Saturday, July 27

Radhastami (Tamil) / ஸ்ரீ ராதாஷ்டமி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ ராதாஷ்டமி
– ஸ்ரீமதி ராதாராணியின் அவதாரத் திருநாள் !

ஸ்ரீராதாஷ்டமி என்றால் ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த அஷ்டமி திருநாளாகும். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்த திருநாள் கோகுலாஷ்டமி என்றழைக்கப்படுவதை போல, ஸ்ரீமதி ராதாராணி அவதரித்த திருநாள் ஸ்ரீராதாஷ்டமி என்று அழைக்கப்படுகிறது.

ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமயமான அந்தரங்க சக்தியும், மிக மிகச் சிறந்த தூய பக்தையும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லக்ஷ்மி தேவியின் மூலம் ஆவார்.

ராதாராணி அவதார மகிமை:-

ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம் மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதிதேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதி தேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது. கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரிய சிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனே தனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலைஆசைப்பட்டது.
இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை. இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்ம தேவர், முழுமுதற் கடவுளான பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார் என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதை கொண்டாட பெரியவிழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது கம்சனின் அணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி பூதனா பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்று கொண்டிருந்தாள்.

எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக் கொண்டு வானத்தில் பறந்தாள்.
இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாவை தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூதனாவின் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள்.

அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதி ராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர், மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர் சந்திராவளி ஆவார்

.யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்:-

யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளி வீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர் விருஷபானு . அப்போது வானத்தில் தோன்றிய பிரம்ம தேவர், மன்னர் விருஷபானவே! நீ தரிசிக்கும் இந்த குழந்தை. சாதாரண குழந்தை அல்ல. லெஷ்மி தேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்த தெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.

web radharani bhakti yoga

பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி கீர்த்திதா மிகவும் மகிழ்வுற்றாள். இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும் தெய்வப் புதல்வியாக அவதரித்தார். ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை. இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷி நாரதர் வந்தார்.அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார். அதற்கு நாரதர், “கவலைப்பட வேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்கு ஒரு விழா நடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்” என்று ஆசீர்வதித்தார்.

பிறகு மன்னர் ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்ற நந்த மகாராஜா, குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின் தாய் ரோஹிணி உட்பட விரஜவாசிகள் பலரும் சென்றனர்.

கிருஷ்ணரே முதல் தரிசனம்:-

விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம் விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்போது தான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து, ராதாராணியின் தொட்டில் அருகே சென்றார். கிருஷ்ணர் தன் முன் வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களை திறந்தார். முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின.

கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும், தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையும் முதலில் தரிசிக்கக் கூடாது என்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார். எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது.அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது. இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர்.குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெரு மகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.

கிருஷ்ணரின் சேவையில் ராதாராணியே முதலிடம்:-

கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதி ராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது. ஸ்ரீமதி ராதா ராணி கிருஷ்ணர் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காக தான், கிருஷ்ணரே, சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது. அந்த அளவிற்கு ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்கான வருடங்கள் தவங்கள் செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் தெய்வீக அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருணையால் மட்டுமே ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.

ராதாராணியின் திருவருள் அவசியம்:-

ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும்.
யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ண பக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீராதாஷ்டமி திருநாளின் விசேஷம் என்னவென்றால்,
“ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம்” விசேஷம் ஆகும். பொதுவாக ஸ்ரீஸ்ரீராதா கிருஷ்ணர் கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும். எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில் விரதம் இருந்து திருப்பாத தரிசனம் பெறுவர்.

lotus footprints of lord krsna s

ஸ்ரீராதாஷ்டமி அன்று செய்ய வேண்டியது:.
அன்று மதியம் வரை விரதம் இருக்க வேண்டும்.
ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகபட்சம் உச்சரிக்க வேண்டும். ஸ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் செய்ய வேண்டும்.

ராதாராணியின் வசீகரம்

மன்மதனின் அழகு அளவிட முடியாததாகக் கூறப்படுகிறது. அனைவரை யும் வசீகரிக்கும் தன்மை மன்மதனுக்கு உண்டு. அவனை வென்றவர்கள் மிகவும் அரிது. இப்படிப்பட்ட கோடி மன்மதர்களை வசீகரிக்கும் தன்மை பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்கு உண்டு. ஆகையால் தான் பகவான் கிருஷ்ணர், ’மதனமோஹனர் (மன்மதனையும் மயக்கக் கூடியவர்) என்று அழைக்கப்படுகிறார். ஆனால் அந்த மதனமோஹனரையே வசீகரிப்பவள்தான் ராதாராணி. ஆகவே, ராதாராணி ‘மதன மோஹன மோஹினி’ என்று அழைக்கப்படுகிறாள்.

ஸ்ரீமதி ராதாராணியின் கருணை

ஸ்ரீமதி ராதாராணி கருணையே வடிவானவள். உலக உயிர்வாழிகளிடம் மிகவும் கருணையும், பேரன்பும் உடையவள். கிருஷ்ணருக்கு மிகவும் பிரியமானவளாக இருப்பினும், துளியும் கர்வம் இல்லாதவள். விருந்தாவனத்தில் கோபியர்கள் கிருஷ்ணருடன் லீலைகளைப் புரிவதற்கான சந்தர்பத்தை ராதாராணியே ஏற்படுத்திக் கொடுப்பாள். இதர கோபியர்கள், கிருஷ்ணருடன் மாதுர்ய பாவத்தைப் (தெய்வீக காதல் உணர்வுகளைப்) பகிர்ந்துகொள்ளும்போது, தான் கிருஷ்ணருடன் இருக்கும் போது அடையும் மகிழ்ச்சியைவிட பல்லாயிரம் மடங்கு மகிழ்ச்சியடைவாள் ஸ்ரீமதி ராதாராணி. அவ்வளவு கருணை உடையவள் ராதாராணி, நாம் ராதாராணியின் அருளைப் பெற்றோமானால், கிருஷ்ணரின் அருள் தானாகவே கிடைக்கும். இதனால் கிருஷ்ணரை விட்டுவிடலாம் என்று நாம் நினைத்துவிடக் கூடாது. கிருஷ்ணரை விட்டுவிட்டால் ராதை தனது கருணையை நமக்கு வழங்க மாட்டாள்.

ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தில் ராதாராணி

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம
ராம ராம ஹரே ஹரே

என்னும் மஹா மந்திரத்தில் ‘ஹரே’ என்னும் சொல் 8 முறை வருகிறது. ‘ஹரா’ என்றால் ‘ராதா’ என்று பொருள். ‘ராதா’ என்னும் சொல், விளிச்சொல்லாக வரும்போது ‘ராதே’ என்று மாறுவதைப் போலவே, ‘ஹரா’ என்னும் சொல் ‘ஹரே’ என்று மாறி வருவதாக ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார்.

