Thursday, April 18

Indira Ekadashi (Tamil) / இந்திரா ஏகாதசி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இந்திரா ஏகாதசி பெருமைகளைப் பற்றி பிரம்ம – வைவர்த்த புராணத்தில் பகவான் கிருஷ்ணருக்கும் மகாராஜா யுதிஸ்டிரருக்கும் இடையிலான உரையாடலில் விவரிக்கப்பட்டுள்ளது.

மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ! கிருஷ்ணா ஓ! மதுசூதனா! ஓ! மது என்ற அரக்கனை கொன்றவரே! புரட்டாசி மாத தேய்பிறையில் (செப்டம்பர்/ அக்டோபர்) தோன்றக் கூடிய ஏகாதசியின் பெயர் என்ன? இந்த ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறைகள் யாவை? இதை அனுஷ்டிப்பதால் ஒருவர் அடையும் பலன்கள் யாவை? பகவான் கிருஷ்ணர், பதிலளித்தார். இந்த புனிதமான ஏகாதசியின் பெயர் இந்திரா ஏகாதசி. இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் ஒருவரின் எல்லா பாவ விளைவுகளும் அழிக்கப்படும் மற்றும் இழிவடைந்த தன் முன்னோர்கள் விடுதலை பெறுவர்.

ஓ! மன்னா! சத்ய யுகத்தில் இந்திரசேனா என்ற ஒரு மன்னர் வாழ்ந்து வந்தார். அவர் தன் எதிரிகளை வெல்வதில் சாமர்த்தியமானவர். அவர் மாஹிஸ்மதிபுரி என்ற தன் இராஜ்ஜியத்தை செழிப்புடன் ஆண்டு வந்தார். தன் பிள்ளைகள் மற்றும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்தார். அவர் எப்பொழுதும் பகவான் விஷ்ணுவின் வழிபாட்டில் ஈடுபட்டிருந்தார். அவர் ஒரு விஷ்ணுவின் பக்தராகையால் இடைவிடாமல் ஆன்மீக சிந்தனையில் ஆழ்ந்திருந்தார். முக்தி அளிக்கக்கூடிய பகவான் கோவிந்தனின் புனித நாமங்களை எப்பொழுதும் ஜெபித்துக் கொண்டிருந்தார்.

ஒரு நாள் மன்னர் மகிழ்ச்சியாக தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த போது விண்ணிலிருந்து நாரத முனிவர் திடீரென தன் முன் தோன்றினார். பெருமுனிவரான நாரதரைக் கண்டவுடன். மன்னர் எழுந்து நின்று கைகூப்பி வணங்கினார். பிறகு மன்னர் 16 வகையான பொருட்களைக் கொண்டு முறையாக நாரத முனிவரை வழிபட்டார். முனிவர் மகிழ்ச்சியுடன் இருக்கையில் அமர்ந்த பிறகு இந்திரசேன மன்னரிடம் ஓ! மாபெரும் மன்னா! உனது இராஜ்ஜியத்தில் அனைவரும் மகிழ்ச்சியுடனும் செழிப்புடனும் உள்ளனரா? உன்னுடைய மனது மத கொள்கைகளில் நிலை பெற்றுள்ளதா? நீ பகவான் விஷ்ணுவின் பக்தித் தொண்டில் ஈடுபட்டுள்ளாயா? என வினவினார். மன்னர் பதிலளித்தார். ஓ! முனிவர்களில் சிறந்தவரே! உங்களுடைய கருணையினால் அனைத்தும் நன்றாகவும் மங்களகரமாகவும் உள்ளன. இன்று தங்களின் தரிசனத்தால் என் வாழ்க்கை வெற்றியடைந்தது. என்னுடைய தவங்கள் பலனளித்தது. ஓ! தேவர்களுள் முனிவரே! தயவு செய்து தங்கள் வருகைக்கான காரணத்தைக் கூறுங்கள்.

மன்னரின் இந்த பணிவான வார்த்தைகளைக் கேட்ட நாரத முனிவர் கூறினார். ஓ! சிங்கம் போன்ற மன்னா! எனக்கு ஏற்பட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள். ஓ! மன்னர்களில் சிறந்தோனே. ஒரு முறை நான் பிரம்மலோகத்திலிருந்து யமராஜாவின் வசிப்பிடத்திற்குச் சென்றேன். யமராஜா என்னை மரியாதையுடன் வரவேற்று சரியான முறையில் என்னை வணங்கினார். நான் இருக்கையில் அமர்ந்த பிறகு, பக்தியும் உண்மையும் நிறைந்த யமராஜாவிற்கு என்னுடைய பிரார்த்தனைகளை சமர்ப்பித்தேன். பிறகு யமராஜாவின் சபையில் உன்னுடைய புண்ணியமிகு தந்தையைக் கண்டேன். ஒரு விரதத்தை கடைபிடிக்கத் தவறியதால் அவர் அங்கு செல்ல நேரிட்டது. ஓ! மன்னா! ஒரு செய்தியை உனக்கு தெரியப்படுத்துமாறு என்னிடம் வேண்டினார். அவர் கூறினார்.

