வேதேஷு யக்ஞேஷு தப:ஸு சைவ
தானேஷு யத் புண்ய-பலம் ப்ரதிஷ்டம்
அத்யேதி தத் ஸர்வம் இதம் விதித்வா
யோகீ பரம் ஸ்தானம் உபைதி சாத்யம்
Synonyms:
வேதேஷு — வேதங்களைப் படிப்பதால்; யக்ஞேஷு — யாகங்கள் புரிவதால்; தப:ஸு — பற்பல தவங்களை மேற்கொள்வதால்; ச — மேலும்; ஏவ — நிச்சயமாக; தானேஷு — தானம் செய்வதால்; யத் — எந்த; புண்ய-பலம் — புண்ணிய பலன்; ப்ரதிஷ்டம் — குறிப்பிடப்பட்டுள்ளதோ; அத்யேதி — தாண்டிவிடுகிறது; தத் ஸர்வம் — அவற்றை எல்லாம்; இதம் — இது; விதித்வா — அறிவதால்; யோகீ — பக்தன்; பரம் — பரம; ஸ்தானம் — இடத்தை; உபைதி — அடைகிறான்; ச — மேலும்; ஆத்யம் — ஆதி.
Translation:
பக்தித் தொண்டின் பாதையை ஏற்பவன், வேதங்களைப் படித்தல், யாகங்களைச் செய்தல், தவம் புரிதல், தானம் கொடுத்தல், கர்ம, ஞானப் பாதைகளை மேற்கொள்ளுதல் ஆகியவற்றால் அடையப்படும் பலன்களை இழப்பதில்லை. பக்தித் தொண்டை செய்வதன் மூலமாகவே இவையனைத்தையும் பெற்று, இறுதியில் நித்தியமான உன்னத இடத்தை அவன் அடைகிறான்.
Purport:
கிருஷ்ண உணர்வையும் பக்தித் தொண்டையும் முக்கியமாக விளக்கக்கூடிய, ஏழு மற்றும் எட்டாம் அத்தியாயங்களின் சுருக்கமே இப்பதம் ஒருவன் ஆன்மீக குருவின் பொறுப்பில் வாழும்போது, அவரது வழிகாட்டுதலின் கீழ் வேதங்களைக் கற்று, பற்பல தவங்களையும் விரதங்களையும் மேற்கொள்ள வேண்டும். ஒரு பிரம்மசாரி, ஆன்மீக குருவின் இல்லத்தில் சேவகனைப் போல வாழ்ந்து, வீடு வீடாக யாசித்து, கிடைப்பவை அனைத்தையும் ஆன்மீக குருவிடம் சமர்ப்பிக்க வேண்டும். குருவின் கட்டனைப்படியே அவன் உணவு உண்ண வேண்டும், ஏதேனும் ஒரு நாள் குரு அவனை உண்பதற்கு அழைக்காவிடில், அவன் விரதம் இருக்கிறான். பிரம்மசர்யத்தை அனுஷ்டிப்பதற்கான சில வைதிக நியமங்கள் இவை.
குறைந்தபட்சம் ஐந்து முதல் இருபது வயது வரை குருவிடம் வேதங்களைக் கற்றுக் கொள்ளும் மாணவன், குணத்தில் பக்குவமானவனாக ஆகிறான். வேதங்களைக் கற்பதென்பது சாய்வு நாற்காலியில் அமர்ந்து கற்பனை செய்பவர்களது பொழுதுபோக்கிற்காக அல்ல, மாறாக, குணங்களை வடிவமைப்பதற்காகவே. இப்பயிற்சிக்குப் பின்னர், குடும்ப வாழ்வினுள் நுழைவதற்கும் திருமணம் செய்து கொள்வதற்கும் ஒரு பிரம்மசாரி அனுமதிக்கப்படுகிறான். அவன் கிருஹஸ்தனாக இருக்கும்போது, ஞானத்தை விருத்தி செய்ய பற்பல யாகங்களைச் செய்ய வேண்டும். அதுமட்டுமின்றி நாடு, காலம் மற்றும் நபரைப் பொறுத்து தானமும் வழங்க வேண்டும். ஸத்வ குணத்தில் செய்யப்படும் தானம், ரஜோ குணத்தில் செய்யப்படும் தானம், தமோ குணத்தில் செய்யப்படும் தானம் ஆகியவை பகவத் கீதையில் விளக்கப்பட்டுள்ளன—அதன் அடிப்படையில் அவன் தானமளிக்க வேண்டும். பின்னர், குடும்ப வாழ்விலிருந்து ஓய்வு பெற்று, வானபிரஸ்தத்தை ஏற்று, வனங்களில் வாழ்தல், மரப்பட்டைகளை உடையாக அணிதல், சவரம் செய்யாது இருத்தல் போன்ற பற்பல தவங்களை மேற்கொள்ள வேண்டும். பிரம்மசர்ய, கிருஹஸ்த, வானபிரஸ்த, இறுதியாக சந்தியாஸ ஆஸ்ரமம் ஆகியவற்றின் விதிகளைப் பின்பற்றுவதன் மூலம், ஒருவன் வாழ்வின் பக்குவ நிலைக்கு ஏற்றம் பெறுகிறான். அவர்களில் சிலர் ஸ்வர்க லோகங்களுக்கு ஏற்றமடைகின்றனர்; அதைவிட முன்னேறியவர்கள், ஆன்மீக வானில் (பிரம்ம ஜோதியிலோ, வைகுண்ட உலகங்களிலோ, கிருஷ்ண லோகத்திலோ) முக்தியடைகின்றனர். இதுவே வேத இலக்கியங்களில் வழிவகுக்கப்பட்டுள்ள பாதையாகும்.
