பிராமணர்களுக்கு இடையில் மிகவும் புகழ்பெற்ற முனிவரான இவர்,
பிரம்மரிஷி வஸிஷ்டதேவர் என்று பிரசித்தமானவராவார். இவர் இராமாயணமும்
மகாபாரதமும் நிகழ்ந்த காலங்களில் பிரசித்தி பெற்றவராவார். பரம புருஷராகிய ஸ்ரீ
ராமரின் முடிசூட்டு விழவை அவர் நடத்தி வைத்தார். குருட்சேத்திரப் போர்க்களத்தில்
அவரும்கூட இருந்தார். அவரால் மேல் லோகங்களுக்கும், கீழ் லோகங்களுக்கும் செல்ல
முடிந்தது. மேலும் அவரது பெயர் ஹிரண்யகசிபுவின் சரித்திரத்துடனும் சம்பந்தப்பட்டுள்ளது.
அவருக்கும் விஸ்வாமித்திரருக்கும் கடுமையான மோதல் ஏற்பட்டது. ஆசைகளை
நிறைவேற்றக்கூடியதான வஸிஷ்டரின் காமதேனு எனும் பசுவை விஸ்வாமித்திரர் அடைய
விரும்பினார். தமது காமதேனுவைக் கொடுக்க மறுத்ததால், வஸிஷ்ட முனிவரின் நூறு
மகன்களையும் விஸ்வாமித்திரர் கொன்றார். பக்குவமடைந்த பிராமணரான அவர்
விஸ்வாமித்திரரின் கோபமூட்டும் சொற்களையெல்லாம் பொறுத்துக்கொண்டார்.
விஸ்வாமித்திரரின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள இயலாத அவர் ஒருமுறை
தற்கொலை செய்து கொள்ளவும் முயன்றார். ஆனால் அவரது முயற்சிகள் அனைத்தும்
தோல்வியடைந்தன. ஒரு மலையிலிருந்து அவர் கிழே குதித்தார். ஆனால் அவர் விழுந்த
இடத்திலுள்ள பாறைகள் பஞ்சுக் குவியலாக மாறி அவர் காப்பாற்றப்பட்டார். கடலில் குதித்த
அவரை அலைகள் கரையில் கொண்டுவந்து சோத்துவிட்டன. அவர் நதியில் குதித்தபொழுது,
அதுவும் அவரை கரையில் கொண்டு வந்து சேர்த்துவிட்டது. இவ்வாறாக அவரது தற்கொலை
முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்தன. மேலும் அவர் சப்த ரிஷிகளில் ஒருவரும்,
புகழ்பெற்ற நட்சத்திரமாகிய அருந்ததியின் கணவருமாவார்.