Thursday, April 18

எல்லோருக்கும் வேலை கிடைக்க வேண்டும்

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

நெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தமது சீடர்களில் ஒருவருடன் 1974ஆம் ஆண்டு, சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவா நகரத்தில் பரிமாறிக் கொண்ட கருத்துகள்

சீடர்: சமீபத்தில் இந்தியாவிலுள்ள ஓர் அரசியல்வாதி, தமது சொற்பொழிவில், இந்திய மக்களில் எட்டு சதவிகிதத்தினர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும். விளைநிலங்களில் தொழில் நுட்பத்தை அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றும். கோதுமையைக் கையால் அறுவடை செய்வதற்குப் பதிலாக அறுவடை இயந்திரத்தையும் காளைகளைப் பூட்டி ஏர் உழுவதற்குப் பதிலாக டிராக்டர்களையும் பயன்படுத்த வேண்டுமென்றும் கூறியுள்ளார்.

ஸ்ரீல பிரபுபாதர்: இந்தியாவிலுள்ள பலர் ஏற்கனவே வேலையின்றி இருப்பதால், அதிகமான இயந்திரங்களைப் புகுத்துவது நல்ல திட்டமல்ல. நூறு மனிதர்களால் செய்யப்படும் ஒரு வேலையை இயந்திரத்தைக் கொண்டு ஒரு மனிதன் செய்துவிடமுடியும். ஆனால் மீதமுள்ளமனிதர்கள் வேலையின்றி இருக்க வேண்டுமா? ஒரு மனிதனை ஈடுபடுத்துவதற்குப் பதிலாக நூறு மனிதர்களை ஏன் ஈடுபடுத்தக் கூடாது?

இங்கு மேற்கத்திய நாடுகளில்கூட வேலையின்மை அதிகமாக உள்ளது. அனைத்தும் இயந்திரத்தால் செய்யப்படுவதே இதற்கு காரணம், எந்த வேலையும் கிடைக்காமல் விரக்தியடையும் இளைஞர்கள் ஹிப்பிகளாக உருவெடுக்கின்றனர். நீங்கள் ஏராளமான ஹிப்பிகளை உருவாக்குகிறீர்கள். இது மற்றொரு வகையான வேலையின்மையே. இவ்வாறாக. இயந்திரமயத்தினால் பல விதங்களில் வேலையின்மை உருவாகின்றது.

அனைவருக்கும் வேலை கிடைக்க வேண்டும். இல்லாவிட்டால் தொந்தரவுதான். “இயங்காத மூளை பேய்களின் தொழிற்கூடம். ஏராளமான மனிதர்கள் வேலையில்லாமல் இருக்கும்போது வேலையின்மையை அதிகரிக்க நாம் ஏன் இயந்திரங்களைப் புகுத்த வேண்டும்? வேலையின்றி எவரும் இருக்கக் கூடாது என்பதே சிறந்த கொள்கையாகும். ஒவ்வொருவரும் எப்போதும் வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

சீடர்: ஆனால். அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளும் வேலையிலிருந்து இயந்திரங்கள் நம்மை விடுவிக்கின்றன என்று சிலர் வாதிடக்கூடும்.

ஸ்ரீல பிரபுபாதர்: எதற்காக விடுபட வேண்டும்? குடிப்பதற்கும் முட்டாள்தனமான செயல்களைச் செய்வதற்குமா? விடுபடுதல் என்பதற்கான பொருள் என்ன? நீங்கள். கிருஷ்ண உணர்வை மக்களை வளர்ப்பதற்காக விடுவிப்பது என்பது வேறு விஷயம். கிருஷ்ண பக்தி இயக்கத்திற்கு வருபவர்கூட முறையாக இயக்கத்தின் பணிகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும். இந்த இயக்கம் உண்பதற்கும் உறங்குவதற்காகவும் அல்ல. மாறாக கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதற்காகவே ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, கிருஷ்ண உணர்விலும் சரி, வெளிச் சமுதாயத்திலும் சரி. அனைவருக்கும் வேலை தரப்பட்டு. அவர்கள் அதில் எப்போதும் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதே கொள்கையாக இருக்க வேண்டும். அப்போது நல்லதொரு கலாச்சாரம் வளரும்.

