Wednesday, October 16

Glories of Lord Nityananda & Balarama (Tamil) / பகவான் நித்யானந்த பலராமரின் பெருமைகள்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

(ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம் ஆதி லீலை, பாகம் ஒன்று, அத்யாயம் 5)

இந்த அத்தியாயம் ஸ்ரீ நித்யானந்த பிரபுவின் ஸ்வரூபத்தையும் பெருமை களையும் விளக்குவதற்காக பிரத்யேகமாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது . பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூரண புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் , லீலைகளுக்கான அவரது முதல் விரிவங்க ரூபம் ஸ்ரீ பலராமர் .

இந்த ஜடவுலகின் எல்லைக்கு அப்பால் பரவ்யோம எனப்படும் ஆன்மீக வானம் உள்ளது. அங்கே பல்வேறு ஆன்மீக லோகங்கள் உள்ளன, கிருஷ்ண லோகம் எனப்படும் இடம் அவற்றில் முதன்மையானதாகும். கிருஷ்ணரின் இருப்பிடமாகிய கிருஷ்ண லோகத்தில், துவாரகை, மதுரா, கோலோகம் என்று அறியப்படும் மூன்று பிரிவுகள் உள்ளன. அந்த லோகத்தில் முழுமுதற் கடவுள் தம்மை நான்கு முழுமையான பகுதிகளாக விரிவுபடுத்துகிறார்: கிருஷ்ணர் , பலராமர் , பிரத்யும்னர் ( தெய்வீக மன்மதன்). மற்றும் அனிருத்தர். அவர்கள் மூல சதுர் – வியூக ரூபங்கள் என்று அறியப்படுகின்றனர்.

கிருஷ்ண லோகத்தில் ஸ்வேதத்வீபம் அல்லது விருந்தாவனம் என்று அறியப்படும் தெய்வீக ஸ்தலம் உள்ளது. ஆன்மீக வானில் கிருஷ்ண லோகத்திற்குக் கீழே வைகுண்ட லோகங்கள் உள்ளன. ஒவ்வொரு வைகுண்ட லோகத்திலும் மூல சதுர் – வியூகத்திலிருந்து விரிவடைந்த நான்கு கரம் கொண்ட நாராயணர் வீற்றுள்ளார். கிருஷ்ண லோகத்தில் உள்ள ஸ்ரீ பலராமர் என்று அறியப்படும் முழுமுதற் கடவுளே மூல ஸங்கர்ஷணர் ( கவர்ந்திழுக்கும் இறைவன் ) ஆவார் . இந்த ஸங்கர்ஷணரிலிருந்து மஹா ஸங்கர்ஷணர் எனப்படும் மற்றொரு ஸங்கர்ஷணர் விரிவடைகிறார். அவர் வைகுண்ட லோகங்களில் ஒன்றில் வீற்றுள்ளார். மஹா- ஸங்கர்ஷணர் தமது அந்தரங்க சக்தியினால் , ஆன்மீக வானிலுள்ள எல்லா லோகங்களின் தெய்வீக இருப்பையும் பராமரிக்கின்றார். அங்குள்ள எல்லா உயிர்வாழிகளும் நித்திய முக்தர்களாவர் . அங்கே ஜட சக்திக்கு இடமில்லை என்பதால் , அதன் ஆதிக்கத்திற்கும் இடம் கிடையாது என்பதைத் தெளிவாக உணரலாம் . அந்த லோகங்களில் இரண்டாவது சீதுர் – வியூக தோற்றங்கள் வீற்றுள்ளனர் . வீற்றுள்ளார்.

வைகுண்ட லோகங்களுக்கு வெளியே பிரம்ம லோகம் என்று அறியப்படும் ஸ்ரீ கிருஷ்ணரின் அருவமான தோற்றம் உள்ளது. பிரம்ம லோகத்தின் மறுபுறம் ஆன்மீகமான காரண – ஸமுத்ர ( காரணக் கடல் ) உள்ளது. ஜட சக்தியானது காரணக் கடலின் மறுபுறத்தில் அதனைத் தொடாமல் வீற்றுள்ளது. காரணக் கடலில் ஸங்கர்ஷணரின் முதல் புருஷ விரிவாகிய மஹாவிஷ்ணு உள்ளார். மஹாவிஷ்ணு தமது கடைக்கண் பார்வையினை ஜட சக்தியின் மீது செலுத்த , தமது தெய்வீகத் திருமேனியின் பிம்பத்தின் மூலமாக , அவர் பௌதிக மூலப்பொருட்களுடன் தம்மை இணைத்துக் கொள்கிறார்.  

