Thursday, November 21

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ? / Duty of a Person

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

இருப்பவனின் கடமை என்ன? இறப்பவனின் கடமை என்ன ?

உயிர் வாழ்பவனின் கடமை என்ன? உயிர் பிரியப் போகிறவனின் கடமை என்ன? என்ற இரண்டு கேள்விகள் மனித சமுதாயத்திற்கு மிகவும் ஆர்வத்தை தூண்டும் இரு கேள்விகளாகும். இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் மூல அடிப்படைக் காரணமாக அமைந்துள்ளது.

பரிக்ஷித்து சாபம் பெறுதல்

“மரியாதை இன்றி என்னுடைய தந்தையை (கழுத்தில் செத்த பாம்பை மாலையாக இட்டு) அவமதித்த குலத்துரோகியை (பரிக்ஷித்து மகாராஜனை), இன்றிலிருந்து ஏழாவது நாள் தக்ஷகன் கடிக்கட்டும்” என்று சமீக மகரிஷியின் புத்திரனான சிறுவன் ஸ்ருங்கி தன் தவ வலிமையால் பரிக்ஷித்து மகாராஜனுக்கு சாபம் இட்டான்.

ஸ்ருங்கி இட்ட சாபத்தால் தக்ஷகன் தன்னை தீண்டப் போவதையும், அதனால் தனக்கு திடீர் மரணம் விளையப் போவதையும் அறிய வந்த பரிக்ஷித்து மகாராஜா, தான் உலகைத் துறந்து விடுவதற்கு இதுவே சரியான காரணமாக இருக்கப் போகிறது என்பதை உணர்ந்து, இந்த நற்செய்தியை வரவேற்றார்.

இறக்கும் வரை உபவாசம் என்ற பரிக்ஷித்துவின் முடிவு

அவர் ராஜ்ஜியத்தை தன் மகனிடம் ஒப்படைத்து விட்டு, கிருஷ்ணரின் பாத சேவா பெறுவதற்கரிய பெறும் பேறு என்பதால், தன் மனதை கிருஷ்ண உணர்வில் ஒருமுனைப்படுத்த உறுதி கொண்டு கங்கையின் தென்கரையில், தர்ப்பை வேர்கள் கிழக்கு நோக்கிப் பரப்பப்பட்ட ஆசனத்தில், இறக்கும் வரை உபவாசம் இருப்பது என்ற முடிவுடன் வடக்கு நோக்கி அமர்ந்தார்.

மகான்கள் மற்றும் மாமுனிவர்கள் வருகை

அப்போது அங்கு சீடர்கள் புடைசூழ மகான்களும், புண்ணிய தீர்த்தங்களையும் புனிதப் படுத்தும் முனிவர்களும், தீர்த்த யாத்திரை செல்பவர்கள் என்ற பெயரில், அங்கு வந்து சேர்ந்தனர். தேவரிஷிகளும், பிரம்மரிஷிகளும் மற்றும் ராஜரிஷிகளும் அங்கு கூடினர்.

“தக்ஷகணோ அல்லது எதனால் மரணம் தேர்ந்தாலும் பரவாயில்லை, ஆனால் இங்கு கூடி இருப்பவர்கள் அனைவரும் பகவான் லிஷ்ணுவின் லீலைகளை தொடர்ந்து பாடிக் கொண்டிருக்க வேண்டும்” என அங்கு கூடி இருந்தவர்களிடம் பரிக்ஷித்து மகாராஜா வேண்டுகோள் விடுத்தார்.

 பரிக்ஷித்து மகாராஜாவின் இரண்டு கேள்விகள்

அங்கு கூடியிருந்தவர்களிடம் பரிக்ஷித்து மகாராஜா, “நம்பத் தகுந்த அந்தணர்களே, (இறக்கப் போகும்) நான் உடனடியாகச் செய்ய வேண்டிய கடமை என்ன? பல்வேறு கடமைகளில் மூழ்கி இருப்பவர்களின் அதிலும் குறிப்பாக மரண வாயிலில் இருப்பவர்களின் மிகச்சரியான கடமை என்ன என்பதை, ஆழ்ந்து நிதானமாக யோசி த்து கூறியருள வேண்டுகிறேன்” என்று வேண்டினார். (ஸ்ரீமத் பாகவதம் 1.19.24)

இந்த வினாவில் அங்கு கூடி இருந்த முனிவர்களிடம் பரிக்ஷித்துமகாராஜா இரண்டு வினாக்களை வினவுகிறார். முதல் வினா, வெவ்வேறு வகையான கடமைகளில் மூழ்கி இருப்பவர்களின் உண்மையான கடமை என்ன என்பது. இரண்டாவது வினா, மரண வாயிலில் இருப்பவர்களின் உண்மையான கடமை என்ன என்பது. உண்மையில் இரண்டு வினாக்களுமே ஒன்றுதான். ஏனெனில் யார் எந்த வகையான கடமைகளில் மூழ்கி கிடந்தாலும் அவர்களும் இறக்கப் போகிறவர்கள்தான். இன்றோ, சில ஆண்டுகளுக்குப் பிறகோ அல்லது பல ஆண்டுகளுக்குப் பிறகோ அனைவரும் இறக்கப்போகிறவர்களே. எல்லோருமே கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருப்பவர்களே. ஆகையால் இறக்கப் போகிறவரின் கடமையை அறிந்து கொள்வது மிக மிக முக்கியமானதாகும்.

