எது தர்மம்?
ஆதாரம்: மஹாபாரதம் (சபா பர்வம்)
யுதிஷ்டிரர் ராஜசுய யாகம் நடத்திய பின், அதன் வளமையும், செழுமையும் கண்டு, மனம் பொறாமையுற்ற துரியோதனன், பாண்டவர்களின் வளம் அனைத்தையும், குறுக்கு வழியில் பெற சகுனி மற்றும் கர்ணனுடன் கூடிதிட்டம் தீட்டி, சூதில் வல்ல சகுனி உதவியுடன், பாண்டவர்களுடன் பகடை ஆடி , அவர்கள் சொத்தை அபகரிக்க எண்ணினான். அதற்கு அவனுடைய தந்தையான திருதராஷ்டிரையும் இறுதியில் சம்மதிக்க வைத்தான்.
எவ்வாறோ அரை குறை மனதுடன் சூதுக்கு ஒத்துக் கொண்ட திருதராஷ்டிரர், இந்ரப் பிரஸ்தம் சென்று, யுதிஷ்டிரமகாராஜாவை பகடை விளையாட்டிற்கு வர அழைப்பு விடுக்குமாறு விதுரரிடம் கூறினான்.
யுதிஷ்டிரரிடம் அவ்வாறே அழைப்பு விடுத்த விதுரரிடம் யுதிஷ்டிரர், ” திருதராஷ்டிரரிடமிருந்து இவ்வித அழைப்பு வந்ததற்கு நான் மிகவும் ஆச்சரியப்படுகிறேன். ஏனெனில், இவ்விளையாட்டு எங்களுக்கும், அவர்கள் பிள்ளைகளுக்கும் இடையே பிரச்சனைகளை உருவாக்கும் . விதுரரே! நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்னுடைய பெரியப்பாவின் கட்டளைக்கு நான் பணிய வேண்டுமா?” என்று வினவினார்.
பதிலாக விதுரர், “இதை நீ தான் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறினார். யுதிஷ்டிரர் பின், “நான் யாருடன் பகடை விளையாட வேண்டும் ? ” என்று வினவினார். விதுரர் பதிலாக, “துரியோதனன் சார்பாக சகுனி பகடை விளையாடுவார்’ என்று கூறினார். இதைக் கேட்ட யுதிஷ்டிரர், “நானாக சகுனியுடன் விளையாடப் போவதில்லை. ஆனால் சகுனி சவால் விட்டால் என்னால் மறுக்க இயலாது” என்று இறுதியாக முடிவெடுத்தார்.
திருதராஷ்டிரரின் அழைப்பின் பேரில், ஹஸ்தினாபுரம் அடைந்த யுதிஷ்டிரர், அங்கு ஓய்வு எடுத்து, மறுநாள் காலை பகடை விளையாட்டிற்கென்று, புதிதாக அமைக்கப்பட்டிருந்த மண்டபத்தை அடைந்தார்.
அங்கு சகுனி, யுதிஷ்டிரரிடம், “நாம் இப்போது விளையாடப் போகும் பகடை விளையாட்டிற்கு உரிய விதிமுறைகளை, மன்னா! நிர்ணயிப்பாயாக ! ” என்று கூற, யுதிஷ்டிரர்தர்மநெறிகளைமனதில் கொண்டு, “சூதாட்டம், மிகக் கீழானது. பாவகரமானது. நெறியற்ற மனிதர்களுக்கு உரியது. ஆகையால் , இத்தகைய ஏமாற்றுகரமான வழிகளால் , என்னைத் தோற்கடிக்க முயற்சி செய்ய வேண்டாம் என்று வேண்டிக் கொள்கிறேன்” என்று கூறினார்.
ஆனால் சகுனியோ, “சூதாட்டமும், ஒரு கலை தான். ஆகையால் ,நாம் இப்போது விளையாட ஆரம்பிப்போம்” என்று வற்புறுத்தினான். இறுதியில் சகுனியின் சூழ்ச்சி யான வாதங்களுக்கு ஈடுகொடுக்க முடியாத யுதிஷ்டிரர் , சகுனியின் சவாலை ஏற்று, “நீ என்னை பகடை விளையாட்டிற்கு சவால் விடுப்பதால், சத்ரியன் என்ற முறையில் இவ்விளையாட்டைவிளையாடுவது என்கடமை ஆகிறது” என்று சகுனியிடம் கூறி விளையாட ஆரம்பித்தார்.
