Thursday, March 28

Parshava Ekadashi (Tamil) / பார்ஸ்வ ஏகாதசி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

பார்ஸ்வ: ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி பிரம்ம – வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த ஏகாதசியை பரிவர்த்தினி (அல்லது) வாமன ஏகாதசி என்றும் கூறுவர். 

மகாராஜா யுதிஸ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். புரட்டாசி மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்/செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை எவ்வாறு அனுஷ்டிக்க வேண்டும். இதனால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? என்பனவற்றை தயவு செய்து எனக்கு விளக்கமாகக் கூறுங்கள்.

பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார், ஓ! மன்னா, புரட்டாசி, மாத வளர்பிறையில் (ஆகஸ்ட்செப்டம்பர்) தோன்றக்கூடிய ஏகாதசியின் பெயர் பார்ஸ்வ ஏகாதசி.

இந்த ஏகாதசி மிகவும் மங்களகரமானது. இது ஒருவரின் எல்லா பாவங்களையும் அழித்து முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பதாலேயே ஒருவரின் பாவ விளைவுகள் அனைத்தும் அழிக்கப்படும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் அடையும் பலனை ஒருவர் வாஜ்பேய யாகத்தை மேற்கொண்டாலும் அடைய முடியாது. இந்த ஏகாதசியை ஜெயந்தி ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசியன்று பக்தியுடன் பகவான் வாமன தேவரை வழிபடுபவரை மூவுலகவாசிகளும் வணங்குவர். தாமரை கண்களுடைய பகவான் விஷ்ணுவை தாமரை மலர் கொண்டு வழிபடுபவர். சந்தேகமின்றி பகவானின் பரமத்தை அடைவார். சயனத்தில் உள்ள பகவான் இந்த ஏகாதசியன்று இடது பக்கத்திலிருந்து வலது பக்கம் திரும்புவார். ஆகையால் பார்ஸ்வ பரிவர்த்தினி ஏகாதசி எனப்படும்.

மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! ஜனார்தன! உம்முடைய விளக்கத்தை கேட்ட பிறகும் எனக்கு சில சந்தேகங்கள் உள்ளன. ஓ! பகவானே! எவ்வாறு நீங்கள் சயனிப்பீர்? எவ்வாறு ஒரு பக்கத்தில் இருந்து மறுபக்கத்திற்கு திரும்புவீர்? சாதுர்மாச விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகள்யாவை?

நீங்கள் சயனிக்கும் போது மக்கள் என்ன செய்யவேணடும்?

நீங்கள் ஏன் பலி மகாராஜாவை கயிறுகளால் பிணைத்தீர்கள்? ஓ எனது பகவானே இவற்றையெல்லாம் எனக்கு விளக்கி, என்னுடைய சந்தேகங்களை தீர்த்து வையுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ! சிங்கம் போன்ற மன்னா! திரேதாயுகத்தில் பலி என்ற என்னுடைய பக்தர் ஒருவர் இருந்தார். அசுர குடும்பத்தில் தோன்றிய போதிலும் அவர் என்னை வணங்கி, பிரார்த்தித்து வந்தார். அவர் அந்தணர்களையும் வணங்கினார். மற்றும் பல யாகங்களையும் மேற்கொண்டார். விரைவில் அவர் மிக பிரசித்தி பெற்றார். சுவர்க்க லோக மன்னனான இந்திரனை வென்று சுவர்க்க லோகத்தைக் கைப்பற்றினார்.

பிறகு இந்திரன், மற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களுடன் என்னை அணுகினர். அவர்களின் பிரார்த்தனைக்கு இணங்கி நான் ஒரு குள்ள பிராமணர் உருவெடுத்து, பிரம்மச்சாரி போல் உடை அணிந்து பலி மகாராஜாவின் யாகசாலைக்குச் சென்றேன். நான் பலி ராஜாவிடம் மூன்றடி நிலத்தை தானமாகக் கேட்டேன். பலி என்னை மூன்றடி நிலத்தை விட அதிகமாக ஏதேனும் கேட்கும்படி வேண்டினார். இருப்பினும் நான் கேட்ட மூன்றடி நிலத்திலேயே நான் திருப்தி அடையும் நோக்கத்தை வெளிப்படுத்தினேன். மன்னர் பலி மற்றும் அவர் மனைவி விந்தியாவலி எனக்கு மூன்றடி நிலத்தை தானமளித்தனர். பகவான் வாமன தேவர் தன் உருவத்தை விரிவடைய தொடங்கினார். தன்னுடைய ஒரு அடியில் பாதாளத்திலுள்ள ஏழு லோகங்களும் அடங்கின. பிறகு வாமன தேவர் தன் மூன்றாவது அடியை வைக்க இடத்தை கேட்டபோது பலி மகாராஜா கைகூப்பி வணங்கி தன் சிரத்தை அர்ப்பணித்தார். வாமனதேவர் தன் மூன்றாவது அடியை பலி மகாராஜாவின் தலையில் வைத்தார். பலி மகாராஜாவின் விநயத்தால் நான் திருப்தி அடைந்து நான் எப்பொழுதும் அவருடன் வசிப்பதாக வரமளித்தேன். புரட்டாசி மாத வளர்பிறையில் தோன்றக் கூடிய இந்த ஏகாதசி நாளன்று பலி மகாராஜாவின் அரண்மனையில் வாமன தேவரின் திருவுருவச் சிலை ஸ்தாபிக்கப்பட்டது. பாற்கடலில் ஆனந்த சேஷ படுக்கையில் சயன கோலத்தில் இருக்கும் என்னுடைய மற்றொரு தோற்றமும் ஸ்தாபிக்கப்பட்டது. சயன ஏகாதசி துவங்கி உத்தன்ன ஏகாதசி வரை முழு முதற்கடவுள் சயனிப்பார். ஒருவர் இந்த நான்கு மாதங்களிலும் பகவானை விசேஷமாக வழிபட வேண்டும். ஒருவர் ஒவ்வொரு ஏகாதசியையும் சிரத்தையுடன் அனுஷ்டிக்க வேண்டும். இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவர் ஆயிரம் அஸ்வமேத யாகங்களின் பலனை அடைவார்.

+4

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question