பௌதிக மூலப்பொருட்களுக்கு ஆதாரமாக இருக்கும்போது , ஜட சக்தியானது ப்ரதான என்று அறியப்படுகிறது. பௌதிக சக்தியின் தோற்றங்களுக்கு ஆதாரமாக இருக்கும்போது, அது மாயா என்று அறியப்படுகிறது. ஆயினும் , அவளுக்கு எதைச் செய்வதற்கும் சுதந்திரமான சக்தி இல்லாததால், பௌதிக சக்தியானது ஜடம் எனப்படுகிறது . அவள் மஹாவிஷ்ணுவின் கடைக்கண் பார்வையினால் பிரபஞ்சப் படைப்பினை சாத்தியமாக்குவதற்கு சக்தியளிக்கப்படுகிறாள் . எனவே , ஜடத் தோற்றத்திற்கு ஜட சக்தி மூல காரணமல்ல. மாறாக , ஜட இயற்கையின் மீதான மஹாவிஷ்ணுவின் தெய்வீகப் பார்வையே பிரபஞ்சத் தோற்றத்தினை உருவாக்குகிறது.

 மஹாவிஷ்ணு மீண்டும் ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் எல்லா உயிர்வாழிகளின் உறைவிடமாக கர்போதகஷாயி விஷ்ணுவின் வடிவில் நுழைகிறார் . கர்போதகஷாயி விஷ்ணுவிடமிருந்து ஒவ்வோர் உயிர்வாழியின் பரமாத்மாவான க்ஷீரோதகஷாயி விஷ்ணு விரிவடைகிறார். ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் கர்போதகஷாயி விஷ்ணுவிற்குச் சொந்தமான வைகுண்ட லோகம் ஒன்று உள்ளது . அங்கே அவர் பிரபஞ்சத்தின் பரமாத்மாவாக அல்லது பிரபஞ்சத்தின் மிக உன்னத ஆளுநராக வசிக்கின்றார் . பிரபஞ்சத்தின் நீர்ப் பகுதியின் நடுவே சயனித்திருக்கும் கர்போதகஷாயி விஷ்ணு பிரபஞ்சத்தின் முதல் உயிர்வாழியான பிரம்மாவைத் தோற்றுவிக்கின்றார். கற்பனையான விஸ்வரூபம்கூட கர்போதகஷாயி விஷ்ணுவின் ஒரு பகுதி தோற்றமே.

ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் இருக்கக்கூடிய வைகுண்ட லோகத்தில் பாற்கடல் ஒன்று உள்ளது . அக்கடலில் ஸ்வேதத்வீபம் எனப்படும் தீவு உள்ளது . அங்கே பகவான் விஷ்ணு வசிக்கின்றார். இவ்வாறாக , இந்த அத்தியாயம் இரண்டு ஸ்வேதத்வீபங்களை விளக்குகின்றது ; ஒன்று கிருஷ்ணரின் வசிப்பிடத்தில் உள்ளது. மற்றொன்று ஒவ்வொரு பிரபஞ்சத்திலும் இருக்கக்கூடிய பாற்கடலில் உள்ளது. கிருஷ்ணரின் / வசிப்பிடத்தில் இருக்கும் ஸ்வேதத்வீபம் , விருந்தாவன தாமம் என்றும் அறியப்படுகிறது. அங்குதான் கிருஷ்ணர் தமது அன்பான லீலைகளை வெளிப்படுத்துகிறார். ஒவ்வொரு பிரபஞ்சத்தினுள்ளும் இருக்கும் ஸ்வேதத்வீபத்தில், பகவான் விஷ்ணுவிற்கு குடை, பாதுகை, படுக்கை . தலையணை , உடை , இருப்பிடம் , பூணூல் , அரியணை முதலிய வடிவங்களை ஏற்று சேஷ ரூபத்திலுள்ள முழுமுதற் கடவுள் சேவை செய்கிறார்.

 கிருஷ்ண லோகத்தில் இருக்கும் பகவான் பலதேவரே நித்யானந்த பிரபு. எனவே, நித்யானந்த பிரபுவே மூல ஸங்கர்ஷணரும் மஹா ஸங்கர்ஷணரும் ஆவார் . மஹா – ஸங்கர்ஷணரின் விரிவுகளான புருஷ அவதாரங்களும் நித்யானந்த பிரபுவின் முழுமையான விரிவுகளே.

