Saturday, July 27

Azhagia Manavalar Temple-History (Tamil) / உறையூர் என்னும் திருக்கோழி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

கோழியும் கடலும் கோயில் கொண்ட
கோவலரே யொப்பர் குன்றமன்ன
பாழியும் தோழுமோர் நான்குடையர்
பண்டிவர் தம்மையுங் கண்டறியோம்
வாழியரோ விவர் வண்ண மென்னில்
மாகடல் போன்றுளர் கையில் வெய்ய
ஆழியொன் றேந்தியோர் சங்கு பற்றி
அச்சோ ஒருவர் அழகியவா (1762)

– பெரிய திருமொழி 9-2-5

என்று நாகபட்டினம் (திருநாகை) சுந்தர்ராஜப் பெருமாளை
மங்களாசாசனம் செய்யும் திருமங்கையாழ்வார். அப்பெருமானின்
பேரழகானது திருக்கோழியில் கோயில் கொண்டுள்ள பெருமானின் அழகுக்கு ஒப்பானதாகும் என்று கூறுகிறார்.

எனவே நாகை எம்பெருமானின் பேரழகு இப்பெருமானின் அழகுக்கு ஒப்பு என்று கூறுவதால் இவரே அவரினும் பேரழகு பொருந்தியவராகி, தனக்கு ஒப்புமை கூறக்கூடியவர்களைத்தான் பெற்றிருக்கிறாரேயொழிய தனக்கு மிக்காரில்லை யென்னு மாற்றான் செம்மாந்து திகழ்கிறார்.

இது நான் கூறும் கருத்தல்ல. ஆழ்வார்கள் விஷயம். இத்தகைய பேரழகு கொண்டுள்ள திருக்கோழி என்னும் உறையூர்திருச்சி நகருக்குள்ளேயே அமைந்துள்ளது. திருச்சி பேருந்து நிலையத்திலருந்து சுமார் 2 மைல் தொலைவு. திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து எண்ணற்ற நகரப் பேருந்துகள் இந்த உறையூருக்குச் செல்கின்றன.

இப்பெருமானைச் சேவித்துவிட்டுக் காவிரியாற்றைக் கடந்து அரங்கனைச் சேவிக்க ஸ்ரீரங்கத்திற்கு நடந்தே செல்லலாம். அரங்கனை சேவித்துவிட்டு கொள்ளிடத்தைக் குறுக்காக கடந்தும் உத்தமர் கோவில் என்னும் புருஷோத்தமன் எழுந்தருளியுள்ள திருக்கரம்பனூருக்கு நடந்தே செல்லலாம். அங்கிருந்து திருவெள்ளறையும் அரைப் பொழுதில் நடந்தே செல்லலாம். முன் காலத்தில் இவ்வாறு நடந்துதான் சென்றனர்.

இவ்வூர் உறையூர் என்றும் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்படும். சோழர்கட்குத் தலைநகராக இருந்த பெருமை உடைத்து தமிழிலக்கியங்களில் பல இடங்களில் பேசப்படும் தகைமையுடைத்து. பக்திப் பிரவாகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூரை யொத்த மேன்மையுடையது.

வரலாறு

இந்த உறையூரில் தர்மவர்மாவின் வம்சத்தில் பிறந்த நந்தசோழன் என்னும் மன்னன் மிகச் சிறந்த பக்திமானாக அரங்கனுக்குத் தொண்டு செய்வதில் பேரவா கொண்டவுனாயிருந்தான் புத்திரப்பேறில்லாத பெரும் கவலை மட்டும் அவன் நெஞ்சைவிட்டு நீங்கா இருக்கவே இதற்கும் ஸ்ரீரங்கநாதனே பதில் சொல்லட்டும் என்று காத்திருந்தான்.

பக்தனுக்கருளும் பரந்தாமன் வைகுண்டத்தில் இலட்சுமி தேவியைக் கடைக்கண்ணால் நோக்கி நந்தசோழனுக்கு புத்திரியாகுமாறு அருள, உறையூரில் தாமரை ஓடையில் தாமரைப் பூவில் குழந்தையாக அவதரிக்க வேட்டைக்குச் சென்ற நந்த சோழன் அம்மகவைக்கண்டெடுத்தான். கமல மலரில் கண்டெடுத்தமையால் கமலவல்லி என்று பெயரிட்டு அன்புடன் வளர்த்து வர நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்த கமலவல்லி திருமணப் பருவம் எய்தினாள். ஒருநாள் ஸ்ரீரெங்க நாதன் குதிரை மீதேறி பலாச வனத்தில் வேட்டைக்கு வந்ததுபோல் உலாவர, தோழிமாருடன் அப்பக்கம் வந்த கமலவல்லி. எம்பெருமான் பேரழகைக்கண்டு யார் இவர் என வியந்தனள். தன் பேரழகை முழுவதும் எம்பெருமான் கமலவல்லிக்கு காட்டிமறைய, காதல்மோகத்தில் பக்தி வெள்ளத்தில் கலக்கலானாள் கமலவல்லி.

