க்லைப்யம் மா ஸ்ம கம: பார்த
நைதத் த்வய் யுபபத்யதே
க்ஷுத்ரம் ஹ்ருதய தௌர்பல்யம்
த்யக்த்வோத்திஷ்ட பரந்தப
Synonyms:
க்லைப்யம் — உறுதியின்மை; மா ஸ்ம — இல்லை; கம: — அடைதல்; பார்த — பிருதாவின் மைந்தனே; ந — ஒருபோதும் இல்லை; ஏதத் — இதுபோல; த்வயி — உனக்கு; உபபத்யதே — பொருத்தமானதல்ல; க்ஷுத்ரம் — அற்பமான; ஹ்ருதய — இதயம்; தௌர்பல்யம் — பலவீனம்; த்யக்த்வா-விட்டுவிட்டு, உத்திஷ்ட-எழுவாய், பரம் — தப—எதிரிகளை தவிக்கச் செய்பவனே.
Translation:
பிருதாவின் மகனே, இது போன்ற இழிவான தளர்ச்சிக்கு இடம் கொடுக்காதே. இஃது உனக்கு பொறுத்தமானதல்ல. இதுபோன்ற அற்பமான இதய பலவீனத்தை விட்டுவிட்டு, எதிரிகளைத் தவிக்கச் செய்பவனே, எழுவாயாக.
Purport:
அர்ஜுனன் இங்கு பிருதாவின் மகனே என்று அழைக்கப்படுகிறான். பிருதா கிருஷ்ணரின் தந்தை வசுதேவரின் தங்கையாவார். எனவே, அர்ஜுனனுக்கும் கிருஷ்ணருக்கும் இரத்த சம்பந்தம் உள்ளது. சத்திரியனின் மகன் போர்புரிய மறுத்தால், அவன் பெயரளவு சத்திரியனே. பிராமணனின் மகன் கெட்ட வழியில் நடந்தால், அவன் பெயரளவு பிராமணனே. இத்தகு சத்திரியர்களும் பிராமணர்களும், தமது தந்தையரின் உபயோகமற்ற மக்களே; எனவே, அர்ஜுனன் சத்திரியரின் உபயோகமற்ற மகனாக ஆவதை கிருஷ்ணர் விரும்பவில்லை. அர்ஜுனன் கிருஷ்ணரின் மிக நெங்கிய நண்பன்; மேலும், கிருஷ்ணரே தேரில் நேரடியாக அவனுக்கு வழிகாட்டிக் கொண்டிருந்தார். இதுபோன்ற வாய்ப்புகளுக்கிடையே அர்ஜுனன் போரைத் துறந்தால், அச்செயல் அவனது புகழைக் கெடுத்துவிடும். எனவே, அர்ஜுனனிடம் உள்ள இத்தகைய மனப்பான்மை, அவனுக்குப் பொறுத்தமானதல்ல என்று கிருஷ்ணர் கூறுகின்றார். பெரு மதிப்பிற்குரிய பீஷ்மரிடமும் உறவினர்களிடமும் பெருந்தன்மை காட்ட வேண்டும் என்ற மனப்பான்மையில், தான் போரைத் துறப்பதாக அர்ஜுனன் வாதிடலாம். ஆனால் அத்தகைய பெருந்தன்மையினை இதய பலவீனமாக கிருஷ்ணர் கருதுகிறார். இத்தகைய பொய்யான பெருந்தன்மை எவ்வித அதிகாரிகளாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. எனவே, ஸ்ரீ கிருஷ்ணரின் வழிகாட்டுதலின்கீழ், இது போன்ற பெருந்தன்மை அல்லது பெயரளவிலான அகிம்சையை அர்ஜுனனைப் போன்ற நபர்கள் துறந்தாக வேண்டும்.