சற்று நேரம் கழித்து, சுகரிஷி அங்கு வந்த போது பரிசுக்ஷித்து மகாராஜா அவரிடமும் இதே கேள்விகளை வினவினார். “யோகிகளின் பரம குருவே, அனைவரும் பக்குவமடையும் வழியை, அதிலும் குறிப்பாக மரணவாயிலில் இருப்பவர்களுக்கேற்ற வழியைக் காட்டியருல வேண்டுகிறேன்” (ஸ்ரீமத் பாகவதம் 1.19.37) என்று பரிக்ஷித்து மகாராஜா சுகரிஷியிடம் வேண்டுகிறார்.

பாகவதம் அளிக்கும் விடை

இந்தக் கேள்விகள் ஸ்ரீமத் பாகவதத்தின் முதல் காண்டத்தின் இறுதியில் கேட்கப்படுகின்றன. ஸ்ரீமத் பாகவதம் இரண்டாம் காண்டத்தின் துவக்கத்தில் இருந்து, இறுதிக் காண்டமான பன்னிரெண்டாம் காண்டம் இறுதி வரை கிட்டத்தட்ட ஸ்ரீமத் பாகவதம் முழுவதுமே இந்த இரண்டு கேள்விகளைப் பற்றியதாகத்தான் உள்ளது. பரிக்ஷித்து மகாராஜனின் இந்த இரண்டு கேள்விகளே ஸ்ரீமத் பாகவதத்தின் முழுமைக்கும் அடிப்படைக் கொள்கையாக அமைந்துள்ளது.

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் பக்தித் தொண்டில் ஈடுபடுவதுதான் அனைவருக்கும் உரிய  கடமையாகும் என்பதே முனிவர்கள் எடுத்த முடிவாகும்.

“வேருக்கு நீர் ஊற்றுவதால் மரத்தின் தண்டு, கிளைகள், தளிர்கள் மற்றும் மரத்தின் அனைத்துப் பகுதிகளும் பயனடைவது போலவும், வயிற்றுக்கு உணவளிப்பதால் புலன்கள் மற்றும் உடலின் அனைத்து அங்கங்களும் உயிர் பெறுவது போலவும், அனைத்து வழிபாடுகளும் பகவான் அச்சுதனின் வழிபாட்டில் அடக்கமாகி விடுகின்றன”. (ஸ்ரீமத் பாகவதம் 4:31.14)

”அதோக்ஷஜே’ என்றழைக்கப்படும் பரம புருஷ பகவானின் பக்தித் தொண்டைப் பெற எதனால் முடியுமோ, அதுவே மனித குலத்தின் மிக உயர்த்த தர்மமாகும்” (ஸ்ரீமத் பாகவதம் 1.2.6)

“தன்னுடைய எல்லாக் கடமைகளையும் துறந்து, எல்லோருக்கும் சரணம் அளிப்பவரான முகுந்தனை முழுவதும் சரணடைந்தவர்கள் தேவர்கள், ரிஷிகள், உயிரினங்கள், உற்றார், உறவினர்கள், மனிதர்கள் மற்றும் மூதாதையர்கள் யாருக்கும் எவ்வகையிலும் கடன்பட்டவர்க இல்லை. (ஸ்ரீமத் பாகவதம் 11.5.41) என்று பல வகைகளில் இக்கருத்து ஸ்ரீமத் பாகவதத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த உண்மையை பரிக்ஷித்து மகாராஜா அறிந்து இருந்தாலும், அங்கு கூடி இருந்த முனிவர்கள் ஏக மனதாக இந்த முடிவை அளிக்க வேண்டுமென விரும்பினார். இதனால் கிருஷ்ண உணர்வில் தன் மனதை ஒரு நிலைப் படுத்துவதுதான் கடமை என்று தான் தீர்மானித்ததை தடங்கல் இன்றி தொடர இயலும் என்று கருதினார்.

பல்வேறு வகையான கடமைகள் ஒருவருக்கு இருந்தாலும், மற்றெல்லாக் கடமைகளையும் துறந்து, பகவான் கிருஷ்ணரின் பாதகமலங்களில் சரணடைந்து, சர்வ பாவங்களில் இருந்தும் விடுபடுவதே முதல் தரமான கடமையாகும் என்பதே பரிக்ஷித்து மகாராஜனின் இரண்டு கேள்விகளுக்கும் ஒரே பதிலாகும். இதுவே பகவத் கீதையில் (18.66) பகவான் அளிக்கும் இறுதி அறிவுரையுமாகும்.

Thanks to Krishna Amutham

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question