Friday, March 29

பகவத் கீதை – 11.33

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தஸ்மாத் த்வம் உத்திஷ்ட யஷோ லபஸ்வ
ஜித்வா ஷத்ரூன் புங்க்ஷ்வ ராஜ்யம் ஸம்ருத்தம்
மயைவைதே நிஹதா: பூர்வம் ஏவ
நிமித்த-மாத்ரம் பவ ஸவ்ய-ஸாசின்
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்


தஸ்மாத்—எனவே; த்வம்—நீ; உத்திஷ்ட—எழு; யஷ:—புகழ்; லபஸ்வ—இலாபமடை; ஜித்வா—வென்று; ஷத்ருன்—எதிரிகளை; புங்க்ஷ்வ—அனுபவி; ராஜ்யம்—ராஜ்யத்தை; ஸம்ருத்தம்—வளமான; மயா—என்னால்; ஏவ—நிச்சயமாக; ஏதே—இவர்களெல்லாம்; நிஹதா:—கொல்லப்பட்டு விட்டனர்; பூர்வம் ஏவ—ஏற்பாட்டின்படி; நிமித்த-மாத்ரம்—காரணமாக மட்டும்; பவ—ஆவாயாக; ஸவ்ய-ஸாசின்—ஸவ்யஸாசியே.

மொழிபெயர்ப்பு
எனவே, எழுந்து போரிடத் தயாராகு. உனது எதிரிகளை வென்று, புகழுடன் வளமாக அரசினை அனுபவிப்பாயாக. எனது ஏற்பாட்டால் இவர்கள் அனைவரும் ஏற்கனவே மரணத்தைக் கண்டுவிட்டனர். எனவே, ஸவ்யஸாசியே, போரில் ஒரு கருவியாக மட்டும் செயல்படுவாயா
க.

பொருளுரை
ஸ்வ்ய-ஸாசின் எனும் சொல், போர்க்களத்தில் மிகவும் திறமையாக அம்பு எய்தக் கூடியவனைக் குறிக்கின்றது; எனவே, தனது எதிரிகளைக் கொல்வதற்கான அம்புகளை செலுத்துவதில் நிபுணனாகத் திகழும் அர்ஜுனன் இப்பெயரினால் அழைக்கப்படுகின்றான். நிமித்த-மாத்ரம், “கருவியாக ஆவாயாக” எனும் சொல்லும் மிக முக்கியமானது. முழு உலகமும் முழுமுதற் கடவுளின் திட்டப்படி இயங்கி வருகின்றது. போதிய அறிவில்லாத முட்டாள் மக்கள் மட்டுமே, இயற்கை திட்டமின்றி இயங்குவதாகவும் உலகிலுள்ள அனைத்தும் தானாகத் தோன்றியதாகவும் எண்ணுகின்றனர். பெயரளவு விஞ்ஞானிகள் பலர், படைப்பினைப் பற்றி கருத்துக் கூறும் போது, ‘இப்படி இருந்திருக்கலாம்,’ ‘அப்படி இருக்கலாம்’ என்றெல்லாம் கூறுகின்றனர். ஆனால், ‘இருக்கலாம்,’ ‘இருந்திருக்கலாம்’ என்ற கேள்விக்கே இடமில்லை. இந்த ஜடவுலகில் ஒரு குறிப்பிட்ட திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகின்றது. அந்தத் திட்டம் என்ன? கட்டுண்ட ஆத்மாக்கள் முழுமுதற் கடவுளின் திருநாட்டிற்குத் திரும்பிச் செல்வதற்கான ஒரு வாய்ப்பே இந்தப் பிரபஞ்சத்தின் தோற்றம். அவர்கள் இந்த ஜடஇயற்கையை கட்டுப்படுத்த முயற்சி செய்து வருகின்றனர், அத்தகு அதிகார மனப்பான்மை இருக்கும் வரை அவர்கள் கட்டுண்ட வாழ்விலேயே செயல்படுவர். ஆனால் பரம புருஷரின் திட்டத்தைப் புரிந்து கொண்டு, கிருஷ்ண உணர்வை வளர்ப்பவன் மிகவும் புத்திசாலியாவான். பிரபஞ்சத் தோற்றத்தின் படைப்பும் அழிவும், இறைவனின் பரம ஆணையின் கீழ் செயல்படுகிறது. இவ்வாறாக, குருக்ஷேத்திர போரும் இறைவனின் திட்டப்படியே நடக்கின்றது. அர்ஜுனன் போரிட மறுத்தான், ஆனால் பரம புருஷரின் விருப்பத்தின் அடிப்படையில் அவன் போரிட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறான். அப்போது அவன் மகிழ்ச்சியாக வாழ முடியும். ஒருவன் பூரண கிருஷ்ண உணர்வுடன் தனது வாழ்வை பகவானின் திவ்யமான தொண்டிற்காக அர்பணித்தால், அவன் பக்குவமானவன் ஆவான்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question