 இந்த அத்தியாயத்தில் , ஆசிரியர் , தாம் எவ்வாறு வீட்டை விட்டு விலகி , தீர்த்த யாத்திரையாக விருந்தாவனம் சென்று அங்கே வாழ்வின் பூரண வெற்றியை அடைந்தோம் என்னும் வரலாற்றினை விளக்கியுள்ளார் . இந்த வர்ணனையிலிருந்து ஆசிரியரின் சொந்த வீடும் பிறப்பிடமும் , கட்வா மாவட்டத்தில் , நைஹாட்டிக்கு அருகில் , ஜாமடபுரம் என்ற கிராமத்தில் இருப்பதாகத் தெரிகிறது . கிருஷ்ணதாஸ கவிராஜரின் சகோதரர் நித்யானந்த பிரபுவின் மிகச்சிறந்த பக்தரான ஸ்ரீ மீனகேதன ராமதாஸரைத் தமது இல்லத்திற்கு அழைத்திருந்தார் . ஆனால் குணார்ணவை மிஸ்ரர் என்னும் பூஜாரி அவரை முறையாக வரவேற்கவில்லை. நித்யானந்த பிரபுவின் பெருமைகளை உணரத் தவறிய கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் சகோதரரும் அந்த பூஜாரியின் பக்கம் சேர்ந்து கொண்டார். இதனால் , வருத்தமடைந்த இராமதாஸர் தம்முடைய புல்லாங்குழலை உடைத்துவிட்டு அங்கிருந்து வெலியேறெய்னார். அது கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் சகோதாருக்குப் பேரழிவை உண்டாக்கியது . ஆயினும் , அதே இரவில் சாக்ஷாத் பகவான் நித்யானந்த பிரபுவே கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் கனவில் தோன்றி , மறுநாளே விருந்தாவனத்திற்குப் புறப்படும்படி கட்டளையிட்டார்.

1 Comment

  • Logeshwari G

    இன்றைய இந்தியாவின் மேற்குவங்களா மாநிலத்தில், சைதன்ய மஹாபிரபு தோன்றிய மாயாபுரிலிருந்து 165 கி.மீ. தொலைவில் வடமேற்கு திசையில் அமைந்திருப்பதே ஏகசக்ரா என்னும் திருத்தலம். ஆதி குருவான பலராமர் கலி யுகத்தில், 1474இல் நித்யானந்த பிரபுவாக அவதரித்த இத்திருத்தலத்தை தற்போது பீர்சந்திரபூர் என்ற பெயரிலும் அழைப்பதுண்டு. மஹாபாரதத்தை அறிந்தவர்களுக்கு ஏகசக்ரா என்றவுடன் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் வனவாசத்தின்போது பகாசுரன் என்னும் அசுரனை கொன்றது நினைவுக்கு வரும். குருக்ஷேத்திரப் போரில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், பீஷ்மரை கொல்வதற்கு தேரின் சக்கரத்தை கையிலேந்தி பிறகு அந்த சக்கரத்தை வீசி எறிந்தபோது, அந்த ஒரு சக்கரம் விழுந்த இடமே ஏகசக்ரா என்று பெயரிடப்பட்டது. ஏகசக்ராவில் அமைந்துள்ள திருத்தலங்களை அறிவதற்கு முன் நித்யானந்த பிரபுவின் தெய்வீக தன்மையையும் லீலைகளையும் சற்றேனும் தெரிந்துகொள்வது அவசியம்.

    ஆதி குருவான பலராமர்

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

    பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் மூத்த சகோதரரும் ஆதி குருவுமான பலராமர், கலி யுகத்தில் சைதன்ய மஹாபிரபுவின் லீலையில் நித்யானந்த பிரபுவாகவும், இராமரின் லீலையில் லக்ஷ்மணராகவும் பங்கெடுத்து கொள்கிறார். நித்யானந்த பிரபு பலராமரிடம் இருந்து வேறுபட்டவர் அல்ல (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 13.61). நித்யானந்த பிரபு கங்கை நதி பாயாத ராதா-தேசத்தின் ஒரு பகுதியான ஏகசக்ராவில் தோன்றுவதற்கு முன்பாக அவ்விடம் மிகவும் வறட்சியாக காணப்பட்டது. நித்யானந்த பிரபு தோன்றிய பிறகு அவ்விடம் பசுமையாகவும் செல்வச் செழிப்புடனும் காணப்பட்டது.

    கலி யுகத்தில் கிருஷ்ணரை சைதன்ய மஹாபிரபுவின் மூலமாக புரிந்துகொள்ள வேண்டும்; சைதன்ய மஹாபிரபுவோ தன்னை அடைவதற்கு பலராமரின் அவதாரமான நித்யானந்த பிரபுவின் திருவடிகளில் தஞ்சம் புகுவதே ஒரே வழி என கூறியுள்ளார். நித்யானந்த பிரபு எப்போதும் நீல நிற உடையுடன், முகத்தில் புன்னகை பூத்த வண்ணம், மீன் போன்ற அழகிய கண்களை உடையவராய், நீண்ட மலர்மாலை அணிந்தவராய் காட்சி அளிக்கிறார்; அவர் யானையைப் போன்ற நடையுடன், ஆழ்ந்த ரம்மியமான குரலில், கருணை கடலாக, சதா கிருஷ்ண நாமத்தை உச்சரித்த வண்ணம் கிருஷ்ண பிரேமையில் நடனமாடுகிறார் என்று விருந்தாவன தாஸ தாகூர் சைதன்ய பாகவதத்தில் குறிப்பிடுகிறார்.