நாம் இந்த மஹா மந்திரத்தை பகவத் சிந்தனையுடன் வாயினால் உச்சரித்து காதால் நன்கு கேட்க வேண்டும். ‘ஹரே’ என்று சொல்லும்போது அச்சொல்லின் அலைகள் பரவ, ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் உச்சரிக்கப்படுவதை எண்ணி பகவான் கிருஷ்ணர் மகிழ்கிறார். அதே சமயம் ‘கிருஷ்ண’ என்று சொல்லும்போது, பகவான் கிருஷ்ணரின் பெயர் உச்சரிக்கப்படுவதைக் கேட்டு ராதாராணி மகிழ்ச்சியடைகிறாள். இந்த உணர்வை மனத்தில் நிறுத்தி நாம் ஜெபம் செய்ய வேண்டும். ராதாராணியானவள் நம்மீது கருணை வைத்து கோலோக விருந்தாவனத்திற்கு அழைத்துச் செல்ல முடிவு செய்வாளேயானால், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அதனைக் நிச்சயமாக ஏற்றுக்கொள்வார்.

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு
ஸ்ரீமதி ராதாராணி கிருஷ்ணரின் மீது வைத்துள்ள உயர்ந்த அன்பினை கிருஷ்ணரால்கூட உணர முடியவில்லை. அந்த அன்பினை உணர விரும்பிய அவர், ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபுவாக, சுமார் 500 வருடங்களுக்கு முன்பு மேற்கு வங்காளத்திலுள்ள மாயாப்பூரில் தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணியின் மனோபாவத்தையும் திருமேனி நிறத்தையும் தாங்கி, ஜடவுலகின் கட்டுண்ட ஆத்மாக்களாகிய நம்மையெல்லாம் விடுவிப்பதற்காக பரம கருணா மூர்த்தியாக சைதன்ய மஹாபிரபு தோன்றினார். ஸ்ரீமதி ராதாராணி கருணையே உருவானவள் என்பதால், ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவும் கருணையின் பெருங்கடலாக காட்சியளித்தார். பகவானின் எல்லா அவதாரங்களிலும் அவரே மிகவும் கருணை வாய்ந்தவராகக் கருதப்படுகிறார்.

விருந்தாவனமும், ராதாராணியும்

தப்த காஞ்சன கௌராங்கி
ராதே வ்ருந்தாவனேஸ்வரி
வ்ருஷபானு ஸுதேதேவி
ப்ரணமாமி ஹரி-ப்ரியே

“பொன்னிற மேனியுடையவரும், விருஷபானு மஹாராஜாவின் புதல்வி யுமான ராதாராணியே, விருந்தா வனத்தின் ஈஸ்வரியே, உம்மை நான் வணங்கு கின்றேன்.”

ராதாராணி, விருந்தாவனத்தின் ஈஸ்வரி என்று அழைக்கப்படுகிறாள். விருந்தாவனத்தில் ராதாராணிக்கு சிறப்பான மதிப்பு உண்டு. நாட்டையே கட்டுப்படுத்தும் பிரதமரின் இல்லத்தை அவரது துணைவி கட்டுப்படுத்துவதுபோல, எல்லா உலகையும் கட்டுப்படுத்தும் கிருஷ்ணரின் இல்லத்தை (விருந்தாவனத்தை) ஸ்ரீமதி ராதாராணி கட்டுப்படுத்துகிறாள். விருந்தாவனத்தில் கிருஷ்ணரைக்காட்டிலும் ராதைக்குதான் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. விருந்தாவனத்தின் சுவர்களிலெல்லாம் ‘ராதே’ என்ற பெயர் எழுதப்பட்டிருக்கும். விருந்தாவனத்தில் ரிக்ஷா ஓட்டுபவர்கள் ‘நகருங்கள்’ என்று சொல்வதற்கு பதில் ‘ராதே, ராதே’ என்றுதான் சொல்வார்கள்.

விருந்தாவனத்திலுள்ள ராதாகுண்டத்திற்கும் தனிமதிப்பு உண்டு. ராதாகுண்டத்தின் மீதுள்ள பெரும் மதிப்பினால், பொதுவாக இஸ்கான் பக்தர்கள் அதில் நீராடுவதில்லை. ராதாகுண்டத்தின் தீர்த்தத்தை தெளித்துக் கொண்டாலே ராதாதேவியின் கருணை நமக்குக் கிடைக்கும்.

ஸ்ரீமத் பாகவதமும் ஸ்ரீமதி ராதாராணியும்

இவ்வளவு சிறப்புமிக்க ஸ்ரீமதி ராதாராணியின் பெயர் ஸ்ரீமத் பாகவதத்தில் கூறப்படவில்லையே என்று சிலர் வினவுவது வழக்கம். ஸ்ரீமத் பாகவதம் சுகதேவ கோஸ்வாமியால் மன்னர் பரீக்ஷித்திற்கு உபதேசிக்கப்பட்டதாகும், இது பகவான் கிருஷ்ணரைப் பற்றிய மிகவுயர்ந்த புராணம். கிருஷ்ணரைப் பற்றிப் பேசும்போது அங்கு ராதையும் இடம் பெறுதல் மிகவும் அவசியம். ஆனால், பாகவதத்தில் ஓர் இடத்தில்கூட ராதாராணி பிரத்யேகமாகக் கூறப்படவில்லை. ஒரே ஓர் இடத்தில் மட்டும் அவளது பெயர் மறைமுகமாக வர்ணிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்னவெனில், ‘ஸ்ரீராதே’ என்று ஒருமுறை சுகதேவர் கூறினாலும், அவர் தன்னை மறந்த பக்திப் பரவசத்தில் ஆழ்ந்து விடுவார். பின்னர், ஏழு நாட்களுக்குள் ஸ்ரீமத் பாகவதத்தை பரீக்ஷித்து மஹாராஜாவுக்கு உபதேசம் செய்ய முடியாது. ஆகவேதான், சுகதேவர் ஒருமுறைகூட ராதிகா தேவியைப் பற்றி நேரடியாக பேசவில்லை,

ஸ்ரீல பிரபுபாதரும் ராதாகுண்டமும்

இஸ்கானின் ஸ்தாபக ஆச்சாரியரான ஸ்ரீல பிரபுபாதரின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி ராதா குண்டத்தின் கரையில் நிகழ்ந்தது. ஸ்ரீல பிரபுபாதரின் குருவாகிய ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர், “உனக்குப் பணம் கிடைத்தால் புத்தகங்கள் அச்சடித்து விநியோகம் செய்வாயாக,” என்று ஸ்ரீல பிரபுபாதரிடம் கூறினார். ராதா குண்டத்தின் கரையில் அமைந்திருந்த கௌடீய மடத்தில் வழங்கப்பட்ட இந்த முக்கிய உபதேசம், இஸ்கான் அமைவதற்கும் வளர்ச்சி பெறுவதற்கும் மிக முக்கிய பங்காற்றி யுள்ளதை எவராலும் மறுக்க முடியாது..