ஒவ்வொருவரும் பிராமணர் (புத்திகூர்மையுள்ளவர் அல்லது போதகர்). சத்திரியர் (போர் வீரர் அல்லது அரசியல் தலைவர்). வைசியர் (விவசாயி அல்லது வணிகர்). அல்லது சூத்திரர் (பணியாளர்) என்று ஏதேனும் ஒரு பணியில் ஈடுபட்டிருப்பதை கண்காணிக்க வேண்டியது. வேத கலாச்சாரத்தின்படி நாட்டின் தலைவருடைய கடமையாக இருந்தது. அனைவரும் வேலை செய்ய வேண்டும். அப்போதுதான் அங்கு அமைதி நிலவும். ஆனால் தற்போது வளர்ந்துள்ள தொழில்நுட்பத்தின் காரணத்தினால், வேலையின்மையையும் சோம்பேறி மனிதர்களையும் நாம் காண முடிகிறது. ஹிப்பிகள் வெறும் சோம்பேறிகள். அவர்கள் எதையும் செய்ய விரும்புவதில்லை.

சீடர்: தொழில்நுட்பத்தினால் நாம் நல்லமுறையில் மிகுந்த திறமையுடன் வேலை செய்ய முடியும் என்றும், அப்படி வேலை செய்பவர்களால் உற்பத்தி உயர்கின்றது என்றும் மற்றொரு வாதம் இருக்கக்கூடும்.

ஸ்ரீல பிரபுபாதர்: குறைந்த திறனுடன் வேலை செய்தாலும் பரவாயில்லை. அதிகமான மனிதர்களுக்கு வேலை தருவதே சிறந்தது. பகவத் கீதையில் (18.48) கிருஷ்ணர் கூறுகிறார்:

ஸஹ-ஜம் கர்ம கௌந்தேய ஸ-தோஷம் அபிநத்யஜேத்

ஸர்வாரம்பா ஹி நோஷேண தூமேனாக்னிர் இவாவ்ருதா:

“நெருப்பு புகையால் சூழப்பட்டிருப்பதைப் போல, ஒவ்வொரு முயற்சியும் ஏதேனும் ஒரு தோஷத்தால் சூழப்பட்டுள்ளது. எனவே. குந்தியின் மகனே. தோஷம் (குற்றம்) நிறைந்ததாக இருந்தாலும், தனது இயற்கையிலிருந்து தோன்றிய தொழிலை ஒருவன் துறக்கக் கூடாது.

இந்தியில் ஒரு பழமொழி உண்டு: பேக்காரி சே பேகாரி அச்சி ஹை. பேக்காரி என்றால். “வேலையின்றி இருத்தல்’ என்றும் பேகாரி என்றால். “ஊதியமின்றி வேலை செய்தல்” என்றும் பொருள், அதாவது, வேலையின்றி இருப்பதைவிட ஊதியமின்றி வேலை செய்தல் நன்று. இந்தியாவிலுள்ள பல கிராமவாசிகள் கடைக்காரரிடமோ ஜமீன்தாரிடமோ சென்று. “எனக்கு ஒரு வேலை கொடுங்கள். எனக்கு ஊதியம் தேவையில்லை. நீங்கள் விரும்பினால் உண்பதற்கு ஏதேனும் கொடுக்கலாம். இல்லாவிட்டால் அதைக்கூட நான் கேட்க மாட்டேன்.” என்று வேண்டுவதை நாங்கள் பார்த்திருக்கிறோம். ஒருவரிடம் நீங்கள் வேலை செய்தால், அவர் உங்களுக்குச் சாப்பிட ஏதாவது தரமாட்டாரா என்ன? வேலை மட்டுமின்றி உணவும் இருப்பிடமும் உடனடியாகக் கிடைத்துவிடும். வேலையை அவர் நன்றாகச் செய்வதை அந்தக் கனவான் பார்த்தால்,”சரி. ஊதியமும் பெற்றுக்கொள்’ என்று கூறுவார்.

ஆகவே, ஊதியமின்றி வேலை செய்வது வேலையின்றி சோம்பேறியாகத் திரிவதை விடச் சிறந்தது. வேலையின்றி இருப்பது மிகவும் ஆபத்தான நிலை. ஆனால் இந்த நவீன கலாச்சாரத்தில் ஏராளமான இயந்திரங்கள் உள்ளதால் வேலையில்லாத மனிதர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் சோம்பேறிகளாகவும் உள்ளனர். இது நல்லதல்ல.

