Sunday, December 22

பகவத் கீதை – 13.18

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஜ்யோதிஷாம் அபி தஜ் ஜ்யோதிஸ்
தமஸ: பரம் உச்யதே
க்ஞானம் க்ஞேயம் க்ஞான-கம்யம்
ஹ்ருதி ஸர்வஸ்ய விஷ்டிதம்



வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
ஜ்யோதிஷாம்—பிரகாசிக்கின்ற பொருள்கள் எல்லாவற்றிலும்; அபி—கூட; தத்—அந்த; ஜ்யோதி—ஒளியின் மூலம்; தமஸ:—இருட்டு; பரம்—அப்பாற்பட்ட; உச்யதே—கூறப்படுகின்றது; க்ஞானம்—அறிவு; க்ஞேயம்—அறியப்படும் பொருள்; க்ஞான-கம்யம்—அறிவின் இலக்கு; ஹ்ருதி—இதயத்தில்; ஸர்வஸ்ய—ஒவ்வொருவரின்; விஷ்டிதம்—வீற்றுள்ளார்.

மொழிபெயர்ப்பு
பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிற்கும் மூலம் அவரே. அவர் ஜடத்தின் இருட்டிற்கு அப்பாற்பட்டவராகவும் தோன்றாதவராகவும் உள்ளார். அவரே அறிவாகவும், அறியப்படும் பொருளாகவும், அறிவின் இலக்காகவும் உள்ளார். அவர் ஒவ்வொருவருடைய இதயத்திலும் வீற்றுள்ளார்.

பொருளுரை
சூரியன, சந்திரன், மற்றும் நட்சத்திரங்களைப் போன்று பிரகாசிக்கும் பொருள்கள் எல்லாவற்றிலும் ஒளியின் மூலமாக இருப்பது பரம புருஷ பகவானான பரமாத்மாவே. பரம புருஷரிடமிருந்து வரும் தேஜஸின் காரணத்தினால், ஆன்மீக உலகில் சூரியனுக்கோ சந்திரனுக்கோ அவசிய மில்லை என்பதை நாம் வேத இலக்கியத்தில் காண்கிறோம். இந்த ஜடவுலகில், பகவானுடைய தெய்வீக ஒளியான அந்த பிரம்மஜோதி, மஹத்-தத்த்வ எனப்படும் பௌதிக மூலக்கூறுகளால் மூடப்பட்டுள்ளது; எனவே, இந்த ஜடவுலகில், ஒளியைப் பெற சூரியன, சந்திரன், மின்சாரம் போன்றவற்றின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. ஆனால் ஆன்மீக உலகில் இவற்றிற்கு அவசியமில்லை. அவரது பிரகாசிக்கும் ஜோதியினால் அனைத்தும் பிரகாசப்படுத்தப்படுகின்றன என்று வேத இலக்கியத்தில் தெளிவாகக் கூறப்பட்டள்ளது. எனவே, அவரது நிலை இந்த ஜடவுலகைச் சார்ந்தது அல்ல என்பது தெளிவு. அவர் ஆன்மீக வெளியில், மிகமிகத் தொலைவிலுள்ள ஆன்மீக உலகில் உள்ளார். இதுவும் வேத இலக்கியத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆதி த்ய-வர்ணம் தமஸ: பரஸ்தாத் (ஷ்வேதாஷ் வதர உபநிஷத் 3.8). அவர் சூரியனைப் போன்றவர், நித்தியமாக பிரகாசிப்பவர், ஆனால் இந்த ஜடவுலகின் இருட்டிற்கு மிகமிக அப்பாற்பட்டு விளங்குகிறார்.

அவரது ஞானம் திவ்யமானது. பிரம்மன், திவ்ய ஞானத்தின் களஞ்சியம் என்பதை வேத இலக்கியம் உறுதி செய்கின்றது. அந்த ஆன்மீக உலகிற்கு மாற்றம் பெற ஆவலுடன் இருப்பவனுக்கு, ஒவ்வொருவரது இதயத்திலும் வீற்றுள்ள பரமாத்மாவின் மூலம் ஞானம் வழங்கப்படுகின்றது. தம் ஹ தேவம் ஆத்ம-புத்தி- ப்ரகாஷ ம் முமுக்ஷூர் வை ஷரணம் அஸம் ப்ரபத்யே என்று ஒரு வேத மந்திரம் (ஷ்வேதாஷ் வதர உபநிஷத் 6.18) கூறுகின்றது. ஒருவனுக்கு முக்தியடைவதில் விருப்பம் இருந்தால், அவன் முழுமுதற் கடவுளிடம் சரணடைய வேண்டும். ஞானத்தின் இறுதி இலட்சியத்தைப் பொறுத்தவரையில், அதுவும் வேத இலக்கியத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது, தம் ஏவ விதித்வாதி ம்ருத்யும் ஏதி. “அவரை அறிவதால் மட்டுமே பிறப்பு, இறப்பின் எல்லைகளைக் கடக்க முடியும்.” (ஷ்வேதாஷ் வதர உபநிஷத் 3.8).

ஒவ்வொருவருடைய இதயத்திலும் பரம ஆளுநராக அவர் வீற்றுள்ளார். அவரது கால்களும் கைகளும் எங்கும் பரந்துள்ளன, இவை ஜீவாத்மாவிற்கு பொருந்தாத தன்மைகள். எனவே, ஜீவாத்மா, பரமாத்மா என்று களத்தை அறிவோர் இருவர் உள்ளனர் என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சாதாரண மனிதனது கைகளும் கால்களும் ஓரிடத்தில் மட்டுமே உள்ளன, ஆனால் கிருஷ்ணருடைய கைகளும் கால்களும் எங்கும் பரந்துள்ளன. இது (ஷ்வேதாஷ் வதர உபநிஷத் 3.17) உறுதி செய்யப்பட்டுள்ளது: ஸர்வஸ்ய ப்ரபும் ஈஷானம் ஸர்வஸ்ய ஷரணம் ப்ருஹத். அந்த பரம புருஷ பகவானான பரமாத்மாவே எல்லா உயிர்வாழிகளின் பிரபு (எஜமானர்); எனவே, எல்லா உயிர்வாழிகளுக்கும் இறுதியான புகலிடம் அவரே. பரமாத்மாவும் ஜீவாத்மாவும் எப்போதும் வேறுபட்டவர்கள் என்ற உண்மையை இதனால் யாராலும் மறுக்க முடியாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question