Sunday, July 14

Varaha Dev (Tamil) / பகவான் வராஹரின் தோற்றம்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீமத் பாகவதம் மூன்றாம் காண்டம், பாகம் 1, அத்யாயம் 13, பதம் 14

மனுர் உவாச
ஆதேஸே ‘ ஹம் பகவதோ வர்தேயாமீவ – ஸூதன
ஸ்தானம் த்வ் இஹானுஜானீ : ப்ரஜானாம் மம ச ப்ரபோ


ஸ்ரீ மனு கூறினார் : ஒ , அனைத்து ஆற்றல்களும் மிக்கவரே , பாவங்களை மாய்ப்பவரே , உமது கட்டளைக்கு நான் கீழ்ப்படிகிறேன் . அருள்கூர்ந்து எனக்குரிய இருப்பிடத்தையும் , எனக்குப் பிறக்கப் போகும் உயிர்களையும் பற்றி அறிவீப்பீராக .


பதம் 15

யத் ஓக : ஸ்ர்வ – பூதானாம் மஹீ மக்னா மஹாம்பஸி
அஸ்ய உத்தரணே யத்னோ தேவ தேவ்யா விதீயதாம்

ஓ, தேவர்களின் தலைவனே , மகாநீரினுள் மூழ்கியிருக்கும் பூமியினை வெளிக்கொணர்வதற்கு அருள்கூர்ந்து முயற்சிப்பீராக . ஏனெனில் உயிர்கள் அனைத்திற்கும் அதுவே இருப்பிடமாகும் . இது உமது முயற்சியினாலும் பகவானின் கருணையினாலுமே நடை பெறக் கூடியதாகும் .


பதம் 16

மைத்ரேய உவாச
பரமேஷ்டீ த்வ் அபாம் மத்யே ததா ஸன்னாம் அவேக்ஷ்ய காம்
கதம் ஏனாம் ஸமுன்னேஷ்ய இதி தத்யௌ தியா சிரம்

ஸ்ரீ மைத்ரேயர் கூறினார் : பூமி நீருக்கடியில் இருப்பதைக் கண்ட பிரம்ம தேவர் அதனை எவ்வாறு வெளியே எடுக்கலாம் என்று நீண்ட நேரம் சிந்தித்தார் .


பதம் 17

ஸ்ருஜதோ மே க்ஷிதிர் வார்பி : ப்லாவ்யமானா ரஸாம் கதா
அதாத்ர கிம் அநுஷ்டேயம் அஸ்மாபி : ஸர்க – யோஜிதை :
யஸ்யாஹம் ஹ்ருதயாத் ஆஸம் ஸ ஈஸோ விததாது மே

பிரம்மதேவர் நினைத்தார் : படைப்புத் தொழிலில் நான் ஈடுபட்டிருந்தபொழுது பூமியானது பிரளய வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுக் கடலின் அடியில் சென்றுவிட்டது . படைப்புத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நம் போன்றோர் செய்யக் கூடியது என்ன? பகவானே இதற்கு வழிகாட்டுதல் சிறந்ததாகும், அவருக்குத் தெரிவிப்போம் என்று எண்ணினார் .


பதம் – 18

இதி அபித்யாயதோ நாஸா – விவராத் ஸஹஸானக
வராஹ – தோகோ நிரகாத் அங்குஷ்ட – பரிமாணக :

ஓ . பாவமற்ற விதுரனே , பிரம்ம தேவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருந்தபொழுது திடீரென்று அவரது நாசித் துவாரத்திலிருந்து ஒரு சிறிய பன்றி வடிவம் வெளியே வந்தது. அப்பன்றியின் பரி மாணம் ஒரு கட்டை விரலின் மேற்பகுதியினைக் காட்டிலும் மிகச் சிறியதாகும் .


பதம் – 19

தஸ்யாபிபஸ்யத : கஸ்த : க்ஷணேன கில பாரத
கஜு – மாத்ர : ப்ரவவ்ருதே தத் அத்புதம் அபூன் மஹத்

ஓ, பாரதகுலத் தோன்றலே, பிரம்ம தேவர் பகவானைப் பார்த்துக் கொண்டிருந்த பொழுது அப்பன்றி வானையடைந்து ஒரு பெரிய யானையினைப் போல் மிகப் பெரிய அற்புதமான உருவமாக மாறியது .


