Saturday, December 21

பகவத் கீதை – 18.66

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸர்வ தர்மான் பரித்யஜ்ய
மாம் ஏகம் ஷரணம் வ்ரஜ
அஹம் த்வாம் ஸர்வ – பாபேப் யோ
மோக்ஷயிஷ்யாமி மாஷச :

ஸர்வ தர்மான்- எல்லாவித தர்மங்களையும் ; பரித்யஜ்ய – துறந்து ; மாம் என்னிடம் ; ஏகம்- மட்டுமே ; ஷரணம் –சரணாகதி ; வ்ரஜ – அடைவாய் ; அஹம் – நான் ; த்வாம்- உன்னை ; ஸர்வ– எல்லா ; பாபேப் ய : – பாவ விளைவு களிலிருந்தும் ; மோக்ஷயிஷ்யாமி – விடுவிக்கின்றேன் ; மா – வேண்டாம் ; ஷுச : — கவலைப்பட

எல்லாவிதமான தர்மங்களையும் துறந்து , என்னிடம் மட்டுமே சரணடைவாயாக. உன்னை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் நான் விடுவிக்கின்றேன் , பயப்படாதே .

பொருளுரை : பரபிரம்மன் , பரமாத்மா , வர்ணாஷ்ரமம் , சந்நியாசம் , பற்றின்மை , மனதையும் புலன்களையும் கட்டுப்படுத்துதல் , தியானம் போன்ற பலதரப்பட்ட அறிவையும் தர்மத்தையும் பகவான் விவரித்துள்ளார் . பலதரப்பட்ட தர்மங்களை அவர் பல்வேறு வழிகளில் விளக்கினார் . தற்போது , பகவத் கீதையின் சுருக்கமாக , அர்ஜுனன் தனக்கு விளக்கப்பட்ட அனைத்து முறைகளையும் துறந்து . தன்னிடம் சரணடைந்தால் போதும் என்று கிருஷ்ணர் கூறுகின்றார் . அந்த சரணாகதி அவனை எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் காக்கும் ; ஏனெனில் , இறைவன் தாமே அவனைப் பாதுகாப்பதாக சத்தியம் செய்கின்றார்.

எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுதலை பெற்றவன் மட்டுமே கிருஷ்ணரை வழிபடக் கூடும் என்று ஏழாம் அத்தியாயத்தில் கூறப்பட்டது . எனவே , எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபடாமல் , தான் சரணாகதி முறையை மேற்கொள்ள முடியாது என்று ஒருவன் எண்ணலாம் . அத்தகு ஐயங்களைத் தெளிவாக்கும் பொருட்டு , எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் ஒருவன் விடுபடாவிடினும் ஸ்ரீ கிருஷ்ணரிடம் சரணடைதல் என்னும் எளிமையான முறையினால் அவன் தானாகவே விடுபட்டுவிடுகிறான் என்று இங்கே கூறப்பட்டுள்ளது . பாவ விளைவுகளிலிருந்து தன்னை விடுதலை செய்து கொள்வதற்கு கடினமான முயற்சிகள் அவசியமில்லை . எல்லா உயிர்வாழிகளின் உன்னத இரட்சகர் கிருஷ்ணரே என்பதை ஒருவன் தயக்கமின்றி ஏற்றுக்கொள்ள வேண்டும் . அன்புடனும் நம்பிக்கையுடனும் அவரிடம் சரணடைய வேண்டும் .

கிருஷ்ணரிடம் சரணடையும் முறை ஹரி பக்தி விலாசத்தில் ( 11.676) விவரிக்கப்பட்டுள்ளது :

அனுகூல்யஸ்ய ஸங்கல்ப : ப்ராதிகூல்யஸ்ய வர்ஜனம்
ரஷிஷ்யதீதி விஷ் , வாஸோ கோப்த்ருக்வே வாணம் ததா
ஆத்ம நிக்ஷேய கார்பண்யே ஷட் விதா , ஷரணாகதி :

