Thursday, March 28

பகவத் கீதை – 2.22

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய
நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)பராணி
ததா ஷரீராணி விஹாய ஜீர்ணான்-
யன்யானி ஸம்யாதி நவானி தேஹி

Synonyms:
வாஸாம்ஸி — உடைகள்; ஜீர்ணானி — பழைய நைந்த; யதா — அதுபோல; விஹாய — புறக்கணித்து; நவானி — புதிய ஆடைகள்; க்ருஹணாதி — ஏற்பது; நர:-மனிதன், — அபராணி—மற்றவை; ததா — அதுபோலவே; ஷரீராணி — உடல்கள்; விஹாய — விட்டு; ஜீர்ணானி — பழைய, பலனற்ற; அன்யானி — வேறு; ஸம்யாதி — ஏற்றுக்கொள்கிறான்; நவானி — புதியவற்றை; தேஹி — உடல் பெற்றவன்.

Translation:
பழைய ஆடைகளைப் புறக்கணித்து, புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே, பழைய உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கிறது.

Purport:
தனிப்பட்ட அணு ஆத்மாவின் உடல் மாற்றம் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். இதயத்திலிருந்து வரும் சக்தியின் உற்பத்தி ஸ்தானத்தை விளக்க இயலாதபோதிலும், ஆத்மா இருப்பதை நம்பாதவர்களான நவீன விஞ்ஞானிகளும்கூட, குழந்தைப் பருவத்திலிருந்து மாணவப் பருவத்திற்கும், மாணவப் பருவத்திலிருந்து இளமைக்கும், இளமையிலிருந்து முதுமைக்கும் உடல் தொடர்ந்து மாறுவதை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. முதுமைக்குப் பின், இந்த மாற்றம் வேறு ஓர் உடலுக்கு மாற்றப்படுகிறது. இது முன்னரே வேறொரு பதத்தில் (2.13) விளக்கப்பட்டுள்ளது.

தனிப்பட்ட அணு ஆத்மா, மற்றொரு உடலுக்கு மாற்றமடைவது பராமாத்மாவின் கருணையாலேயே சாத்தியமாகிறது. ஒரு நண்பன் மற்றொரு நண்பனின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதைப் போல, பரமாத்மா அணு ஆத்மாவின் விருப்பங்களைப் பூர்த்தி செய்கிறார். முண்டக உபநிஷத், ஷ்வேதாஷ்வதர உபநிஷத் போன்ற வேத நூல்கள், ஆத்மாவையும் பரமாத்மாவையும், ஒரே மரத்தில் அமர்ந்திருக்கும் இரு தோழப் பறவைகளுக்கு ஒப்பிடுகின்றன. அப்பறவைகளில் ஒன்று (தனி அணு ஆத்மா) மரத்தின் கனிகளை உண்கின்றது. மற்றதோ (கிருஷ்ணர்) தனது தோழனை வெறுமனை நோக்கிக் கொண்டிருக்கிறது. குணத்தால் ஒரே மாதிரியான இவ்விரண்டு பறவைகளில், ஒரு பறவை ஜடவுடல் எனும் மரத்தின் பழங்களால் கவரப்பட்டுள்ளது; மற்ற பறவையோ தனது நண்பனின் செயல்களை வெறுமே நோக்கிக் கொண்டுள்ளது. கிருஷ்ணர் சாட்சிப் பறவை, அர்ஜுனன் உண்ணும் பறவை. அவர்கள் நண்பர்களே என்ற போதிலும், அவர்களில் ஒருவர் எஜமானரும் மற்றவர் சேவகனுமாவர். இந்த உறவினை அணு ஆத்மா மறந்துவிடுவதே, மரம் விட்டு மரம் அல்லது உடல் விட்டு உடல் என்று அவன் தனது நிலையை மாற்றிக்கொள்வதற்குக் காரணமாகிறது. ஜீவ பறவை, ஜடவுடலெனும் மரத்தில் மிகக் கடினமாகப் போராடிக் கொண்டுள்ளான். எனினும், அறிவுரைகளைப் பெறும் நோக்கத்துடன் தானே முன்வந்து கிருஷ்ணரிடம் சரணடைந்த அர்ஜுனைப் போல, தொண்டனாக ஜீவ பறவை தனக்கு அருகிலுள்ள பறவையை உன்னத ஆன்மீக குருவாக ஏற்கும் போது, உடனடியாக எல்லாக் கவலைகளிலிருந்தும் அவன் விடுபடுகிறான். முண்டக உபநிஷத் (3.1.2), ஷ்வேதாஷ்வதர உபநிஷத் (4.7) இரண்டுமே இதை உறுதிப்படுத்துகின்றன.

ஸமானே வ்ருக்ஷே புருஷோ நிமக்னோ
(அ) நீஷயா ஷோசதி முஹ்யமான:
ஜுஷ்டம் யதா பஷ்யத்-யன்யம் ஈஷம்
அஸ்ய மஹிமானம் இதி வீத-ஷோக:

“இரு பறவைகளும் ஒரே மரத்தில் இருப்பினும், உண்ணும் பறவை, மரத்தின் பழங்களை அனுபவிப்பான் என்பதால், கவலையாலும் ஏக்கத்தாலும் பீடிக்கப்பட்டுள்ளான். ஆயினும், பகவானான தன் நண்பனை நோக்கி, ஏதாவது ஒரு வகையில் தனது முகத்தைத் திருப்பி, அவரது புகழைப் புரிந்து கொண்டால், துக்கத்திலுள்ள இப்பறவை உடனேயே எல்லாக் கவலைகளிலிருந்தும் விடுபடுகின்றது.” தனது நித்திய நண்பனான கிருஷ்ணரை நோக்கி இப்போது முகம் திருப்பியுள்ள அர்ஜுனன், அவரிடமிருந்து பகவத் கீதையை புரிந்து கொண்டு வருகிறான். இப்படியாக கிருஷ்ணரிடமிருந்து கேட்பதன் மூலம், அவரது உன்னதப் பெருமைகளை அறிந்து கவலையிலிருந்து விடுபட முடியும்.

வயதான பாட்டனார் மற்றும் ஆசிரியரின் உடல் மாற்றத்திற்காகக் கவலைப்பட வேண்டாமென அர்ஜுனன் இங்கு பகவானால் அறிவுறுத்தப்படுகிறான். அவர்களது உடல்கள் அறப்போரில் கொல்லப்படுவதால், பற்பல பிறவிகளில் செய்த செயல்களின் விளைவுகளிலிருந்து அவர்கள் உடனேயே தூய்மை பெறுவர்; எனவே, அர்ஜுனன் மகிழ்ச்சியடையவே வேண்டும். யாகத்திலோ, அறப் பேரிலோ தனது வாழ்வை இழப்பவர், உடல் சார்ந்த விளைவுகளிலிருந்து விடுபட்டு உடனேயே உயர் வாழ்விற்கு ஏற்றம் பெறுகின்றனர். எனவே, அர்ஜுனனின் கவலைக்குக் காரணமே இல்லை.

+2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question