    நித்யானந்தரின் தன்னிகரற்ற கருணை

    💐💐💐💐💐💐💐💐💐💐

    சைதன்ய மஹாபிரபுவின் லீலையை உலக மக்களுக்கு தெரிவிக்கும் சாஸ்திர நூல்களில் சைதன்ய சரிதாம்ருதம் மற்றும் சைதன்ய பாகவதம் முதன்மை வகிக்கின்றன. சைதன்ய பாகவதத்தை இயற்றிய விருந்தாவன தாஸ தாகூர், நித்யானந்த பிரபுவின் கடைசி சீடர் ஆவார். சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்றிய கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியின் கனவில் “உடனடியாக விருந்தாவனம் செல்லுங்கள்” என்று நித்யானந்த பிரபு கட்டளையிட்டார். அவரது கட்டளையைப் பின்பற்றி விருந்தாவனம் சென்ற கிருஷ்ணதாஸர் அங்கே ராதா குண்டத்தின் கரையோரத்தில் சைதன்ய மஹாபிரபுவைப் பற்றி ரகுநாத தாஸ கோஸ்வாமியிடமிருந்து தினமும் கேட்டார். அதன் பிறகே கிருஷ்ணதாஸ கவிராஜ கோஸ்வாமியினால் சைதன்ய சரிதாம்ருதத்தை இயற்ற முடிந்தது. எனவே, சைதன்ய மஹாபிரபுவின் லீலைகளை உலக மக்களுக்கு எடுத்துரைத்தவர் நித்யானந்த பிரபு என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

    ஏகசக்ராவில் நித்யானந்த பிரபு லீலைகள் அரங்கேற்றிய சில முக்கிய இடங்களைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

    💐💐💐💐💐💐💐💐💐💐💐

    கர்ப வாசம்: நித்யானந்த பிரபுவின் ஜென்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிற இவ்விடத்தில் அவரின் விக்ரஹம் அமையப் பெற்றுள்ளது. நித்யானந்தரின் விக்ரஹத்திற்கு இடது புறத்தில் சைதன்ய மஹாபிரபுவும், வலது புறத்தில் அத்வைத ஆச்சாரியரும் காட்சியளிக்கின்றனர்.

    நிதாய் குண்டம்: கர்ப வாசத்திற்கு வெகு அருகில் இருக்கும் இந்த குளமானது நித்யானந்த பிரபுவின் துணி, தட்டு, மற்றும் பாத்திரங்களைக் கழுவுவதற்கு பயன்படுத்தப்பட்டது. கோயில் பூஜாரிகள் தற்போதும் விக்ரஹ வழிபாட்டிற்கு மையப் பகுதியில் அமையப் பெற்றுள்ள அனங்க குண்டத்தின் நீரையே பயன்படுத்துகின்றனர்.

    மாலா தலம்: தன் மகன் நிதாய் ஏகசக்ராவை விட்டு சென்ற பின்னர், தனது வீட்டுத் தோட்டத்தில் அமைந்துள்ள பிப்பல மரத்தின் அடியில், ஹதாய் பண்டிதர் ஜபம் செய்து வந்தார்; அந்த ஜப மாலையை அம்மரத்தின் கிளையில் தொங்க விட்டிருந்தார். பல வருடங்களுக்கு பின்பு இங்கு வருகை புரிந்த சைதன்ய மஹாபிரபு, தன் கழுத்தில் இருந்த பூமாலையையும் இம்மரத்தின் கிளையில் மாட்டியதால், இவ்விடம் மாலா தலம் என்று அழைக்கப்படுகின்றது.

