மோஹினி ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி சூர்ய புராணத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை மகாராஜா யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் கேட்டார். ஓ ஜனார்த்தனா ! மோஹினி ஏகாதசி கடை பிடிப்பது எப்படி? மேலும் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் பலன் என்ன? இவற்றைப்பற்றி எனக்கு விரிவாகக் கூறுங்கள். பகவான் கிருஷ்ணர் பதிலளித்தார். ஓ தர்மத்தின் மகனே! ஒருமுறை வசிஷ்டமுனிவர் பகவான் இராமச்சந்திரனிடம் கூறிய கதையைப் பற்றி கவனமாகக் கேள்.
நீண்ட காலத்திற்கு முன் ஒருமுறை பகவான் இராமச்சந்திரர் வசிஷ்ட முனிவரிடம் கேட்டார். ஓ மரியாதைக்குரிய முனிவரே! நான் ஜனகராஜரின் மகளான சீதையை விட்டு பிரிந்திருப்பதால் மிகவும் மனவருத்தத்துடன் இருக்கிறேன். தயவு செய்து ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் மனவருத்தத்தையும் அழிக்கக்கூடிய ஒரு விரதத்தைப் பற்றி எனக்கு கூறுங்கள்.
இராமச்சந்திரரின் ஆன்மீக குருவான பெரும் முனிவர் வசிஷ்டர் கூறினார். எனதன்பு இராமா, உன்னுடைய புத்திக்கூர்மை நம்பிக்கையுடன் கலந்திருக்கின்றனது. உன்னுடைய கேள்வி எல்லா மனித சமுதாயத்திற்கும் பயனுள்ளது. உன்னுடைய மங்களகரமான திவ்ய நாமங்களை ஜெபிப்பதாலேயே ஒருவர் தூய்மையடைந்து எல்லா மங்களத்தை அடையத் தகுதி பெறுகிறார். இருந்தும் சாதாரண மக்களின் நலனுக்காக நான் ஒரு சிறந்த விரதத்தைப்பற்றி உனக்கு கூறுகிறேன். மோஹினி ஏகாதசி , இது மிகவும் மங்களகரமானது, இந்த ஏகாதசியை கடைபிடித்தால் ஒருவருடைய பாவ விளைவுகள் ஜட துன்பங்கள் மற்றும் மாயையின் பிடியில் இருந்து விடுபடுகின்றனர். இப்பொழுது நான் விளக்கும் இந்த ஏகாதசியின் மிக உன்னதமான தலைப்பைப் பற்றி கவனமாகக் கேள்.
புண்ணிய தீர்த்தமான சரஸ்வதி நதிக்கரையில் அழகிய நகரமான பத்ராவதியை த்யூதிமான் என்ற அரசனால் ஆளப்பட்டு வந்தது. ஓ பகவான் ராமா! இந்த அரசன் சந்திரவம்சத்தில் பிறந்தவன் மற்றும் அவன் பணிவுடன் நேர்மையும் உடையவன். அங்கு சிறந்த மற்றும் செல்வகரமான பகவான் விஷ்ணுவின் பக்தர் தனபாலா என்பவரும் அந்த நகரத்தில் வாழ்ந்து வந்தனர். அவர் தொழில் தர்மத்தால் ஒரு வைசியர் சாதாரண மக்களின் நலனுக்காக இந்த பக்தர் அதிக தர்மசாலைகள், பள்ளிகள், பகவான் விஷ்ணுவின் கோயில்கள், இலவச மருத்துவமனை, அகண்ட சாலைகள், மற்றும் சந்தைகளை கட்டினார். அவர் நீரும் உணவும் அளிக்க ஏற்பாடுகள் செய்தார். அவர் குளிர்ந்த குடிநீருக்காக கிணறுகளையும், தூய குடிநீருக்காக குளங்களையும் தோண்டினார். அவர் பூக்களுக்கும், பழங்களுக்கும் தோட்டம் அமைத்தார். இதுபோன்று அவர் அவருடைய செல்வத்தை மக்களின் நலனுக்காக சரியான முறையில் பயன்படுத்தி அவருடைய பெயரின் உண்மையான அர்த்தத்தை நிலைநாட்டினார். இந்த பகவான் விஷ்ணுவின் உன்னதமான பக்தர் எப்பொழுதும் அமைதியாய் மற்றவர்களுக்கு உதவி செய்து பகவான் விஷ்ணுவின் சேவையில் ஈடுபட்ட இவருக்கு , ஐந்து புதல்வர்கள் இருந்தனர். அவருடைய மகன் த்ருஷ்டபுத்தி மிகவும் பாவப்பட்டவன். அவர் மிகவும் தாழ்ந்து தீயவர்களுடன் பழகி பெண்ணுடன் அக்ரம சம்மந்தம் வைத்திருந்தான். அவன் சூதாடுவதிலும், மது அருந்துவதிலும், சந்தோஷப்பட்டான். மேலும் அவன் மற்ற உயிர்களை கொல்வதிலும், துன்புறத்துவதிலும் மகிழ்ச்சி பெற்றான். இதுபோன்று அவன் மிக பாவகரமான செயல்களில் ஈடுபட்டான். விரைவில் அவன் மிக உன்னத தந்தையின் குரூரமான மகனாக மாறி குடும்பத்திற்கு அவப்பேராக விளங்கினான். அவன் ஒரு போதும் தேவர்களுக்கும். விருந்தாளிகளுக்கும் மூதாதையர்களுக்கும் பிராமணர்களுக்கும் மரியாதை செலுத்தியதில்லை. அவன் எப்போதும் பாவ காரியங்களை செய்ய நினைத்துக் கொண்டு மிக தாழ்ந்த வாழ்வை வாழ்ந்துவந்தான். இந்த பாவப்பட்ட த்ருஷ்டபுத்தி தன் தந்தையின் செல்வங்களை தேவையற்ற செயல்களில் செலவழித்தான். அவன் எப்போதும் பாவப்பட்ட உணவை உட்கொண்டு எப்போதும் மது அருந்துவதில் ஈடுபட்டான். ஒருநாள் தன் மகன் ஒரு விபச்சாரியின் மேல் கையை போட்டுக் கொண்டு பொது இடத்தில் வெட்கமில்லாமல் போய்க் கொண்டிருந்ததை பார்த்து தனபாலன் மிகவும் துன்பப்பட்டார். அதே நாள் அவனுடைய மகனை வீட்டை விட்டு வெளியேற்றினார். அதன் பிறகு த்ருஷ்டபுத்தி தன் தந்தை, தாய், சகோதரர்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் பாசத்தை இழந்தான். அவன் சாதிச் சமுதாயத்திலும். உன்னத சமுதாயத்திலும் தாழ்த்தப்பட்டு அனைவரும் வெறுப்பவனாய் ஆனான்.
தன் தந்தையின் வீட்டிலிருந்த வெளியேற்றப்பட்ட பிறகு த்ருஷ்டபுத்தி தன் சொந்த ஆடைகளையும் ஆபரணங்களையும் விற்று தன் பாவ காரியங்களை தொடர்ந்தான். விரைவில் அதுவும் முடிவுக்கு வந்தது. சரியான உணவு உண்ணாததால் அவன் உடல் மெலிந்து சோர்ந்து காணப்பட்டான். அவன் ஏழையானதை அறிந்து அவனது நெருங்கிய நண்பர்கள் அவனை விட்டு விலகி அவனை பலவாறு பழித்தனர். இப்போது த்ருஷ்டபுத்தி மிகவும் வெறுப்படைந்தான். அவனிடம் உணவோ பணமோ இல்லை. அவன் பசியால் மிகவும் சோர்ந்து போனான். அதனால் அவன் தனக்குத்தானே நான் இப்போது என்ன செய்வது? எங்கு செல்வது? எதனால் நான் பிழைக்க முடியும்? என்று கேட்டுக் கொண்டான்.
இவ்வாறு கூறிக்கொண்ட பிறகு அவன் தான் பிழைப்பதற்கு திருடுவதைத் தவிர வேறு வழியில்லை என நினைத்தான். திருடவேண்டும் என்ற எண்ணத்துடன் அவன் ஊர்முழுவதும் திரிந்தான். சில சமயங்களில் அரசரின் காவலாளிகள் அவனை கைது செய்வார்கள். அவருடைய அப்பாவின் செல்வாக்கால் அவனை விடுவித்தனர். இவ்வாறாக பலமுறை கைது செய்யப்பட்டு விடுதலை அடைந்தான். அவன் மறுமுனை ஒரு பெரிய திருட்டிற்காக கைது செய்யப்பட்டான். அவன் அரசரிடம் அழைத்துச் செல்லப்பட்டு கடும் தண்டனைக்கு ஆளானான். அரசர் கூறினார். ஓ பாவப்பட்ட மூடனே, இனிமே நீ உன் பாவகாரியங்களால் இந்த இராஜ்ஜியத்தில் இருக்க முடியாது. நான் இப்போது உன்னை விடுவிக்கிறேன். ஆனால் நீ இந்த இராஜ்ஜியத்தை விட்டு வேறு எங்காவது செல் என்றார்.
