Thursday, September 19

பகவத் கீதை – 2.25

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அவ்யக்தோ (அ)யம் அசிந்த்யோ (அ)யம்
அவிகார்யோ (அ)யம் உச்யதே
தஸ்மாத் ஏவம் விதித்வைனம்
நானுஷோசிதும் அர்ஹஸி

Synonyms:
அவ்யக்த: — பார்வைக்கு எட்டாதவன்; அயம் — இந்த ஆத்மா; அசிந்தய: — சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; அயம் — இந்த அத்மா; அவிகார்ய: — மாற்றமில்லாதவன்; அயம் — இந்த ஆத்மா; உச்யதே — கூறப்படுகின்றது; தஸ்மாத் — எனவே; ஏவம் — இதுபோல; விதித்வா — அதை நன்கறிந்து; ஏனம் — இந்த ஆத்மா; ந — இல்லை; அனுஷோசிதும் — கவலைப்பட; அர்ஹஸி — நீ தக்கவன்.

Translation:
ஆத்மா பார்வைக்கு புலப்படாதவன், சிந்தனைக்கு அப்பாற்பட்டவன்; மேலும், மாற்ற முடியாதவன் என்று கூறப்படுகிறது. இதனை நன்கறிந்து, நீ உடலுக்காக வருத்தப்படக் கூடாது.

Purport:
முன்பே கூறியபடி, ஆத்மாவின் அளவு நமது பௌதிகக் கணிதத்தின்படி மிகச் சிறியதாகும், மிகவும் சக்தி வாய்ந்த நுண்பொருள் நோக்கியாலும் அவனைக் காண முடியாது; எனவே, அவன் பார்வைக்கு புலப்படாதவன் என்று அழைக்கப்பட்டுள்ளான். ஆத்மாவின் இருப்பைப் பொறுத்தவரை, ஸ்ருதி எனப்படும் வேத அறிவின் வாயிலாக அன்றி, பரிசோதனை மூலமாக எவராலும் நிரூபிக்க முடியாது. ஆத்மா இருப்பது அனுபவத்தால் உணரப்பட்டாலும்கூட, அதனைப் புரிந்துகொள்வதற்கு வேறு வழி ஏதும் இல்லாததால், வேத உண்மையை நாம் ஏற்றுக் கொண்டாக வேண்டும். உயர் அதிகாரிகள் கூறியதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு, நாம் பல்வேறு விஷயங்களை ஏற்றுக் கொண்டுள்ளோம். தாயின் அதிகாரத்தின் அடிப்படையில், தந்தை இருப்பதை எவராலும் மறுக்க முடியாது. தாயின் அத்தாட்சியைத் தவிர, தந்தை யார் என்பதைத் தெரிந்து கொள்ள வேறு வழியேதும் இல்லை. அதுபோல, ஆத்மாவைப் புரிந்து கொள்வதற்கு வேதங்களைக் கற்பதைத் தவிர வேறு வழி கிடையாது. வேறுவிதமாகக் கூறினால், ஆத்மா, மனிதனின் ஆராய்ச்சி அறிவிற்கு எட்டாததாகும். அஃது உணர்வுடையதாகும்—இந்த உணர்வும் வேத வாக்கே, நாம் இதை ஏற்றாக வேண்டும். உடல் மாற்றமடைவதைப் போல, ஆத்மா, மாற்றமடைவது இல்லை. நித்தியமாக மாற்றமில்லாத ஆத்மா, எல்லையற்ற பரமாத்மாவுடன ஒப்பிடுகையில், என்றுமே அணுவாகத் திகழ்கிறான். பரமாத்மா எல்லையற்றவர், ஜீவாத்மாவோ எல்லைக்கு உட்பட்டவன் (மிகச் சிறியவன்). எனவே, மிகச்சிறிய மாற்றமில்லாத ஜீவாத்மா, எல்லையற்ற ஆத்மாவுடன் (பரம புருஷ பகவானுடன்) ஒருபோதும் சமமாகிவிட முடியாது. ஆத்மாவைப் பற்றிய கருத்துக்களை ஆணித்தரமாக உறுதிப்படுத்துவதற்காக, இக்கொள்கை, வேதங்களில் வெவ்வேறு விதத்தில் மீண்டும் மீண்டும் கூறப்பட்டுள்ளது. ஒரு விஷயத்தைத் தவறின்றி தெளிவாகப் புரிந்துகொள்வதற்காக, அதனை மீண்டும் மீண்டும் உரைப்பது அவசியமாகிறது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question