Thursday, September 19

Srila Jiva Goswami (Tamil) / ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஶ்ரீல ஜீவ கோஸ்வாமி

பெருமை மிக்க வைஷ்ணவ ஆச்சாரியர்

வழங்கியவர்: நித்யானந்த தாஸ்
“””””‘”””””””””””””””””””””””””‘””””””””

ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், ரகுநாத பட்டர், கோபால பட்டர், ஜீவர் ஆகிய ஆறு கோஸ்வாமிகள் பகவான் சைதன்யரின் முதன்மையான சீடர்களாவர். .


ரூபரும் ஸநாதனரும்
சைதன்யரைக் காண ஏங்குதல்

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு, வங்காளத்தின் தலைநகரமான ராமகேலி எனும் இடத்தில் நவாப் ஹுசேன் ஷா என்பவரின் ஆட்சியில் ரூபரும் ஸநாதனரும் அமைச்சர்களாகப் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் பிறப்பால் உயர்ந்த பிராமணர்களாக இருந்தபோதிலும், சமூக நெருக்கடியினால் மிலேச்ச அரசருக்குக் கீழ் பணிபுரியும் நிலையில் இருந்தனர். எனினும், அவர்கள் தங்களின் உள்ளுணர்வின் மூலமாக, ராதையும் கிருஷ்ணரும் இணைந்து ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக தோன்றியுள்ளனர் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது. எனவே, “நாங்கள் உங்களை அடைவதற்கும் உங்களுக்குத் தொண்டு செய்வதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துங்கள். நாங்கள் தற்போது மிகவும் தாழ்ந்த வருந்தத்தக்க நிலையில் இருக்கின்றோம்,” என்று அவர்கள் மஹாபிரபுவிற்குக் கடிதம் எழுதினர். மஹாபிரபுவிடமிருந்து அக்கடிதத்திற்கான பதில் உடனடியாக வரவில்லை.

இறுதியில், மஹாபிரபு மறைமுகமான பதிலை அனுப்பினார்: “திருமணமான ஒரு பெண்ணிற்கு வேறொரு ஆணுடன் தொடர்பு ஏற்பட்டால், அவள் தன்னுடைய பணிகளை சந்தேகத்திற்கு இடம் தராமல் மிகவும் நன்றாகச் செய்வாள். இருப்பினும், அவள் தன் மனதில் எப்போதும் தனது கள்ளக் காதலரை நினைத்தபடி, அவரைப் பார்ப்பதற்கான தக்க தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருப்பாள்.”

தங்களுடைய தூய்மையான பக்தித் தொண்டினால் ரூபரும் ஸநாதனரும் பகவான் சைதன்யர் அனுப்பிய கடிதத்தின் உள்ளர்த்தத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. வெகுவிரைவில் மஹாபிரபுவின் அருள் கிட்டும் என்றும், அரசுப் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர் என்றும், தற்பொழுது சாதாரண நல்ல அமைச்சர்களைப் போன்று நடிக்க வேண்டும் என்றும் புரிந்து கொண்டனர்.

சைதன்யரைச் சந்தித்தல்

தன்படி, 1511ஆம் ஆண்டு மஹாபிரபு ஜகந்நாத பூரியிலிருந்து விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார். நேர் வழியில் செல்லாமல் பகவான் சைதன்யர் சுற்று வழியில் பயணம் செய்ததன் காரணத்தை யாரும் அறியாதபட்சத்தில், அவர் ராமகேலியை அடைந்தார். அங்கு ரூபர், ஸநாதனர், அவர்களின் இளைய சகோதரரான அனுபமர் ஆகியோர் மஹாபிரபுவைக் காண அவரது இருப்பிடத்திற்கு இரவில் இரகசியமாகச் சென்றனர். அப்போது சிறு குழந்தையாக இருந்த அனுபமரின் மகனான ஜீவ கோஸ்வாமி, சைதன்ய மஹாபிரபுவின் அசாதரணமான குணங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், தன் தந்தையை இரகசியமாகப் பின்தொடர்ந்து அங்கு சென்றார். அவர்களுக்குள் நடந்த அன்புப் பரிமாற்றங்களைத் தொலைவிலிருந்து கண்டார்.