இருப்பினும், கிருஷ்ண உணர்வின் மகத்துவம் என்னவெனில், பக்தித் தொண்டில் ஈடுபடுவதன் மூலம், பற்பல ஆஸ்ரமங்களின் சடங்குகள் அனைத்தையும் ஒரே அடியில் கடந்து விடமுடியும்.
பகவத் கீதையின் இந்த அத்தியாயத்திலும் ஏழாம் அத்தியாயத்திலும் கிருஷ்ணர் கொடுத்துள்ள உபதேசங்களை அவசியம் புரிந்துகொள்ள வேண்டும் என்பதை இதம் விதித்வா எனும் சொற்கள் குறிப்பிடுகின்றன. இந்த அத்தியாயங்களை ஏட்டுக் கல்வியின் மூலமோ மனக் கற்பனையின் மூலமோ அறிந்து கொள்ள முயலாமல், தூய பக்தர்களின் சங்கத்தில் கேட்டறிய வேண்டும். ஏழாம் அத்தியாயம் முதல் பன்னிரண்டாம் அத்தியாயம் வரை கீதையின் ஸாரமாகும். முதலில் உள்ள ஆறு அத்தியாயங்களும் இறுதியில் உள்ள ஆறு அத்தியாயங்களும், நடுவில் உள்ள ஆறு அத்தியாயத்திற்கு மூடிகளாக உள்ளன; நடுவிலுள்ள இந்த அத்தியாயங்கள் பகவானால் சிறப்பாக பாதுகாக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் உறவால் பகவத் கீதையை (குறிப்பாக நடுவில் உள்ள ஆறு அத்தியாயங்களைப்) புரிந்து கொள்ளும் நல்லதிர்ஷடத்தை ஒருவன் பெற்றால், உடனடியாக அவனது வாழ்வு, தவங்கள், யாகங்கள், தானங்கள், தத்துவங்கள் என எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டு புகழத்தக்கதாக மாறிவிடும். ஏனெனில், இந்த செயல்களின் எல்லா பலன்களையும் ஒருவன் கிருஷ்ண உணர்வின் மூலம் எளிமையாக அடைந்துவிடுகிறான்.
பகவத் கீதையின் மீது சற்று நம்பிக்கை உடையவன், பகவத் கீதையை பக்தனிடமிருந்து மட்டுமே கேட்க வேண்டும். ஏனெனில், நான்காம் அத்தியாயத்தின் ஆரம்பத்தில் பகவத் கீதையை பக்தர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும், வேறு எவரும் பகவத் கீதையின் குறிக்கோளை பக்குவமாகப் புரிந்துகொள்ள முடியாது என்று தெளிவாக் கூற்பட்டுள்ளது. எனவே, பகவத் கீதையை கிருஷ்ண பக்தனிடமிருந்து கேட்க வேண்டும், மனக் கற்பனையாளரிடமிருந்து அல்ல. இது நம்பிக்கையின் சின்னமாகும். பக்தனைத் தேடுபவன், அதிர்ஷ்டவசமாக பக்தனது உறவைப் பெறும் போது பகவத் கீதையை உண்மையாகப் படிக்கவும் புரிந்துகொள்ளவும் தொடங்குகிறான். பக்தர்களின் சங்கத்தில் முன்னேற்றம் பெறும்போது, அவனது பக்தித் தொண்டு நிலைபெறுகிறது. இந்தத் தொண்டு கிருஷ்ணர், கிருஷ்ணரது நாமம், ரூபம், குணம், லீலை மற்றும் இதர விஷயங்களைப் பற்றிய சந்தேகங்களையும் நீக்கிவிடுகிறது. இந்த சந்தேகங்கள் பக்குவமாக நீக்கப்பட்ட பிறகு ஒருவன் தனது படிப்பில் தீவிரமடைகிறான். பின்னர், பகவத் கீதையைப் படிப்பது இன்பமயமாகி, எப்போதும் கிருஷ்ண உணர்விலிருக்கும் நிலையை அடைகிறான். முன்னேறிய நிலையில், அவன் கிருஷ்ணரின் மீதான பூரண அன்பினைப் பெறுகிறான். வாழ்வின் இந்த மிகவுயர்ந்த பக்குவநிலை, ஆன்மீக வானிலுள்ள கிருஷ்ணரின் இருப்பிடமான கோலோக விருந்தாவனத்திற்கு பக்தனைக் கொண்டு செல்கிறது, அங்கே பக்தன் நித்தியமாக என்றும் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.