Friday, July 26

Kunti (Tamil) / ப்ருதா (குந்தி )

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இவள் சூரசேன மகாராஜனின் மகளும், ஸ்ரீ கிருஷ்ணரின் தந்தையான வசுதேவரின்
சகோதரியுமாவாள். பிற்காலத்தில் அவள் குந்திபோஜ மகாராஜனால் ஸ்வீகாரம் செய்து
கொள்ளப்பட்டதால், குந்தி என்று அழைக்கப்பட்டாள். இவள் பரம புருஷ பகவானுடைய
வெற்றி தரும் ஆற்றலின் அவதாரமாவாள். உயர் கிரகங்களிலுள்ள ஸ்வர்க லோக வாசிகள்
குந்திபோஜ மகாராஜனின் அரண்மனைக்குச் சென்று வருவது வழக்கம். அவர்களை
வரவேற்று உபசரிக்கும் பொறுப்பு குந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. மிகச்சிறந்த யோகியான
துர்வாச முனிவருக்கும் அவள் பணிவிடை செய்தாள். அவளது விசுவாசமுள்ள சேவையில்
திருப்தியடைந்த துர்வாச முனி அவளுக்கு ஒரு மந்திரத்தை அளித்தார். இதனால் அவளது
விருப்பம் போல் எந்த தேவரையும் அவளால் அழைக்க முடியும். இம்மந்திரத்தை
பரிசோதித்துப் பார்க்கும் எண்ணத்துடன் உடனே அவள் மந்திரத்தை உச்சரித்து
சூரியதேவனை அழைத்தாள். சூரியதேவனும் உடனே தோன்றி அவளுடன் உறவு கொள்ள
விரும்பினார். அதை அவள் மறுத்து விட்டாள். ஆனால் அவளது கன்னித் தன்மைக்கு பங்கம் ஏற்படாதென்று அவர் உறுதி செய்ததால் அவளும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.
இச்சேர்க்கையின் விளைவாக அவள் கர்ப்பவதியாகி, கர்ணன் பிறந்தார். ஆனால் தன்
பெற்றோருக்கு அஞ்சிய அவள் தன் குழந்தையான கர்ணனை ஒரு பேழைக்குள் வைத்து
ஆற்றில் விட்டுவிட்டாள். அதன் பிறகு, தன் சுயம்வரச் சடங்கில் அவர் தன் உண்மையான
கணவராக பாண்டுவைத் தேர்ந்தெடுத்தாள். பாண்டு மகாராஜன் பிறகு இல்லறத்தைத்
துறந்து துறவறத்தை ஏற்க விரும்பினார். தன் கணவர் துறவறம் மேற்கொள்வதற்கு குந்தி
அனுமதிக்கவில்லை. ஆனால் இறுதியில், வேறு சில பொருத்தமான நபர்களை அழைத்து,
அவர்களின் மூலமாக மகன்களைப் பெற்றுக்கொள்ள அவளுக்கு பாண்டு
அனுமதியளித்தார். முதலில் குந்தி இதை ஏற்றுக்கொள்ளவில்லை.