பகவான் கௌரசுந்தரின் உருக்கிய தங்கத்தை ஒத்த அழகிய மேனியையும் அவருடைய அசாதாரணமான அழகையும் ஜீவர் கண்டார். சாக்ஷாத் கிருஷ்ணரேயான பகவான் சைதன்யர் ராதாராணியின் மேனி நிறத்தில் தோன்றியிருப்பதைக் கண்டார். மஹாபிரபுவின் தாமரை போன்ற கண்களும் முட்டிக்கு கீழே நீண்டிருந்த கரங்களும் மிகவும் அழகாகவும் நுண்மையாகவும் தோன்றின. அவரது சரீர அழகானது, ஜீவரை மயக்கி மனதில் எல்லையற்ற பேரன்பை உண்டாக்கியது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் இந்த அழகான காட்சியை அவரால் மறக்க முடியவில்லை. அதே சமயத்தில் நித்யானந்தரின் அழகைக் கண்டுகளிக்கும் வாய்ப்பையும் அவர் பெற்றார்.
(சைதன்ய மஹாபிரபுவை ஜீவர் தனது சிறுவயதில் கண்டதாகக் கூறப்படும் இந்நிகழ்ச்சி சிலரால் மறுக்கப்படுகிறது)
இந்நிகழ்ச்சிக்குப் பின், சில காலம் கழித்து, ஜீவரின் தந்தையான அனுபமர் கௌராங்கரைச் சந்திப்பதற்காக ரூபருடன் இணைந்து பயணித்தார். செல்லும் வழியில், வங்காளத்தின் கங்கைக் கரையில் அனுபமர் இப்பூவுலகத்தை விட்டு ஆன்மீக உலகைச் சென்றடைந்தார். சிறு குழந்தையாக இருந்த ஜீவ கோஸ்வாமிக்குத் தனது தந்தையின் மரணம் பெரும் துக்கத்தைக் கொடுத்தது. அவர் தன் தந்தையை, தந்தையாக மட்டுமல்லாமல் சிறந்த வைஷ்ணவராகவும் நேசித்து வந்தார்.

ரூபரும் ஸநாதனரும் கௌராங்க மஹாபிரபுவின் கட்டளைக்கிணங்கி விருந்தாவனத்தில் தங்கினர். சைதன்ய மஹாபிரபு அவர்களிடம், வைஷ்ணவர்களுக்கு உதாரணமாக விளங்கி அவர்கள் பின்பற்ற வேண்டிய நடத்தைகளை வகுக்க வேண்டும் என்றும், வேத சாஸ்திரங்களின் சாரத்தை எடுத்து தூய பக்தியே வாழ்க்கையின் குறிக்கோள் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றும், விருந்தாவனத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது அற்புத லீலைகளை நடத்திய புண்ணிய க்ஷேத்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும், கோவில்களை நிறுவி முறையான விக்ரஹ வழிபாட்டினை நிலைநிறுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

