Wednesday, December 4

Krishna & Balarama went to Vrindavan (Tamil) / கிருஷ்ண, பலராமரின் பிருந்தாவன விஜயம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

 யாதவர்களும், வேறு பல அரசர்களும் ஒரு சூரிய கிரகணத்தின் போது குருட்சேத்திரத்தில் சந்தித்ததையும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரைப் பற்றிய விஷயங்களை விவாதித்ததையும் இந்த அத்தியாயம் விவரிக்கிறது. கிருஷ்ணர் தந்த மகாராஜனையும், மற்ற பிருந்தாவன வாசிகளையும் குருட்சேத்திரத்தில் சந்தித்து அவர்களை மகிழ்வித்ததையும் இது விவரிக்கிறது.

 முழு சூரிய கிரகணம் நிகழப்போவதை அறிந்து யாதவர்கள் உட்பட்ட பாரத-வர்ஷ மக்கள், விசேஷ புண்ணிய பலன்களைப் பெற குருட்சேத்திரத்தில் திரண்டனர். யாதவர்கள் நீராடி மற்ற கிரியைகளையும் நிறைவேற்றியபின், மத்ஸ்யம், உசீனரம் முதலான தேசத்தரசர்களும் அங்கு வந்திருப்பதைக் கண்டனர். மேலும், எப்பொழுதும் கிருஷ்ணரின் ஆழ்ந்த பிரிவுத் துயரை அனுபவித்துக் கொண்டிருக்கும் நந்த மகாராஜனும், மற்ற விரஜ வாசிகளும்கூட வந்திருப்பதைக் கண்டனர். இப்பழைய நண்பர்களையெல்லாம் கண்டு பெருமகிழ்ச்சியடைந்த யாதவர்கள், அவர்களை ஒவ்வொருவராகத் தழுவிக் கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.

குந்திதேவி தன் சகோதரர் வசுதேவரையும், மற்ற குடும்ப அங்கத்தினர்களையும் கண்டு தன் கவலையை மறந்தாள். எனினும் வசுதேவரிடம் அவள், “சகோதரரே, என் கஷ்டகாலத்தில் நீங்களனைவரும் என்னை அடியோடு மறந்து போனீர்கள். நான் மிகவும் துரதிர்ஷ்டசாலியாவேன். விதியால் புறக்கணிக்கப்பட்ட ஒருவரை உறவினர்களும் மறந்து விடுகிறார்களே! ” என்று வருந்தினாள்.

இதற்கு வசுதேவர், “அன்புச் சகோதரியே, நாமனைவரும் விதியின் கைப்பாவைகளாவோம். யாதவர்களான நாங்கள் கம்சனால் மிகவும் துன்புறுத்தப்பட்டதால், வேற்று தேசங்களில் புகலிடம் கொள்ள நேர்ந்தது, எனவே உன்னுடன் தொடர்புகொள்ள எங்களுக்கு எந்த வழியும் இருக்கவில்லை” என்று பதிலளித்தார்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணரையும், அவரது மனைவிகளையும் பார்த்து அங்கு கூடியிருந்த அரசர்கள் ஆச்சரியத்தால் வியப்படைந்தனர். பிறகு யாதவர்களை அவர்கள் புகழத் துவங்கினர். நந்த மகாராஜனைக் கண்டு மிகவும் மகிழ்ந்த யாதவர்கள், ஒவ்வொருவராக அவரைக் கட்டித்தழுவிக்கொண்டனர். வசுதேவரும் பெருமகிழ்ச்சியுடன் நந்தரைத் தழுவிக் கொண்டார். மேலும் கம்சனால் தான் துன்புறுத்தப்பட்ட போது, எப்படி நந்தர் கிருஷ்ணரையும், பலராமரையும் பாதுகாத்து வந்தார் என்பதையும் வசுதேவர் நினைவு கூர்ந்தார். கிருஷ்ணரும், பலராமரும் தாய் யாசோதையை வணங்கி தழுவிக் கொண்டனர். உணர்ச்சிப்பெருக்கால் அவர்களது தொண்டை அடைத்துக் கொண்டதால், அவர்களால் அவளிடம் எதுவும் கூற இயலவில்லை. நந்தரும், யசோதையும் தங்கள் இரு கண்களையும் தங்கள் மடிகளில் தூக்கி அனைத்துக் கொண்டனர். இவ் விதமாக பிரிவுத் துயரிலிருந்து அவர்கள் விடுபட்டனர். ரோகிணியும், தேவகியும் யசோதையை தழுவிக் கொண்டு, அவள் தங்களிடம் காட்டிய உயர்ந்த நட்பை எண்ணிப்பார்த்தனர். கிருஷ்ணரையும், பலராமரைரயும் வளர்ந்து ஆளாக்கிய அவளது அன்புக்கு, இந்திரனின் செல்வத்தால்கூட ஈடுகட்ட முடியாது.

பிறகு பரமபுருஷர் இளம் கோபியர்களைத் தனிமையான ஒரிடத்தில் சந்தித்தார். எல்லாச் சக்திகளுக்கும் தானே மூலம் என்றும், தான் சர்வவியாகமமுடையவர் என்றும், இதனால் தன்னிடமிருந்து அவர்களால் ஒருபோதும் பிரிந்திருக்க முடியாதென்று கூறி. இறுதிகயாக கிருஷ்ணருடன் மீண்டும் இணைந்த கோபியர்கள் , அவரது பாத கமலங்கள் தங்கள் இதயங்களில் எழுந் தருள பிரார்த்தித்தனர்.