    ஜானு குண்டம்: ஏகசக்ரா வாசிகள் புனித கங்கை நீராட வெகு தூரம் செல்ல வேண்டியிருந்ததால், நித்யானந்த பிரபு அனைத்து புனித நதிகளையும் இக்குண்டத்திற்கு வரவழைத்தார். ஹண்டு கதா என்றழைக்கப்படும் இவ்விடத்தில் நித்யானந்த பிரபு அவல் மற்றும் தயிர் பிரசாதத்தை முட்டி போட்டுக் கொண்டு உட்கொள்வார். நித்யானந்த பிரபு தோன்றிய தினத்தில் இங்கு மிக பிரம்மாண்டமான பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    பகுல தலம்: நித்யானந்த பிரபுவின் ஜென்ம ஸ்தானத்திற்கும் ஜானு குண்டத்திற்கும் இடையில் இருப்பது பகுல தலம். இந்த மரத்தின் கிளைகளும் உட்கிளைகளும் பாம்பின் தலையை போன்றே காட்சியளிக்கும்; நித்யானந்த பிரபு தன் நண்பர்களுடன் விளையாடுவதற்கு தகுந்தாற்போல், அனந்த சேஷனைப் போல தன்னை இவ்வாறு விரிவுபடுத்திக் கொண்டதாக ஆச்சாரியர்கள் கூறுகின்றனர். நித்யானந்த பிரபு தன் உண்மையான அடையாளத்தை மறைத்துக் கொண்ட காரணத்தினாலேயே, அவரால் தனது நண்பர்களுடன் நெருக்கமாக விளையாட முடிந்தது. இம்மரத்திற்கு வெகு அருகில் இருக்கும் அமர பீடத்தில், நித்யானந்த பிரபுவின் தொப்புள் கொடி புதைக்கப்பட்டுள்ளது.

    பத்மாவதி குண்டம்: நித்யானந்த பிரபுவின் ஜென்ம ஸ்தானத்திற்கு பின்புறம் அமையப் பெற்றுள்ள இக்குண்டத்தை முகுத நாராயண ராய் தன் மகள் பத்மாவதியின் திருமணத்தின்போது ஹதாய் பண்டிதருக்கு சீதனமாக கொடுத்ததாகும். இந்த குண்டத்தில் அன்னை பத்மாவதி தன் மகனான நித்யானந்தரை நீராட்டுவார்.

    பாண்டவ தலம்: நித்யானந்த பிரபுவின் ஜென்ம ஸ்தானத்திலிருந்து ஐந்து நிமிடம் நடக்கக்கூடிய இடத்தில் இருப்பது பாண்டவ தலம். க்ஷத்திரியர்களாக செயல்பட்ட பஞ்ச பாண்டவர்கள் ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் பிராமணர்களாக வேடமணிந்து ஒரு மாத காலத்திற்கு ஏகசக்ராவில் அன்னை குந்திதேவியுடன் வசித்து வந்தனர். அவர்கள் வேதஷராய் என்னும் ஏழை பிராமணரின் வீட்டில் தங்கியிருந்தனர். அந்த பிராமணருக்கு பத்து வயதில் வித்யாதரா என்ற மகனும், எட்டு வயதில் பானுமதி என்ற மகளும் இருந்தனர். அப்போது பகாசுரன் என்னும் கொடிய அசுரன் அக்கிராமத்தில் மனிதர்களையும் விலங்குகளையும் உண்ண ஆரம்பித்தான். அதனால் ஊர் மக்கள் ஒன்று கூடி பகாசுரனுக்கு தினந்தோறும் மாட்டு வண்டி நிறைய உணவு பதார்த்தங்களும், ஒரு மனிதனையும் உணவாக அனுப்புவதற்கு ஒப்புக் கொண்டனர்.

    பகாசுரன் பலிக்கு பறைசாற்றுபவன் ஒருநாள் வேதஷராய் வீட்டின் முன் முழங்கியபோது அவர்கள் அழத் தொடங்கினர். அழுகின்ற சப்தத்தைக் கேட்ட குந்திதேவி அவர்களிடம் அதற்கான காரணத்தை கேட்டு மறுநாள் தன் மகன் பீமனை அனுப்ப முடிவு செய்தாள். அன்னையின் கட்டளையை ஆனந்தமாக ஏற்றுக் கொண்ட பீமன் மாட்டு வண்டியில் நிரப்பப்பட்ட உணவு பதார்த்தங்களை பாதி வழியிலேயே உண்டு, பகாசுரனுடன் யுத்தம் செய்து அவனை கொன்றான். பகாசுரனை பீமன் வதம் செய்த இடம் சிக்கந்தாபி என்று அழைக்கப்படுகிறது. வியாஸதேவர் பாண்டவ தலத்திற்கு வருகை புரிந்து பஞ்ச பாண்டவர்களை அருகிலிருக்கும் நவத்வீபத்தை தரிசிக்குமாறு அறிவுறுத்தினார். 5,000 வருடத்திற்கு முன்பே பஞ்ச பாண்டவர்கள் சைதன்ய மஹாபிரபு தோன்றிய நவத்வீபத்தை தரிசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    குண்டலால் தலம்: தன் சகோதரன் பீமன், பகாசுரனை கொல்வதற்கு தனியே சென்ற செய்தியை அறிந்த அர்ஜுனன், பீமனின் பாதுகாப்பிற்கு நாக அஸ்திரத்தை ஏவினார். அதற்குள் பகாசுரன் கொல்லப்பட்டதால் நாக அஸ்திரமானது பாம்பாக மாறி அங்கு நீண்ட காலமாக வசித்து கொண்டு மக்களை துன்புறுத்திக் கொண்டிருந்தது. இதையறிந்த நித்யானந்த பிரபு தன் காதில் இருந்த ஒரு குண்டலத்தை கழற்றி, பாம்பு வாழ்ந்த புற்றின் வாயிலில் வைத்தார். அந்த காதணி பெரிதாகி வாயிலை முழுமையாக அடைத்து கொண்டது. பின் பாம்பு தன் உணவுக்கான வழியை கேட்டபோது நித்யானந்த பிரபுவோ கூடிய விரைவில் இங்கு ஒரு கோயில் எழுப்பப்பட்டு மக்கள் தினந்தோறும் பால் மற்றும் உணவை அர்ப்பணிப்பார்கள் என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நித்யானந்த பிரபுவின் காதில் ஒரு குண்டலம் மட்டுமே காணப்பட்டது.

