Wednesday, October 16

Lord Krishna gives Memory & forgetfulness (Tamil) Story / நினைவோ, மறதியோ அளிப்பவர் கிருஷ்ணரே!

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


ஸர்வஸ்ய சாஹம் ஹ்ருதி ஸன்னிவிஷ்டோ
மத்த: ஸ்ம்ருதிர் க்ஞானம் அபோஹனம் ச
வேதைஷ் ச ஸர்வைர் அஹம் ஏவ வேத்யோ
வேதாந்த-க்ருத் வேத-வித் ஏவ சாஹம்

நான் எல்லாருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன், என்னிடமிருந்தே ஞாபகசக்தியும் அறிவும் மறதியும் உண்டாகின்றன. எல்லா வேதங்களாலும் அறியப்பட வேண்டியவன் நானே. உண்மையில், வேதாந்தத்தை தொகுத்தவனும் வேதங்களை அறிபவனும் நானே.
– பகவத் கீதை 15.15


குருக்ஷேத்திர யுத்தத்தின் பதினான்காம் நாளில் நடந்த நிகழ்ச்சி இது.

 முந்தைய நாளில் அபிமன்யு கொல்லப்பட்டதால், ஐயத்ரதனை மறுநாள் சூரிய அஸ்தமனத்திற்குள் கொல்வதாக சபதம் எடுத்த அர்ஜூனன், கடுமையாக போர் செய்தான். கௌரவர் தரப்பிலும், துரோணர், கர்ணன் முதற்கொண்டு கடுமையாகப் போர் புரிந்தனர்.

ஆனால், கிருஷ்ணரின் கருணையால் அஸ்தமனத்திற்கு முன்பே, சூரியன் மறைக்கப்பட, அதனால் அன்றைய யுத்தம் முடிந்தது என்று நினைத்த ஜெயத்ரதனின் தலையை, கிருஷ்ணரின் அறிவுரைப்படி அம்பெய்து கொய்து, ஜெயத்ரதனின் தந்தையின் மடியில் விழ வைத்து, அர்ஜூனன் தான் தப்பித்தான். தன்னுடைய சபதத்தையும் நிறைவேற்றினான். ஆனால் ஜெயத்ரதனின் மறைவால், கோபம் கொண்டிருந்த கௌரவர்கள், துரோணரின் அறிவுரைப் படி, அன்று இரவும் யுத்தம் செய்ய முடிவு செய்தனர். இரவில் கடுமையான யுத்தம் தொடர்ந்தது.

அன்றிரவு யுத்தத்தில் பீமனின் மகனான கடோத்கஜன் பெரும்பங்கு வகித்தான். மிகப்பெரிய அளவில் கௌரவப் படைகளை அடியோடு அழிக்க ஆரம்பித்தான். கௌரவப் படைகள் பயத்தால் நடுங்க ஆரம்பித்தன.

அந்த நேரம் கர்ணனும் முன்னணியில் வந்து கடுமையாகப் போர் புரிந்து, பாண்டவபடைகளை அழிக்க ஆரம்பித்தான். அதைக் கண்ட மகாராஜா யுதிஷ்டிரர் பயத்துடன், “அர்ஜூனா நம்முடைய முழுப்படையையும் கர்ணன் அழிக்கும் முன், ஏதாவது செய்!” என்று வேண்டினார்.

இதைக் கேட்ட அர்ஜூனன் கிருஷ்ணரிடம், தன்னுடைய தேரை கர்ணனிடம் கொண்டு செல்ல வேண்டினான். ஆனால் கிருஷ்ணரோ, “அர்ஜூனா, நீ இப்பொழுது கர்ணனிடம் போரிடக் கூடாது கர்ணனிடம் குறி தவறாத கொடுத்த அந்த ஆயுதம் உள்ளது. இப்போதைக்கு கடோத்கஜன், கர்ணனை, தடுத்து நிறுத்துவான்” என்று கூறி கடோத்கஜனை அழைத்து, முழு சக்தியையும் பிரயோகம் செய்து, கர்ணனிடம் யுத்தம் செய்ய ஆணையிட் டார்.

