Friday, September 20

Sri Gauranga Mahaprabhu gave darshan to Sri Ramanujacharya – Tamil / ஸ்ரீ வைகுண்டபுரம், ஸ்ரீ கௌரசுந்தரர் இராமனுஜருக்கு காட்சியளித்தல்.

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

எல்லாபுகழும் கௌரங்கர் மற்றும் பஞ்சதத்துவங்களுக்கே! எல்லாப்புகழும் ஸ்ரீசைதன்ய மகாபிரபுவின் வாசஸ்தலமான நவத்வீபதாமத்திற்கே!

வைகுண்ட புரத்திற்கு வந்தடைந்த நித்யானந்த பிரபு, ஸ்ரீ ஜீவரை மென்மையான புன்னகையுடன் நோக்கினார். “நவத்வீபத்தின் எட்டு இதழ்களின் ஒருபகுதி இந்த வைகுண்டபுரமாகும். சந்தேகத்திற்கிடமின்றி கேட்பாயாக ஸ்ரீமந்நாராயணரின் வாசஸ்தலமான வைகுண்டம் ஆன்மீக வானத்தில்  வ்ரஜா நதிக்கு அப்பால் அமைந்துள்ளது. ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளா தேவியாகிய தமது அந்தரங்க சக்திகளால் சேவை சாதிக்கப்படும் பகவான் நாராயணரின் இருப்பிடத்தில் மாயாவால் ஒருபோதும் நுழையவே முடியாது. இந்த ஆன்மீக தாமத்தின் பரப்பிரம்மனிலிருந்து வெளிவரும் ஜோதியே பிரம்மஜோதியாக பிரகாசிக்கின்றது. பௌதீக நோக்கில் காணும் மக்களுக்கு பௌதீக உலகாகவே காட்சியளிக்கும். ஆனால் ஒருமுறை நாரதர் தனது ஆன்மீக பார்வையுடன் நாராயணரை நோக்கிய போது இத்தாமத்தில் அவர் கௌர சுந்தரராக இருப்பதை தெளிவாக கண்டார். இதைக் கண்ணுற்றபின் மிகச்சிறந்த முனிவர்களும் இங்கு சில காலங்கள் தங்கி இன்புற்றனர்.

இங்கேயும் ஒரு சுவாரஸ்யமான லீலை உண்டு, ஒரு முறை பூரிக்கு வந்தடைந்த இராமானுஜாச்சாரியர் பகவானை பலவாறாக துதித்து மகிழ்வித்தார். மகிழ்வுற்ற பிரபு ஜெகன்னாதர் அவர்முன் காட்சியளித்து கூறினார். “விரைவில் நான் ஜெகன்னாத மிஸ்ராவின் இல்லத்தில் அவதரிக்கப் போவதை நவத்வீபதாமத்திற்கு சென்று நீ தரிசிப்பாயாக. எனக்கு மிகவும் பிரியமான நவத்வீப தாமத்தின் ஒரு நுனியில் முழுமையான ஆன்மீக வானமே குடிகொண்டுள்ளது. எனது நித்திய சேவகர்களையும், உயர்ந்த பக்தர்களையும், நவத்வீபத்தில் உன்னால் காண இயலும். உன்னுடன் வந்திருக்கும் உனது தாஸ்யரஸத்தில் உள்ள மாணவர்கள் நீ கிளம்பும் போது அவர்கள் இங்கேயே தங்கி இருக்கட்டும். நவத்வீபத்தை தரிசிக்காத ஜீவன்களின் பிறப்பு உபயோகமற்றதே. நவத்வீபத்தின் ஒரு பகுதியிலேயே ஸ்ரீ ரங்கக்ஷேத்திரம், ஸ்ரீ வேங்கடம் (திருப்பதி) மற்றும் யாதவாச்சலம் ஆகிய அனைத்தும் அடங்கியுள்ளன. கேசவனின் மைந்தனே நவத்வீபத்திற்கு சென்று கௌரங்கரின் திருஉருவை தரிசிப்பாயாக பக்தியை பரப்புவதற்காக இப்பூமியில் அவதரித்த உனது பிறப்பானது கௌரங்கரின் கருணையால் முழுமையாக்கப்படும். அதன்பிறகு நவத்வீபத்திலிருந்து கிளம்பி கூர்மஸ்தானத்தை அடைந்து அங்கு உனது சீடர்களுடன் இணைந்து கொள்வாயாக. கூப்பிய கரங்களுடன் ஜெகன்னாதரை பணிந்த இராமனுஜர் தமது கோரிக்கையை முன்வைத்தார். நீங்கள் குறிப்பிட்ட இந்நிகழ்ச்சிகளில் கௌரசந்திரரை நீங்கள் முக்கியமாக குறிப்பிடுகிறீர்கள். ஆனால் உண்மையால் இவர் யார்? என்பதை நானறியேன்”

