Saturday, July 13

பகவத் கீதை – 7.14

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

தைவீ ஹ்யேஷா குண—மயீ
மம மாயா துரத்யயா
மாம் ஏவ யே ப்ரபத்யந்தே
மாயாம் ஏதாம் தரந்தி தே

Synonyms:

தைவீ — தெய்வீக; ஹி — நிச்சயமாக; ஏஷ — இந்த; குண-மயீ — ஜட இயற்கையின் முக்குணங்களாலான; மம — எனது; மாயா — சக்தி; துரத்யயா — வெல்வது கடினமானது; மாம் — என்னிடம்; ஏவ — நிச்சயமாக; யே — எவர்கள்; ப்ரபத்யந்தே — சரணடைந்தவர்; மாயாம்-ஏதாம் — இந்த மயக்க சக்தி; தரந்தி — வெல்கின்றனர்; தே — அவர்கள்.

Translation:
ஜட இயற்கையின் முக்குணங்களாலான எனது இந்த தெய்வீக சக்தி வெல்லுவதற்கரியது. ஆனால் என்னிடம் சரணடைந்தோர் இதனை எளிதில் கடக்கலாம்.

Purport:

புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் எண்ணற்ற சக்திகளை உடையவர்; அவை அனைத்தும் தெய்வீகமானவை. உயிர்வாழிகளும் அத்தகைய சக்திகளில் ஒரு பாகமே என்பதால், அவர்களும் தெய்வீகமானவர்களே; இருப்பினும், ஜட சக்தியுடன் கொண்ட தொடர்பினால் அவர்களின் உண்மையான உயர்சக்தி மறைக்கப்பட்டுள்ளது. ஜட சக்தியினால் இவ்வாறு கவரப்பட்டுள்ளவன், அதன் ஆதிக்கத்தினை வெல்வது சாத்தியமல்ல. பரம புருஷ பகவானிடமிருந்து தோன்றுவதால், ஜட சக்தி, ஆன்மீக சக்தி ஆகிய இரண்டுமே நித்தியமானதாகும், இது முன்னரே கூறப்பட்டது. ஜீவாத்மாக்கள் பகவானின் நித்தியமான உயர்ந்த இயற்கையைச் சார்ந்தவர்கள். ஆனால் தாழ்ந்த இயற்கையினால் (ஜடத்தினால்) களங்கமடைந்துள்ளனர்; ஆதலால், அவர்களது மயக்கமும் நித்தியமானதாகும். எனவே, கட்டுண்ட ஆத்மா, நித்ய- பத்த (நித்தியமாக கட்டுண்டவன்) என்று அழைக்கப்படுகிறான். “அவன் ஜட இயற்கையினுள் கட்டுண்ட நாள் இதுதான்” என்று எவராலும் அவனது வரலாற்றினைக் கண்டறிய முடியாது. ஆகவே ஜட இயற்கை ஒரு கீழ்நிலை சக்தியாக இருந்தாலும், அது ஜீவாத்மாவினால் வெல்ல முடியாத உன்னதவிருப்பத்தின் அடிப்படையில் செயல்படுவதால், அதன் பிணைப்பிலிருந்து ஓர் உயிர்வாழி விடுபடுவதென்பது மிகவும் கடினமானதாகும். ஜட சக்தி, அதன் தெய்வீக சம்பந்தத்தினாலும் தெய்வீக விருப்பத்தின்படி செயல்படுவதாலும், தாழ்ந்த சக்தி என்றபோதிலும் இங்கே தெய்வீக சக்தியாக வர்ணிக்கப்பட்டுள்ளது. கீழ்நிலை சக்தி என்றபோதிலும் தெய்வீக விருப்பத்தின் அடிப்படையில் செயல்படுவதால், ஜட இயற்கையானது இப்பிரபஞ்சத்தின் ஆக்கத்திலும் அழிவிலும் அற்புதமான முறையில் இயங்குகின்றது. வேதங்கள் இதனைப் பின்வருமாறு உறுதி செய்கின்றன்: மாயாம் து ப்ரக்ருதிம் வித்யான் மாயினம் து மஹேஷ்வரம். “மாயை பொய்யானதோ, தற்காலிகமானதோ, இதன் பின்னணியில் மகேஸ்வரன் எனப்படும் பரம அதிகாரியும் பரம மந்திரவாதியுமான முழுமுதற் கடவுள் உள்ளார்.” (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 4.10)

