பகவான் பலராமர் பல்வலனைக் கொன்று பிராமணர்களை மகிழ்வித்ததையும், பல்வேறு யாத்திரை ஸ்தலங்களில் அவர் நீராடியதையும், பீமசேனருக்கும், துரியோதனனுக்கும் யுத்தத்தைக் கைவிடும் படி அவர் புத்தி கூறியதையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது.
நைமிஷாரண்ய வனத்திலுள்ள முனிவர்களின் யாக அரங்கத்தில், வளர்பிறையன்று கடுமையான காற்று வீசத் துவங்கியது. அருவருப் பான சீழ்நாற்றத்தைப் பரவச்செய்த அக்காற்று, அனைத்தையும் புழுதி யால் மறைத்தது. பிறகு அசுரனான பல்வலன் தன் கையில் ஒரு சூலத்துடன் அங்கு தோன்றினான். அவனது பூதாகாரமான உடல் மையிருட்டாகவும், அவனது முகம் மிகவும் பயங்கரமாகவும் இருந்தன. அந்த அசுரனைத் தமது கலப்பையால் பற்றியிழுத்த பகவான் பலராமர், தமது கதையால் அவனது தலையில் கொடூரமாக அடித்து அவனைக் கொன்றார். முனிவர்கள் பகவான் பலராமரின் பெருமைகளைப் பாடி, அவ ருக்கு ஏராளமான சன்மானங்களை அளித்தனர்.
பகவான் பலராமர் பிறகு தமது தீர்த்த யாத்திரையைத் துவங்கினார் . அப்பொழுது பல புனித தீர்த்தங்களுக்கு அவர் சென்றார். கௌரவர்களுக்கும் , பாண்டவர்களுக்கும் இடையிலான யுத்தச் செய்தியைக் கேள்விப்பட்ட அவர், குருட்சேத்திரத்திற்குச் சென்று பீமனுக்கும், துரியோதனனுக்கும் இடையிலான யுத்தத்தை அவர் தடுக்க முயன்றும் முடியாது போயிற்று. அவ்விருவரின் பகை அவ்வளவு ஆழமானதாக இருந் தது. பகவான் பலதேவர் யுத்தகளத்தை விட்டு துவாரகைக்குத் திரும்பினார்.
சிலகாலத்திற்குப் பின் பலராமா மீண்டும் நைமிஷாரண்ய வனத்திற்குச் சென்றார். அங்குள்ள முனிவர்கள் பலதேவரின் சார்பாக சிலவேள்விகளை நிறைவேற்றிருந்தனர். அதற்குக் கைமாறாக பகவான் பலதேவர் அம்முனிவர்களுக்கு உன்னத ஞானத்தைப் புகட்டி, தமது நித்திய சொரூபத்தை அவர்களுக்கு காட்டியருளினார்.