மாத்ரா-ஸ்பர்ஷாஸ் து கௌந்தேய
ஷீதோஷ்ண-ஸுக -து:க-தா:
ஆகமாபாயினோ (அ)நித்யாஸ்
தாம்ஸ் திதிக்ஷஸ்வ பாரத
Synonyms:
மாத்ரா-ஸ்பர்ஷா: — புலன்மய உணர்வு; து — மட்டுமே; கௌந்தேய — குந்தியின் மகனே; ஷீத — குளிர்; உஷ்ண— கோடை; ஸுக — சுகம்; து:க — துக்கம்; தா:-தருவது, — ஆகம—தோன்றுகின்ற; அபாயின: — மறைகின்ற; அநித்யா: — நிலையற்ற; தான் — அவற்றையெல்லாம்; திதிக்ஷஸ்வ — பொறுத்துக் கொள்ள முயற்சி செய்; பாரத— பரதகுலத் தோன்றலே.
Translation:
குந்தியின் மகனே, இன்ப துன்பங்களின் நிலையற்ற தோற்றமும் காலப் போக்கில் ஏற்படும் மறைவும், கோடையும் குளிரும் பருவ காலத்தில் தோன்றி மறைவதைப் போன்றதாகும். புலன்களின் உணர்வாலேயே அவை எழுகின்றன; எனவே, பரத குலத் தோன்றலே, இவற்றால் பாதிக்கப்படாமல், பொறுத்துக் கொள்ளக் கற்றுக் கொள்.
Purport:
கடமையை முறையாகச் செயலாற்றுகையில் நிலையற்ற இன்ப துன்பங்கள் தோன்றி மறைவதைப் பொறுத்துக்கொள்ள ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும். வேத நியதிப்படி ஒருவன் மாக (மார்கழி, தை) மாதத்திலும் அதிகாலையில் நீராடுதல் அவசியம். அச்சமயத்தில் குளிர் அதிகமாக இருக்கும்போதிலும், மத நியமங்களைக் கடைப்பிடிப்பவன் குளிப்பதற்குத் தயங்குவதில்லை. அதுபோல, கோடையின் வெப்பம் மிகுந்த காலமான, சித்திரை, வைகாசி மாதங்களிலும் சமையலறையில் நுழைந்து சமைப்பதற்குப் பெண் தயங்குவதில்லை. பருவ கால அசௌகரியங்களுக்கு இடையிலும் தனது கடமையை ஒருவன் செய்தாக வேண்டும். அதுபோல, சத்திரியனின் தர்மம் போரிடுதல் என்பதால், உறவினர் அல்லது நண்பருடன் போரிட வேண்டியிருப்பினும், தனக்கு விதிக்கப்பட்ட கடமையிலிருந்து அவன் பிறழக் கூடாது. ஞானத்தின் தளத்திற்குத் தன்னை உயர்த்திக் கொள்வதற்கு ஒருவன் தர்மத்தின் சட்டதிட்டங்களை பின்பற்றியே ஆக வேண்டும்; ஏனெனில், ஞானத்தினாலும் பக்தியினாலும் மட்டுமே மாயையின் (அறியாமையின்) பிடியிலிருந்து விடுதலை பெற முடியும்.
அர்ஜுனனுக்குக் கொடுக்கப்பட்ட இரண்டு பெயர்களும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ‘கௌந்தேய ‘ என்றழைப்பது தாயின் வழியில் அவனுக்கு இருந்த இரத்த சம்பந்தத்தையும், ‘பாரதா ‘ என்றழைப்பது தந்தை வழியில் அவனுக்கு இருக்கும் பெரும் சிறப்பையும் குறிக்கின்றது. இரு வழியிலும் அவன் மிகச்சிறந்த குலப்பெருமை உடையவன். அத்தகு குலப்பெருமை கடமையை ஒழுங்காக நிறைவேற்றும் பொறுப்பைக் கொடுக்கின்றது; எனவே, அவனால் போரைப் புறக்கணிக்கவே முடியாது.