Friday, July 12

Kuralin Kural – Paramatma (Tamil) / குறளின் குரல் – பரமாத்மா

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


நம்முடன் சேர்ந்து, நமது இதயத்தில் இறைவன் பரமாத்மாவாக இருக்கிறார் என்பதை பகவத் கீதையின் பதின்மூன்று, பதினைந்தாவது அத்யாயங்கள் உறுதி செய்கின்றன.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
 
நிலமிசை நீடு வாழ் வார்”
–  (
திருக்குறள் 3)

“இதயமாகிய தாமரை மலரில் இருப்பவனின் மாட்சிமை பொருந்திய அடிகளைச் சேர்ந்தவர் எல்லா உலகிற்கும் மேலாய வீட்டுலகின்கண் அழிவின்றி வாழ்வார்”.

எல்லா உலகங்கட்கும் அவைகளில் உள்ள உயிர்கட்கும் காரணமான முழுமுதற்கடவுளாகிய ஆதி பகவான் இதயத்தியிருக்கிறான் என்பதை வள்ளுவர் மூன்றாவது குறளில் உறுதி செய்கின்றார். அந்தர்யாமியாக இருக்கும் இறைவனைப் பரமாத்மா என்று வேத இலக்கியங்கள் கூறுகின்றன. இங்கே வீடு என்பது நிலையான அழிவற்ற உல்கமாகிய வைகுந்தத்தைக் குறிக்கிறது.

உபத்ரஷ்டானு மந்தா பர்தா போக்தா மஹேஷ்வர:
பரமாத்மேதி சாப்யுக்தோ தேஹே ஸ்மின் புருஷ: பர:”*

(பகவத் கீதை 13.23)

இருப்பினும், இவ்வுடலில் மற்றொருவரும் இருக்கின்றார், அவர் தெய்வீக அனுபவிப்பாளர். அவரே இறைவன், பரம உரிமையாளர். மேற்பார்வையிட்டு அனுமதி வழங்குபவரும், பரமாத்மா என்று அறியப்படுபவரும் அவரே”.

ஜடத்தலத்தில் இருக்கும் ஜீவாத்மா, இவ்வுலக நம்பிக்கைகள், இன்பங்களை விடுத்து, பரமாத்மாவிடம் திருப்புவானாகில் அவன் என்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அவர் வழிவகுக்கிறார். இந்த உண்மையை வள்ளுவர் மேலே சொன்ன குறளில் விளக்கியுள்ளார். தனிப்பட்ட அணு அல்லது ஜீவாத்மா மற்றொரு உடலுக்கு மாற்றமடைவது, தனது எண்ணம், விருப்பம் மற்றும் செயல்களாலும், பரமாத்மாவின் கருணையாலும் சாத்தியமாகிறது. கீழ்க்கண்ட பதம் இதை உறுதி செய்கின்றது.

“கர்மணா தெய்வ நேத்ரேண ஜந்தூ தேய்ஹோ பத்யதே
ஸ்திரிய: ப்ரவிஷ்ட உதரம் பும்ஸோ – ரோத: கணாஷ்ரயக”

(ஸ்ரீமத் பாகவதம் 3.31.1)

“ஒருவனுடைய செயல்களின் விளைவினாலும், முழுமுதற்கடவுளின் பார்வையாலும், ஜீவனானவன் ஒரு தாயின் கருப்பையில் அடைக்கப்பட்டு உடம்பெடுக்கிறான். ஓர் ஆணின் விந்துவின் வாயிலாக ஜீவன் கருப்பையை அடைகிறான்”.

ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேத நூல்கள், ஆத்மாவையும், பரமாத்மாவையும், ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழமைப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கின்றது. மற்றதோ (பரமாத்மாவான கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனே நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தில் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது. மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமே நோக்கிக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப் பறவை, அர்ஜுனன் உண்ணும் பறவை. இருவரும் நண்பர்களே என்ற போதிலும் ஒருவர் எஜமானர் மற்றவர் சேவகன். இந்த உறவை அணு ஆத்மா மறந்து விடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக் கொள்வதற்குக் காரணமாகிறது. ஜீவ பறவை, ஜடவுடலென்னும் மரத்தில் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜூனனைப் போல, தொண்டனான ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும் போது, உடனடியாக எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2) ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4,7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

“இரு பறவைகளும் ஒரே மரத்தில் இருப்பினும், உண்ணும் பறவை, மரத்தின் பழங்களை அனுபவிப்பவன் என்பதால், கவலையாலும், ஏக்கத்தாலும், பீடிக்கப்பட்டுள்ளான். “

atma paramatma bhaktiyogam

தனது நித்ய நண்பனான கிருஷ்ணரை நோக்கி முகம் திருப்பிய அர்ஜுனன் அவரிடமிருந்து பகவத் கீதையை புரிந்து கொண்டு ஆன்மீக பலம் பெற்று தர்மயுத்தம் செய்ததால் போரில் வெற்றி மட்டும் அல்லாது உயர்ந்த ஆன்மீக நிலையும் பெற்றான். அது போல எந்த ஜீவாத்மாவும் கிருஷ்ணரின் பகவத் கீதையை அறிந்து, உன்னத நிலையை அடைந்து கவலைகளிலிருந்து விடுபட முடியும்.