நம் கடமை

விருந்தாவனம் மனிதகுலத்திற்கு மிகவும் முக்கியமான இடமாகும். ஒவ்வொருவரும், வாழ்க்கையில் ஒருமுறையாவது விருந்தாவனத்திற்குச் சென்று வர வேண்டும். அதுவே மனிதப் பிறப்பின் பயனாகும். விருந்தாவனத்திற்குச் செல்பவர்கள் விருந்தாவனத்தின் ஈஸ்வரியான ராதிகாதேவியின் அருளைப் பெறுவது உறுதி, “விருந்தாவனத்தின் ஈஸ்வரியே, ஸ்ரீமதி ராதாராணியே, உங்களை வணங்குகின்றேன்; ஆன்மீக குருவிற்கும், உங்களுக்கும், பகவான் கிருஷ்ணருக்கும் சேவை செய்யும் பாக்கியத்தை எப்பொழுதும் எங்களுக்கு அருள்வீர்களாக,” என்னும் பிரார்த்தனையுடன் நம் மனோநிலையை அமைத்து, பகவத் சேவையிலும் குருவின் சேவையிலும் நாம் ஈடுபட்டால், ஜடவுலகின் தீராத துயரங்களான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் ஆகிய துன்பங்களிலிருந்து விடுபட்டு, ஆன்மீக உலகமான கோலோக விருந்தாவனத்திற்கு பகவான் நம்மை அழைத்துச் செல்வார் என்பதில் சிறிதளவும் சந்தேகமில்லை.


நன்றி ! இணைய தளம் !

ராதே ! ராதே ! ராதே கோவிந்தா !

3 Comments

  • Gokul

    லலிதா சகி

    ஶ்ரீமதி ராதாராணியின் மிகவும் நெருங்கிய தோழி “லலிதா தேவி”

    🔆🔆🔆🔆🔆

    ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணருடன் இருக்கும் எட்டு சகிகளுள் ஸ்ரீ லலிதா சகி மிகவும் முக்கியமானவர்; ஏனெனில் அணைத்து சகிகளின் தலைவியும் அவர்களை கட்டுப்படுத்துபவரும் அவரே ஆவார். லலிதா சகி, ஸ்ரீமதி ராதாராணியின் நித்திய தோழி ஆவார். அவர் மஞ்சள் நிற மேனியுடையவர்; மயிலிறகு நிறத்தில் ஆடை அணிபவர்.அவர் மிகவும் கோபமானவர். ஏதேனும் ஒரு வாக்குவாதம் வந்தால், தன்னுடைய முகத்தை மிகவும் கோபமாக வைத்துக்கொண்டு, மிகவும் கடினமான வார்த்தைகளில் வக்குவாதம் செய்வர். கோபிகைகளில் யாரேனும் ஒருவர், கிருஷ்ணருடன் சண்டையிட்டால், முதல் வேளையாக கிருஷ்ணரின் சார்பாக பதிலுக்கு சண்டையிடுவார். தெய்வீக தம்பதியரான ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணரின் மீது அளவு கடந்த அன்பை வைத்திருப்பார். அவர்கள் இருவரும் சந்திக்க ஏற்பாடு செய்வது, இருவருக்குமிடையே சண்டை வந்தால் சமாதானம் செய்வது போன்ற சேவைகளை செய்வார். பூர்ணமாசி தேவி மற்றும் இதர கோபிகைகளுடன் சேர்ந்து ஸ்ரீமதி ராதாராணி மற்றும் கிருஷ்ணர் சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்வார். அந்த தெய்வீக தம்பதியருக்கு நன்கு அலங்கரித்த குடையை தயார் செய்து அவர்களுக்கு பிடிப்பார். மேலும் அவர்கள் தங்கும் அறையை நன்கு அலங்கரிப்பார்.

    லலிதா தேவிக்கு பகவான் கிருஷ்ணரை மிகவும் பிடிக்கும். அவருக்காக கற்பூரமும், வெற்றிலை தாம்பூலமும் கொண்டு வருவதே லலிதா தேவியின் தலையாய சேவை. அதே சமயம் பிரம்ம வீணையை மிகவும் அற்புதமாக வாசிப்பார் லலிதா தேவி.

  • Viji

    ராதாஷ்டமி( ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த சுபதினம்)

    ஸ்ரீமதி ராதாராணி, பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நித்யமான துணைவியும், கிருஷ்ணரின் ஆனந்தமையமான அந்தரங்க சக்தியும், மிக மிகச்சிறந்த தூய பக்தையுமாவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவரும், லட்சுமி தேவியின் மூலமாவார்.

    ஶ்ரீமதி ராதாராணி அவதரித்த விதம்

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    ராதாராணி அவதரித்த விதம் பற்றி பிரம்மாண்ட புராணத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இம்மண்ணுலகில் அவதரித்த பின் ஸ்ரீமதி ராதாராணியும் இம்மண்ணுலகில் அவதரிக்க விரும்பினார். அதன்படி ஒரு தெய்வீக லீலை அரங்கேறியது. அதாவது ஒருசமயம் இமயமலையின் மகளாக பார்வதி தேவி பிறந்தார். பிறகு பார்வதி தேவிக்கும், சிவபெருமானுக்கும் திருமணம் நடந்தது. இத்திருமணத்திற்கு தேவாதிதேவர்களும், முனிவர்களும் பங்கேற்றனர். இவர்களுடன் விந்தியமலையும் வந்திருந்தது.

    கோலாகலமாக நடந்த விழாவை கண்ணுற்ற விந்தியமலை மிகவும் ஆச்சர்யப்பட்டது. அத்துடன் மிகவும் போற்றுதற்குரியசிவபெருமானே, இமயமலையின் மருமகனாக வந்திருக்கிறார் என்றும் வியந்தது. உடனேதனக்கும் அது போல் சிறந்த ஒரு மகாபுருஷர், மருமகனாக வர வேண்டும் என்று விந்தியமலை ஆசைப்பட்டது. இந்த ஆசை நிறைவேற பிரம்மதேவரை வேண்டி, 1000 வருடங்கள் கடுமையான தவம் புரிந்தது விந்தியமலை. இந்த தவத்தினால் திருப்தி அடைந்த பிரம்ம தேவர், ”பகவான் கிருஷ்ணரே, உனது மருமகனாக வருவார்” என்று வரமளித்தார். அதன் பிறகு விந்தியமலைக்கு இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன. இதை கொண்டாட பெரிய விழா ஒன்று நடந்தது. இதில் இமயமலைக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இதே தருணத்தில், கிருஷ்ணரும் மதுராவில் அவதரித்து, கோகுலத்தில் வளர்ந்து கொண்டிருந்தார். அப்போது கம்சனின் ஆணையின் பேரில், பிள்ளைக் கொல்லி அரக்கி ‘பூதனா’ பிறந்த குழந்தைகளை எல்லாம், கொன்றுதின்று கொண்டிருந்தாள். எனவே விந்திய மலைக்கும் குழந்தை பிறந்திருக்கிறது என்று தெரிந்ததும், அங்கும் இந்த பூதனா விரைந்தாள். விந்திய மலையின் இரண்டு அழகான பெண் குழந்தைகளையும் தூக்கிக்கொண்டு வானத்தில் பறந்தாள்.

    இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த முனிவர்கள் பலர், சக்தி வாய்ந்த மந்திரங்களை ஓதி, பூதனாவை தடுத்தனர். மந்திரத்தின் சக்தியால், பூதனாவின் உடல் நெருப்பு போன்று எரிந்தது. நேரம் செல்ல, செல்ல எரிச்சல் தாங்க முடியாமல் கையில் வைத்திருந்த இரண்டு பெண் குழந்தைகளையும் பூதனா கீழே போட்டு விட்டாள். அதில் ஒரு குழந்தை விருஷபானு மன்னரின் தோட்டத்தின் அருகே யமுனை நதியில் ஒரு தங்கத் தாமரையில் விழுந்தது. அவர்தான் ஸ்ரீமதிராதாராணி. பொன்னிறத்தில் அவதரித்தவர். மற்றொரு குழந்தை விருஷபானுவின் சகோதரர் சந்திர பானுவின் தோட்டத்தில் விழுந்தது. இவர்’சந்திராவளி’ஆவார்.

