Thursday, September 19

பகவத் கீதை – 3.41

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தஸ்மாத் த்வம் இந்த்ரியாண்-யாதௌ
நியம்ய பரதர்ஷப
பாப்மானம் ப்ரஜஹி ஹ்யேனம்
க்ஞான-விக்ஞான-நாஷனம்


Synonyms:
தஸ்மாத் — எனவே; த்வம் — நீ; இந்த்ரியாணி — புலன்கள்; ஆதௌ — ஆரம்பத்தில்; நியம்ய — ஒழுங்குபடுத்தி; பரத-ருஷப — பரத குலத்தோரில் தலைசிறந்தவனே; பாப்மானம் — பாவத்தின் பெரும் சின்னம்; ப்ரஜஹி — களைந்துவிடு; ஹி — நிச்சயமாக; ஏனம் — இந்த; க்ஞான — அறிவின்; விக்ஞான — தூய ஆத்மாவின் விஞ்ஞானத்தையும்; நாஷனம் — அழிப்பவர்.


Translation:
எனவே, பரத குலத்தோரில் தலைசிறந்த அர்ஜுனா, புலன்களை ஒழுங்குபடுத்துவதால் பாவத்தின் பெரும் சின்னமான இந்த காமத்தை ஆரம்பத்திலேயே அடக்கி, ஞானத்தையும் தன்னுணர்வையும் அழிக்கும் இந்த எதிரியை அறவே ஒழித்து விடுவாயாக.


Purport:
தன்னுணர்விற்கான உந்துதலையும் ஆத்ம ஞானத்தையும் அழிக்கக்கூடிய ‘காமம் ‘ எனப்படும் மிகப்பெரிய பாவகரமான விரோதியை வெற்றி கொள்வதற்கு, ஒருவன் தனது புலன்களை ஆரம்பத்திலேயே நெறிப்படுத்த வேண்டும் என்று அர்ஜுனனுக்கு அறிவுறுத்துகிறார் பகவான். தான் அல்லாதவற்றிலிருந்து தன்னைப் பிரித்தறிதல் (வேறு விதமாகக் கூறினால், ஆத்மா என்பது உடலைக் குறிப்பதல்ல என்பதை அறிதல்), ஞானம் எனப்படும். ஆத்மாவினுடைய உண்மை நிலையையும் பரமாத்மாவுடனான அவனது உறவையும் பற்றிய விசேஷ அறிவு, விக்ஞானம் எனப்படும். இவ்வாறே ஸ்ரீமத் பாகவத்தில் (2.9.31) விளக்கப்பட்டுள்ளது:

க்ஞானம் பரம-குஹ்யம் மே
யத் விக்ஞான-ஸமன்விதம்
ஸ-ரஹஸ்யம் தத் அங்கம் ச
க்ருஹாண கதிதம் மயா

“ஆத்மா, பரமாத்மாவைப் பற்றிய ஞானம், மிக இரகசியமானதும் மனித அறிவிற்கு எட்டாததும் ஆகும். ஆனால் அத்தகு ஞானமும் விஞ்ஞானமும் அவற்றின் பலதரப்பட்ட கருத்துகளுடன் பகவானால் விளக்கப்படும் போது அவற்றை பிரிந்து கொள்ள முடியும்.” ஆத்மாவைப் பற்றிய அத்தகு பொதுவான ஞானத்தையும், விசேஷ ஞானத்தையும் பகவத் கீதை நமக்கு வழங்குகின்றது. ஜீவாத்மாக்கள் இறைவனின் அம்சம் என்பதால், அவர்கள் அவருக்கு சேவை செய்ய வேண்டியவர்கள். அந்த உணர்வே ‘கிருஷ்ண உணர்வு ‘ எனப்படும். எனவே, வாழ்வின் ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ண உணர்வினைப் பயின்று, அதன் மூலம் முழுமையான கிருஷ்ண பக்தனாகி அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

எல்லா உயிர்வாழிகளிடமும் இயற்கையாகவே இருக்கக்கூடிய இறையன்பின் திரிந்த பிம்பமே காமம். ஆனால், ஒருவன் ஆரம்பத்திலிருந்தே கிருஷ்ண உணர்வில் பயிற்சி பெற்றால், அவனது இயற்கையான இறையன்பு காமமாக சிதைந்து போக முடியாது. இறையன்பு காமமாகச் சிதைந்துவிட்டால், அதனை சுயநிலைக்குத் திருப்புவது மிகக் கடினமாகும். அவ்வாறு இருப்பினும், பக்தித் தொண்டின் ஒழுக்க நெறிகளைக் கடைப்பிடிப்பதன் மூலம், தாமதமாகத் தொடங்கியவரும் கடவுளின் காதலராக ஆகிவிடுமளவுக்கு, கிருஷ்ண உணர்வு, சக்தி நிறைந்ததாக இருக்கிறது. எனவே, வாழ்வின் எந்தக் கட்டத்தில் இருந்தாலும் (அல்லது இதன் அவசரத்தை உணர்ந்த கட்டத்திலிருந்து), இறைவனின் பக்தித் தொண்டில் (கிருஷ்ண உணர்வில்) புலன்களை ஒழுங்குபடுத்தத் தொடங்கி காமத்தை பகவத் பிரேமையாக (இறையன்பாக) மாற்ற முடியும். இதுவே, மனித வாழ்வின் மிகவுயர்ந்த பக்குவநிலையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question