த்ருஷ்டபுத்தி மறுமுறை தண்டனைக்குள்ளாவதற்கு பயந்து இராஜ்ஜியத்தை விட்டு வெளியேறினான். அவன் நெடுந்தூரம் சென்று ஓர்அடர்ந்த காட்டிற்குள் சென்று விட்டான். அந்த காட்டிலும் அவன் பசியாலும் தாகத்தாலும் வாடினான். அதன்பின் அவன் மிருகங்களையும் பறவைகளையும் கொன்று அவற்றின் மாமிசத்தை அப்படியே உண்டான். இவ்வாறாக அவன் காட்டில் பலவருடங்கள் ஒரு வேடனைப் போல் கையில் வில்லும், அம்பும் வைத்துக்கொண்டு, மிருகங்களைக் கொன்று பாவ காரியங்களில் ஈடுபட்டு வந்தான். த்ருஷ்டபுத்தி எப்போதும் புரியாதவனாய் பேசப்பட்டு வாழ்ந்து வந்தான். ஆனால் ஒரு நாள் தன்னுடைய முந்தைய புண்ணியச் செயல்களால் அவன் பெரும் முனிவரான கவுந்தின்ய முனிவரின் ஆசிரமத்திற்கு காட்டை சுற்றிப் பார்க்கும் போது வந்தான்.
முனிவர் கவுந்தின்யர் கங்கையில் நீராடிவிட்டு ஆசிரமத்திற்கு வந்து கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மனவருத்தத்துடன் பாவங்களுடன் இருந்த திருஷ்டபுத்தி முனிவரின் ஆடையில் இருந்து வந்த ஒரு துளி நீரை தொட்டான். உடனே த்ருஷ்டபுத்தி தன் எல்லா பாவ விளைவுகளிலிருந்தும் விடுபட்டான். அவன் கைகட்டி மரியாதையுடன் கவுந்தியை முனிவரிடம் கேட்டான். ஓ சிறந்த பிராமணரே! நான் மிகவும் பாவப்பட்ட மனிதன் நான் செய்யாத பாவமே கிடையாது. இப்போது என்னைப் போன்ற மனிதர்கள் எளிமையாக கடைப்பிடிக்கக்கூடிய ஒரு மிகச் சிறந்த விரதத்தைப் பற்றி கூறுங்கள். நான் கணக்கில்லாத பாவச் செயல்கள் செய்திருப்பதால் என் வீடு, செல்வம், உறவினர்கள் மற்றும் நண்பர்களை இழந்துள்ளேன். நான் அறியாமைக்கடலில் மூழ்கியுள்ளேன் என்றான்.
த்ருஷ்டபுத்தியின் இந்த வாக்கியங்களைக் கேட்டபிறகு மற்றவரின் துன்பத்தை பார்த்து பெருமுனிவர் கவுந்தின்யர் துன்பமடைந்தார். நான் எனக்கு மிகக்குறைந்த நேரத்தில் உனது பாவங்களை அழிக்கக்கூடிய ஒருமுறையைக் கூறுகிறேன். இதை கவனமாகக் கேள். மோஹினி ஏகாதசி பெருமலை அளவுள்ள பல பிறவிகளின் பாவங்களைக்கூட அழிக்க கூடியது. அதனால் நீ நம்பிக்கையுடன் இந்த ஏகாதசியை அனுஷ்டிக்க வேண்டும். பெரும் முனிவரிடமிருந்து இந்த வார்த்தைகளைக் கேட்ட த்ருஷ்டபுத்தி மிகவும் மகிழ்ச்சியடைந்து முனிவர் கூறிய விதிமுறைகள்படி ஏகாதசியை கடைபிடித்தான். ஓ அரசர்களில் சிறந்தோனே! இந்த மோஹினி ஏகாதசியை அனுஷ்டித்தால் மிகவும் பாவப்பட்ட த்ருஷ்ட புத்தி எல்லா பாவ விளைவுகளிலிருந்து விடுபட்டு, ஒரு திவ்ய உடலைப் பெற்று கருடரின் மேல் விஷ்ணுவின் லோகத்திற்கு சென்றான். ஓ இராமச்சந்திரா, இந்த விரதம், ஒருவரை எல்லாவிதமான மாயையிலிருந்தும், அறியாமை என்னும் இருளிலிருந்தும் விடுவிக்கின்றது. புண்ய தீர்த்தங்களில் நீராடுவதாலும், தானமளிப்பதாலும், யாகங்கள் செய்வதாலும் வரும் புண்ணியம் இந்த ஏகாதசியை அனுஷ்டிப்பதால் வரும் பலனிற்கு ஈடாகாது.
இவ்விரத மஹாத்மிய கதையை கேட்பவரும், படிப்பவரும், ஒராயிரம் கோ (பசு) தானம் செய்த புண்ணியத்திற்கு இணையான புண்ணியத்தை பெறுவர்.