ஜீவ கோஸ்வாமியின் ஏக்கம்
ரூபரும் ஸநாதனரும் விருந்தாவனத்தில் இருந்தபோது, ஜீவ கோஸ்வாமி, “நான் எப்பொழுது விருந்தாவனம் சென்று ரூபரையும் ஸநாதன ரையும் சந்திப்பேன்? அந்த நாள் எப்போது வரும்?” என்று ஏங்கிய வண்ணம் வாழ்ந்தார். ரூப கோஸ்வாமி, ஸநாதன கோஸ்வாமி ஆகியோரின் மீதான மாபெரும் ஆர்வத்தினால், ஜீவர் பௌதிக விஷயங்களில் ஆர்வமின்றி இருந்தார். அவருடைய குடும்பம் மிகுந்த செல்வாக்குடையதாக இருந்தது, அழகிய ஆடை ஆபரணங்களும் அனைத்து வசதிகளும் அவருக்குக் கொடுக்கப்பட்டன. ஆனால் அவரோ அவை எல்லாவற்றையும் அலட்சியம் செய்தார். அவருடைய நண்பர்கள் நன்றாக விளையாடும்போது, அவருக்கு அதில் துளியும் ஈடுபாடு ஏற்படவில்லை. அவர் தன் சிறுபிராயத்திலிருந்தே கிருஷ்ண பலராமரின் பக்தியில் மட்டுமே ஆர்வம் கொண்டிருந்தார். கிருஷ்ண பலராமரின் சிறு விக்ரஹங்களைச் செய்து, அவர்களுக்கு சேவை செய்வதிலேயே தன் பொழுதைக் கழித்தார். விக்ரஹங்களுக்கு சுவைமிகு இனிப்புகளைப் படைத்து சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்ப்பிப்பார். அவர்களுக்கு ஆபரணங்கள், ஆடைகள், மலர்மாலைகள் செய்து மகிழ்வார். “ஓ, கிருஷ்ண! ஓ பலராம்! நான் எப்பொழுது ரூப, ஸநாதன கோஸ்வாமிகளைக் (விருந்தாவனத்தில்) காணும் நாள் வரும்?” என்று எப்போதும் பிரிவால் ஏங்குவார். இரவில் தூங்கச் செல்லும் போதுகூட கிருஷ்ண பலராம விக்ரஹங்களை தன் மார்போடு அரவணைத்தபடி படுத்து உறங்குவார்.

கனவில் சைதன்ய மஹாபிரபு தோன்றுதல்

கௌராங்க மஹாபிரபு மற்றும் அவரது சீடர்களின் பிரிவால் ஜீவர் மிகுந்த துயரத்தில் இருந்தபோதிலும், அவ்வப்போது தன்னைத்தானே தேற்றிக் கொண்டு வாழ்ந்தார். அவருடன் இருந்த மக்களோ, “இந்த ஜீவன் தனது தந்தையின் மரணத்திற்குப் பின் எப்பொழுதும் அழுத வண்ணமாக இருக்கிறான்,” என்று எண்ணி பரிதாபப்பட்டனர். அவரோ, கண்களில் இடைவிடாத ஆனந்தக் கண்ணீருடன், தன் கிருஷ்ண பலராம விக்ரஹங்களுக்கு சேவை செய்து கொண்டிருந்தார். பரவசத்தினால் எழக்கூடிய மன எழுச்சியை அவர் பெரும்பாலும் மறைத்துவிடுவார்.

ஒருநாள், ஜீவ கோஸ்வாமி பகல் முழுவதும் பகவானுக்கு அன்புத் தொண்டு செய்து கொண்டிருந்த நிலையில், இரவு வந்தது. இந்த இரவில் ஜீவரால் தன்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர் தனது ஆழ்மனதிலிருந்து பிரார்த்தித்தார்: “பகவானே! கௌரசந்திர! நித்தியானந்த பிரபு! அத்வைத பிரபு! என்னிடம் தயை காட்டுங்கள்!” அவர் உறக்கமின்றி இரவு முழுவதும், விம்மிக் கொண்டும் அழுது கொண்டும் இருக்க, இறுதியில் இரவுப் பொழுது முடியும் தருவாயில் உறங்கிப் போனார்.