குண எனும் சொல்லின் மற்றொரு பொருள் கயிறு; கட்டுண்ட ஆத்மா மாயையின் கயிறுகளால் இறுக்கமாகக் கட்டப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். கைகளும் கால்களும் கட்டப்பட்ட மனிதன் தன்னைத் தானே விடுவித்துக்கொள்ள முடியாது—கட்டுப்படாத நபர் ஒருவரால் அவன் உதவப்பட வேண்டும். கட்டுண்டவன் மற்றொரு கட்டுண்ட நபருக்கு உதவ முடியாது என்பதால், காப்பாற்றுபவன் முக்தி பெற்றவனாக இருக்க வேண்டும். எனவே பகவான் கிருஷ்ணர், அல்லது அவரது அங்கீகாரம் பெற்ற பிரதிநிதியான ஆன்மீக குரு மட்டுமே கட்டுண்ட ஆத்மாவினை விடுவிக்க முடியும். அத்தகு உயர் உதவியின்றி, பௌதிக இயற்கையின் பிணைப்புகளிலிருந்து எவரும் விடுதலை பெற முடியாது. கிருஷ்ண உணர்வு எனப்படும் பக்தித் தொண்டு, அத்தகு விடுதலையை அடைவதில் ஒருவனுக்கு உதவ முடியும். இந்த மயக்க சக்தியின் எஜமானர் என்ற முறையில், பகவான் கிருஷ்ணர், கட்டுண்ட ஆத்மாவினை விடுவிக்கும்படி தனது வெல்லவியலாத சக்தியிடம் கட்டளையிட முடியும். சரணடைந்த ஆத்மாவின் மீதான தனது காரணமற்ற கருணையாலும், தனது அன்புமிக்க மகனான ஜீவாத்மாவின் மீதான இயற்கையான பாசத்தாலும் இந்த விடுதலைக்கு அவர் கட்டளையிடுகிறார். எனவே ஜட இயற்கையின் கடுமையான பிணைப்பிலிருந்து விடுபடுவதற்கான ஒரே வழி, இறைவனின் தாமரைத் திருவடிகளில் சரணடைவதே.

மாம்- ஏவ எனும் சொற்களும் மிக முக்கியமானவை. மாம் எனும் சொல் கிருஷ்ணரை (விஷ்ணுவை) குறிக்கிறதே தவிர, பிரம்மா அல்லது சிவனை குறிப்பதல்ல. பிரம்மாவும் சிவனும் மிகவுயர்ந்த நபர்கள் என்றபோதிலும், ஏறக்குறைய விஷ்ணுவின் நிலையில் இருப்பவர்கள் என்றபோதிலும், ரஜோ, தமோ குணங்களின் அவதாரங்களான இவர்களால் கட்டுண்ட ஆத்மாவை மாயையின் பிணைப்பிலிருந்து விடுவிக்க முடியாது. வேறு விதமாகக் கூறினால், பிரம்மாவும் சிவனும்கூட மாயையின் தாக்கத்தில் உள்ளவர்களே. விஷ்ணு மட்டுமே மாயையின் எஜமானர்; எனவே, அவர் மட்டுமே கட்டுண்ட ஆத்மாவினை விடுவிக்க முடியும். தம் ஏவ விதித்வா, “கிருஷ்ணரை அறிந்தால் மட்டுமே முக்தி சாத்தியம்” எனும் வேத வாக்கியமும் (ஷ்வேதாஷ்வதர உபநிஷத் 3.8) இதனை உறுதி செய்கின்றது. விஷ்ணுவின் கருணையினால் மட்டுமே முக்தி சாத்தியமாகும் என்பதை சிவபெருமானும் உறுதி செய்கிறார். சிவபெருமான் கூறுகிறார். முக்தி-ப்ரதாதா ஸர்வேஷாம் விஷ்ணுர்-ஏவ ந ஸம்ஷய: —“எல்லோருக்கும் முக்தியளிக்கக் கூடியவர் விஷ்ணுவே என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.”

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question