கடோத்கஜன், கர்ணனிடம் போரிடச் சென்ற போது , அலம்பசன் என்ற மற்றொரு அரக்கன் , துரியோதனன் கட்டளையின் பேரில் கடோத்கஜனிடம் போரிட வந்தான் . இருவரும் தங்களின் மாயா சக்திகளை பிரயோகம் செய்து பலவித உருவெடுத்து , போர் செய்தனர் . இறுதியில் கடோத்கஜன் , அலம்பசனைக் கொன்று , அவனுடைய தலையை துரியோதனனின் ரதத்தில் எறிந்தான் . தடை நீங்கிய கடோத்கஜன் , மீண்டும் கர்ணனிடம் போரிட ஆரம்பித்தான் . போரில் கடோத்கஜனும் , அவனைச் சேர்ந்த ராட்ஷசர்களும் கூர்மையான முனை கொண்ட பாறைகளை மழை போல் பொழிய , அனைத்து கௌரவ வீரர்களும் , கர்ணனை தனியே விட்டு விட்டு , யுத்த களத்திலிருந்து ஓடினர் . போரில் கடோத்கஜன் , கர்ணனால் கடுமையாக துன்புறுத்தப்பட்ட போதிலும் , மறுபடியும் கடோத்கஜன் மறைவாக இருந்து கொண்டு போர் செய்து , கௌரவ வீரர்களுக்கு கடுமையான பயத்தை உண்டாக்கினான்.

இந்நிலை கண்ட துரியோதனன், அலாயுதா என்ற மற்றொரு ராட்ஷசனை கடோத்கஜனிடம் போரிட அனுப்பினான் . அவனுடன் போரிட கடோத்கஜன் கர்ணனை விட்டு விலகினான் . பீமன் உதவிக்கு வர, கடோத்கஜன் கர்ணனுடன் மீண்டும் போரிட சென்றான். ஆனால் கிருஷ்ணரின் கட்டளைப்படி மீண்டும் கடோத்கஜன், பீமனின் உதவிக்கு வந்தான் . கடோத்கஜன் போரில் , அலாயுதனின் தலையை வெட்டி , மீண்டும் துரியோதனனின் தேரில் அதனை எறிந்தான் .

அலாயுதனை கொன்ற கடோத்கஜன் , மீண்டும் கர்ணனிடம் போரிடச் சென்றான் . கடோத்கஜன் , மாயமாக மறைந்து இருந்து போரிட , கௌரவ சேனை பெருமளவு கொல்லப்பட்டது . எண்ணற்ற ராட்சஷர்கள் , வானில் இருந்து போரிடுவதை கண்ட கௌரவ வீரர்கள் , தப்பி பிழைத்து ஓட ஆரம்பித்தனர் . கர்ணன் , கடோத்கஜனின் ஆயுதங்களை சமன் செய்ய செலுத்திய தெய்வீக ஆயுதங்களும் பலனற்று போயின . கர்ணனும் பயத்துடன் , அடுத்து என்ன செய்வதென்று யோசித்தான் . தங்களுடைய தலைவனான கர்ணன் , பெருமழை பொழிவது போன்று , ஆயுதங்களால் பீடிக்கப்படுவதை கண்ட கௌரவர்கள் , ” ஓ கர்ணா இந்திர ஆயுதத்தை ஏவு வதற்கு இது சரியானதருணம் . நம்முடைய முழுப்படையும் இந்தக் கொடூரமான ராட்சஷனால் அழிக்கப்பட்டு விடும் போல் தோன்றுகிறது . இந்த கடோத்கஜனை உடனே கொல் . உயிர் பிழைத்தவர்கள் , பாண்டவர்களுடன் நாளை போரிட முடியும் ” என்று வேண்டி நின்றனர் . இதைக் கேட்ட கர்ணன் , பீமன் மகனான கடோத்கஜனை தடுத்து நிறுத்த வேறுவழியில்லை என்பதை உணர்ந்து , மனதில் உறுதி செய்து அர்ஜூனனைக் கொல்வதற்கே என்று வைத்திருந்த இந்திரன் கொடுத்த ஆயுதத்தை பிரயோகித்தான் . அதுவும் பழுதின்றி, கடோத்கஜனின் இதயத்தை ஊடுருவி இந்திரனிடம் மறுபடியும் போய் சேர்ந்தது . கடோத்கஜனும் உயிரிழந்தான் . அந்நிலையிலும் அவன் பிரம்மாண்டமான உருவெடுத்து , ஒரு அக்ஷௌணி கௌரவ படை வீரர்கள் மேல் விழுந்து அவர்களை அழித்தான். கடோத்கஜனின் இறப்பைக் கண்டு , கௌரவ வீரர்கள் ஆனந்தித்தனர். நன்றியுடனும் , மரியாதையுடனும் கர்ணனை வணங்கினர். மறுபக்கமோ, பாண்டவ வீரர்கள் அனைவர் கண்களிலும் கண்ணீர் பெருகியது. ஆனால், கிருஷ்ணரோ, ஆனந்த கோஷமிட்டு , அர்ஜூனனைக் கட்டியணைத்து நடனமாட ஆரம்பித்தார் . மீண்டும் , மீண்டும் ஆனந்தப் பரவசமடைந்தார். இது பாண்டவர்களின் துன்பத்தை மேலும் அதிகப்படுத்தியது.