இராமனுஜரிடம் கருணை கொண்ட பிரபு ஜெகன்னாதர் மீண்டும் பதிலுரைத்தார். “கோலோகத்தின் நாயகனான கிருஷ்ணரை அனைவருமே அறிவர். நாராயணரின் விலாஸ் – மூர்த்தியான ஸ்ரீ கிருஷ்ணரே பரமபுருஷராவார். அவர் விருந்தாவனத்தில் நித்யவாசம் கொள்கிறார். அந்த கிருஷ்ணரே தன்னை முழுமையாக கௌரஹரியின் வடிவில் வெளிப்படுத்துகிறார். மேலும் அவர் உறையும் விருந்தாவனம் தான் முழுமையாக நவத்வீபமாக வெளிப்படுகிறது. பிரபஞ்சக்திலேயே மிகவும் புனிதமான தாமமாகிய நவத்வீபத்தில் நான் பிரபு கௌரங்கராக நித்திய வாசம் புரிகின்றேன். எனது கருணையினாலே இத்தாமமானது பூமண்டலத்திற்குள் வந்துள்ளது. ஆகையினால் மாயையின் வாசமின்றி தனித்து நிற்கிறது. இதுவே வேதங்களின் தீர்ப்பாகும். ஒரு வேளை நவத்வீபமானது பௌதீக உலகின் ஒரு பகுதி இடமேயாகும் என்று நீ தவறாக கருதினால் அக்கணத்திலிருந்தே உனது பக்திக் கொடியானது நாளுக்கு நாள் வாடத் தொடங்கி விடுகிறது. எனது விருப்பம் மற்றும் நினைத்தற்கரிய சக்தியால் நான் இந்த ஜட உலகினுள் இந்த அற்புதமான புனித தாமத்தை புகுத்தியுள்ளேன். வேத ஞானமின்றி ஒருவரால் உன்னத உண்மையை உணர முடியாது. இப்பரம உண்மையானது மற்ற அனைத்து சக்திகளையும் கட்டுப்படுத்துகிறது. பக்தர்களால் மட்டுமே இவ்வுண்மையை எனது கருணையால் உணர இயலும், இதை கேட்ட அமைதியே உருவான இராமனுஜர் கௌரங்கரின் பால் அன்பால் ஈர்க்கப்பட்டார். அவர் கூறினார். “பிரபு உமது லீலைகள் உண்மையில் திகைக்க வைக்கின்றது. வேதங்களால் உமது வளங்களை புரிந்து கொள்ள முடியாது. எதனால் கௌரங்கலீலையானது வேதங்களால் தெளிவாக விளக்க முடியவில்லை? நான் ஸ்ருதியையும், புராணங்களையும் விரிவாக ஆராய்ந்த போது கௌர தத்துவத்தைப் பற்றி சில மறைமுகக் குறிப்புகளையேப் பெற்றேன். உம்மால் கொடுக்கப்பட்ட குறிப்புகளை கேட்டபின்னர் எனது சந்தேகம் முற்றிலும் விலகிவிட்டது. மேலும் இனிமைதவழும் கௌரங்க லீலையானது என் இதயத்தில் உதித்து பரவத் தொடங்கி விட்டது. நீங்கள் எனக்கு கட்டளையிட்டால் நவத்வீபத்திற்கு சென்று வந்தபிறகு மூவுலகிற்கும் சென்று நான் கௌர லீலாவை பிரச்சாரம் செய்வேன். நான் மக்களிடம் வேதங்களில் மறைந்துள்ள உண்மையை அத்தாட்சியுடன் வெளிப்படுத்துவேன் மேலும் கௌரங்களுக்கு புரியும் பக்தித் தொண்டின் மகிமைகளை பிரபஞ்சம் முழுவதும் நிலை நாட்டுவேன். தயைகூர்ந்து எனக்கு வழிகாட்டுங்கள் பிரபு”.