விளையாட்டில் படிப்படியாக யுதிஷ்டிரர், சகுனியின் சூதில் தோற்று, தன்னுடைய வளங்களையும், செல்வங்களையும் இழக்க ஆரம்பித்தார். செல்வங்கள் அனைத்தையும் இழந்த யுதிஷ்டிரர், திரௌபதி மூலமாக பெற்ற ஐந்து மகன்களையும், சூதில் இழந்தார். அடுத்ததாக, நகுலனையும், சகாதேவனையும் இழந்தார். அர்ஜூனனை அடுத்ததாகவும், பீமனை அதற்கடுத்ததாகவும் இழந்தார். எல்லாவற்றையும் இழந்த யுதிஷ்டிரர், தன்னையும் பணயம் வைத்து இழந்தார்.
இறுதியாக சகுனி, யுதிஷ்டிரரிடம், திரௌபதியை பணயம் வைக்கக் கூறி நினைவுப்படுத்தினான். இவ்வாறாக, திரௌபதியையும் யுதிஷ்டிரர் சூதில் இழந்தார். துரியோதனன் விதுரரிடம், திரௌபதியை அழைத்து வந்து பணிப் பெண்ணாக சேவை செய்யக் கூறுமாறு கட்டளையிட்டான்.
இதைக் கேட்ட விதுரர், “கேவலமானவனே! என்னுடையக் கருத்துப்படி, திரௌபதி உன்னுடைய அடிமையாகவில்லை. மன்னன் தன்னை ஏற்கனவே இழந்து விட்ட பிறகு, திரௌபதியையோ மற்றும் எதையுமோ பணயம் வைக்க இடமில்லை. உன்னுடைய குரூரம் உனக்கு மட்டுமல்ல, உன்னைப் பின்பற்றுபவர்களுக்கும் அழிவை அளிக்கும்” என்று பதில் அளித்தார்.
அதனால் கவலைப்படாத துரியோதனனோ தன்னுடைய சேவகனான பிரதிகாமினை அழைத்து, திரௌபதியை அழைத்து வரகூறினான். அழைக்க வந்த பிரதிகாமினிடம், புத்திசாலியான திரௌபதி, “சபைக்கு சென்று , யுதிஷ்டிரர் யாரை முதலில் இழந்தார், தன்னையா ? என்னையா ? ” என்று உறுதிப்படுத்தி வா” என்று திருப்பி அனுப்பினாள்
சபைக்கு வந்து திரௌபதியின் வினாவினை வினவிய பிரதிகாமினிடம் பதிலேதும் அளிக்காது யுதிஷ்டிரர் , சபையில் தரையில் அமர்ந்திருந்தார். துரியோதனனோ, “திரெளபதியே நேரில் வந்து தன் கணவனிடம் அதைக் கேட்டு கொள்ளட்டும் என்று கூறினான். அவ்வாறு வந்து கூறிய பிரதிகாமினிடம் திரௌபதி, “என்னுடைய சார்பாக சபைக்கு சென்று, சபையின் மூத்தவர்கள் அனை வரிடமும், வேண்டுகோள் விடுப்பாயாக. அவர்கள் சத்தியத்திற்கும், தர்மத்திற்கும் உட்பட்டு என்ன உறுதி கூறுகிறார்களோ, அதை நான் பின்பற்றுவேன் என்று கூறுவாயாக” என்று கூறினாள்.
அவ்வாறே பிரதிகாமினும் சபையில் வந்து கூற, எல்லோரும் வெட்கி தலைகுனிந்து, அமைதியாக இருந்தனர். இறுதியாக, துரியோதனன் பிரதிகாமினை குறைகூறி, பலவந்தமாக திரௌபதியை கொண்டு வருமாறு, துச்சாதனனனுக்கு கட்டளையிட்டான்.