    யமுனை நதியில், தாமரை மலரில் அவதரித்தார்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    யமுனை நதியில், தாமரை மலரில் தங்க ஒளிவீசுவது போன்று பிரகாசமான குழந்தை மிதந்து வருவதை கண்டார் மன்னர் ‘விருஷபானு’. அப்போது வானத்தில் தோன்றியபிரம்ம தேவர், மன்னர் விருஷபானவே! நீ தரிசிக்கும் இந்தகுழந்தை. சாதாரண குழந்தை அல்ல. லஷ்மிதேவியின் மூலம் ஆவார். மிகக் கவனமாக இக்குழந்தையை வளர்த்து வா. நீயும் உனது மனைவி கீர்த்திதாவும் முந்தைய பிறவியில் பகவானே உங்களது மருமகனாக வர வேண்டும் என்று தவம் செய்தீர்கள். அதன் பலனாக இந்ததெய்வீக குழந்தையை பெற்றுள்ளீர்கள்” என்று கூறினார்.

    பிறகு அக்குழந்தையை, மன்னர் விருஷபானு தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார். பெளர்ணமி நிலவு போன்று பொன்னிறத்தில் பிரகாசித்த குழந்தையின் பேரழகை பார்த்தவுடன் ராணி ‘கீர்த்திதா” மிகவும் மகிழ்வுற்றாள். பெரியாழ்வாருக்கு, தாயார் ஆண்டாள்தேவி தெய்வப் புதல்வியாக பிறந்தது போல் இந்த மன்னருக்கும் இங்ஙனம் ஸ்ரீமதிராதாரணி அருள்புரிந்தார். இப்படியாக ஸ்ரீமதி ராதாராணி, மன்னர் விருஷபானுவுக்கும், தாய் கீர்த்திதாவிற்கும் தெய்வப் புதல்வியாக அவதரித்தார்.

    ராதாராணி பிறந்த பிறகு, யாரையும் பார்க்கவில்லை. அவரது தெய்வீக கண்கள் திறக்கவே இல்லை. திருவாய் மலர்ந்து பேசவும் இல்லை இதனால் விருஷபானுவும், கீர்த்திதாவும் மிகவும் வருத்தப்பட்டனர். இந்நிலையில் மன்னரின் இல்லத்திற்கு மகாரிஷ நாரதர்வந்தார். அவரை வணங்கி வரவேற்ற மன்னர், தனது கவலையை தெரிவித்தார். அதற்கு நாரதர், “கவலைப்படவேண்டாம். இந்த தெய்வீக குழந்தையின் பிறப்பிற்க்கு ஒரு விழாநடத்துங்கள். எல்லாம் நல்லபடியாக நடக்கும்”என்று ஆசீர்வதித்தார்,

    பிறகு மன்னர் ராதாராணி பிறந்த விழாவை மிகவும் விமரிசையுடன் கொண்டாட தனது நண்பர்கள், உறவினர்கள் உட்பட அனைவருக்கும் அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பில் அவரது நெருங்கிய நண்பரும், கிருஷ்ணரின் தந்தையுமான நந்தமகாராஜாவும் அழைக்கப்பட்டிருந்தார். அழைப்பை ஏற்ற நந்த மகாராஜா, குழந்தைகள் கிருஷ்ண பலராமருடனும் விழாவிற்கு சென்றார். உடன் கிருஷ்ணரின் தாய் யசோதை, பலராமரின்தாய் ரோகிணி உட்பட விராஜவாசிகள் பலரும் சென்றனர்.

    ஶ்ரீ கிருஷ்ணரே முதல் தரிசனம்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    விழாவில் ஒருவரையொருவர் பரஸ்பரம் விசாரித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். பசும் பால், சர்க்கரை கலந்து தயாரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான இனிப்பு வகை பிரசாதங்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. அப்போதுதான் அது நடந்தது. சின்னஞ்சிறு குழந்தை கிருஷ்ணர் தவழ்ந்து தவழ்ந்து, ராதாராணியின் தொட்டிலருகே சென்றார். கிருஷ்ணர் தன்முன்வந்ததும், ராதாராணி உடனே தன் கண்களைத்திறந்தார். முதன்முதலாக கிருஷ்ணரை தரிசித்து, மகிழ்ச்சியுடன் புன்னகைத்தார். அவரது பார்வையும், மகிழ்ச்சி சிரிப்பும் குழுமியிருந்த அனைவரையும் ஆரவாரப்படுத்தின.

    கிருஷ்ணர் மீது ஸ்ரீமதி ராதாராணி கொண்டிருந்த அளப்பெரும் அன்பினாலும், தூய பக்தியினாலும் கிருஷ்ணரைத் தவிர, வேறு யாரையும் முதலில் தரிசிக்கக்கூடாதென்று ராதாராணி உறுதி எடுத்திருந்தார்.  எனவே இந்த தெய்வீக திருவிளையாடல் நடந்தேறியது. “அத்துடன் கிருஷ்ணர் தன் பிஞ்சுகரங்களில் வைத்திருந்த புல்லாங்குழல், ராதாராணியின் புன்சிரிப்பில் வசீகரிக்கப்பட்டு ராதாராணியின் மேல் நழுவி விழுந்தது. இப்படியாக கிருஷ்ணரும், தன் அன்பை ராதாராணிக்கு தெரிவித்தார். இந்த தெய்வீக வைபவத்தை கண்ணுற்ற அனைவரும் மகிழ்ச்சி அடைந்து கிருஷ்ணரையும், ராதாராணியையும் போற்றி துதித்தனர். குறிப்பாக ராதாராணியின் தந்தையான மன்னர் விருஷபானுவும், தாய் கீர்த்திதாவும் பெரு மகிழ்ச்சி அடைந்து மேலும் விழாவை சிறப்புற நடத்தினர்.

    கிருஷ்ணரின் சேவையில் ராதாராணியே முதலிடம்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    கிருஷ்ணருக்கு சேவை செய்வதில், ஸ்ரீமதிராதாராணிக்கு இணையாக வேறு யாரையும் கூற இயலாது. ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது செலுத்திய பக்தி எத்தகையது என்பதை அறிவதற்காகத்தான், கிருஷ்ணரே. சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார் என்று சைதன்ய சரிதாம்ருதம் குறிப்பிடுகிறது, அந்த அளவிற்கு ஶ்ரீமதி ராதாராணி கிருஷ்ணர் மீது அன்பும் பக்தியும் செலுத்தியுள்ளார். ஆயிரக்கணக்காண வருடங்கள் தவங்கள் செய்தாலும் கிருஷ்ணர் ராதாராணியின் அன்பை புரிந்து கொள்ள இயலாது. தூய பக்தர் ஒருவரின் கருனையால்மட்டுமே ஶ்ரீஶ்ரீராதா கிருஷ்ணரின் புகழை உணர இயலும்.