பதம் – 20

மரீசி – ப்ரமுகைர் விப்ரை : குமாரைர் மனுனா ஸஹ
த்ருஷ்ட்வா தத் ஸௌகரம் ரூபம் தர்கயாம் ஆஸ சித்ரதா

வானில் பன்றியினைப் போல் தோன்றிய அற்புத உருவினைக் பிரம்ம தேவர் , மரீசியின் தலைமைக்கு உட்பட்ட கீழுள்ள அந்தணர்கள் , குமாரர்கள் மற்றும் மனு போன்றோர் தங்களுக்குள் பல்வேறு விதமாக விவாதிக்கத் தொடங்கினர் .


பதம் – 21

கிம் ஏதத் ஸூகர – வ்யாஜம் ஸத்த்வம் திவ்யம் அவஸ்திதம்
அஹோ பதாஸ்சர்யம் இதம் நாஸாயா மே விநிஹ்ஸ்ருதம்

அசாதாரணமான ஓர் உயிர் , பன்றியாக பொய்த்தோற்றம் கொண்டு வந்துள்ளதோ ? இது எனது நாசியிலிருந்து வெளியே வந்தது மிகவும் ஆச்சரியகரமானதாகும் .


பதம் – 22

த்ருஷ்டோ ‘ ங்குஷ்ட – ஸிரோ – மாத்ர : க்ஷணாத் கண்ட – ஷில லா – ஸம :
அபி ஸ்வித் பகவான் ஏஷ யஜ்ஞோ மே கேதயன் மன :

முதன்முதலில் இப்பன்றி கட்டை விரலின் நுனியாகவே தோன்றியது . கணப்பொழுதில் அது ஒரு பெரிய பாறாங்கல் அளவிற்கு மாறிவிட்டது . எனது மனம் மிகுந்த குழப்பமுறுகிறது. இவர் முழுமுதற் கடவுளான விஷ்ணுவாக இருப்பாரோ ? .


பதம் – 23

இதி மீமாம்ஸதஸ் தஸ்ய ப்ரஹ்மண : ஸஹ ஸூனுபி :
பகவான் யஜ்ஞ – புருஷோ ஜகர்ஜாகேந்த்ர – ஸன்னிப :

பிரம்மதேவர் இவ்வாறு தன் புதல்வர்களுடன் விவாதித்துக் கொண்டிருந்தபொழுது முழுமுதற் கடவுளான விஷ்ணு ஒரு பெரிய மலை சப்தித்தாற் போன்று ஒலி செய்தார் .


பதம் – 24

ப்ரஹ்மாணம் ஹர்ஷயாம் ஆஸ ஹரிஸ் தாம்ஸ் ஸ்வ – கர்ஜிதேன ககுப : ப்ரதிஸ்வனயதா விபு : ச த்விஜோத்தமான்
ஸ்வ-கர்ஜிதேன ககுப: ப்ரதிஸ்வனயதா விபு:

சர்வ வல்லமையுள்ள முழுமுதற் கடவுள் , பிரம்ம தேவரையும் , உயர்நிலை பெற்ற அந்தணர்களையும் புத்துணர்ச்சி பெறச் செய்யும் வண்ணம் பலத்த மீண்டும் தமது அசாதாரணமான பலத்த குரலில் கர்ஜித்தார் . அவ்வொலி எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது .


பதம் – 25

நிஸம்ய தே கர்கரிதம் ஸ்வ – கேத
க்ஷயிஷ்ணு மாயாமய ஸூகரஸ்ய
ஜனஸ் – தப : -ஸத்ய – நிவாஸினஸ் தே
த்ரிபி : பவித்ரைர் முனயோ ‘ க்ருணன் ஸ்ம

ஜனலோகம் , தபலோகம் , சத்தியலோகம் போன்றவற்றில் வாழும் மாமுனிவர்களும் , மகான்களும் , கருணை நிறைந்த பகவான் வராஹரின் , மங்களம் நிறைந்த ஆரவார ஒலியினைக் கேட்டு மூன்று வேதங்களில் இருந்து மங்களகரமான மந்திரங்களை ஓதினர் .