ஆனந்தத்துடன் அக்கட்டளையை ஏற்ற துச்சாதனன், திரெபௗதியிடம் வந்து சபைக்கு வர கூறினான். அவனைக் கண்டு நடுங்கி ஓடிய, திரௌபதியை விரட்டிப் பிடித்த துச்சாதனன், அவளுடைய சுருண்ட கருங்கூத்தலைப் பிடித்து பயத்தால் நடுங்கிய அவளை இழுத்து வந்தான். திரௌபதியோ துக்கத்தில், “சரியாக உடை அணியாத என்னை, இழுத்து வருவது தகாது’ என்று கதறினாள். இவ்வாறு சபைக்கு இழுத்து வரப்பட்ட திரௌபதி, “கேவலமானவனே ! எவ்வாறு நான் சபையில் பெரியவர்கள் முன் இந்நிலையில் வர முடியும். ஏன் யார் ஒரு வரும் இச்செயலை கண்டிக்கவில்லை? இச்சபையில் உள்ள அனைவரும் ஒத்த மனமுள்ளவர்களாகத் தோன்றுகிறது. பரத வம்சத்தில் இருந்து நீதி மறைந்து விட் டதா? இல்லாவிடில், பீஷ்மர், துரோணர், திருதராஷ்டிரர் மற்றும் விதுரர் உட்பட அனைவரும் இப்பாவத்தை அமைதியாக பார்த்துக் கொண்டிருப்பது எவ்வாறு? ” என்று கதறினாள்.
பீஷ்மர் திரௌபதியிடம், “தர்மத்தின் விதிகள் மிகவும் சூட்சுமமானது. ஆகையால் இந்த பகடை சூதாட்டத்தில், முடிவு என்ன? என்பதை என்னால் உறுதியாக முடிவு செய்ய இயலவில்லை. தனக்கு உரிமையில்லாத ஒன்றை பணயம் வைப்பது கூடாது என்பது உண்மை? ஆனால் மற்றொரு பக்கம், எல்லா சூழ்நிலைகளிலும் மனைவி, கணவனின் உரிமைக்கு ஆளானவளே ஆவாள். எல்லோரும் சகுனி ஏமாற்றுவதை அறிந்தோம். ஆனால் யுதிஷ்டிரர் அதைப்பற்றிகுறைகூறவில்லை. மாறாகதன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டார். இவ்வாறாக நீ கௌரவர்களால் வெல்லப்பட்டாயா? இல்லையா? என்பதை என்னால் முடிவு செய்ய இயலவில்லை” என்று கூறினார்.
கதறிய வண்ணம் திரௌபதி, அவையின் மற்ற உறுப்பினர்களையும், சகுனி தன்னுடைய கணவர்களை எப்படி ஏமாற்றினான் என்பதை கருதக் கூறினாள். துரியோதனனின் சகோதரனான விகர்ணன் இதைப் பொறுக்க இயலாது எழுந்து நின்று, ” அரசர்களே நீங்கள் திரௌபதியின் கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும் . பீஷ்மரும் , திருதராஷ்டிரரும், விதுரரும் ஏன் அமைதி காக்கின்றனர் ? ஆச்சார்யர்களான துரோணரும், கிருபரும் ஏன் பேசவில்லை? கூடியுள்ள மன்னர்கள் அனைவரும் தங்களுடைய அபிப்பிராயங்களை சுயநலமோ, பயமோ, கோபமோ இல்லாமல் கூறட்டும்” என்று கூறினார். இவ்வாறு விகர்ணன் பல முறை கூறியும் பலனில்லாது போக , ” மற்றவர்கள் பேசுகிறார்களோ, இல்லையோ, என்னுடைய அபிப்ராயம், சகுனியால் திரௌபதி வெல்லப்படவில்லை. வேட்டையாடுதல், மது அருந்துதல், பெண்களு டன் அதிக உறவு, சூதாட்டம் என்ற நான்கும் மன்னர்களுக்கு பாவகரமானது. இதில் அளவுக்கதிகமாக ஈடுபடும் போது அவன் அரசன் என்ற தகுதியை இழந்து விடுகிறான். பகடை விளையாட்டில் அளவுக்கதிகமாக மூழ்கிய யுதிஷ்டிரர், இந்நிலையை அடைந்தார். ஆகையால், யுதிஷ்டிரருக்கு திரௌபதியை பணயம் வைக்க உரிமையில்லை. மேலும், திரௌபதி யுதிஷ்டிரருக்கு மட்டும் மனைவியல்ல. பாண்டவர்கள் ஐவருக்கும் மனைவியாவாள். மேலும் யுதிஷ்டிரர், தன்னையே முதலில் இழந்த பின், இன்னொருவரை பணயம் வைக்க, தகுதியற்றவர் ஆகிறார். அதுவும் சகுனியின் வற்புறத்தலினால் அப்பணயம் வைக்கப்பட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, திரௌபதி சூதாட்டத்தில் இழக்கப்படவில்லை. மேலும் அவர் கௌரவர்களுக்கும் உரிமைப் பொருளும் அல்ல” என்று கூறினார்.