அப்போது அவர் மிக அற்புதமான கனவு ஒன்றைக் கண்டார். அக்கனவில், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு, நித்யானந்தர், அத்வைதர், ஸ்ரீவாஸர், ஹரிதாஸர் மற்றும் அனைவரும் அற்புதமான நாம சங்கீர்த்தனத்தில் ஈடுபட்டிருந்தனர். மஹாபிரபுவின் தங்கமயமான ரூபத்தைக் கண்டு, ஜீவ கோஸ்வாமி தனது மனதில் பரம ஆனந்தத்தை அனுபவித்தார். பகவான் சைதன்ய மஹாபிரபு பாடி ஆட, அவருடன் குழுமியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள், ஒருங்கே சேர்ந்து மஹாமந்திரத்தை எதிரொலித்தனர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண

கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

ஹரே ராம ஹரே ராம

ராம ராம ஹரே ஹரே

சற்று நேரம் கழித்து, கனவு கலைந்தது. விழித்தெழுந்த ஜீவர், மஹாபிரபுவைக் காண முடியாமல் சிதறிய மனதுடன், “எம்பெருமானே, நீங்கள் எங்கே? எங்கு இருக்கிறீர்கள்? எங்கே மறைந்தீர்கள்?” என்று கீழே விழுந்து புரண்டார், பிரிவால் மனம் வாட பகவானின் அருளால் மீண்டும் உறங்கிப் போனார். இம்முறை, அவர் அன்றாடம் வழிபடும் கிருஷ்ண பலராமர், தங்களுடைய சுய ரூபத்தில் அவருக்குக் காட்சியளித்தனர். கிருஷ்ணர் அழகிய நீல வர்ண மேனியில், தங்க கிரீடம், தாமரை மலர் போன்று மலர்ந்த கண்கள், தலையில் மயில் தோகை, அற்புதமான ஆபரணங்கள், மற்றும் மலர் மாலைகளை அணிந்து சியாமசுந்தரராகத் தோன்றினார். வெண்மை நிற மேனியுடன், அழகிய நீலநிற ஆடை அணிந்து, அன்றலர்ந்த மலர்கள் மற்றும் ஆபரணங்களுடன் பலராமர் தோன்றினார். அவர்கள் இருவரும் மிகுந்த அன்புடன், சிறுவன் ஜீவரை நோக்க, அவரும் அவர்களுடைய பரிபூரண கருணையில் மூழ்கினார். பிறகு, பலராமர் நித்யானந்த பிரபுவாக மாற, ஸ்ரீ கிருஷ்ணர் கௌரசுந்தரராக மாறினார். ஜீவர் தன் சாஷ்டாங்க நமஸ்காரங்களை சமர்பித்து, அவர்களின் பொற்பாத கமலங்களைத் தனது சிரசில் வைத்து வணங்கினார். சைதன்ய மஹாபிரபு ஜீவ கோஸ்வாமியிடம், “நான் உன்னை நித்யானந்த பிரபுவின் பொறுப்பில் ஒப்படைக்கிறேன். நீ அவருடைய சொத்து,” என்று கூற, நித்யானந்த பிரபு ஜீவரிடம், “பகவான் கௌராங்கரை உன் இறைவனாக வழிபடுவாயாக” என்று கூறினார்.

நவத்வீபம் செல்லுதல்

இந்த அற்புதமான தரிசனத்திற்குப் பின்னர், ஜீவரின் கனவு முடிவுற்றது. குடும்பப் பற்றுதலை முற்றிலுமாகத் துறந்து விருந்தாவனத்திற்கு ஓட நினைத்தார். ஆனால் பரமாத்மாவினால் தூண்டப்பட்டு, நவத்வீபத்திற்குச் சென்று கௌராங்க மஹாபிரபுவின் ஆரம்ப கால லீலைகள் நடைபெற்ற இடங்களை தரிசிக்க ஆவல் கொண்டார். நித்யானந்த பிரபு நவத்வீபத்தில் வசித்து வருவதையும் அவர் நன்கறிவார். நவத்வீபத்தில் ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் உள்ளார்வத்தை நிறைவேற்ற, அவரை நவத்வீப தாமம் முழுவதும் நித்யானந்த பிரபு யாத்திரையாக அழைத்துச்
சென்றார். பிற்காலத்தில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் தனது தெய்வீகப் பார்வையின் மூலம், அவர்களது யாத்திரையின் பல்வேறு விளக்கங்களை தனது நவத்வீப தாம மஹாத்மியம் என்னும் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