பதம் – 26

தேஷாம் ஸதாம் வேத – விதான – மூர்திர்
ப்ரஹ்மாவதார்யாத்ம – குணானுவாதம்
விநத்ய பூயோ விபுதோதயாய
கஜேந்த்ர – லீலோ ஜலம் ஆவிவேஸ

கஜேந்திரன் என்னும் யானையினைப் போல் , அவர் தமது சிறந்த பக்தர்களின் வேத மந்திர வழிபாட்டுக்குப் பதில் கூறுவது போல் மீண்டும் கர்ஜனை செய்து நீரினுள் இறங்கினார் . வேத மந்திரங்கள் துதிக்கும் பொருளாக இருப்பவர் பகவானே ஆவார் . அதனால் தனது பக்தர்களின் பிரார்த்தனைகள் தனக்கானவையே என்பதை அவர் நன்கறிந்திருந்தார் .


பதம் – 27

உத்க்ஷிப்த – வால : க – சர : கடோர :
ஸடா விதுன்வன் கர – ரோமஸுத்வக்
குராஹதாப்ர : ஸித – தம்ஷ்ட்ர ஈக்ஷா
ஜ்யோதிர் பபாஸே பகவான் மஹீத்ர :

பூமியை மீட்பதற்காக நீரினுள் புகுவதற்கு முன்னால் பகவான் வராஹர் வானில் வாலை வேகமாகச் சுழற்றியபடி பறந்தார் . அவரது அடர்ந்த உரோமங்கள் அலை பாய்ந்தன . அவரது பார்வை ஒளி வீசியது . மின்னுகின்ற தந்தங்களினாலும் , காலடிக் குளம்புகளினாலும் அவர் வானிலுள்ள மேகங்களைச் சிதறடித்தார்


பதம் – 28

க்ராணேன ப்ருத்வ்யா : பதவிம் விஜிக்ரன்
க்ரோடாபதேஸ : ஸ்வயம் அத்வராங்க :
கரால – தம்ஷ்ட்ரோ ‘ பி அகரால – த்ருக்ப்யாம்
உத்வீக்ஷ்ய விப்ரான் க்ருணதோ ‘ விஸத் கம்

தனிப்பட்ட முறையில் அவர் பரமபுருஷ பகவானான விஷ்ணுவே ஆதலினால் அவர் உன்னதமானவரே . ஆனால் , அவர் பன்றி வடிவம் எடுத்திருந்ததினால் பூமியினைத் தனது மோப்பத்தினால் தேடினார் . அவரது தந்தங்கள் இரண்டும் கூர்மையாகவும் அச்சந்தரும் வகையிலும் இருந்தன . அவரது பார்வை தன்னைப் பிரார்த்தித்துக் கொண்டிருந்த அந்தணப் பக்தர்களின் மேல் சென்றது . அதன்பின் அவர் நீரினுள் புகுந்தார் .


பதம் – 29

ஸ வஜ்ர – கூடாங்க – நிபாத – வேக
விஸீர்ண – குக்ஷி : ஸ்தனயன்ன் உதன்வான்
உத்ஸ்ருஷ்ட – தீர்கோர்மி – புஜைர் இவார்தஷ்
சுக்ரோஷ யஜ்ஞேஷ்வர பாஹி மேதி

மாமலையொன்று நீரினுள் விழுந்தாற்போல் பகவான் வராஹர் நீரினுள் புகுந்தவுடன் அவரது வேகத்தைத் தாங்க மாட்டாது கடல் இரண்டாகப் பிளந்தது . அப்பொழுது பெரிய அலைக்கரங்கள் இரண்டு அக்கடலில் தோன்றி பகவானைப் பிரார்த்திப்பது போன்று “ஓ, வேள்விகளின் நாயகனே , என்னை இரண்டாகத் துண்டித்து விடாதீர் , அன்புடன் என்னைக் காத்தருள்வீராக ” என்று கதறியது .