அர்ஜூனனோ , ” கிருஷ்ணா ! இந்த துன்பகரமான நேரத்தில் நீ மகிழ்ச்சி கொள்வது , பொருத்தமாக இல்லை . ஆனால் உன்னுடைய ஆனந்தப் பரவசத்திற்கு , ஏதேனும் ஒரு முக்கியக் காரணம் இருக்கும் . தயவு செய்து அதனைக் கூறுவாயாக ” என்று கூறினான் . கிருஷ்ணர் , ” அர்ஜூனா ! நான் ஆனந்தப்படக் காரணம் , வெற்றிகொள்ள இயலாத இந்திரன் கொடுத்த ஆயுதத்தை , கர்ணன் வீணடித்து விட்டான் . நீ இன்னும் புரிந்து கொள்ள வில்லையா . நீ இப்போது பயமின்றி அவனுடன் போரிட இயலும் ” என்று கூறினார் . மேலும் கிருஷ்ணர் , ” அர்ஜூனா உனக்காக வேண்டி , என்னுடைய திட்டப்படி ஜராசந்தன் , சிசுபாலன் , ஏகலைவன் முதலியவர்கள் முன்பே கொல்லப்பட்டனர் . அவ்வாறே கர்ணன் உன்னைக் கொல்ல வைத்திருந்த இந்திராயுதத்தை விரயம் செய்யும்படியாக , என்னுடைய திட்டப்படி கடோத்கஜனும் கொல்லப்பட்டான் ‘ என்று கடோத்கஜன் கொல்லப்பட்டதற்கு காரணம் தானே என்று கூறினார் . மேலும் தொடர்ந்து கிருஷ்ணர் , ” அர்ஜூனா ! கர்ணன் இந்திர ஆயுதத்தைப் பயன்படுத்தி கடோத்கஜனை கொல்லாமல் இருந்திருந்தாலும் , நானே அவனைக் கொன்றிருந்திருப்பேன் . ஏனெனில் , அவன் முனிவர்களுக்கும் , பிராமணர்களுக்கும் மிகக் கொடுமையான துன்பங்களைக் கொடுத்து வந்தான் . யாகங்கள் பலவற்றை நடக்கவிடாமல் அழித்து வந்தான் . ஆகையால் அவன் கொல்லப்படத் தகுதி வாய்ந்தவனே . ஆனால் உன்னைக் காப்பாற்றுவதில் , கடோத்கஜன் மிக முக்கியமாக இந்தப் பங்கு வகிப்பான் என்பதை நான் அறிந்து இருந்ததால் , முன்பே நான் அவனைக் கொல்லவில்லை ” என்று கூறினார்.