வாரணாசிக்குச் செல்லுதல்

அதன் பின்னர், நித்யானந்த பிரபு ஜீவரிடம் விருந்தாவனத்திற்குச் சென்று ரூப ஸநாதனரிடம் தஞ்சமடையும்படி கட்டளையிட்டார். “விருந்தாவனம் சைதன்ய மஹாபிரபுவினால் உங்களு டைய குடும்பத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, நீ அங்குச் செல்வது அவசியம். விருந்தாவனத்திற்குச் செல்லும் வழியில் வாரணாசிக்குச் (காசிக்குச்) செல். அங்கு ஸார்வபௌம பட்டாசாரியரின் சீடரான மதுசூதன வாசஸ்பதியிடமிருந்து சாஸ்திரங்களைக் கற்றுக் கொள்.” நித்யானந்த பிரபுவின் கட்டளைப்படி வாரணாசிக்கு சென்ற ஜீவர், அங்கு மதுசூதன வாசஸ்பதியின் மாணவரானார். குறுகிய காலத்தில், வாரணாசியில் மட்டுமின்றி எல்லாவிடங்களிலும் ஒரு மிகச்சிறந்த பண்டிதனாகப் புகழ் பெற்றார். அவருடைய ஆழ்ந்த வேதாந்தக் கல்வியும் சாஸ்திரப் புலமையும் அவரை மிகவும் பிரபலமாக்கின.

விருந்தாவனம் செல்லுதல்

வாரணாசியில் கல்வி கற்ற பின்னர், தனது நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற, ஜீவ கோஸ்வாமி விருந்தாவனத்தை நோக்கிப் புறப்பட்டார். விருந்தாவனத்தில் அவர் தனது அன்பிற்குரிய பெரிய தந்தையர்களைச் சந்தித்தார். ஸநாதனரே வயதில் மூத்தவர் என்பதால், ஸநாதனரிடம் சரணடைந்த ஜீவர் தன்னை அவரது சீடனாக ஏற்று தீக்ஷை தரும்படி வேண்டினார். ஆனால், ஸநாதன கோஸ்வாமியோ அவரை ஸ்ரீல ரூப கோஸ்வாமியிடம் தீக்ஷை பெறுமாறு கூற, அவரும் அதற்கு உடன்பட்டார். ரூப கோஸ்வாமி அதற்கு ஒப்புக் கொண்டாலும், உடனடியாக தீக்ஷை தராமல், ஒரு சிறப்பான சீடன் எப்படி வாழ வேண்டும் என்ற பயிற்சிக்கு பிறகு தீக்ஷை தருவதாகக் கூறினார்.

ரூப கோஸ்வாமியின்
சேவையில் ஜீவர்

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தினார். சில சமயங்களில், ராதா கோவிந்த விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், மலர்மாலை தொடுத்தல், இடங்களை சுத்தம் செய்தல், ரூப கோஸ்வாமியின் பாத கமலங்களை பிடித்துவிடுதல், எழுதுவதற்காக ஆலிலைகளை ஏற்பாடு செய்தல், எழுதுகோல் (எழுத்தாணி) செய்தல் போன்ற பல சேவைகளில் ஜீவர் ஈடுபட்டார்.
என்னே, ஜீவ கோஸ்வாமியின் உயர்ந்த நிலை! நாமும் ஆறு கோஸ்வாமிகளைப் பின்பற்ற வேண்டுமெனில், இந்த முக்கிய கொள்கையைப் பின்பற்ற வேண்டும். நாம் எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும், புகழ், பெரும் கல்வி என்று என்னதான் இருந்தாலும், நாம் நம்மை சாதாரண சேவைகளுக்கு மட்டுமே தகுந்தவராகக் கருதி, சேவகர்களுக்கு சேவகர்களுக்கு சேவகர்களாகப் பார்க்க வேண்டும். இதுவே வைஷ்ணவருக்கான அடையாளம். இந்த வைஷ்ணவ உணர்வே ஸ்ரீ ராதா தாமோதரரின் கருணையைப் பெறுவதற்கான வழியாகும். ஜீவ கோஸ்வாமி ஆற்றிய எளிமையான சேவைகளில் மகிழ்ச்சியுற்ற ரூப கோஸ்வாமி, அவருக்கு கௌடீய வைஷ்ணவ சம்பிரதாய முறைப்படி தீக்ஷை வழங்கினார்.