பதம் – 30

குரை : ஹுரப்ரைர் தரயம்ஸ் தத் ஆப
உத்பாத – பாரம் த்ரி – பரூ ரஸாயாம்
ததர்ஷ காம் தத்ர ஸுஷுப்ஸுர் அக்ரே
யாம் ஜீவ – தானீம் ஸ்வயம் அப்யதத்த

பகவான் வராஹர் அம்புபோல் கூர்மையாக இருந்த தனது காலடிக் குளம்புகளினால் அக்கடலைக் கிழித்துச் சென்று ஆழங் காணவே முடியாத அதன் ஆழத்தைச் சென்றடைந்தார் . அடியில் உயிர்களின் உறைவிடமான பூமி படைக்கப் பட்டது போல் அப்படியே இருந்தது . அவர் அதனைத் தானேத் தூக்கினார் .


பதம் – 31

ஸ்வ-தம்ஷ்ரயோத்ருத்ய மஹீம் நிமக்னாம்
ஸ உத்தித : ஸம்ருருசே ரஸாயா :
தத்ராபி தைத்யம் கதயாபதந்தம்
ஸுநாப – ஸுந்தீபித – தீவ்ர – மன்யு :

பகவான் வராஹர் மிக எளிதாகப் பூமியினைத் தனது தந்தங்களினால் தூக்கிக் கொண்டு நீரினின்று மேலே வந்தார் . சுதர்ஸனச் இவ்வாறு அவரது தோற்றம் ஒளிமிக்கதாக விளங்கியது . சுதர்ஸனச் சக்கரத்தினைப் போல் அவரது சினம் , பொங்கியெழுந்தது . அவர் தன்னுடன் யுத்தத்திற்கு வந்த அசுரனை ( இரண்யாக்ஷன் )உடனே கொன்றார் .

+2

1 Comment

 • Vasudevan

  வராஹ அவதாரம்
  (வழங்கியவர் – ஜீவன கௌர ஹரி தாஸ்)

  *******

  முந்தைய யுகத்தில் ஒரு நாள் மாலை வேளையில் மரீச்சியின் புதல்வனான கஷ்யப முனிவர், பகவான் விஷ்ணுவை வழிபட்டுக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தக்ஷணின் மகளான திதி தன் கணவரான கஷ்யபரை அணுகி தன் காம இச்சைகளை உடனடியாக தணிக்கும் படி மன்றாடினாள். அந்த அமங்களகரமான மாலை வேளையில் கஷ்யப முனிவரும், திதியும் ஒன்று கூடினர். தவறான நேரத்தில் ஒன்று கூடியதை நினைத்து திதி வருத்தப்பட்டு அழுதாள். அப்போது காஷ்யப முனிவர் திதியிடம் கவலை கொள்ள வேண்டாம், உனக்கு பிறக்க இருக்கும் இரு புதல்வர்கள் உலகையே அச்சுறுத்தும் அசுரர்களாக இருந்தாலும், உன் பேரன் பிரஹ்லாதன் சிறந்த ஹரி பக்தனாக திகழ்வான் என தேற்றினார்.

  பிரஹ்லாதனின் திவ்யமான குணங்களையும், புகழையும் கேட்ட திதி மிகவும் மகிழ்வுற்றாள். அதே சமயம் திதி தன் இரு அசுர குழந்தைகளான ஶிஶிஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவை தன் கருவில் 100 வருடம் சுமந்தாள். இந்த இரு அசுர குழந்தைகளும் பூமியில் பிறப்பதற்கு காரணமாக வைகுண்டத்தில் ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நடைபெற்றது.