சரணாகதி என்றால் , பகவானுடைய பக்தித் தொண்டிற்கு இறுதியில் தன்னை வழிநடத்தக்கூடிய மதக் கொள்கைகளை ஒருவன் ஏற்றுக்கொள்ள வேண்டும் . சமூகத்தில் தன்னுடைய நிலைக்கு ஏற்ற குறிப்பிட்ட கடமையை ஒருவன் நிறைவேற்றலாம் . இருப்பினும் , அவன் தனது கடமையைச் செய்து கிருஷ்ண உணர்வின் நிலைக்கு வரமாட்டான் என்றால் , அவனது செயல்கள் அனைத்தும் வீணாகிவிடுகின்றன . கிருஷ்ண உணர்வின் பக்குவநிலைக்குக் ஒருவனைக் கொண்டுச் செல்லாத எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும் எல்லாச் சூழ்நிலைகளிலும் எல்லா கஷ்டங்களிலிருந்தும் கிருஷ்ணர் தன்னைப் பாதுகாப்பார் என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும் . ஆத்மாவை உடலில் தக்க வைப்பதைப் பற்றி யோசிக்க வேண்டிய அவசியமே இல்லை . கிருஷ்ணர் அதனைப் பார்த்துக் கொள்வார் . தன்னை எப்போதும் ஆதரவற்றவனாகவும் தனது வாழ்வின் முன்னேற்றத்திற்கான ஒரே ஆதரவு கிருஷ்ணரே என்றும் அவன் நினைக்க வேண்டும் . பூரண கிருஷ்ண உணர்வுடன் பகவானின் பக்தித் தொண்டில் ஒருவன் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட உடனேயே , அவன் ஜட இயற்கையின் எல்லா களங்கங்களிலிருந்தும் விடுபடுகின்றான் . ஞானத்தை விருத்தி செய்தல் , யோக முறையின் படி தியானம் செய்தல் போன்ற பற்பல தூய்மைப்படுத்தும் வழிகளும் தர்மங்களும் இருக்கின்றன என்றாலும் , கிருஷ்ணரிடம் சரணடைபவன் பல்வேறு முறைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இல்லை . கிருஷ்ணரிடம் எளிமையாக சரணடைதல் , அவனை தேவையற்ற கால விரயத்திலிருந்து காக்கும் . இதன் மூலம் , அவன் உடனடியாக எல்லா முன்னேற்றத்தையும் அடைந்து , எல்லா பாவங்களி விருந்தும் விடுபடலாம்.

கிருஷ்ணரின் அழகான உருவத்தால் ஒருவன் கவரப்பட வேண்டும் . அவர் எல்லாரையும் கவரக்கூடியவர் என்பதால் , அவருக்கு கிருஷ்ணர் என்று பெயர் . கிருஷ்ணருடைய அழகான , வலிமை நிறைந்த , சக்தி வாய்ந்த தரிசனத்தால் கவரப்படுபவன் மிகவும் அதிர்ஷ்டசாலி . பல்வேறு விதமான ஆன்மீகவாதிகள் இருக்கின்றனர் – அவர்களில் சிலர் அருவ பிரம்மனின் தரிசனத்தில் பற்றுக் கொண்டவர்கள் , வேறு சிலர் பரமாத்மாவினால் கவரப்படுகின்றனர் ; ஆனால் பரம புருஷ பகவானின் உருவத்தினால் கவரப்படுபவர்கள் , அதிலும் சிறப்பாக , பரம புருஷ பகவான் கிருஷ்ணரிடம் கவரப்படுபவர்கள் , ஆன்மீகவாதிகளில் மிகமிகப் பக்குவமானவர்கள் . வேறு விதமாகக் கூறினால் , பூரண உணர்வுடன் கிருஷ்ணருக்கு பக்தித் தொண்டு செய்வதே ஞானத்தின் மிகமிக இரகசியமான பகுதியும் , முழு பகவத் கீதையின் சாராம்சமும் ஆகும் . கர்ம யோகிகள் , தத்துவவாதிகள் , அஷ்டாங்க யோகிகள் , பக்தர்கள் ஆகிய அனைவரும் ஆன்மீகவாதிகள் என்று அழைக்கப் படுகின்றனர் , ஆனால் இவர்களில் மிகமிகச் சிறந்தவன் தூய பக்தனே . ” பயப்படாதே . தயங்காதே , கவலைப்படாதே ‘ ‘ என்று பொருள் தரும் மாஷுச – : என்னும் குறிப்பிட்ட சொற்கள் மிகவும் முக்கியமானவை . எல்லா விதமான மத நெறிகளையும் துறந்து கிருஷ்ணரிடம் மட்டும் சரணடைவது எவ்வாறு என்று ஒருவன் குழம்பலாம் . ஆனால் அத்தகு கவலைக்கு அவசியமே இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question