    மௌரேஸ்வர சிவன்: நித்யானந்த பிரபு ஏகசக்ராவில் தோன்றியபோது இந்த விக்ரஹத்தின் கர்ஜனை சப்தத்தை மாயாபுர் அருகில் இருக்கும் சாந்திபுரில் அத்வைத ஆச்சாரியர் கேட்டார். நித்யானந்த பிரபு இந்த லோகத்தில் தோன்றிவிட்டார் என்கிற செய்தியை அத்வைதர் உடனே அறிந்து கொண்டார்.

    பங்கிம் ராயர் கோயில்: கதம் கந்தி என்னுமிடத்தில் மௌரேஸ்வர நதியில் மிதந்த பங்கிம் ராய விக்ரஹத்தை கண்டெடுத்த நித்யானந்த பிரபு இவ்விடத்தில் பிரதிஷ்டை செய்தார். இந்த நதியும் யமுனையும் வேறுபட்டதல்ல. நித்யானந்த பிரபு தன் இறுதி லீலையின்போது பங்கிம் ராய விக்ரஹத்தில் நுழைந்து பௌதிக கண்களுக்கு மறைந்து போனார். இதன் பிறகு நித்யானந்த பிரபுவின் துணைவியான ஜானவி அன்னையின் விக்ரஹம், பங்கிம் ராயரின் விக்ரஹத்திற்கு வலது புறத்தில் வைக்கப்பட்டு ஸ்ரீமதி ராதாராணியின் விக்ரஹம் இடது புறத்தில் வைக்கப்பட்டனர்.

    ஏகசக்ராவின் மகிமைகள்

    💐💐💐💐💐💐💐💐💐💐

    ஏகசக்ராவை தரிசித்தவர்கள் நிச்சயம் பகவானின் அபூர்வமான இரகசிய கருணையைப் பெற்றவர்கள் என்றே கருதப்பட வேண்டும். எவ்வித கர்வமும் பொய் கௌரவமும் இல்லாமல், தயக்கமின்றி இந்த புனித பூமியின் தூசிகள் உடலில் படும்படி உருள வேண்டும். ஏகசக்ரா சுற்றுலா தலம்போல இருக்கும் என எண்ணினால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சும். அது பௌதிக கண்களுக்கு ஒரு சாதாரண குக்கிராமத்தை போன்றே காட்சியளிக்கும். நித்யானந்த பிரபுவின் கருணையை புரிந்துகொள்வது மிகவும் கடினம். அந்த கருணை கடலில் இருக்கும் ஒரு துளியின் அறிகுறியை உணர்ந்தவர்கள் நித்ய ஆனந்தத்தை பெறுகின்றனர்.

    கலி யுகத்தில் ஜீவன்களுக்கு நித்யானந்த பிரபு கொடுக்கும் போதனை “கிருஷ்ணரின் நாமத்தை உச்சரியுங்கள், கிருஷ்ணரை வழிபடுங்கள், கிருஷ்ணரைப் பற்றி பேசுங்கள்.”

    நித்யானந்த பிரபுவின் லீலைகள் – ஒரு சிறிய கண்ணோட்டம் – குழந்தை பருவ லீலை

    💐💐💐💐💐💐💐💐💐💐

    சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு பன்னிரண்டு வருடங்களுக்கு முன், நித்யானந்த பிரபு ஏகசக்ராவில் ஹதாய் பண்டிதருக்கும் அன்னை பத்மாவதிக்கும் தெய்வீக மகனாக தோன்றினார். நித்யானந்த பிரபுவை ஏகசக்ரா மக்கள் சிறுவயதில் நிதாய் என்று பிரியமாக அழைத்தனர்.