இதைக் கேட்ட கர்ணன் விகர்ணனிடம் அவனை சிறு பையன் என்று கூறி அடக்கிவிட்டு துச்சாதனனிடம் திரும்பி பாண்டவர்கள் மற்றும் திரௌபதியின் துணிகளை. நீக்கக் கூறினான். பாண்டவர்களோ, தங்களுடைய துணிகளை வீசியெறிய, துச்சாதனன் திரௌபதி அணிந்திருந்த ஒரே துணியையும் அவள் உடலில் இருந்து இழுக்க ஆரம்பித்தான். தன் சுய முயற்சியாலோ, சபையின் முதியவர்களாலோ காப்பற்றப்படுவோம் என்ற நம்பிக்கை இழந்த திரௌபதி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வேண்ட ஆரம்பித்தாள். “ஓ கிருஷ்ணா ! ஓ கோவிந்தா ! ஓ கேசவா ! ஓ கோபி ஜன வல்லபா ஓ ஹரி ஓ ஜனார்தனா ! ‘ என்று கதற ஆரம்பித்தாள். அவளுடைய வேண்டுகோளுக்கிணங்க , பகவான் கிருஷ்ணர் மற்றவர்கள் காணாது, அங்கு வந்து, எண்ணற்ற ஆடைகளை அழித்து, துச்சாதனனின் முயற்சியைத் தோற்கடித்தார். இந்நிகழ்ச்சியை கண்ட விதுரர், ” மன்னர்களே! இன்னும் நீங்கள் அமைதிகாப்பது சரியல்ல. சரியான தீர்ப்பளிக்க வேண்டும். வேண்டியவர்களுக்கு நீதி அளிப்பது, படித்தவர்களின் கடமை. விகர்ணன் தன்னுடைய முடிவை சொல்லி விட்டார். நீங்களும் கூற வேண்டும். துன்பத்தில் இருப்பவர்கள் தன்னை அணுகும் போது அமைதியாக இருப்பவர் , பொய் சொல்வதன் பலனில் பாதியைப் பெறுகிறார் . அவ்வாறு இருக்கையில் , தர்ம விஞ்ஞானம் அறிந்தும் , சுயநலத்தால் உண்மை கூற மறுப்பவர்களை என்னென்று கூறுவது ? என்று கூறினார். கர்ணனோ அதைப் பற்றி கவலைப்படாது, துச்சாதனனிடம் திரௌபதியை அந்தப்புறத்திற்கு இழுத்துச் செல்லக் கூறினான். கதறிய திரௌபதியை துச்சாதனன் கண் மூடித்தனமாக இழுத்துச் செல்ல, திரௌபதியானவள் அவையினரிடம், “உங்களுடைய மருமகள் மற்றவர்கள் முன்னிலையில் கேவலப்படுத்தப்படும் போது, நீங்கள் எவ்வாறு அமைதியாக இருக்கிறீர்கள், நான் சூதாட்டத்தில் வெல்லப்பட்டேனா, இல்லையா என்பதை இறுதியாக முடிவு செய்து கூறுங்கள். உங்கள் முடிவுக்கேற்ப, நான் பணிவாக செயல்படுவேன்” என்று கூறினாள்.
பீஷ்மர் பதிலாக, ஆசீர்வதிக்கப்பட்டவளே, நான் ஏற்கனவே கூறியபடி, தர்மத்தின் நியதிகள் மிகவும் சூட்சுமமானது. நீ கூறிய பிரச்சனைக்கு , என்னால் சரியான பதில் கூற இயலவில்லை என்று கூறி சபையை சுற்றி பார்த்தார் . துரோணரும் மற்றவர்களும் தலைகுனிந்தவாறு அமைதியாக அமர்ந்திருப்பதைக்கண்டு திரௌபதியிடம், “பாஞ்சாலியே யுதிஷ்டிரரே , உன்னுடைய வினாவிற்கு தகுதியான விடையளிக்க வல்லவர் . ஆகையால் , நீயே அவரிடம் கௌரவர்களால், வெல்லப்பட்டாயா ? இல்லையா ? என்பதைக்கேள் என்று கூறி முடித்தார்.