  நான்கு குமாரர்களின் சாபம்

  💐💐💐💐💐💐💐💐💐

  அதன்படி நான்கு குமாரர்களான ஸனக, ஸனாதன, ஸனந்தா, ஸனத் குமரர் ஒரு நாள் நாராயணரை தரிசிப்பதற்கு வைகுண்டம் சென்றனர். அந்த நான்கு குமாரர்கள் வைகுண்டத்திற்கு உள்ளே செல்ல முனைந்த போது வாயிற் பாதுகாவலர்களான ஜெயன் மற்றும் விஜயன் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் கோபம் அடைந்த நான்கு குமாரர்கள் ஜெயன், விஜயனை கீழான பௌதிக உலகில் பிறக்கும் படி சபித்தனர். இச்செய்தியை அறிந்த நாராயணர் வைகுண்டத்தின் நுழைவாயிலுக்கு விரைந்தார். ஜெயன், விஜயனின் எஜமானர் என்கிற முறையில் தன் சேவகர்களின் தவறுக்காக நாராயணர் நான்கு குமாரர்களிடம் முதலில் மன்னிப்பு கேட்டார். பிராமணர்களின் சாபத்தை தன்னால் போக்க முடியாது என தெரிவித்த நாராயணர் பின் ஜெயன், விஜயனிடம் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு எனக்கு எதிரியாக பிறக்க விருப்பப்படுகிறீர்களா அல்லது ஏழு பிறவிகளுக்கு எனக்கு நண்பராக இருக்க விருப்பப்படுகிறீர்களா என கேட்டார்.

  வைகுண்டத்தில் இருக்கும் நாராயணரை ஏழு பிறவிகளுக்கு பிரிந்திருப்பதை விட மூன்று பிறவியில் எதிரியாக செயல்பட்டு விரைவாக வைகுண்டத்திற்கே வந்து விடும் நோக்கத்தில் அவர்கள் இருவரும் அசுரர்களாக செயல் பட முன் வந்தனர். அப்போது நாராயணர் நான்கு குமாரர்களின் சாபம் தன்னால் அங்கீகரிக்கப்பட்டது என்றும் தன்னுடைய விருப்பமும் அதுவே என தெரிவித்தார். பகவான் நாராயணரின் திட்டத்தை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என தெரிவித்த நான்கு குமாரர்கள் , தாங்கள் நுழைவாயிலில் தடுத்து நிறுத்தப்பட்டதும் பகவானின் விருப்பமே என உணர்ந்தனர்.

  மூன்று பிறவி அசுரர்கள்

  வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் முதற் பிறவியில் ஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்யகசிபுவாகவும் இரண்டாவது பிறவியில் இராவணன் மற்றும் கும்பகர்ணனாகவும், மூன்றாவது பிறவியில் சிசுபாலன் மற்றும் தண்டவக்ரனாகவும் பிறப்பெடுத்தனர். வைகுண்டத்தில் இருப்பவர்கள் அனைவருமே பக்தர்கள் என்பதால் நாராயணர் அங்கு யாரிடமும் சண்டை போட முடியாது. அதே சமயம் பகவான் நாராயணர் யாரிடமாவது சண்டை போட வேண்டும் என விருப்பப்பட்டால் , அவர் பௌதிக உலகில் அவதரிக்கும் போது அந்த விருப்பம் நிறைவேறுகிறது.

  அதாவது தன்னிடம் கடுமையாக சண்டை போடுவதற்கும் பகவான் நாராயணர் தகுதியான நபர்களை தேர்ந்தெடுக்கிறார். பகவான் நாராயணர் தன் அனைத்து விருப்பங்களையும் லீலைகள் மூலமாக பக்தர்களுடனேயே நிறைவேற்றுகிறார். பௌதிக உலகில் பகவான் நாராயணரின் திவ்யமான சண்டை போட்டிக்கு பக்தர்களையே அந்த கதாபாத்திரத்திற்குள் நுழைக்கிறார். வைகுண்டத்தின் வாயிற் காப்பாளர்களான ஜெயன், விஜயன் பௌதிக உலகில் மூன்று பிறவிகளுக்கு அசுரர்களாக செயல்பட்டது பிரம்மாவின் கல்பத்தில் (நாள்) ஒரு முறை மட்டுமே நடைபெற்றது என ஆச்சாரியர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது வராஹரும், நரசிம்மரும் பௌதிக உலகில் அவதரிக்கும் போது ஒவ்வொரு முறையும் ஜெயன், விஜயன் என இவர்கள் இருவரும் ஹிரண்யாக்ஷன் மற்றும் ஹிரண்யகசிபுவாக தோன்றுவதில்லை என ஆச்சாரியர்கள குறிப்பிடுகின்றனர். தகுதி வாய்ந்த அசுரர்கள் பகவானால் தனிப்பட்ட முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு எதிரிகளாக பொதுவாக செயல்படுகின்றனர். ஜெயன், விஜயன் நாராயணரின் தூய பக்தர்கள். பிரம்மாவின் ஒரு கல்பத்தில் மட்டும் அவர்கள் அசுரர்களாக செயல்பட்டனர் என புரிந்து கொள்ள வேண்டும்.