அதே சமயம் , போர்க்களச் செய்திகளை கூறிக் கொண்டிருந்த சஞ்சயனிடம் திருதராஷ்டிரர் , ” சஞ்ஜயா இந்திர ஆயுதத்தை கர்ணன் கொண்டிருந்தும் , ஏன் அதை அர்ஜூனன் மேல் அவன் பயன்படுத்தவில்லை ? இதைப் பற்றி எனக்கு தெளிவுப்படுத்து என்று வினவினார் . சஞ்சயன் பதிலாக , ” அரசே நீங்கள் நினைப்பது சரிதான் . கிருஷ்ணரின் திட்டப்படி , கடோத்கஜன் கர்ணனுடன் தீவிர சண்டையிட , அவ்வாயுதம் கர்ணனால் அவன் மீது பிரயோகப்படுத்தப்பட்டது ” என்று கூறினான் . திருதராஷ்டிரன் , ” சஞ்ஜயா துரியோதனனின் ஆலோசகர்கள் , கர்ணனிடம் , அர்ஜூனை சண்டைக்கு அழைத்து இந்திர ஆயுதத்தை பயன்படுத்தி கொல்லும்படி அறிவுறுத்தவில்லையா ? ” என்று வினவினார் . சஞ்ஜயன் , ” அரசே ! ஒவ்வொரு இரவும் கௌரவர்கள் ஒன்று கூடி , மறுநாள் போர்த்திட்டத்தை வகுக்கும் போது , அவர்கள் எடுத்த முக்கியமான ஒர்முடிவு என்னவென்றால் , மறுநாள் கர்ணன் , அர்ஜூனனைப் போருக்கு அழைத்து , இந்திர ஆயுதத்தைப் பயன்படுத்தி அர்ஜூனனைக் கொல்ல வேண்டும் என்பதே . சிலர் அந்த ஆயுதம் கிருஷ்ணருக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆலோசனை கூறினர்’ என்று கூறினார். சஞ்ஜயன் தொடர்ந்து , ” ஒவ்வொரு காலையும் கௌரவர்கள் விழித்தெழுந்தவுடன், இந்திர ஆயுதத்தால் , கிருஷ்ணர் அல்லது அர்ஜூனன் கொல்லப்பட வேண்டும் என்று உறுதியெடுத்தனர். ஆனால் போரின் போது , பகவானின் மயக்கசக்தியால், அவர்கள் எடுத்த உறுதியை முற்றிலும் மறந்தவர்களாய் இருந்தனர் என்று கூறினார். மேலும் சஞ்ஜயன் திருதராஷ்டிரரிடம், “சாத்யகியும் இதே கேள்வியை கிருஷ்ணரிடம் வினவினார். அதாவது கர்ணன் மிக உறுதியான மனதுடன், இந்திரன் கொடுத்த ஆயுதத்தைக் கொண்டு, அர்ஜுனனைக் கொல்ல முடிவு செய்திருந்தும் , ஏன் அதை பயன்படுத்தவில்லை ” என்று சாத்யகி கிருஷ்ணரிடம் வினவினார் ” என்று கூறினார் . கிருஷ்ணர் , சாத்யகியிடம் , ” சாத்யகி ! மறுபடி , மறுபடி துரியோதனன், துச்சாதனன், சகுனி மூவரும் இந்த விஷயத்தை விவாதித்து விரைவில் இந்திரன் கொடுத்த ஆயுதத்தால் , அர்ஜூனனைக் கொல்ல கர்ணனை வற்புறுத்தினர். கர்ணன் இதயத்திலும் அர்ஜூனனைக் கொல்வது முதன்மையாக இருந்ததால் , அவனும் அதற்கு உடனே ஒப்புக் கொள்வான். ஆனால் நான் என்னுடைய யோக மாயையால், அந்த ஆயுதத்தை பயன்படுத்துவதை மறுபடி. மறுபடி மறக்கும்படி செய்தேன். சாத்யகி! கர்ணன் அந்த ஆயுதத்தைக் கொண்டிருந்த வரையிலும், நான் இரவில் தூங்க இயலவில்லை. எதையும் நான் ஆனந்திக்கவும் இல்லை. என்னுடைய வாழ்வையோ, உற்றாரையோ, அர்ஜூனனின் பாதுகாப்பை விட பெரிதாகக் கருதவில்லை” என்று கூறினார்.

மேலும் கிருஷ்ணர் , ” இக்காரணத்தால் , கடோத்கஜன் இந்திர அம்பினால் கொல்லப்பட்ட போது , அதிக ஆனந்தம் அடைந்தேன். அர்ஜூனனைக் காப்பாற்றவே, அந்த ராட்சஷனை கர்ணனுடன் போரிட அனுப்பினேன் என்று கூறினார் . இவ்வாறாக பகவானின் கருணையால் , ஒவ்வொரு நொடியும், பஞ்சபாண்டவர்களும், அர்ஜூனனும் பெரும் ஆபத்துக்களில் இருந்து காப்பாற்றப்பட்டனர். கடோத்கஜன் கொல்லப்பட்ட இந்நிகழ்ச்சியில், அர்ஜூனனை கொல்வதற்கென்றே கர்ணன்வைத்திருந்த இந்திரன் கொடுத்த ஆயுதத்தை, கடோத்கஜன் மீது பிரயோகிக்க வைத்து, பகவானே அர்ஜூனனைக் காப்பாற்றினார். கடோத்கஜன் கொல்லப்படும் வரையிலும், அவ்வாயுதம், அர்ஜூனன் மீது பிரயோகிக்கப்படாமல் இருக்க, போரின்போது இவ்வாயுதத்தை பயன்படுத்தும் சிந்தனையை, கெளரவர்கள் அனைவரின் நினைவில் இருந்தும், நீக்கி விட்டார். இவ்வாறாக, கௌரவர்களுக்கு தினசரி இந்திரன் கொடுத்த சக்தி ஆயுதத்தை போரில் அர்ஜூனன் மீது பயன்படுத்த வேண்டும் என்ற நினைவைக் கொடுத்ததும், அதே சமயம் முதல் பதினான்கு நாட்கள் போர் நடந்து கொண்டிருக்கும் போது அதே கௌரவர்களுக்கு அதை பயன்படுத்தும் நினைவை மறக்கச் செய்ததும் பகவானே.

 இதனையே பகவத்கீதையில் ( 15.15 ) பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், “நான் எல்லோருடைய இதயத்திலும் வீற்றுள்ளேன். என்னிடமிருந்தே ஞாபக சக்தியும், அறிவும், மறதியும் உண்டாகின்றன’ என்று குறிப்பிடுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question