மகளின் நிலைகண்டு என்னசெய்வதென்று தெரியாது மன்னன் திகைத்து சிந்தனையில் மூழ்கியிருக்க, அவன் கனவில் வந்த பெருமான் குழந்தைப் பேறில்லா நின் குறை தீர்க்கவே யாம் திருமகளை அனுப்பினோம். என் சன்னதிக்கு அழைத்துக் கொண்டுவா, ஏற்றுக் கொள்கிறோம் என்று சொல்ல, மிகவியந்து மகளை பலவாறாய் துதித்துப் போற்றி நகரை அலங்கரித்து கமலவல்லியைத் திருமணக்கோலத்தில் ஸ்ரீரங்கம் அழைத்துவர. கோவிலினுள் நுழைந்ததும் கமலவல்லி மண்ணில்புக்கு மறைந்து அரங்கனோடு இரண்டறக் கலந்தாள், சேனை பரிவாரங்களுடன் இந்தக் காட்சியைக் கண்ட மன்னன் தான் பெற்ற பெரும் பேற்றை எண்ணி வியந்து ஸ்ரீரங்கத்திற்கு எண்ணற்ற திருப்பணிகள் செய்து உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக மாபெரும் கோவில் எழுப்பினான். ஸ்ரீரங்கநாதனே அழகொழுகும் மாப்பிள்ளையாக வந்து திருமணம் செய்து கொண்டதால் அழகிய மணவாளன் ஆனார். (இவரே மீண்டும் ஒரு முறை வயலாளி மணவாளன் ஆவார். அதனை திருவாலி திருநாரி ஸ்தல வரலாற்றில் காணலாம்)

இந்நிகழ்ச்சி நடைபெற்றது துவாபரயுகத்தின் முடிவி என்பர். கலியுகத்தில் ஒரு சமயம் இந்த உறையூரில் மண்மாரி பெய்து பட்டனம் முழுகிப்போக அதன்பின் சோழ மன்னர்கள் கங்கை கொண்டானைத் தலைநகர் ஆக்கி ஆண்டுவருங்காலை இந்த உறையூரில் ஒரு சோழ மன்னனால் கட்டப்பட்ட கோவிலைத்தான் இப்போது நாம் காண்கிறோம். இவர் இக்கோவிலில் அழகிய மணவாளனையும் (ஸ்ரீ ரங்கநாதனின் திருமணக்கோலம்) சுமல வல்லியையும் பிரதிஷ்டை செய்தார். இம்மன்னனின் பெயர் இன்னதென்றறிவில்லை.

மூலவர் – அழகிய மணவாளன், நின்ற திருக்கோலம் வடக்கு நோக்கிய திருக்கோலம்.

தாயார் – கமலவல்லி நாச்சியார். உறையூர் வல்லி வடதிசை நோக்கி திருமணத்திற்குத் தயார் நிலையில் அமர்ந்த திருக்கோலம்.

தீர்த்தம் – கல்யாண தீர்த்தம், சூரிய புஷ்கரணி

விமானம் – கல்யாண விமானம்

காட்சிக் கண்டவர்கள் –  ரவிதாமா, கமலவல்லி,

சிறப்புக்கள்

1. திருப்பாணாழ்வார் இங்குதான் அவதரித்தார். இத்தலத்தில் அவருக்கு தனிச் சன்னதி உள்ளது.

2. சோழநாட்டின் அரண்மனையைச் சேர்ந்த யானை யொன்று இவ்வூருக்குள் வந்தபோது ஒரு கோழி அதனை யெதிர்த்து யுத்தம் செய்து தனது கால் நகங்களினாலும். அலகினாலும் கொத்திக் குதறி யானையின் கண்களைக் குருடாக்கி புறமுதுகிட்டு ஓடச் செய்தது என்றும் அதனால் இவ்வூருக்கு கோழியூர் என்ற பெயருண்டாகித் திருக் கோழியாயிற்று. என்றுலைப்பர்.

thirukoliur tamil history name

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question