Thursday, September 19

பகவத் கீதை – 13.16

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻


பஹிர்-அந்தஷ் ச பூதானாம்
அசரம் சரம் ஏவ ச
ஸூக்ஷ்மத்வாத் தத் அவிக்ஞேயம்
தூர-ஸ்தம் சாந்திகே ச தத்


வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்
பஹி:—வெளியே; அந்த:—உள்ளே; ச—மேலும்; பூதானாம்—எல்லா உயிர்வாழிகளின்; அசரம்—அசையாத; சரம்—அசைகின்ற; ஏவ—கூட; ச—மேலும்; ஸூக்ஷ்மத்வாத்—சூட்சுமமாக இருப்பதால்; தத்—அந்த; அவிக்ஞேயம்—அறிய முடியாத; தூர-ஸ்தம்—வெகு தூரத்தில்; ச—மேலும்; அந்திகே—அருகில்; ச—மேலும்; தத்—அந்த.

மொழிபெயர்ப்பு
பரம உண்மை, எல்லா உயிர்வாழிகளின் உள்ளும் புறமும் உள்ளார், அசைவன மற்றும் அசையாதவற்றிலும் உள்ளார். அவர் சூட்சுமமானவர் என்பதால், ஜடப் புலன்களின் வலிமையால் காண்பதற்கோ அறிவதற்கோ அப்பாற்பட்டவர். மிக மிகத் தொலைவில் இருப்பினும், அவர் அனைவரின் அருகிலும் உள்ளார்.

பொருளுரை
ஒவ்வொரு உயிர்வாழியின் உள்ளும் புறமும் பரம புருஷரான நாராயணர் வசிப்பதாக வேத இலக்கியத்திலிருந்து நாம் புரிந்து கொள்கிறோம். ஆன்மீக உலகங்கள், ஜட உலகங்கள் என இரண்டிலும் அவர் உள்ளார். அவர் வெகு தொலைவில் இருந்தாலும், நமக்கு அருகிலும் இருக்கின்றார். இவை வேத இலக்கியத்தின் கூற்றுக்கள். ஆஸீனோ தூரம் வ்ரஜதி ஷயானோ யாதி ஸர்வத: (கட உபநிஷத் 1.2.21). மேலும் அவர் எப்போதும் தெய்வீக ஆனந்தத்தில் ஆழ்ந்திருப்பதால், எவ்வாறு அவர் தமது முழு வைபவங்களை அனுபவிக்கின்றார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள இயலாது. இந்த ஜடப் புலன்களைக் கொண்டு அவரைக் காணவோ, புரிந்து கொள்ளவோ நம்மால் முடியாது. எனவே, நமது பௌதிக மனமோ, புலன்களோ அவரைப் புரிந்துகொள்வதில் உதவாது என்று வேத மொழியில் கூறப்பட்டுள்ளது. ஆனால், எவனொருவன் தனது மனதையும் புலன்களையும் பக்தித் தொண்டின் மூலம் கிருஷ்ண உணர்வைப் பயிற்சி செய்து தூய்மைப் படுத்திவிட்டானோ, அவனால் அவரை இடைவிடாமல் காண முடியும். இறைவனிடம் பிரேமையை விருத்தி செய்து கொண்ட பக்தன், அவரை இடையறாது காண இயலும் என்பது பிரம்ம சம்ஹிதையிலும் உறுதி செய்யப்பட்டள்ளது. பக்தித் தொண்டினால் மட்டுமே அவரைக் காணவும் புரிந்து கொள்ளவும் முடியும் என்பது பகவத் கீதையிலும் (11.54) உறுதி செய்யப்பட்டுளள்து. பக்த்யா த்வனன்யயா ஷக்ய:.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question