இதைக் கேட்டதுரியோதனனும் , ” உன்னுடைய கணவர்களே இதற்கு பதில் அளிக்கவல்லவர்கள். யுதிஷ்டிரர் உன்னைபணயம் வைத்து இழந்தார். அவருடைய சகோதரர்கள் இந்த முட்டாள்தனத்திற்காக அவருடன் உறவைத் துண்டித்தால், உன்னை நான் விடுதலை செய்து, மற்ற நால்வருடன் வாழ விடுவிக்கிறேன். மேலும் யுதிஷ்டிரர், உன்னை பணயம் வைத்த பொழுது, உன்னுடைய நாதனல்ல என்று கூறினால், அப்போதும் நான் விடுவிக்கிறேன் ” என்று கூறினான். மேலும் துரியோதனன் யுதிஷ்டிரரிடம், “நீயும், உன்னுடைய சகோதரர்களும், சூதில் எங்களால் வெல்லப்பட்ட போது, திரௌபதியும் எங்கள் உரிமையானாள் என்பது உண்மை இல்லையா? “என்று வினவினான் . இவ்வாறுகூறிதனது இடது தொடையைசபையில் எல்லோர் முன்பும் திரௌபதிக்கு காண்பித்தான். இதனால் கோபமுற்ற பீமன், “யுத்தத்தில் அந்தத் தொடையைப் பிளக்காவிட்டால் என் மூதாதையர்கள் லோகத்தை அடையமாட்டேன் என்று சபதம் இட்டான். ”நிலைமை முற்றுவதை கண்ட விதுரர் , “மன்னர்களே, நீதி கொல்லப்பட்டால், இந்த சபை களங்கம் அடையும் . திருதராஷ்டிரரின் புத்திரர்களின் பாவகரமான சதிதிட்டத்தால், குருவம்ச அழிவு ,ஆரம்பமாகி விட்டது.
என்னுடைய அபிப்பிராயப்படி, யுதிஷ்டிரர் சூதாட்டத்தில் தன்னை இழக்கும் முன், திரௌபதியை பணயம் வைத்திருந்தால், பின் அவர், திரௌபதியின் தலைவனாக கருதப்பட்டிருக்கலாம். ஆனால், யுதிஷ்டிரர் முதலில், தன்னைப் பணயம் வைத்ததால், தன்னுடைய எல்லாச் சொத்துக் களையும் அவர் இழந்த பின், யுதிஷ்டிரருக்கு, வேறு எதையும் பணயம் வைக்க, உரிமையில்லை. ஆகையால் கௌரவர்கள் திரௌபதியை வென்றார்கள் என்பது கனவில் வந்த சொத்து போல் ஆகும்” என்று கூறினார். அதற்கு துரியோதனன், “யுதிஷ்டிரரின் இளைய சகோதரர்கள், யுதிஷ்டிரர் தங்கள் தலைவர் அல்ல, என்று உறுதிப்படுத்தினால், திரௌபதியை நான் விடுதலை செய்கிறேன்” என்றுகூறினான். அதைக் கேட்ட அர்ஜூனன், “சூதாட்டத்திற்கு முன், யுதிஷ்டிரர் நிச்சயமாக எங்கள் தலைவராக இருந்தார். ஆனால் அவர் தன்னை இழந்த பின் , அவர் யாருக்கு தலைவராக இருக்க முடியும் ? ” என்று கூறினான் . இந்நிலையில் அபசகுனங்கள் தோன்ற , கவலையுற்ற பீஷ்மர் , துரோணர், கிருபர் ஆகியோர் திருதராஷ்டிரரிடம் நிலைமையை சரிசெய்யக் கூறினர் . இவ்வாறாக திரௌபதியை இரண்டு வரங்கள் கொடுத்து , திருதராஷ்டிரர் சமாதானப்படுத்தினார். முதல் வரத்தால் யுதிஷ்டிரரையும், இரண்டாவது வரத்தால் மற்ற பாண்டவர்கள் நால்வரையும் அவர்கள் ஆயுதங்களுடன் அவர் விடுதலை பெற்றாள். இவ்வாறாக, மஹாபாரதத்தின் முக்கிய அங்கமான இப்பகுதி, தர்மதேவனின் அவதாரங்களான யுதிஷ்டிரரும் விதுரரும் மற்றும் மஹானாகிய