  கஷ்யபர் முதலில் பிறந்த ஜெயனை ஹிரண்யாக்ஷன் எனவும், விஜயனை ஹிரண்யகசிபு எனவும் பெயரிட்டார். இந்த இரு அசுர சகோதரர்களும் பௌதிக உலகில் பிறந்த போது இயற்கையின் சீற்றங்களாக பூகம்பம், பலத்த காற்று, அசுப கிரகங்கள் பலம் பெறுதல், சூரிய சந்திர கிரகணங்கள் மாறி மாறி தோன்றுதல் போன்ற அறிகுறிகள் வெளிப்பட்டுக் கொண்டே இருந்தன. நரி ஊளையிடுதல், பயத்தில் மாடுகள் உறைந்து போன அபசகுண அறிகுறிகளும் தென்பட்டன.

  பிரம்மாவிடம் வரம் பெறுதல்

  💐💐💐💐💐💐💐💐💐💐

  ஹிரண்யாக்ஷன்ன் மற்றும் ஹிரண்ய கசிபு பிரம்மாவிடம் கடுந்தவம் மேற்கொண்டு கிட்டத்தட்ட சாகாத வரத்தை போன்றே பெற்றுக் கொண்டு கர்வத்தினால் மூன்று உலகையும் ஆட்டுவித்துக் கொண்டிருந்தனர். ஹிரண்யாக்ஷனின் வருகையை கண்ட இந்திரன் உட்பட அனைத்து தேவர்களும் தங்கள் லோகத்தை கைவிட்டு வெவ்வேறு இடங்களுக்கு சென்று ஒளிந்து கொண்டனர். இந்திர லோகமும் காலியாக இருப்பதை கண்ட ஹிரண்யாக்ஷன்ன் தேவர்கள் சண்டை போடாமலேயே தோற்றுவிட்டதை ஒப்புக் கொண்டுவிட்டனர் என எண்ணி பெருமிதம் கொண்டான். சுவர்க்க லோகத்தை விட்டு ஹிரண்யாக்ஷன்ன் சமுத்திர கடலுக்குள் சென்ற போது அனைத்து கடல்வாழ் உயிரினங்களும் பயத்தில் நீரை விட்டு வெளியே சென்றன.

  பின் வருண தேவரின் தலைநகரான விபாவரிக்கு சென்ற ஹிரண்யாக்ஷன்ன் வருண தேவரை தன்னுடன் சண்டை போடும் படி கேட்டுக் கொண்டான். ஹிரண்யாக்ஷன்னின் கர்வத்தை கண்ட வருண தேவர், தனக்கு வயதாகி விட்டது என்றும் விஷ்ணுவே சண்டை போடுவதற்கு தகுதியான நபர் என அவனிடம் தெரிவித்தார். பகவான் விஷ்ணு இருக்கக் கூடிய இடத்தை வழியில் கண்ட நாரதர் மூலமாக அறிந்து கொண்ட ஹிரண்யாக்ஷன் அவரைத் தேடி புறப்பட்டான்.

  பூமியை மீட்ட வராஹர்

  💐💐💐💐💐💐💐💐

  ஹிரண்யாக்ஷன் பூலோகத்தை கர்போதகா கடலுக்குள் தன் வலிமையால் மூழ்கடித்தான். இதனைக் கண்ட தேவர்கள் அச்சமடைந்து பிரம்மாவை நாடினர். பிரம்மா பூலோகத்தை எவ்வாறு மீட்க முடியும் என தியானித்தபோது அவருடைய வலது நாசியில் இருந்து கட்டை விரல் அளவிலான பன்றி ரூபம் வெளிப்பட்டது. அந்த திவ்யமான பன்றி அவதாரம் தன் உருவத்தை அதிகரித்து கொண்டே செல்வதை பார்த்த தேவர்கள் அதிசயித்து போனர். பகவான் விஷ்ணுவே பன்றி ரூபத்தில் அவதரித்திருக்கிறார் என உணர்ந்த தேவர்கள் அச்சத்தை கைவிட்டு, உறுமிக் கொண்டிருந்த வராஹரை பார்த்து துதி பாடினர்.