ராதா தாமோதரரை வழிபடுதல்

1542ஆம் ஆண்டு ரூப கோஸ்வாமி, தன் கைகளால் ஒரு விக்ரஹத்தை வடிவமைத்து, அவருக்கு ஸ்ரீஸ்ரீ ராதா தாமோதரர் என்று பெயரிட்டு பிரதிஷ்டை செய்து வழிபட்டார். ஜீவ கோஸ்வாமியிடம் மிகுந்த அன்பு கொண்டமையால், அந்த விக்ரஹங்களை அவரிடம் ஒப்படைத்தார். அவரும் ஆழ்ந்த அன்புடனும் பக்தியுடனும் அவர்களை வழிபட்டார். நரஹரி சக்கரவர்த்தி தாகூர் தான் எழுதிய பக்தி ரத்னாகர் என்னும் நூலில், இந்த விக்ரஹங்களின் மீது ஜீவ கோஸ்வாமி கொண்டிருந்த அன்பை எடுத்துரைத்துள்ளார்
ஜீவ கோஸ்வாமியின் பக்தியில் மகிழ்ந்த ராதா தாமோதரர் அவருடன் நேராகப் பேசுவார். “எனக்கு பசிக்கின்றது, தயவுசெய்து உணவு கொடு,” என்று தாமோதரர் கூற, ஜீவ கோஸ்வாமியும் உடனே தளிகை செய்து மிகுந்த அன்புடன் நைவேத்யம் செய்வது வழக்கம். தாமோதரரின் கருணையால், அவர் உணவு உண்பதை ஜீவ கோஸ்வாமியால் நேரில் பார்க்க முடிந்தது.
ஒருநாள், இனிய வேணு கானத்தை ஜீவ கோஸ்வாமி கேட்க நேர்ந்தது. “ஜீவரே! இங்கு வா, உனக்காக புல்லாங்குழல் வாசிக்கின்றேன்” என்று தாமோதரர் கூற, உடனே அவரும் தாமோதரரிடம் விரைந்து வந்தார். அங்கே, தாமரை போன்ற கண்கள், தலையில் மயில் தோகை, கழுத்தைச் சுற்றி காட்டு மலர்கள், மேனி முழுவதும் அழகிய ஆபரணங்கள் என தனது பக்தனின் மகிழ்ச்சிக்காக தாமோதரர் அழகிய உருவத்தில் காட்சியளித்தார். மேலும், தாமோதரர் தனது புல்லாங்குழலில் இனிய கானம் இசைத்துப் பாடிக் கொண்டும் ஆடிக்கொண்டும் இருந்தார். அதைக் கண்ட ஜீவ கோஸ்வாமி, பரவசத்தால் சுய நினைவின்றி விழுந்தார். மீண்டும் நினைவு திரும்பியபோதும், அவரால் தனது ஆழ்ந்த பரவச நிலையிலிருந்து எழ முடியாமல் தவித்தார்.