பீஷ்மரும், துரோணரும், அனைவரும் கூட, திரௌபதி வெல்லப்பட்டது, சரியா ? தவறா ? என்று முடிவெடுக்க முடியாத நிலையில் தவித்தனர். அவர்களுடைய வாதங்களும், யுதிஷ்டிரரின் அமைதியும், பிஷ்மர் பதில் கூற முடியாத நிலைமையும், விதுரர் திரௌபதி வெல்லப்படவில்லை என்று கூறுவதும் பல விதமான வாதங்களுக்கு வித்தாக அமைகிறது. ஆகையால், தர்மம் எது ? அதர்மம் எது ? என்று பிரித்துப் பார்ப்பது கடினமானது. இதனையே பகவத்கீதையில், “அறிவுடையோரும் எது கர்மா (செய்யப்பட வேண்டிய செயல்), எது அகர்மா (செயலின்மை) என்பதில் குழம்புகின்றனர். (4.16) செயல்களின் நுணுக்கங்களை உணர்வது மிகக்கடினம். எனவே கர்மா என்பது என்ன, விகர்மா (செய்யத்தகாத செயல்) என்பது என்ன , அகர்மா என்பது என்ன என்பதை தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் ” (4.17 என்று கூறப்பட்டுள்ளது. ஆகையால் பக்தரானவர்கள், கர்மா, விகர்மா, இரண் டைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. கர்மா என்பது புண்ணிய காரியங்கள், அவை சொர்க்க லோகத்தைத் தரக்கூடியது. விகர்மா என்பது பாவகாரியங்கள், அவை நரகத்தைத்தரக்கூடியது. ஆனால் இரண்டுமே மனிதனுக்கு மறுபடியும் பிறப்பை அளிக்கக் கூடியது. இவ்வாறாக, கர்மா, விகர்மா இரண்டும் கர்ம பலனைத் தரக்கூடியது. ஆனால் பக்தர்களோ, தூய பக்தி காரியங்களில் ஈடுபடுகின்றனர். இத்தகைய தூய பக்தி காரியங்கள், அகர்மா எனப்படும் . இவை கர்மவினைப் பலன்களைத் தராது. ஸ்ரீமத் பாகவதத்தில் 6.3.19 , ” தர்மம் து சாக்ஷாத் பகவத் ப்ரணீதம்” ,அதாவது, “தர்மம் என்பது பகவானால் நேரடியாக நிர்ணயிக்கப்பட்டது” என்று கூறுவது குறிப்பிடத்தக்கது. ஆனால் பகவான் பகவத்கீதையில் (18.66) , சகல தர்மங்களையும் விட்டு விட்டு , எல்லா வழிகளிலும் அவருக்கு சேவை செய்வதையே உயர்ந்ததர்மமாகக்கூறுகிறார் .
இதைப் பின்பற்றும் பக்தன் ஒருவன், தர்மத்தின் எல்லா விதிகளையும் பின்பற்றியவன் ஆவான். அவனைக் கர்ம விளைவுகள் பாதிப்பதில்லை. ஆகையால் இந்நிகழ்ச்சியின் முடிவு என்னவென்றால், யாரொருவராலும், புண்ணிய பாவக் காரியங்களை தெளிவாக முடிவு செய்ய இயலாது. மேலும் அவை புண்ணிய காரியங்களோ, பாவகாரியங்களோ, இரண்டுமே கர்ம வினை பலன்களை தரக்கூடியது. ஆகையால் பக்தி வாழ்க்கையில் பக்தனானவன், தன்னுடைய செயல்களை பகவான் திருப்திக்காக பக்திக் காரியமாகச் செய்கிறான். அதனால் அவன் கர்மவினை பலன்களால் பாதிக்கப்படு வதில்லை. இதைப் புரிந்து கொண்டாலே, ஒருவரால் பகவான் மற்றும் பக்தர்களின் செயல்களை புரிந்து கொள்ள இயலும்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தர்மத்தின் வடிவானவர் . ஹரே கிருஷ்ணா .