  பொதுவாக பன்றிகளுக்கு மோப்பம் மற்றும் நுகரும் சக்தி அதிகமாக இருப்பதால், கர்போதகா கடலுக்குள் இருக்கும் பூமியை மீட்கும் பொருட்டு நுகர்ந்து கொண்டே வராஹர் நீருக்கடியில் சென்றார். பூலோகத்தையே தன் சிறு தந்தத்தினால் தாங்கிக் கொள்கிற அளவிற்கு வராஹரின் உடல் பெரிதாக இருந்தது. ஏழு தீவுகள் கொண்ட பூலோகத்திற்கு எவ்வித சிறு பாதிப்பும் ஏற்படாமல் மிகவும் சாதுர்யமாக வராஹர் அதனை தன் தந்தத்தினால் சுமந்து நீருக்கு வெளியில் எடுத்து வந்து தன் அசிந்திய சக்தியினால் மிதக்க வைத்தார்.

  கடுமையான யுத்தம்

  💐💐💐💐💐💐💐💐💐

  கடலுக்குள் மூழ்கடித்த பூமியை ஒரு பன்றி சுமந்து கொண்டு நீருக்கு வெளியே வருவதை கண்ட ஹிரண்யாக்ஷன்ன் பாம்பை போல சீறினான். தன் கையில் இருந்த கதத்தினால் வராஹரை தாக்க ஹிரண்யாக்ஷன் முன் சென்றான். அப்போது வராஹருக்கும், ஹிரண்யாக்ஷனுக்கும் கடுமையான போர் மூண்டது. சில சமயம் ஹிரண்யாக்ஷன்னின் கை ஓங்குவதை கண்ட தேவர்கள் அச்சத்தில் உறைந்து போயினர். ஒரு கட்டத்தில் வராஹரின் கையில் இருந்த கதத்தை கீழே தள்ளிய ஹிரண்யாக்ஷன்ன் வராஹரை நிராயுதபாணியாக ஆக்கிவிட்டான்.

  அதனால் கடுங்கோபம் அடைந்த வராஹர் உடனடியாக சுதர்சன சக்கரத்தை வரவழைத்தார். அதைக் கண்ட ஹிரண்யாக்ஷன்ன் உடனடியாக ஆகாயத்திற்கு பறந்த வண்ணம் கதத்தினால் வராஹரை தாக்க முன் வந்தான். அப்போது வராஹர் தன் இடது காலால் ஹிரண்யாக்ஷன்னின் கதத்தை விளையாட்டாக தட்டிய போது அது கீழே விழுந்தது. ஹிரண்யாக்ஷன்ன் கீழே விழுந்த கதத்தை மீண்டும் தூக்கிக் கொண்டு கர்ஜித்தவாறு வராஹரை அணுகிய போது, வராஹர் அந்த கதத்தை பிடுங்கிக் கொண்டார். இதனால் கடுங்கோபம் அடைந்த ஹிரண்யாக்ஷன்ய் எரியும் சூலத்தை வராஹர் மீது தூக்கியெறிந்தான். சுதர்சன சக்கரத்தின் மூலமாக சூலத்தை தவிடு பொடியாக்கிய வராஹரை கண்ட போது ஹிரண்யாக்ஷனின் கோபம் இன்னும் அதிகரித்தது.