மாஹிஸ்மதிபுரியின் மன்னனான இந்திரசேனா என்னுடைய புதல்வன். என்னுடைய முற்பிறவியில் செய்த சில பாவச் செயல்களால் இப்பொழுது நான் யமராஜாவின் வசிப்பிடத்தில் இருக்கிறேன். ஆகையால் என் புதல்வனை இந்திரா ஏகாதசியை அனுஷ்டித்து அதன் பலனை எனக்கு அர்ப்பணிக்குமாறு தெரியப்படுத்துங்கள். அப்பொழுது நான் தற்போதுள்ள நிலையிலிருந்து விடுபடுவேன்.

நாரத முனிவர் தொடர்ந்தார். ஓ! மன்னா! இது உன்னுடைய தந்தையின் வேண்டுகோள். உன் தந்தை நரகத்தில் இருந்து விடுபட்டு ஆன்மீக உலகிற்குச் செல்ல, நீ இந்திரா ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். பிறகு இந்திரசேன மன்னர் கூறினார்.

ஓ! தேவர்களுள் முனிவரே! தயவு செய்து இந்திரா ஏகாதசியை அனுஷ்டிக்கும் வழிமுறையை எனக்கு விளக்குங்கள். நாரதமுனிவர் பதிலளித்தார். ஏகாதசிக்கு முன் தினம் ஒருவர் விடியற்காலையில் குளித்து தன் முன்னோர்களின் திருப்திக்காக அவர்களுக்கு படைக்க வேண்டும். அந்த நாளில் ஒருவர் ஒரு வேளை மட்டும் உண்டு. வெறும் தரையில் உறங்க வேண்டும். ஏகாதசியன்று விடியற்காலையில் எழுந்து குளிக்க வேண்டும். பிறகு எந்த விதமான ஜட இன்பத்திலும் ஈடுபடமாட்டேன். என சபதம் மேற்கொண்டு முழு உண்ணா விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். அதுமட்டுமின்றி பகவானிடம் ஓ! தாமரைக் கண்ணனே! நான் உன்னிடம் தஞ்சமடைந்துள்ளேன் என பிரார்த்திக்க வேண்டும்.

பிறகு, நடுப்பகலில் சரியான வழிமுறைகளுக்கு உட்பட்டு சாலகிராம சிலாவின் முன் தன் முன்னோர்களுக்கு படையல் வைக்க வேண்டும். பிறகு அந்தணர்களுக்கு சிறப்பாக உணவளித்து, அவர்களுக்கு தட்சிணை கொடுத்து வணங்க வேண்டும். முடிவில் படைத்த மிகுதியை பசுக்களுக்கு கொடுக்க வேண்டும். இந்த ஏகாதசியன்று ஒருவர் பகவான் ரிஷிகேசரை, சந்தனம், மலர்கள், ஊதுபத்தி, விளக்கு மற்றும் உணவு வகைகளை சமர்ப்பித்து பக்தியுடன் வணங்க வேண்டும். இந்த ஏகாதசியன்று இரவு, ஒருவர், புனித நாமங்களை ஜெபித்துக் கொண்டு பகவானின் உருவம், குணங்கள் மற்றும் லீலைகள் பற்றி கேட்டுக் கொண்டும், நினைத்துக் கொண்டும் விழித்திருக்க வேண்டும்.

மறுநாள் பகவான் ஹரியை வணங்கி, அந்தணர்களுக்கு உணவளிக்க வேண்டும். பிறகு தன் சகோதரர்கள், பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் மற்றும் உறவினர்களுடன் அமைதியுடன் உணவு உட்கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும். ஓ! மன்னா! நான் கூறியவாறு நீ இந்த ஏகாதசியை அனுஷ்டித்தால், நிச்சயமாக உன் தந்தை விஷ்ணுவின் பரமத்தை அடைவார் இவ்வாறு பேசிய நாரத முனிவர் மறைந்தார். நாரத முனிவரின் அறிவுரைப்படி இந்திரசேனா மன்னர் தன் பிள்ளைகள் உதவியாளர்கள் மற்றும் பலருடன் இந்த ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டித்தார் அதன் பலனாக விண்ணில் இருந்து மலர்கள் தூவப்பட்டன. உடனே, இந்திரசேனா மன்னரின் தந்தை கருட வாகனத்தில் அமர்ந்து விஷ்ணுவின் பரமத்திற்கு சென்றார். பிறகு இந்திரசேன மன்னர் எந்த இடையூறுமின்றி தன் இராஜ்ஜியத்தை ஆண்டார். இறுதியில் இராஜ்ஜியத்தை தன் மகனிடம் ஒப்படைத்துவிட்டு ஆன்மீக உலகிற்குச் சென்றார். இந்த ஏகாதசியின் பெருமைகளை ஒருவர் படித்தாலோ (அ) கேட்டலோ அவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு இறுதியில் விஷ்ணுவின் பரமத்தை அடைவார்.

+9

4 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question