ஆனால் பாண்டு தெளிவான உதாரணங்களைக் காட்டியபொழுது அவளும் அதற்குச் சம்மதித்தாள்.
இவ்வாறாக துர்வாச முனிவர் அளித்த மந்திரத்தின் வலிமையால் அவர் தர்மராஜனை
அழைத்து யுதிஷ்டிரரையும், வாயுதேவனை அழைத்து பீமனையும், இந்திரனை அழைத்து
அர்ஜுனனையும் பெற்றெடுத்தாள். நகுலன் மற்றும் சஹாதேவன் ஆகிய மற்ற இரு
மகன்களும் பாண்டுவிற்கும் மாத்ரிக்கும் பிறந்தவர்களாவர். பிறகு பாண்டு மகாராஜன்
இளம் வயதிலேயே மரணமடைந்தார். பெரும் துயருக்குள்ளான குந்தி மயங்கி விழுந்தாள்.
குந்தி மற்றும் மாத்ரி ஆகிய இரு சக மனைவிகளும் ஒரு முடிவுக்கு வந்தனர். அதாவது, சிறு
குழந்தைகளான பஞ்ச பாண்டவர்களைப் பராமரிப்பதற்காக குந்தி உயிர் வாழ வேண்டும்.
இறந்த கணவரோடு மாத்ரி உடன்கட்டை ஏற வேண்டும்.
அச்சம்பவத்தின்போது அங்கிருந்த சதஸ்ருங்கரைப் போன்ற மாமுனிவர்களும்,
மற்றவர்களும் அந்த ஒப்பந்தத்திற்குச் சம்மதம் தெரிவித்தனர். பிற்காலத்தில்
துரியோதனனின் சதித்திட்டத்தால் பாண்டவர்கள் நாடு கடத்தப்பட்டனர். பாண்டவர்களுடன்
சென்ற குந்தியும் அச்சமயத்தில் எல்லா வகையான துன்பங்களையும் சந்திக்க
வேண்டியதாயிற்று. வனவாசத்தின்போது ஹிடிம்பா எனும் அசுரப் பெண்ணொருத்தி
பீமசேனரைத் தன் கணவராக அடைய விரும்பினாள். பீமன் மறுத்துவிடவே, அவள்
குந்தியையும், யுதிஷ்டிரரையும் அணுகி முறையிட்டாள். அப்பெண்ணை ஏற்றுக் கொண்டு
அவளுக்கு ஒரு மகனைத் தரும்படி அவர்களும் பீமசேனருக்கு உத்தரவிட்டனர்.
இச்சேர்க்கையின் பலனாக கடோத்கஜன் பிறந்தார். இவர் தன் தந்தையுடன்
கௌரவர்களுக்கு எதிராக பெரும் வீரத்துடன் போரிட்டார். அவர்களுடைய
வனவாசத்தின்போது ஒரு பிராமண குடும்பத்துடன் அவர்கள் வாழ்ந்து வந்தனர். அந்த
பிராமண குடும்பத்திற்கு பகாசுர அசுரனொருவன் தொல்லைகள் கொடுத்துக் கொண்டு
இருந்தான். எனவே பகாசுரனைக் கொன்று அந்த பிராமண குடும்பத்திற்கு பாதுகாப்பு
அளிக்கும்படி குந்தி, பீமனுக்குக் கட்டளையிட்டாள். பாஞ்சால தேசத்திற்குப் புறப்படும்படி
குந்தி யுதிஷ்டிரருக்கு அறிவுரை கூறினாள். இந்த பாஞ்சால தேசத்தில் திரௌபதியை
அர்ஜுனன் மனைவியாகப் பெற்றார். ஆனால் குந்தியின் உத்தரவுப்படி பாண்டவ
சகோதரர்கள் ஐவரும் திரௌபதி, அல்லது பாஞ்சாலியின் கணவன்களாயினர்.
வியாசதேவரின் முன்னிலையில் திரௌபதி பஞ்ச பாண்டவர்களைத் திருமணம் செய்து கொண்டாள்.

குந்திதேவி தனது முதல் குழந்தையான கர்ணனை மறக்கவேயில்லை.
குருட்சேத்திர யுத்தத்தில் கர்ணன் இறந்த பிறகு துக்கமடைந்த குந்தி, பாண்டு மகாராஜனை
மணப்பதற்கு முன் தனக்கு மூத்த மகனாகப் பிறந்தவன் கர்ணனாவான் என்ற உண்மையை
அவளது மற்ற மகன்களிடம் அவள் கூறினாள். குருட்சேத்திர போருக்குப் பின் பகவான் ஸ்ரீ
கிருஷ்ணர் அவரது நாட்டிற்குப் புறப்படும் வேளையில், பகவானிடம் குந்தி செய்த
பிரார்த்தனைகள் மிகச்சிறந்த முறையில் விவரிக்கப்பட்டுள்ளன. பிற்காலத்தில் இவள்
கடுந்தவம் செய்வதற்காக காந்தாரியுடன் வனம் சென்றாள். முப்பது நாட்களுக்கு
ஒருமுறைதான் அவள் உணவு உட்கொண்டாள். இறுதியாக அவள் ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்திருக்கும்பொழுது ஒரு காட்டுத் தீயில் எரிந்து சாம்பலானாள்.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question