பந்துர் ஆத்மாத்மனஸ் தஸ்ய
யேனாத்மைவாத்மனா ஜித:
அனாத்மனஸ் து ஷத்ருத்வே
வர்தேதாத்மைவ ஷத்ரு-வத்
Synonyms:
பந்து: — நண்பன்; ஆத்மா — மனம்; ஆத்மன: — ஜீவனின்; தஸ்ய — அவனது; யேன — எதனால்; ஆத்மா — மனம்; ஏவ — நிச்சயமாக; ஆத்மனா — ஜீவனால்; ஜித: — வெல்லப்பட்ட; அனாத்மன: — மனதைக் கட்டுப்படுத்தத் தவறியவனின்; து — ஆனால்; ஷத்ருத்வே — விரோதத்தினால்; வர்தேத — அமைகின்றது; ஆத்மா ஏவ — அந்த மனமே; ஷத்ருவத் — விரோதியாக.
Translation:
மனதை வென்றவனுக்கு மனமே சிறந்த நண்பனாகும்; ஆனால் அவ்வாறு செய்யத் தவறியவனுக்கோ, அதுவே மிகப்பெரிய விரோதியாகும்.
Purport:
மனதை நண்பனாகச் செயல்படும்படி (மனிதனின் குறிக்கோளை நிறைவேற்றிக் கொள்ள) கட்டுப்படுத்துவதே அஷ்டாங்க யோகப் பயிற்சியின் நோக்கமாகும். மனம் கட்டுப்படுத்தப்படவில்லையெனில், வெறுமே வெளிக் காட்சியாகச் செய்யப்படும் யோகம் பலனற்ற கால விரயமே. மனதை அடக்க முடியாதவன் எப்போதும் மிகப்பெரிய விரோதியுடன் வாழ்கிறான். இதனால் அவனது வாழ்வும் நோக்கமும் பாழாகின்றன. உயர்ந்தவரின் கட்டளைகளைச் செயலாற்றுவதே ஜீவனின் ஆதார நிலையாகும். மனம் வெல்லப்படாத எதிரியாக இருக்கும்வரை, காமம், கோபம், பேராசை, மோகம் போன்றவற்றின் கட்டளைகளுக்கு ஒருவன் கீழ்படிய வேண்டியதுதான். ஆனால் மனம் வெல்லப்பட்டு விட்டபின், அனைவரது இதயத்திலும் பரமாத்மாவாக வீற்றுள்ள முழுமுதற் கடவுளின் ஆணைகளை நிறைவேற்ற அவன் தானாகவே முன்வருவான். உண்மையான யோகப் பயிற்சி, இதயத்தினுள் உள்ள பரமாத்மாவைச் சந்தித்து, அவரது வழிகாட்டுதலை பின்பற்றுவதையும் உள்ளடக்கியதாகும். கிருஷ்ண உணர்வை நேரடியாக மேற்கொள்பவனுக்கு, பகவானின் கட்டளைகளிடம் முழுமையாக சரணடைவது என்னும் தன்மை தானாக வந்தடைகிறது.