    கிருஷ்ணரின் கருனையை பெற ஶ்ரீமதி ராதாராணியின் திருவருள் அவசியம்

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    ஒருவர் கிருஷ்ணரின் கருணையை பெறுவதற்கு, ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை நிச்சயம் பெற்றிருக்க வேண்டும். யார் ஒருவர் கிருஷ்ணருக்கும், கிருஷ்ணபக்தர்களுக்கும் சேவை செய்கிறாரோ அவர் ஸ்ரீமதிராதாராணயின் கருணையை பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சாஸ்திரங்கள், உயர்ந்த ஆச்சார்யர்களின் கூற்றுகளில் இருந்து ஸ்ரீமதி ராதாராணி பற்றி

    🍁🍁🍁🍁🍁🍁🍁

    ஸ்ரீல பிரபுபாதா வழங்கிய முக்கியமான குறிப்புகள்

     🍁🍁🍁🍁🍁🍁🍁

    ஸ்ரீமதி ராதாரணி, தூய பக்தையும், பகவான் ஶ்ரீகிருஷ்ணரின் நித்யமான அன்பிற்குரியவரும் ஆவார். ஸ்ரீமதி ராதாராணி அதிர்ஷ்ட தேவதைகள் அனைவருக்கும் தலைமையானவர். எங்கு ஸ்ரீமதி ராதாராணி இருக்கிறாரோ, அங்கு எதற்கும் பஞ்சம் என்பதே கிடையாது ஸ்ரீ கிருஷ்ணரை ஸ்ரீமதி ராதாராணியுடன் சேர்த்து வழிபடுபவர்கள் விரைவில் கிருஷ்ண பக்தியில் முன்னேற்றம் அடைவதுடன் அனைத்து வளங்களையும் பெறுவர். சாஸ்திரங்கள் ஸ்ரீமதி ராதாராணி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் உட்சக்தி ஆவார் என்று குறிப்பிடுகிறது.

    ஸ்ரீமதி ராதாராணி ஸ்ரீகிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தராவார். ஏனென்றால் ஸ்ரீமதிராதாராணி, கிருஷ்ணரிடம் அளவுகடந்த அன்பு செலுத்தினார். ஸ்ரீமதி ராதாராணி எப்போதும் எல்லா பக்தர்களின் நலனை விரும்புபவராக இருக்கிறார்.நாம் முதலில் ஸ்ரீமதிராதாராணியிடம் பிரார்த்திக்க வேண்டும். ‘நீங்கள் நேரடியாக கிருஷ்ணரிடம் செல்லமுடியாது. ஆனால்  ஒரு கிருஷ்ண பக்தர் உங்களிடம் திருப்தி அடைந்தால் அவர் உங்களை கிருஷ்ணரிடம் சிபாரிசு செய்வார். தன் பக்தனின் வேண்டுகோளை கிருஷ்ணர் அவசியம் ஏற்றுக்கொள்வார். எனவே ஸ்ரீமதி ராதாராணியின் கருணையை பெற்றால் ஸ்ரீ கிருஷ்ணரின் கருணையை எளிதில் பெறலாம். ஸ்ரீ கிருஷ்ணருக்கு பக்தி தொண்டு செய்வது என்றால், ஸ்ரீமதி ராதாராணியின் அடிச்சுவடுகளை பின்பற்றுவதே ஆகும். விருந்தாவனத்தில் உள்ள பக்தர்கள், பக்தியின் பரிபக்குவ நிலையை அடைய தங்களை ஸ்ரீமதி ராதாராணியின் பாதுகாப்பில் வைத்துக்கொள்கிறார்கள். குறிப்பாக, பக்தி சேவை என்பது இந்த ஜடவுலகைச் சேர்ந்தது அல்ல; பக்திசேவை என்பது நேரடியாக ஸ்ரீமதி ராதாராணியின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒருவர் ஸ்ரீமதி ராதாராணியிடம் சரணடைந்தார் என்றால் நிச்சயம் அவரது வாழ்வில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் மிக எளிதாக தீர்ந்துவிடும். 

    ( ஸ்ரீமத் பாகவதம் 4.8.24 பொருளுரையில்)

    ஸ்ரீமதி ராதாராணியை வழிபடுவதற்கு எளிய வழி அவருடைய திருநாமம் அடங்கிய
    ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே  ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்னும் மஹாமந்திரத்தை தினமும் குறைந்தது(108)முறையாவது உச்சரிப்பதே ஆகும். ஏனென்றால் இம்மந்திரத்தில் உள்ள ‘ஹரே என்ற சொல் ஸ்ரீமதி ராதாராணியை குறிப்பதாகும்

    திருப்பாத தரிசனம்
    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    ஶ்ரீராதாஷ்டமி திருநாளின் விசேஷம் என்னவென்றால், “ஸ்ரீமதி ராதாரணியின் திருப்பாத தரிசனமாகும். பொதுவாக ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணர் கோயில்களில் வருடத்தின் எல்லா நாட்களிலும் பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் திருப்பாதங்கள் மட்டுமே தரிசிக்கும் வகையில் இருக்கும். ஆனால் ஸ்ரீராதாஷ்டமி அன்று ஒருநாள் மட்டும் ஸ்ரீமதிராதாரணியின் திருப்பாதங்களை தரிசிக்க முடியும். எனவே ஏராளமான பக்தர்கள் இத்திருநாளில் விரதம் இருந்து ஶ்ரீமதி ராதாராணியின் திருப்பாத தரிசனம் பெறுவர்..!

  • Sri krishna

    ஶ்ரீ கிருஷ்ணர் , ஸ்ரீமதி ராதாராணியின் உயர்ந்த நிலையை நிரூபித்தல்.

    🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁🍁

    இந்த லீலையானது ஸ்ரீமதி ராதாராணியின் பெளகண்ட பருவத்தின் முடிவில் நடைபெற்றதாகும். ஒருமுறை ராதா ராணியின் அன்பால் பிடிக்கப்பட்ட கிருஷ்ணர் அவரிடம், ” அனைத்து வழிபாடுகளின் சாரம் உன்னை வணங்குவதுதான்.” யாரேனும் உன்னை வழிபடாமல் என்னை மட்டும் வழிபட்டால் அவர் பயனேதும் அடையப் போவது இல்லை. நீ என்னுடைய “மஹாபாவ மயி” – எனது ஆனந்தத்தின் ஆற்றல் நீ. என்னை சந்தோசப்படுத்துவதன் மூலம் நீ சந்தோசமடைகின்றாய். எனது ஆனந்தமே உனது ஆனந்தம். உன் சொந்த இன்பத்திற்கான ஆசையை முற்றிலும் விலக்கி விட்டாய். எனது சங்கம் மற்றும் எனது சேவையில் நிலைத்து இருப்பதை தவிர நீ எதையும் என்னிடம் எதிர்பார்க்கவில்லை. யார் உனது இத்தகைய வழிபாட்டு முறையை பின்பற்றுகிறாரோ, அவர் எனக்கு மிகவும் பிரியமானவர். நான் அவர்களை யோகிகள் மற்றும் தபஸ்விகளை விட மேலானவர்களாக பாவிகின்றேன். உன்னுடைய கருணா கடாக்க்ஷம் இல்லாமல் யாரும் என்னை அடைய முடியாது. தூய பக்தி சேவையினால் மட்டுமே என்னை அடைய முடியும். உன்னுடைய செயல்கள் அனைத்தும் தூய பக்திசேவைதான். உன்னுடைய அடிச்சுவடுகளை யார் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ‘யம பயம்’ இல்லை. அத்தகையவர் எனது ஆன்மீக உலகில் எனக்கு சேவை செய்யும் பாக்கியத்தை பெற்று விடுகின்றார். எவரேனும் எனக்கு பக்தியுடன் சேவை செய்ய விரும்பினால் முதலில் உன் திருநாமத்தை அங்கீகரிக்கப்பட்ட ஆன்மீக குருவிடமிருந்து பெற்று தூய மனதுடன் உச்சாடனம் செய்தால் அவர் பக்குவத்தை அடைவார். அதன் பிறகு அவர் எனக்கு சேவை செய்யும் தகுதியைப் பெறுகிறார். ஒருவர் ராதாகிருஷ்ண என்று உன் பெயரையும் என் பெயரையும் ஒன்றாக உச்சாடனம் செய்தால், மிகுந்த அதிர்ஷ்டசாலியான அந்த நபரால் நான் கட்டுப்படுத்தபடுபவனாவேன். அனைத்து கோபியர்களிலும் நீயே முதன்மையானவள் என் தாய் யசோதை விடவும் நீதான் முதன்மையானவள் என்று கூறினார்.