    தன்னிகரற்ற அழகுடன் காணப்பட்ட நிதாய், தன்னை காண்பவர்களுக்கு நித்திய ஆனந்தத்தை கொடுத்து கொண்டிருந்ததால், ஏகசக்ரா மக்களின் உயிர் மூச்சாக அவர் நேசிக்கப்பட்டார். நிதாய் பன்னிரண்டு வயது வரை நண்பர்களுடன் விளையாடுவதிலும் பகவானின் அவதாரங்களை நாடகமாக அரங்கேற்றுவதிலும் முழுமையாக மூழ்கியிருந்தார். நிதாயின் திருமுகத்தை அரைமணி நேரத்திற்கு ஒருமுறை பார்க்காவிடில் அன்னை பத்மாவதி மயங்கிவிடுவாள்.

    சிறுவயதில் நிதாய் தன் நண்பர்களுடன் சேர்ந்து பகவானின் அவதார நாடகங்களை கனகச்சிதமாக அரங்கேற்றுவார். கிருஷ்ண பலராமரின் மாடு மேய்க்கும் லீலை, கிருஷ்ணர் வெண்ணைய் திருடும் லீலை, வாமன லீலை, அசுரர்களின் துயர் கொள்ளாமல் பூமிதேவி பிரம்மாவை நாடும் லீலை, கிருஷ்ணரைக் கொல்ல வந்த பூதனை, தேனுகாசுரன், மற்றும் அகாசுரனின் செயல்கள், தேவகிக்கும் வசுதேவருக்கும் கிருஷ்ணர் தோன்றிய லீலையை நள்ளிரவில் அரங்கேற்றுதல் என தொடர்ச்சியாக பல அவதார லீலைகளை அங்கீகரிக்கப்பட்ட முறையில், நிதாய் தன் நண்பர்களுடன் அரங்கேற்றி ஊர் மக்களை வியக்க வைத்தார்.

    லக்ஷ்மண லீலை

    💐💐💐💐💐💐💐

    நாடக கதாபாத்திரங்களில் லக்ஷ்மண வேடத்தையே நிதாய் மிகவும் விரும்பி நடிப்பார். ஒருமுறை இராவணன் மகன் இந்திரஜித் விட்ட அம்பில் லக்ஷ்மணன் மூர்ச்சை அடைந்து போன காட்சி இடம் பெற்றிருந்தது. அப்போது நிதாயின் உடலில் உயிர் இருப்பதற்கான சிறு அறிகுறியும் தென்படவில்லை. இதனால் பதட்டமடைந்த ஊர்மக்கள் மேடையில் நிதாயை சூழ்ந்து கொண்டனர். அங்கிருந்த இன்னொரு நாடக சிறுவன் இந்த காட்சியின்போது, நான் ஹனுமானாக நடித்து கந்தமதன மலையை கையில் சுமந்து அதில் இருக்கும் மூலிகையை பிழிந்து நிதாயின் நாசியில் முகரும்படி செய்ய வேண்டும் என நிதாய் கூறியிருந்தார். நான்தான் அதனை செய்ய மறந்து விட்டேன் எனக் கூறி ஹனுமானை போல நடித்து காட்டினார். நிதாய் உடனடியாக எழுந்து கொண்டார்.

    அப்போது அங்கு கூடியிருந்த ஊர் மக்கள் நிதாயிடம் நாங்கள் உனக்கு எந்த அவதார லீலைகளைப் பற்றியும் கூறியதில்லை. ஆனால் எவ்வாறு உன்னால் கனகச்சிதமாக அரங்கேற்ற முடிகிறது என வினவினார்கள். அதற்கு நிதாய் என் சொந்த லீலைகளை எவ்வாறு நான் மறக்க முடியும் என பதிலளித்தார். நிதாய் மீதிருந்த ஆழ்ந்த அன்பினால் அவர் எந்த அர்த்தத்தில் அவ்வாறு கூறினார் என்பதை ஊர் மக்களால் புரிந்துகொள்ள முடியவில்லை. இவ்வாறு பன்னிரண்டு ஆண்டுகள் சென்ற பின், புனித பயணத்தை மேற்கொண்டிருந்த ஒரு சந்நியாசி ஹதாய் பண்டிதரின் வீட்டிற்கு வருகை புரிந்தார். அவரை நன்கு வரவேற்று உபசரித்த ஹதாய் பண்டிதர் சில நாட்களுக்கு பிறகு அவர் விடைபெறும்போது, உங்களுக்கு நான் எவ்வாறு கைங்கரியம் செய்ய முடியும்?” என வினவினார். அதற்கு அந்த சந்நியாசியோ, தான் புனித பயணம் மேற்கொண்டிருப்பதாகவும் தனக்கு சேவை செய்ய துணையாக அவரது மகனை தன்னுடன் அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.

