடல் ஒளியுடனும், மிக அழ குடனும் மாறியது. ருக்மணியை அணுகிய துர்வாசமுனி, அவளிடம் – திருப்தி அடைந்து, “அழகிய பெண்ணே! பெண்ணினத்தில் நீ பெயர் பெற்றவளாய் ஆவாய். பெரும் புகழும், சாதனைகளும் உன்னுடையவை ஆகட்டும். முதுமையும், நோயும் உன்னை அணுகாது. கேசவனின் 16 ஆயிரம் மனைவியரில் நீயே முதன்மையானவளாக ஆகக் கடவாய். இறுதியாக , உலகில் இருந்து நீங்கும் காலம் வரும்பொழுது, கிருஷ்ணரின் இணைபிரியா துணைவியாக, அதன் பின்னும் ஆவாயாக” என்று வரம் அளித்தார்.
பின் துர்வாச முனி, அவ்விடத்தைவிட்டு நீங்கினார். நானும் ,உன் தாயாரும் ஆனந்தம் நிரம்பிய இதயத்துடன் எங்களுடைய அரண்மனைக்கு திரும்பினோம். ரிஷியால் அழிக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும், புதியவையாக அங்கு தோன்றியிருப்பதைக்கண்டோம்” என்று கிருஷ்ணர் சாதுக்களுக்கு சேவை செய்வதன் மகத்துவத்தை தன் மகன் பிரத்தியும்னனுக்கு எடுத்துரைத்தார்.
இவ்வாறே ஒரு சமயம் நாரதர், துவாரகைக்கு விஜயம் செய்த பொழுதும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தான் கடவுளாக இருந்தும், நாரதரை ஆசனத்தில் அமர வைத்து, பாதம் கழுவி பூஜை செய்து, அவரை முழு மரியாதையுடன் வரவேற்றார். இவ்வாறாகத்தான் அரசனாக இருந்ததால், அரசனுக்குரிய கடமையான சாதுவுக்குரிய மரியாதையைக்காட்டினார் .
சாதுசேவை சாஸ்திரங்களின் கட்டளை. ஆகையால், கிருஷ்ணர், தான்கடவுளாக இருந்தும் , தனக்கு எவ்விதமான கடமைகளும் இல்லாவிட்டாலும், தான் மற்றவர்களுக்கு வழிகாட்டவேண்டும் என்று, சாஸ்திரங்களில் கூறப்பட்ட அனைத்து கட்டளைகளையும் நிறைவேற்றினார். அதில் வரக்கூடிய இன்பதுன்பங்களைப் பற்றிக் கவலைப்படாது, தன்னுடைய அரசன் என்ற நிலைக்கும் , குடும்பம் என்ற கிரஹஸ்த ஆஸ்ரமத்திற்கும் ஒப்ப, தன் கடமைகளை நிறைவேற்றினார்.
இதனையே பகவத்கீதை 3.22 ல் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் , “பிருதாவின் மகனே, மூவுலகங்களிலும் நான் செய்ய வேண்டிய கடமை ஏதுமில்லை. எனக்கு தேவையோ, நான் அடைய வேண்டியதோ ஏதுமில்லை. இருந்தும் நான் விதிக்கப்பட்ட கடமைகளில் ஈடுபட்டுள்ளேன்’ என்று கூறுகிறார் .
பகவானே விதிக்கப்பட்ட கடமைகளைச் செய்து வரும் போது, பந்தப்பட்ட ஆத்மாக்களான நாமும், நமக்கென்று விதிக்கப்பட்ட கடமைகளில் இருந்து விலகக் கூடாது என்பது நியதி.
எங்கும் எல்லாம் கிருஷ்ண மயம்
இந்தப் பதிவை படித்ததன் மூலம் எங்கும் கொட்டி கிடக்கும் கிருஷ்ணரின் கருணையில் ஒரு துளி அமிர்தம் பெற்ற பாக்கியம் அடைந்தேன்
கிருஷ்ணபக்தி அற்புதமானது. அந்த தேவாமிர்தத்தை அனுபவிப்பவர்கள் அதிஷ்டசாலிகள். ஹரே கிருஷ்ணா .
ஹரே கிருஷ்ணா..
பாயசத்தை பாதத்தில் பூசி கொள்ளாததால் பின்பு வேடன் விட்ட அம்பு பகவானின் பாதத்தில் தைத்து பகவான் இவ்வுலகை விட்டு நீங்க காரணமாயிற்று.