இராமனுஜரின் ஆர்வத்தை கண்ட ஜகன்னாதர் கூறினார். “இராமனுஜா, இந்த இரகசியங்களை நீ தற்போது பரப்ப வேண்டும். கௌரங்க லீலைகளை மிகவும் இரகசியமாக நீ பாதுகாக்க வேண்டும் கௌரங்கர் தமது லீலைகளை முடித்துக் கொண்ட பின்னர் தானாகவே பொது மக்களால் அடையப்படும். ஆனால் தற்போது தாஸ்யரஸத்தை பிரச்சாரம் செய்து கொண்டு அதேசமயம் உனது இதயத்தில் கௌரங்கரை தொடர்ந்து பூஜித்துக் கொண்டிருப்பாயாக!”

பிரபுவின் அறிவுரையைப் பெற்ற இராமானுஜர் நவத்வீபத்தின் மீதான தனது காதலை இரகசியமாக வைத்துப் போற்றினார். எனவே கௌரங்கரின் லீலைகளானது நிகழ்வதற்கு முன்பே வெளிப்படுத்தாது இரகசியமாக பாதுகாக்கப்பட்டது. அதன்பிறகு பகவான் நாராயணர் இங்கிருந்து வைகுண்ட புரத்திற்கு வழிகாட்டி அழைத்துச் சென்று ராமானுஜர் மீது கருணை பொழிந்து ஸ்ரீதேவி, பூதேவி மற்றும் நீளாதேவியால் சேவை சாதிக்கப்படும் தனது திவ்ய வடிவை காட்சி கொடுத்தருளினார். தன்னை பாக்கியவானாக கருதிய இராமானுஜர் தனது பூஜிக்கத்தக்க பகவானின் தரிசனத்தை பெற்று மகிழ்ந்து கொண்டிருக்கும் போதே பிரபுவானவர் ஜெகன்னாத மிஸ்ரரின் மைந்தனான கௌரசுந்தரின் அழகிய வடிவை வெளிப்படுத்துவதையும் கண்டார். பேரொளிமிக்க திருஉருவை கண்ட இராமனுஜர் மயக்கமுற்றார். அதன்பிறகு கௌரங்கர் தனது தாமரைப்பாதங்களை இராமலுஜரின் தலையில் வைத்தவுடன் தெய்வீக உணர்வை பெற்ற அவர் தமது பிரார்த்தனைகளை பிரார்த்திக்கத் தொடங்கினார். நான் கெளரங்கரின் நிஜ லீலைகளை இப்பூமியில் கண்டிப்பாக காணவேண்டும், நான் நவத்வீபத்தை விட்டு விலகப்போவதில்லை” என்றார். உடனே கௌரங்கர், கேசவனின் மைந்தனே! உமது விருப்பம் நிறைவேற்றப்படும். எதிர்காலத்தில் நதியா லீலைகள் அரங்கேறும் போது நீயும் இங்கு மீண்டும் பிறப்பெடுப்பாய்” என்று ஆசிர்வதித்தார்.

அதன்பின்னர் கௌரங்கர் மறைய இராமானுஜர் மிகவும் மகிழ்வுடன் பயணத்தை தொடர்ந்தர். சில நாட்களுக்குப் பிறகு அவர் கூர்ம-சேக்ஷத்திரத்தை அடைந்து தனது சீடர்களுடன் அவ்விடத்தை தரிசித்தார். தனது வாழ்நாள் முழுமையும் அவர் தாஸ்யரஸத்தை தென் இந்தியாவில் பிரச்சாரம் செய்த போதிலும் உள்ளுக்குள் அவர் கௌர லீலாவையே ருசித்துக் கொண்டிருந்தார். அதன்பிறகு கௌரங்கரின் கருணையால் அவர் நவத்வீபத்தில் ஸ்ரீஅனந்தர் என்னும் பக்தராக பிறப்பெடுத்தார். அவர் வல்லபாச்சார்யரின் இல்லத்திற்கு சென்ற போது லக்ஷ்மிப்ரியாவுடனான கௌரங்கரின் திருமண வைபவத்தை கண்டு மகிழ்ந்தார்.

(வல்லபாச்சார்யர் அல்லது வல்லப மிஸ்ரா என்பவரே லக்ஷ்மிப்பியாவின் தந்தையாவார்.)

அனந்தரின் இல்லத்தில் எப்போதும் நாராயணணின் பக்தர்கள் கூடியிருப்பதை பாருங்கள். இதிலிருந்து தெரிவது அரசர்களின் காலகட்டத்தில் நாராயண வழிபாடு மிகவும் பிரசித்தி பெற்றுள்ளது என்று உணரமுடிகிறது.

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question