ஆதிபகவன் அல்லது முழுமுதற்கடவுள்

ஜன்மாதி யஸ்ய யத: என்று வேதாந்த சூத்திரத்தில் ஸ்ரீல வியாச தேவர் கூறுகின்றார்.

“எவரிடமிருந்து எல்லாம் தோன்றுகின்றனவோ அவரே முழுமுதற் கடவுள். மேலும் விளக்கமாக ஸ்ரீமத் பாகவதம் முதல் பாடலில் (1.1.1) மேற்சொன்ன வரியையே பாடலின் முதல் வரியாகக் கொண்டு, வசுதேவரின் மைந்தனான கிருஷ்ணரே முழுமுதற் கடவுள் என்றும், அவர் தனது நிலையான உலகத்தில் இருக்கிறார் என்றும், எல்லாவற்றிற்கும் மேலானவர் என்றும் அவரை நான் தியானிக்கிறேன் என்றும் கூறுகின்றார்.

திருவள்ளுவர் முதற் குறளில்,

“அகர முதல எழுத்தெல்லாம்
ஆதி பகவன் முதற்றே உலகு.”

( திருக்குறள் 1)

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அது போல் உலகம் கடவுளை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

செம்மொழி இலக்கியமாகிய திருக்குறளை இயற்றிய வள்ளுவர் முழுமுதற் கடவுளையே ஆதி பகவன் என்று குறிப்பிடுகிறார். குறைந்த கண்ணோட்டம் உடைய சிலர் ஆதியை நூல் ஆசிரியரின் தாயென்றும், பகவனைத் தந்தையென்றும் கூறுவர். இங்கு உலகு என்பது எல்லா உலகங்களையும், உயிர்களையும் குறிக்கும். பகவான் என்றால் எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்டுள்ளவன் என்று பொருள்.

எல்லாச் செல்வங்களையும் முழுமையாகக் கொண்ட முதல்வனே ஆதிபகவன். இந்த ஆதிபகவான் எப்படிப்பட்டவன் என்பதை வள்ளுவர் ஏழாவது குறளில்,”

தனக்குவமை இல்லாதான் தாள் சேர்ந்தய்க் கல்லால்
மனக் கவலை மாற்றல் அளிது “
 (
திருக்குறள் 7)

“தனக்கு நிகரில்லாதவனுடைய தாளைச் சேர்ந்தவர்களுக்கு அல்லாது மற்ற எவருக்கும் மனத்தின் கண் உருவாகும் துன்பங்களை நீக்குதல் அரிது?”தனக்குவமை இல்லாதான் என்று வள்ளுவர் குறிப்பிடுவது மிகவும் முக்கியமானது. அவருக்கு மேல் யாரும் கிடையாது. இதையே கிருஷ்ணர்,

மத்தா பரதரம் நான்யத் கின்சித் அஸ்த்தி தனஞ்ஜய
மயிஸர்வம் இதம் ப்ரோக்தம் ஸீத்ரே மணி – கணா இவ”

(பகவத் கீதை 7.7)

“செல்வத்தை வெல்வோனே, என்னை விட உயர்ந்த உண்மை ஏதுமில்லை. நூலில் முத்துக்கள் கோர்க்கப்பட்டுள்ளது போல, அனைத்தும் என்னையே சார்ந்துள்ளன” என்று கூறுகிறார். இந்தப் பதத்தையும் வள்ளுவர் கூற்றையும் ஆராய்ந்து பார்த்தால், வள்ளுவர் குறிப்பிடும் ஆதிபகவன் கிருஷ்ணரே.

மேலும் வள்ளுவர் புணர்ச்சிமகிழ்தல் என்ற அதிகாரத்தில்,

தாம் வீழ்வார் மென்தோள் துயிலின் இனிது கொல்
தாமரைக் கண்ணான் உலகு.”
– (
திருக்குறள் 1103)

“தாமரைக் கண்ணனுடைய உலகம், தாம் விரும்பும் காதலியின் தோள்களில் துயிலும் துயிலை விட இனிமையானதோ?” என்கிறார். வேறு எந்த தேவதையையும், தேவதையின் உலகத்தையும் வள்ளுவர் திருக்குறளில் குறிப்பிடவில்லை. எல்லாருக்கும் உயர்ந்த தாமரைக் கண்களுடைய கண்ணனை, ஆதிபகவனை மனதில் வைத்துக் கொண்டே வள்ளுவர் இந்தக் குறளைப் படைத்திருக்கின்றார். முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஒருவருக்கே சரணடைய வேண்டும் என்பது பகவான் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் கொள்கை. அந்தக் கொள்கையையே வள்ளுவர் முதல் அதிகாரத்தின் ஏழு குறள்களில் கூறுகின்றார். கிருஷ்ணரே முழுமுதற்கடவுள், மற்றெல்லோரும் அவருடைய தொண்டர்கள் என்பது பகவான் ஸ்ரீசைத்தன்ய மகாபிரபுவின் வாக்கு.

+4

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question