    இதைக் கேட்ட ராதா ராணி சிரித்தபடியே கூறினாள். “கிருஷ்ணா உன்னுடைய இந்த பேச்சு என்னை கேலி செய்வது போல் உள்ளது. உனது வார்த்தைகளை ஒருபோதும் நான் நம்ப மாட்டேன். அன்னை யசோதாவிற்கு அவளது உயிரினும் மேலானவன் நீ அப்படியிருக்க நான் அவரை விட மேலானவள் என்று எவ்வாறு நீ சொல்கிறாய் ? அதற்கு என்ன காரணம்? என்று கேட்டார்.

    கிருஷ்ணர் கூறினார். விரைவில் அனைத்தையும் நீ உணர்வாய். அவர் உன்னை தனது மகள் என்று கூட கூறுவார். விரைவில் அதையும் நீ காண்பாய் வேண்டுமென்றால் பார், அவர் வந்து உனது பாதங்களை பிடிக்கப் போகிறார்.

    ஸ்ரீமதி ராதாராணி யின் மேன்மையை நிரூபிப்பதற்காக கிருஷ்ணர் ஒரு லீலையை உருவாக்கினார்.

    ஒரு நாள் பிருந்தாவனத்து கோபியர்களில் சிலர், ராதா ராணியையும், கிருஷ்ணரையும் ஒரு வீட்டிற்கு அழைத்து வந்து வேடிக்கை செய்தார்கள். ராதா ராணியையும் கிருஷ்ணரையும் ஒன்று சேர்ப்பதன் மூலம் எல்லையற்ற ஆனந்தத்தை அவர்கள் அனுபவித்தனர். அனைத்து கோபியரும் வீட்டின் முற்றத்தில் கிருஷ்ணரை நடனம் ஆடவைத்து அவரோடு சேர்ந்து இவர்களும் ஆடிப்பாடி ஆனந்தித்தார்கள். அந்த சமயம் அன்னை யசோதை அங்கு வந்தார். அனைத்து கோபியரும் கிருஷ்ணருடன் நடனம் ஆடுவதை கண்டதும் கோபத்துடன் ராதாராணி மற்றும் அவளது சகிகளிடம், “இது என்ன உங்களுடைய நடத்தை?, என் கோபால் நாள் முழுவதும் மாடு மேய்க்கிறான். அவன் மிகவும் களைப்பாக இருப்பான். அவனுக்கு ஓய்வு தேவை. ஆனால் நீங்கள் விளையாடுவதற்காக அவனை இங்கே இழுத்து வந்து அவனது உறக்கத்தைக் கெடுத்து விட்டீர்கள். இங்கு அவனை நாட்டியம் ஆட வைக்கின்றீர்கள். எனக்குத் தெரியும் இது எல்லா நாளும் நடக்கின்றது. இது நல்லதல்ல. மறுபடியும் இதை செய்யாதீர்கள் என்றார்.”

    ராதாராணி அமைதியாக இருந்தாள். அவளது சகிகள், “உங்களுடைய மகன் கோபால் மாடு மேய்ப்பவன், அவன் காடுகளில் திரிந்து மாடுகளை மேய்த்ததால் உள்ள களைப்பில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறான். இதோ இந்த கிருஷ்ணர் உங்கள் கிருஷ்ணர் அல்ல. உங்கள் மகன் பெயர் கிருஷ்ணர் தான். அதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். அதற்காக உலகில் வேறு எவருக்கும் அந்த பெயர் இல்லை என்று அர்த்தமில்லை. வீட்டிற்குச் சென்று பாருங்கள், தங்கள் மகன் அங்கு நன்றாக உறங்கிக் கொண்டிருப்பான் என்றனர்.

    சகிகள் இவ்வாறு கூறியதைக் கேட்ட அன்னை யசோதை ஆச்சரியப்பட்டுப்போனாள். கிருஷ்ணா என்ற பெயரில் இன்னொரு பையன் இருக்கலாம். ஆனால் அங்க அடையாளங்கள் கூடவா ஒன்றாக இருக்கும்? இது எவ்வாறு சாத்தியமாகும்? இருந்தாலும் இந்த சகிகள் சொல்கிறார்கள். எனவே அன்னை யசோதா வீட்டிற்குச் சென்று தனது மகன் கோபால் இருக்கிறானா என்று பார்க்க விரும்பினாள்.

    அன்னை யசோதை வீட்டை அடைந்தாள். அங்கு அவள் கண்டவை அனைத்தும் சகிகள் கூறியதை உண்மை ஆக்கின. அவள் ஆச்சரியப்பட்டுப் போனாள். அவரது மகன் கிருஷ்ணன் படுக்கையில் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். இதை பார்த்த யசோதை குழம்பிப் போனாள், ஆனால் அதே நேரம் மிகவும் சந்தோஷம் அடைந்தாள். அவள் உடனே அந்த சகிகளுடன் விளையாடி கொண்டு இருந்த இன்னொரு கிருஷ்ணரை காண அந்த இடத்திற்கு சென்றாள். யசோதை கூறினாள், “ஓ சகிகளே, நான் சொல்வதை சற்று கவனியுங்கள். எனது மகன் கிருஷ்ணனைப் போலவே காட்சியளிக்கும் இந்த கிருஷ்ணனை எங்கிருந்து கண்டீர்கள் ? இரண்டு பேருக்கும் ஒரே வயது, ஒரே அங்க அடையாளம், ஒரே உடல் அமைப்புக்கள். அவர்கள் நடப்பது, பேசுவது, பழகுவது கூட ஒன்றாகவே இருக்கின்றதே ! அவர்களது உடல் நிறம் கூட ஒரே போல் இருக்கின்றது உங்களது இந்த கிருஷ்ணனை பார்க்கும்போது என் இதயத்தினுள் திருப்தியை உணருகின்றேன். அவன் மீது அதீதமான அன்பு மேலிடுவதை உணருகின்றேன். நீங்கள் உங்கள் கிருஷ்ணாரோடு எனது வீட்டிற்கு வருகை தரவேண்டும். அங்கு இருவரையும் ஒன்றாக சேர்த்து நடனமாட வைக்கலாம். நாம் அதனை கண்டுகளிக்கலாம் இரண்டு கிருஷ்ணருக்கும் இடையில் ஒரு நட்பை நாம் வளர்க்கலாம். பிறகு முடிவில் எனது கிருஷ்ணரை எனது வீட்டில் விட்டுவிட்டு உங்களது கிருஷ்ணரோடு நீங்கள் இங்கு வந்து விடலாம்”. என்றாள்.