    நிதாயின் புனித பயணம்

    💐💐💐💐💐💐💐💐💐💐

    இந்த வேண்டுகோளைக் கேட்ட ஹதாய் பண்டிதர் தன் இதயமே இடியால் பிளக்கப்பட்டதை போன்று உணர்ந்தார். தன் மனைவி பத்மாவதியை கலந்தாலோசித்த பிறகு, வேத கலாச்சார நெறிமுறைப்படி தன் மகனை சந்நியாசியுடன் அனுப்ப அவர் ஒப்புக் கொண்டார். நிதாய் அந்த சந்நியாசியுடன் செல்வதற்கு மிகவும் ஆர்வமாக இருந்தார். நிதாய் ஏகசக்ராவை விட்டுச் சென்ற பிறகு, அங்கு வசித்தவர்கள் அவ்விடத்தில் வாழ விருப்பமில்லாமல் பிற இடங்களுக்கு குடி பெயர்ந்ததால் ஊரே வெறிச்சோடி காணப்பட்டது. மூன்று மாதங்கள் வரை எதையும் உண்ணாமல் இருந்த ஹதாய் பண்டிதரும் அன்னை பத்மாவதியும் பிரிவின் காரணமாக உடலை விட்டு பகவானின் நித்திய லோகத்தை அடைந்தனர்.

    நித்யானந்த பிரபு அடுத்த இருபது ஆண்டுகளுக்கு, அதாவது தனது முப்பத்திரெண்டு வயது வரை புனித பயணத்தை மேற்கொண்டிருந்தார். பத்ரிகாஷ்ரமம், அயோத்யா, சித்திரகூடம், பிரயாகை, திருப்பதி, ஸ்ரீரங்கம், இராமேஸ்வரம், பண்டரிபுரம் உட்பட பல்வேறு இடங்களை தரிசித்த பின்னர், இறுதியாக விருந்தாவனத்தை அடைந்தபோது, நித்யானந்த பிரபுவின் பரவச நிலை கோடிக்கணக்கான மடங்கு அதிகரித்தது. அப்போது, சைதன்ய மஹாபிரபு நவத்வீபத்தில் நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்கு தயாராகி விட்டார் என்பதை நித்யானந்தர் உணர்ந்தார்.

    மஹாபிரபுவைச் சந்தித்தல்

    💐💐💐💐💐💐💐💐💐

    1506இல் நித்யானந்த பிரபு நவத்வீபத்தை அடைந்து சைதன்ய மஹாபிரபுவை முதன்முதலில் நந்தன ஆச்சாரியரின் இல்லத்தில் சந்தித்தார். அவர்கள் இருவருமே ஆன்மீக ஆனந்த அலையின் உச்சத்தை அனுபவித்து மூர்ச்சை அடைந்தனர். சைதன்ய மஹாபிரபு ஜகந்நாத புரிக்கு செல்லும் வரை, நித்யானந்த பிரபு நவத்வீபத்தில் அவருடனேயே தங்கினார். சைதன்ய மஹாபிரபுவின் கட்டளை கிடைத்த பிறகே நித்யானந்த பிரபு ஹரி நாம ஸங்கீர்த்தன பிரச்சாரத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எல்லையற்ற கருணையின் உருவமாக திகழ்ந்த நித்யானந்த பிரபு திருடர்களுக்கும் சூத்திரர்களுக்கும் தன்னை துன்புறுத்தியவர்களுக்கும்கூட தூய கிருஷ்ண பிரேமையை அருளினார்.

    பானிஹட்டி என்னும் இடத்தில் ராகவ பண்டிதரின் வீட்டை தலைமையிடமாக கொண்டு நித்யானந்த பிரபு, வங்காளத்தில் கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பின் சூரிய தாஸ் என்பவரின் இரு புதல்விகளான ஜானவி மற்றும் வசுதாவை மணந்து கொண்டார். இவர்கள் பலராமரின் நித்திய துணைவிகளான ரேவதி மற்றும் வருணிதேவி ஆவார். வசுதாவிற்கு வீரபத்ரர் என்கிற மகனும் கங்கா தேவி என்கிற மகளும் இருந்தனர். வசுதாவின் மறைவிற்குப் பிறகு இருவரும் ஜானவி அன்னையின் பாதுகாப்பில் வளர்ந்தனர். நித்யானந்த பிரபுவின் சகாக்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். அவர்களில் சிலர்: கௌரிதாஸ பண்டிதர், உதாரண தத்தர், மகேச பண்டிதர், பரமேஸ்வர தாஸர், கால கிருஷ்ண தாஸ், சுந்தரானந்த தாகூர், தனஞ்ஜயர், கமலகர பிப்பலை, புருஷோத்தம நகரர், மற்றும் அபிராம தாஸ தாகூர்.

    “இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. http://www.tamilbtg.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question