1 Comment

  • Gayathri

    பலராமர் அவதாரம்
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    ( ஶ்ரீ பலராமரின் அவதார தினம்)
    🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼
    தேவகி மற்றும் வசுதேவரின் ஆறு குழந்தைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கம்சன் கொலை செய்தான். தேவகி ஏழாவது முறையாக கர்ப்பவதியான போது கிருஷ்ணரின் வியாபகமான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றினார். தேவகி மிகுந்த மகிழ்ச்சியும், அதே சமயத்தில் வியாகுலமும் அடைந்தாள். அதே சமயம் குழந்தை பிறந்ததும் கம்சன் அதைக் கொன்று விடுவானோ என்பதில் வருத்தம்.
    யோகமாயை புருஷோத்தமரான முழுமுதற் கடவுளின் பிரதான சக்தியாகும். அவருக்கு பல்வேறு சக்திகள் உண்டென்று வேதங்கள் கூறுகின்றன. “பராஸ்ய சக்திர் விவிதைவ ச்ரூயதே” பல்வேறான சக்திகள் உள்ளும் புறமுமாக இயங்குகின்றன. எல்லா சக்திகளுக்கும் தலையாயது யோகமாயை எனும் சக்தி. எக்காலமும் அலங்கரிக்கப்பட்டிருப்பதும் அழகிய பசுக்கள் நிறைந்ததுமான விரஜபூமியில், விருந்தாவனத்தில் தோன்றுமாறு ஶ்ரீ கிருஷ்ணர் யோகமாயைக்கு கட்டளையிட்டார். விருந்தாவனத்தில் நந்தமகாராஜாவும் யசோதா ராணியும் வசித்த இல்லத்தில் வசுதேவரின் மனைவியருள் ஒருத்தியான ரோகிணி வசித்து வந்தாள். ரோகிணி மட்டுமின்றி, யதுகுல வம்சத்தைச் சேர்ந்த பலர் கம்சனின் கொடுமைகளுக்கு அஞ்சி நாட்டின் பல பாகங்களில் சிதறிப்போயிருந்தனர். அவர்களில் சிலர் மலைக் குகைகளிலும் கூட வசித்தார்கள்.
    பிரபுவான கிருஷ்ணர் யோகமாயைக்கு இவ்வாறு கூறினார் : “தற்போது கமசனின் சிறையில் தேவகியும் வசுதேவரும் உள்ளனர். தேவகியின் கர்ப்பத்தில் என் முழு வியாபகமான சேஷன் இருக்கிறான். சேஷனை நீ தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு மாற்றுவதற்கு ஏற்பாடு செய்வாயாக. இதன் பிறகு நான் எனது முழு சக்தியுடன் தேவகியின் கர்ப்பத்தில் தோன்றப் போகிறேன். அப்போது நான் தேவகி மற்றும் வசுதேவரின் மகனாகத் தோன்றுவேன். நீ விருந்தாவனத்தில் நந்தனுக்கும் யசோதைக்கும் மகளாகப் பிறப்பாயாக.”
    தனது வெளிப்பாடான அனந்தர் தேவகியின் கர்ப்பத்தில் இருந்ததை கிருஷ்ணர் யோகமாயைக்கு கூறினார். தேவகியின் கர்ப்பத்திலிருந்து ரோகிணியின் கர்ப்பத்துக்கு பலவந்தமாக இழுக்கப்பட்டதால் “சங்கர்ஷணர்” என்று அழைக்கப்பட்டு, “ரமணம்” எனப்படும் உன்னத ஆனந்தத்தை தரவல்ல ஆன்மீக பலத்தை உடையவர் அவர். எனவே அனந்தர் தோன்றிய பிறகு அவர் சங்கர்ஷணர் என்றும் பலராமர் என்றும் அழைக்கப்பட்டார்.
    “நாயம் ஆத்ம பல ஹினேனலப்ய” என்று உபநிஷத்தில் கூறப்பட்டுள்ளது. பலராமரின் போதிய உதவியின்றி ஒருவன் பரம்பொருளையோ வேறு எவ்விதமான ஆத்மானுபவத்தையோ பெற முடியாதென்பது இதன் கருத்து. பலம் என்றால் உடல் பலம் அல்ல. உடல் பலத்தால் யாரும் ஆத்ம பலம் பெற இயலாது. பலராமர் எனும் சங்கர்ஷணர் அளிக்கும் ஆத்மபலத்தின் உதவியால் தான் ஒருவன் ஆத்ம ஞானம் பெறவியலும். அனந்தர் எனும் சேஷர் எல்லாக் கிரகங்களையும் அவற்றின் நிலைகளில் நிலைபெற செய்துள்ளார். பௌதிக விஞ்ஞானம் இதை புவியீர்ப்பு சக்தி என்று அழைக்கிறது. உண்மையில் இது சங்கர்ஷணரின் பலத்தால் நிகழ்வதே. பலராமர் எனும் சங்கர்ஷணர் ஆன்மிக பலம் தரும் மூல ஆன்மீக குரு ஆவார். எனவே பலராமரின் அவதாரமான நித்தியானந்த பிரபு மூல ஆன்மீக குரு ஆவார். ஆன்மீக குரு முழுமுதற் கடவுளாகிய பலராமரின் பிரதிநிதி. அவரிடமிருந்து ஆன்மீக பலம் பெறப்படுகிறது.
    ( தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதா அவர்களின் “கிருஷ்ணா ” புத்தகத்திலிருந்து )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question