    இப்போது கிருஷ்ணரால் தூண்டப்பட்ட ராதாராணி பேசலானாள், ஓ என் அன்பு அன்னையே நீங்கள், எங்கள் கிருஷ்ணரை உங்கள் வீட்டிற்கு கூட்டிவர சொல்கிறீர்கள். ஆனால் அவ்வாறு செய்வதற்கு நாங்கள் பயப்படுகிறோம். இரண்டு பேரும் சேர்ந்து நடனம் செய்யும்போது இது எங்கள் கிருஷ்ணர் என்றும், அது உங்கள் கிருஷ்ணர் என்றும் எவ்வாறு அறிந்து கொள்ள முடியும் ? உங்கள் கிருஷ்ணர் எங்கள் கிருஷ்ணராக மாறிவிட்டால் என்ன செய்வது?

    அன்னை யசோதை, ராதாராணி கூறியதை கேட்டு , அவ்வாறு மாறினால் தான் என்ன ? இரண்டு பேருக்கும் எந்த வித்தியாசமும் இல்லையே என்று சிரித்தபடி சொன்னாள்.

    ராதாராணி கூறினார்.” இல்லை, அது தவறு. உங்கள் கிருஷ்ணர் ஒரு போதும் எங்கள் கிருஷ்ணர்ருக்கான தகுதியை பெற முடியாது. உங்கள் மகன் ஒரு மாடு மேய்க்கும் சிறுவன். அவனுக்கு காடுகளில் சுற்றித் திரிந்து மாடுகளை மேய்க்கதான் தெரியும். அவனுக்கு அன்பு, காதல், பிரேமை, தத்துவங்களைப் பற்றிய முழு அறிவும் கிடையாது. எங்கள் கிருஷ்ணர் எல்லா புருஷர்களிலும் முதன்மையாக ஜொலிப்பவர். அவர் புருஷர்களில் ரத்தினம் போன்றவர். அனைத்துப் புருஷர்களிலும் உத்தமர் நிறைய யோகிகளும், ரிஷிகளும், முனிவர்களும், ஞானிகளும், தியானிகளும் இவரது தாமரை பாதங்களை வணங்கி வருகின்றனர். எங்கள் கிருஷ்ணர் மிகப் பயங்கரமான அரக்கர்களை எல்லாம் வதம் செய்திருக்கின்றார். இந்த உலகைப் படைத்தவரான பிரம்மதேவரின் தவறுகளையும் கண்டித்திருக்கிறார்.

    அன்னை யசோதை பதிலுரைத்தாள் என்னுடைய கிருஷ்ணரும் தான் இம்மாதிரியான செயல்களை செய்து இருக்கின்றானே. இங்குள்ள விருந்தாவன வாசிகள் அனைவரும் இதனை நன்கறிவர் என்னுடைய மகன் பிறந்து முன்று நாட்களே ஆகியிருந்த நிலையில் பூதனை என்ற அரக்கி கொன்றான். அதன்பிறகு சகடாசுரன் போன்ற அரக்கர்களையும் கொன்றான். இதையெல்லாம் செய்தது யசோத நந்தன் தான் என்று அனைவரும் நன்கறிவர்”.

    ராதாராணி கூறினாள், நம்முடைய இந்த விவாதத்தின் மூலம் சண்டையை தான் உருவாக்குவோம். எந்த கிருஷ்ணர் முதன்மையான தகுதிகள் உடையவர் என்பதை நீங்கள் பின்னர் புரிந்து கொள்வீர்கள். எவ்வாறாயினும் இப்பொழுது நான் என்னுடைய கிருஷ்ணரின் நெற்றியில் ஒரு அடையாளம் வைக்கபோகிறேன் இதனால் தாங்கள் குழப்பம் அடைய வேண்டியதில்லை என்று சொல்லியபடியே ராதாராணி சந்தனக்கூழ் கொண்டு தனது கிருஷ்ணரின் நெற்றியில் ஓர் அடையாளம் வைத்தாள். கருமேக நிறத்தில் இருந்த கிருஷ்ணரின் நெற்றியில் இருந்த அந்த அடையாளமானது நிலவானது நீலநிற மலையின் பின்புறத்திலிருந்து உதித்து வருவது போன்று அழகாக இருந்தது. ராதாராணி தனது சகிகளிடம் சொன்னாள், “எல்லோரும் இங்கு பாருங்கள் என்னுடைய கிருஷ்ணரின் நெற்றியில் சந்தனத்தாலான அடையாளம் உள்ளது. நீங்கள் அனைவரும் நம் கிருஷ்ணர் மீது ஒரு கண் வைத்திருக்க வேண்டும். எனவே அவர் தொலைந்து போகமாட்டார்.

    ராதாராணியும் அவளது சகிகளும் அவர்களது கிருஷ்ணருடன் அன்னை யசோதையின் வீட்டை அடைந்தனர். அன்னை யசோதை வீட்டின் உள்ளே கிருஷ்ணர் இன்னமும் உறங்கிக் கொண்டிருப்பதைக் பார்த்தார். அவர் கிருஷ்ணரை எழுப்பி ராதாராணியின் கிருஷ்ணருடன் நடனமாட அழைத்து வந்தார். இருவரும் சேர்ந்து நடனம் ஆடுவதை பார்க்கையில் பிரகாசிக்கும் இரண்டு நீலமணிகள் நடனம் ஆடுவதை போல காட்சி அளித்தார்கள். அனைவரும் நடனத்தை மிக ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். அங்கு கூடியிருந்த அனைவரும் இதற்கு முன் இது போன்ற அற்புதமான நிகழ்வை பார்த்திருக்கவில்லை.

    திடீரென்று யசோதயின் கிருஷ்ணரும் ராதாராணியின் கிருஷ்ணரும் ஒன்றாகிவிட்டார்கள் நடனமும் நிறைவுற்றது. எனவே ராதா ராணியும் அவரது சகிகளும் அவர்களது கிருஷ்ணருடன் புறப்படுவதற்கு ஆயத்தமானார்கள்

    அன்னை யசோதையினால் அவரது கிருஷ்ணரை கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே அழ ஆரம்பித்து விட்டார்கள். “எங்கே என் கிருஷ்ணா ?, எங்கே என் கிருஷ்ணா ? அவன் எங்கு சென்று விட்டான் ? நீங்கள் உங்கள் கிருஷ்ணரை எடுத்து செல்கின்றீர்கள் நீங்கள் தான் என் கிருஷ்ணரை எனக்கு திருப்பித் தரவேண்டும்”.என்று பதட்டத்துடன் கூறினார்.

