Wednesday, October 16

பகவத் கீதை – 6.32

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஆத்மௌபம்யேன ஸர்வத்ர
ஸமம் பஷ்யதி யோ (அ)ர்ஜுன
ஸுகம் வா யதி வா து:கம்
ஸ யோகீ பரமோ மத:

Synonyms:

ஆத்ம — ஆத்மா; ஔபம்யேன — ஒப்பீட்டால்; ஸர்வத்ர — எங்கும்; ஸமம் — சமத்துவம்; பஷ்யதி — காண்கிறான்; ய: — எவனொருவன்; அர்ஜுனா — அர்ஜுனனே; ஸுகம் — சுகம்; வா — அல்லது; யதி — ஆனால்; வா — அல்லது; து:கம் — துக்கம்; ஸ: — அத்தகு; யோகீ — யோகி; பரம: — பரம; மத: — கருதப்படுகிறான்.

Translation:

அர்ஜுனா, எவனொருவன் எல்லா உயிர்களுடைய சுக துக்கங்களை தன்னுடன் ஒப்பிட்டுக் காண்கிறானோ, அவன் பரம யோகியாகக் கருதப்படுகிறான்.

Purport:

கிருஷ்ண உணர்வில் இருப்பவனே பரம யோகியாவான்; அவன் தனது சுய அனுபவத்தால் எல்லாருடைய சுக துக்கததையும் அறிவான். உயிர்வாழி துன்பப்படுவதற்கான காரணம், இறைவனுடனான தனது உறவை மறந்திருப்பதே. மேலும், மகிழ்ச்சிக்கான காரணம், கிருஷ்ணரே மனிதனின் எல்லாச் செயல்களுக்கும் உன்னத அனுபவிப்பாளர், கிருஷ்ணரே எல்லா நாடுகளுக்கும் கிரகங்களுக்கும் உரிமையாளர், கிருஷ்ணரே எல்லா உயிர்வாழிகளின் உற்ற நண்பன் என்பனவற்றை அறிவதே. உயிர்வாழி கிருஷ்ணருடனான தனது உறவை மறந்ததன் காரணத்தால், ஜட இயற்கையின் குணங்களால் கட்டுப்படுத்தப்பட்டு, மூவகைத் துன்பங்களுக்கு உட்படுத்தப்படுகிறான் என்பதை பக்குவமான யோகி அறிவான். மேலும், தான் மகிழ்ச்சியாக இருப்பதால் கிருஷ்ண உணர்வினன், கிருஷ்ணரைப் பற்றிய ஞானத்தை எல்லா இடங்களிலும் விநியோகிக்க முயற்சி செய்கிறான். பக்குவமான யோகி கிருஷ்ண உணர்வை அடைவதன் முக்கியத்துவத்தை பிரச்சாரம் செய்ய முயல்வதால், அவனே உலகிலேயே மிகச்சிறந்த வள்ளலும் பகவானின் மிக நெருங்கிய தொண்டனும் ஆவான். ந ச தஸ்மான் மனுஷ்யேஷு கஷ்சின் மே ப்ரிய-க்ருத்தம: (பகவத் கீதை 18.69). அதாவது, இறைவனின் பக்தன் மற்ற உயிர்வாழிகளின் நலனை எப்போதும் விரும்புவதால், அவன் எல்லாருக்கும் உற்ற நண்பனாக உள்ளான். அவனே சிறந்த யோகியாவான்; ஏனெனில், அவன் தனது சுய இலாபத்திற்காக யோகத்தில் பக்குவமடைய விரும்பாமல், பிறருக்காகவும் முயல்கிறான். அவன் சக உயிர்வாழிகளிடம் பொறாமை கொள்வதில்லை. தனது சுய முன்னேற்றத்தை மட்டும் விரும்பும் யோகிக்கும், இறைவனின் தூய பக்தனுக்கும் உள்ள வேற்றுமை இதுவே. பக்குவமான தியானத்திற்காக தனியிடத்திற்குச் செல்லும் யோகி, ஒவ்வொரு மனிதனையும் கிருஷ்ண உணர்வினை நோக்கித் திருப்புவதற்கு தன்னால் இயன்றவரை முயலும் பக்தனைப் போன்று பக்குவம் அடைந்தவனல்ல.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question