  பின் தன் பலமான மேல் கைகளால் ஹிரண்யாக்ஷன்ன், பகவான் வராஹரின் நெஞ்சில் பலமாக குத்து விட்டான். அந்த பலமான குத்து வராஹருக்கு மலர்மாலை அணிவித்ததை போன்று இருந்தது. யோகேஷ்வர வராஹரிடம் ஹிரண்யாக்ஷன்ன் பல மாயஜால வித்தைகளை அரங்கேற்றினான். சுதர்சன சக்கரத்தை ஏவிய வராஹ பகவான் அனைத்து மாயஜால சித்துகளையும் நொடிப் பொழதில் அழித்தார். அப்போது அன்னை திதியின் இதயம் பயத்தால் சூழப்பட்டு அவளுடைய மார்பில் இருந்து இரத்தம் வழிந்தோட தொடங்கியது. தன் மாயஜால வேலைகள் பலிக்கவில்லை என உணர்ந்த ஹிரண்யாக்ஷன்ன் பகவான் முன் தோன்றி தன் இரு பலமான கைகளால் பகவானை தழுவி நசுக்க முன் வந்தான். வராஹ பகவான் அவன் காதில் பலமாக அறைவிட்டபோது ஹிரண்யாக்ஷன்ன் விழி பிதுங்கி , கை உடைந்து, வேரோடு பெயர்த்தெடுத்த மரத்தை போன்று கீழே விழுந்தான்.

  தூய பக்தர்களின் பார்வை

  💐💐💐💐💐💐💐💐💐💐💐

  அந்த சமயத்தில் பிரம்மாவும், மற்ற தேவர்களும் அந்த இடத்திற்கு விரைந்து பூமழை பொழிந்தனர். ஹிரண்யாக்ஷன்னின் உயிர் பிரியாத நிலையில் பகவான் வராஹரின் திருப்பாதம் அவன் நெஞ்சில் வைக்கப்பட்டிருந்ததை கண்ட பிரம்மா, யாருக்கு இம்மாதிரியான அதிர்ஷ்டமான மரணம் கிட்டும் என எண்ணி வியந்தார். யோகிகளும், ஞானிகளும் பகவானின் திருப்பாதத்தை தியானித்து ஆயிரக்கணக்கான வருடங்கள் தவம் இருக்கின்றனர். ஆனால் இந்த அசுரனுக்கோ பகவான் வராஹரின் திருப்பாதங்கள் உடலில் தொட்ட வண்ணம் உடலை நீக்கும் பாக்கியம் கிடைத்தது. பகவானின் திவ்யமான வதத்தினால் அசுரனுக்கே உன்னத நிலை கிடைக்கும் போது பக்தர்களுக்கு சொல்லவும் வேண்டுமா?

  பக்தர்களின் தைரியம் பகவானை வெகுவாக ஈர்க்கின்றது. திதியின் பேரக் குழந்தையான பிரஹலாதன், தந்தை ஹிரண்யகசிபுவினால் பல துன்பங்களுக்கு ஆளானான். மலை உச்சியில் இருந்து தூக்கி வீசுதல், கடலில் வீசுதல், நெருப்பு, பாம்பு, விஷம் என பல சித்ரவதைகளுக்கு பிரஹ்லாதன் ஆளானான். இறுதியாக பிரஹ்லாதனிடம் நெருப்பை கண்டு பயந்தாயா என கேட்ட போது, விஷ்ணு பகவான் அக்னியின் மூலமாகவே யாக குண்டத்தில் அனைத்தையும் உட்கொள்கிறார். அதனால் நான் ஏன் என் தந்தையின் திருவாயை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான். பாம்பை கண்டு பயந்தாயா என பிரஹலாதனிடம் கேட்டபோது, சேஷன் மீது என் தந்தை படுத்து உறங்குவதால் நான் ஏன் என் தந்தையின் படுக்கையை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான். விஷத்தை கண்டு பயந்தாயா என பிரஹலாதனிடம் கேட்ட போது, தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்தபோது அதிலிருந்து என் அன்னை லஷ்மி தேவி தோன்றினாள். அவள் தோன்றுவதற்கு முன் பாற்கடலில் ஹால ஹால என்னும் கொடிய விஷ அரசனும் தோன்றினான். அதனால் நான் ஏன் என மாமாவை கண்டு பயப்பட வேண்டும் என வினவினான்.

  இது தான் தூய பக்தர்களின் பார்வை. உலகில் இருக்கும் அனைத்தையும் பகவானுடன் தொடர்பு படுத்தி பார்ப்பதால் அவர்களுக்கு பயம் என்பது சிறிதளவு இருப்பதில்லை.

  “இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. http://www.tamilbtg.com

  +1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question