    அதற்கு ராதாராணி , “நாங்கள் எங்கு சென்று உங்கள் கிருஷ்ணரை கண்டுபிடிக்க முடியும்? இதோ எங்கள் வாழ்க்கையும், ஆத்மாவுமான இந்த கிருஷ்ணர் உங்கள் மகன் அல்ல. எங்கள் கிருஷ்ணரின் நெற்றியில் சந்தனம் அடையாளம் நான் வைத்திருப்பதை சற்றுப் பாருங்களேன்”. என்று கூறினாள்.

    அன்னை யசோதை ராதையிடம் , “நீங்கள் எல்லோரும் சேர்ந்து தான் அவர்களை நடனமாட வைத்தீர்கள் எனவே நீங்கள் தான் என் கிருஷ்ணரை எங்காவது மறைத்து வைத்திருக்க வேண்டும் இது உங்களது தந்திரம். ஓ ராதா நீ தந்திரங்கள் பல நன்கு அறிவாய்”.என்று எனக்கு தெரியும் எனது கிருஷ்ணரை என்னிடம் தந்துவிடு என்று கூறினார்.

    ராதாராணி, அன்னை யசோதையிடம் “இந்த முற்றம் மதில்சுவரலால் சூழப்பட்டுள்ளது இரண்டு கிருஷ்ணரும் இங்குதான் நடனம் ஆடினார்கள் அவர்கள் எங்கு சென்றாலும் நம்மால் கவனிக்க முடியும் நாங்கள் இவ்விடத்தை விட்டு நகரவே இல்லை என்று கூறினாள்.

    பிறகு அன்னை யசோதை மிகுந்த பரிதாபமான குரலில் ராதையிடம், எனக்கு 5 அல்லது 7 குழந்தைகள் இல்லை. எனக்கு இருப்பது ஒரே ஒரு மகன். அவன் எங்களின் மகிழ்ச்சிக்கான செல்வம். அவன் எங்களுக்கு ஒரு வயதானவரின் கையிலிருக்கும் ஊன்றுகோல் போன்றவன். என் மகன் கிருஷ்ணன் என் வாழ்விற்கான மூச்சு.அவன் இல்லாத இத்தருணம் என் மூச்சு என் உடலை விட்டு வெளியேற உள்ளது….. ஓ ராதா !!! தயவு செய்து என் கிருஷ்ணரை திருப்பி தந்து என் வாழ்வை காப்பாற்று நான் உன் காலைப் பிடித்துக் கொள்கிறேன். தயவு செய்து என் கிருஷ்ணரை திருப்பி தந்துவிடு. இந்நாள் முதல் உன் வேலைக்காரியாக நான் இருக்கின்றேன்”.என்று கூறினார்.

    அன்னை யசோதை இவ்வாறு கூறியதைக் கேட்ட கிருஷ்ணர் ராதா ராணியை பார்த்து புன்னகைத்து லேசான ஒரு சைகை செய்து ஏதோ ஓர் அர்த்தத்தை சுட்டிக்காட்டுவது போல் பார்த்தார்.

    ராதா ராணி யசோதையிடம் கூறினாள், “நீங்கள் பிருந்தாவனத்தின் ராணி ஆவீர், என்னை விட வயதில் மூத்தவர், என் வணக்கத்திற்கு உரியவர். நீங்கள் ஏன் என் கால்களை பிடிக்கிறீர்கள்? நீங்கள் என் கால்களை பிடிப்பது நான் குற்றம் இழைத்தது போன்றதாகும். ஏன் என்னிடம் இவ்வாறு பேசுகின்றீர்கள்?”.

    யசோதை கூறினார், “தயவு செய்து என் மகனை விரைவில் திருப்பித் தந்து விடு. பிறகு நீ உன் குற்றங்களலிருந்து விடுபட்டு விடுவாய்… இதனால் உன் பங்கில் எந்த பாவமும் இருக்காது.”

    ராதா ராணி கூறினாள், “எவ்வாறு உங்கள் மகனை அழைத்து வர முடியும்? எங்கு சென்று அவனை நான் தேடுவேன்?.” ராதா ராணி இவ்வாறு கூறக் கேட்ட அன்னை யசோதை அழத் தொடங்கி மிகவும் பரிதாபமான குரலில் பேசினார், “அன்பிற்குரிய என் நீலமணி இல்லாமல் இனி என் வாழ்வை நான் தொடர மாட்டேன்” இவ்வாறு சொல்லியபடியே அன்னை யசோதை மயங்கி தரையில் விழுந்தார். இதைப் பார்ப்பதற்கு அவர் தன் வாழ்வை விட்டது போல் இருந்தது. ராதாராணி கிருஷ்ணரைப் பார்த்து ,. “இப்போது என்ன செய்வது? உன்னை தன் கர்ப்பத்தில் சுமந்த உன் அன்னை உன் கண் முன்னேயே இறந்து கொண்டிருக்கிறார்…. இப்போது என்ன செய்வதென்று தயவுசெய்து சொல்வாயாக…..” என்று கூறினார்.

    கிருஷ்ணர் ராதாராணியிடம், “நீ கவலைப்பட தேவையில்லை என் அன்னை நான் இழக்கப் போவதில்லை”. அன்னை யசோதையின் காதின் அருகில் சென்று , “கிருஷ்ணரின் அன்னை யசோதை அவர்களே!! எழுந்திருங்கள்! எழுந்திருங்கள்!… உங்கள் கிருஷ்ணர் திரும்பி வந்துவிட்டார்.” என்று கூறு என்றார்.

    ராதாராணி அவ்வண்ணமே செய்தார் “கிருஷ்ண” என்ற பெயரைக் கேட்டதும் அன்னை யசோதை உடனடியாக எழுந்து . “ஓ ராதா ராணி, எங்கே என் கிருஷ்ணன்? எங்கே என் கிருஷ்ணன்? அவனை காண்பி என்று கூறினார்.

    ராதா ராணி அன்னை யசோதையிடம் . “எங்களது கிருஷ்ணருடன் நடனம் ஆடியதால் ஏற்பட்ட களைப்பில் உங்களது கிருஷ்ணர் அவரது அறையில் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கிறார்”.நீங்கள் சென்று பாருங்கள் என்று பதிலுரைத்தாள்.

    ராதா ராணி பொய்யுரைக்க மாட்டாள் என்ற முழுமையான நம்பிக்கையுடன் அன்னை யசோதை உடனே கிருஷ்ணரின் அறைக்கு சென்றார். அங்கே கிருஷ்ணர் தனது படுக்கையில் உறங்கிக் கொண்டிருப்பதை பார்த்தார். நந்த ராணி யசோதை தன் மகனை மிகுந்த பாசத்துடன் அள்ளி எடுத்து அணைத்துக் கொண்டார். மாறி மாறி முத்தமிட்டார். பின்னர் எல்லா கோபியரும் தத்தமது இல்லங்களுக்கு திரும்பிச் சென்றனர். இவ்வாறு கிருஷ்ணர் ஸ்ரீமதி ராதாராணி யின் மகத்துவத்தை நிலைநாட்டினார்.

    ஹரே கிருஷ்ண !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question