மாமன்னர் அக்பருடனான
தொடர்பு

ஒருமுறை மாமன்னர் அக்பர், விருந்தாவனத்திற்கு வருகை புரிந்த போது, ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியின் தரிசனம் கிடைக்கப் பெற்று, மனமாற்றம் அடைந்தார். மன்னருக்கு விருந்தாவனத்தின் அருமை பெருமைகள் எடுத்துரைக்கப்பட்டன. ஜீவ கோஸ்வாமியின் கட்டளைக்கு இணங்க அவரும் அவருடைய மந்திரிகள், தளபதிகள் என அனைவரும், விருந்தாவனத்தை நல்ல ஒரு யாத்திரை ஸ்தலமாக மாற்றுவதற்கு மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டனர். ராதா கோவிந்தர் திருக்கோவில், ராதா தாமோதரர் திருக்கோவில், ஜுகல கிஷோர் திருக்கோவில், ராதா கோபிநாதர் திருக்கோவில் என பல்வேறு கோயில்களின் கட்டுமானப் பணிகளுக்கு அவர்கள் பெரிதும் உதவினர்.

இலக்கியப் பணிகள்

தத்துவங்களை விளக்கி ஜீவ கோஸ்வாமி இயற்றிய இலக்கியங்கள் அவரது சேவைகளில் தலைசிறந்து நிற்கின்றன. ஸட் ஸந்தர்பம், கோபால சம்பூ உட்பட சுமார் இருபத்தைந்து புத்தகங்களின் வழியாக 4,00,000க்கும் மேற்பட்ட சமஸ்கிருத ஸ்லோகங்களை அவர் நமக்கு நல்கியுள்ளார். யாராலும் தோற்கடிக்கப்பட முடியாத வகையில் தக்க வேத பிரமாணங்களையும் (சாட்சிகளையும்) வலுவான நியாயத்தையும் கொண்டு, சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்களை இதுவரை எவரும் செய்யாத வகையில், ஸ்ரீல ரூப கோஸ்வாமியின் கட்டளைப்படி ஜீவ கோஸ்வாமி நிலைநாட்டினார். எனவே, நம்முடைய இயக்கத்தின் தத்துவங்களை நிலைநாட்டிய பெருமை அவரையே சேரும்.

மேலும், அவர் ராதா தாமோதரர் கோவிலில் ஒரு நூலகம் அமைத்து, அதில் ரூபர், ஸநாதனர், ரகுநாத தாஸர், கிருஷ்ண தாஸ கவிராஜர், கோபால பட்டர் ஆகியோரின் இலக்கியங்களைப் பத்திரப்படுத்தினார்.

இவ்வுலகிலுள்ள அனைத்து தத்துவங்களிலும் கௌடீய வைஷ்ணவ தத்துவமே சிறந்தது. மனித குல வரலாற்றில் தோன்றிய தத்துவவாதிகளுள் ஜீவ கோஸ்வாமி தன்னிகரற்று திகழ்கிறார். ஸ்ரீல ரூப கோஸ்வாமியும் ஸ்ரீல ஸநாதன கோஸ்வாமியும் இப்பூவுலக லீலைகளை முடித்துவிட்டு, சைதன்ய மஹாபிரபுவின் நிரந்தர இருப்பிடத்திற்குத் திரும்பிய பின்னர், ஸ்ரீ ஜீவ கோஸ்வாமியை கௌடீய வைஷ்ணவ சம்பிரதாயத்தின் ஆச்சாரியராக ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரே அங்கீகரித்தனர். வங்காளத்திலும் விருந்தாவனத்திலும் அப்போது பல்வேறு ஆச்சாரியர்கள் இருந்தபோதிலும், ஜீவ கோஸ்வாமியே மிகவும் முக்கியமான வராக ஏற்றுக்கொள்ளப்பட்டு, கௌடீய வைஷ்ணவர்களின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜீவ கோஸ்வாமியின் திருப்பணிகள் இன்றுவரை அவரைப் பின்பற்றுவோரால் பாதுகாக்கப்பட்டும் வளர்க்கப்பட்டும் வருகின்றன!
ஆன்மிக முன்னேற்றம் பெற
அவரது கருனையை வேண்டி பிறத்திப்போம்….!

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question