சீடர்: உங்களுடைய கருத்துக்கள் ஆதி கால எண்ணங்கள் என்று பலர் கூறக்கூடும். தொழில்நுட்பம் வேலையின்மையை அதிகரித்தாலும், மக்கள் அதையே விரும்புவார்கள். ஏனெனில். அவர்கள் தொழில்நுட்பத்தை கடின உழைப்பிலிருந்து விடுபடுவதற்கான வழியாகவும். தொலைக்காட்சி, திரைப்படம், வாகனங்கள் போன்றவற்றை அனுபவிப்பதற்கான சுதந்திர வழியாகவும் நினைக்கின்றனர்.

ஸ்ரீல பிரபுபாதர்: தொழில்நுட்பம் சுதந்திரத்தைக் கொடுக்காது. மாறாக அது நம்மை நரகத்திற்கு இட்டுச் செல்வதற்கான சுதந்திர வழியாகும். அது சுதந்திரமல்ல. ஒவ்வொருவரும் தனது திறமைக்கேற்ற வேலையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். நீங்கள் அறிவுக்கூர்மையுடையவராக இருந்தால். வேத இலக்கியங்களைப் பயிலுதல், புத்தகங்கள் எழுதுதல். மற்றவர்களுக்கு அறிவைப் போதித்தல் போன்ற பிராமணப் பணிகளைச் செய்யலாம். அதுவே பிராமணர்களின் தொழில். நீங்கள் வாழ்வாதாரத்தைப் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை. சமுதாயம் அதை வழங்கும். வேத கலாச்சாரத்தில் பிராமணர்கள் ஊதியத்திற்காக வேலை செய்ததில்லை. வேத நூல்களைப் படிப்பதிலும் மற்றவர்களுக்கு அதனைப் போதிப்பதிலும் அவர்கள் ஈடுபட்டிருந்தனர். அவர்களுக்குத் தேவையான உணவை சமுதாயம் வழங்கியது.

சத்திரியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் சமுதாயத்திலுள்ள மற்ற மனிதர்களுக்குப் பாதுகாப்பு தர வேண்டும். மக்களுக்கு ஆபத்து ஏற்படும்போது, சத்திரியர்கள் அவர்களைக் காக்க வேண்டும். இந்தத் தொழிலுக்காக அவர்கள் வரிவசூலித்துக் கொள்ளலாம்.

சத்திரியர்களைவிட அறிவில் குறைந்தவர்களான வைசியர்கள், அல்லது வணிகச் சமுதாயத்தினர். உணவு உற்பத்தியிலும் பசுக்களைப் பாதுகாப்பதிலும் ஈடுபடுவார்கள். இந்த மூன்று உயர் வகுப்பினருக்கும் உதவிசெய்வோர் சூத்திரர்கள் எனப்படுகின்றனர்.

இவை இயல்பான சமுதாயப் பிரிவுகளாகும். இந்த அமைப்பு மிகச் சிறந்தது. ஏனென்றால் இது கிருஷ்ணரால் தோற்றுவிக்கப்பட்டது. சாதுர்-வர்ண்யம் ஸ்ருஷ்டம். மயா இதில் அனைவருக்கும் வேலை கிடைக்கின்றது. அறிவுக்கூர்மை உடையோருக்கு வேலை கிடைக்கின்றது. படை வீரர்களுக்கு வேலை கிடைக்கின்றது. வணிகர்களுக்கு வேலை கிடைக்கின்றது. எஞ்சிய சூத்திரர்களுக்கும்கூட வேலை கிடைக்கின்றது. அரசியல் கட்சிகளை உருவாக்கி சண்டையிட வேண்டிய அவசியம் அப்போது இல்லை. வேத காலத்தில் கட்சிகள் கிடையாது. ஒவ்வொருவரும் அவரவருக்குரிய வேலையில் ஈடுபட்டிருப்பதைக் கண்காணிக்க அரசர் இருந்தார். எனவே. பொய்யான அரசியல் கட்சிகளை அமைப்பதற்கும். போராட்டம் நடத்தி ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதற்கும் அப்போது நேரம் இருந்ததில்லை, அதற்கான வாய்ப்பும் இருந்ததில்லை.

ஆனால் இவை எல்லாவற்றிற்கும் ஆரம்பம், “நான் இந்த உடலல்ல” என்பதைப் புரிந்துகொள்வதே. இது பகவான் கிருஷ்ணரால் பகவத் கீதையில் மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

+3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question