Monday, November 18

Draupadi (Tamil) / திரௌபதி

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

துருபத மகாராஜனின் மிகவும் கற்புடைய மகளான இவள், இந்திரனின்
மனைவியாகிய சசிதேவியின் பகுதி அம்மாவாள். துருபத மகாராஜன் யஜ முனிவருடைய
கண்காணிப்பின் கீழ் ஒரு பெரும் யாகத்தை நடத்தினார். அவரது முதல் நிவேதனத்தால்
திருஷ்டத்யும்னனும், இரண்டாவது நிவேதனத்தால் திரௌபதியும் பிறந்தனர். எனவே இவள்
திருஷ்டத்யும்னனின் தங்கையாவாள். இவளுக்குப் பாஞ்சாலி என்ற பெயரும் சூட்டப்பட்டது.
அவளைத் திருமணம் செய்து கொண்ட பஞ்ச பாண்டவர்கள் ஒவ்வொருவரும் அவள்
மூலமாக ஒவ்வொரு மகனைப் பெற்றனர். யுதிஷ்டிர மகாராஜன் பிரதிபித் எனும் மகனையும்,
பீமசேனர் சுதசோமர் என்ற மகனையும், அர்ஜுனன் சுருதகீர்த்தியையும், நகுலன்
சதானீகரையும் மற்றும் சஹாதேவன் சுருதகர்மாவையும் பெற்றனர். இவள் இவளது
மாமியாரான குந்திதேவிக்கு இணையான பேரழகு வாய்ந்தவள் என்று
வர்ணிக்கப்படுகிறாள். இவள் பிறக்கும் சமயத்தில், இவளை கிருஷ்ணா என்று அழைக்க
வேண்டுமென்று ஓர் அசரீரி ஒலித்தது, இவள் பல க்ஷத்திரியர்களைக் கொல்வதற்காகவே
பிறந்தவள் என்றும் அந்த அசரீரி கூறியது. சங்கரரிடமிருந்து அவள் பெற்ற
ஆசீர்வாதங்களின் பயனாக அவளுக்கு சம தகுதியுள்ள ஐந்து கணவன்கள்
அளிக்கப்பட்டனர். அவளது சுயம்வரச் சடங்கிற்கு உலகிலுள்ள எல்லா அரசர்களும்,
இளவரசர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். பாண்டவர்களின் வனவாசத்தின்போது
அவர்களை அவள் திருமணம் செய்து கொண்டாள். ஆனால் அவர்கள் நாடு திரும்பியதும்
துருபத மகாராஜன் அவர்களுக்கு மிகவும் அதிகமான செல்வங்களை வரதட்சணையாகத்
தந்தார். திருதராஷ்டிரரின் எல்லா மருமகள்களாலும் அவள் நன்கு வரவேற்கப்பட்டாள்.
பாண்டவர்கள் சூதாட்டத்தில் அவளைப் பணயம் வைத்து தோற்றுப்போனதும், அச்சபையில்
பீஷ்மரையும், துரோணரையும் போன்ற முதியவர்கள் இருந்தபோதிலும், துச்சாதனன்
அவளை சபை நடுவே இழுத்து வந்து மானபங்கப்படுத்த முயன்றான். அவள் பகவான் ஸ்ரீ
கிருஷ்ணரின் மிகச்சிறந்த பக்தையாவாள். எனவே அவள் செய்த பிரார்த்தனையால்,
பகவானே அளவற்ற அங்கியாக மாறி அவளது மானத்தைக் காப்பாற்றினார். ஜடாசுரன்
என்ற அசுரன் அவளை கடத்திச் சென்றபொழுது, அவளது இரண்டாவது கணவரான
பீமசேனர் அசுரனைக் கொன்று அவளைக் காப்பாற்றினார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின்
கருணையால், அவள் துர்வாச மகரிஷியின் சாபத்திலிருந்து பாண்டவர்களைக்

காப்பாற்றினாள். பாண்டவர்கள் விராடனின் அரண்மனையில் மாறுவேடத்தில் வாழ்ந்து
வந்தபொழுது, அவளது பேரழகில் மயங்கிப் போய் அவளை நெருங்கிய கொடிய சீசகளை
பீமன் கொன்று அவளைக் காப்பாற்றினார். அவளது ஐந்து மகன்களும் அஸ்வத்தாமனால்
கொல்லப்பட்டபொழுது அவள் பெரும் துயருக்குள்ளானாள். இறுதி கட்டத்தில்
யுதிஷ்டிரரையும் மற்றவர்களையும் பின்தொடர்ந்து சென்ற திரௌபதி வழியில் கீழே
சாய்ந்தாள். அவளது வீழ்ச்சிக்கான காரணத்தை யுதிஷ்டிரர் விளக்கினார். ஆனால்
யுதிஷ்டிரர் ஸ்வர்க லோகத்தினுள் புகுந்தபொழுது அங்கு திரௌபதி அதிர்ஷ்ட
தேவதையைப் போல் பேரழகுடன் நிற்பதைக் கண்டார்.
சுபத்ரா: இவள் வசுதேவரின் புதல்வியும், பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் தங்கையுமாவாள்.
இவள் வசுதேவருக்கு மட்டுமல்லாமல், கிருஷ்ணருக்கும், பலதேவருக்கும் கூட மிகப்
பிரியமானவளாவாள். இவ்விரு சகோதரர்களும், அவர்களது தங்கையும் புகழ்பெற்ற பூரி
ஜகன்நாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ளனர். இன்றும் ஆயிரக்கணக்கான யாத்திரீகர்கள்
தினந்தோறும் இந்த ஆலயத்திற்குச் சென்று தரிசனம் பெற்று வருகின்றனர். இந்த ஆலயம்,
பகவான் ஒரு சூரியகிரகணத்தின்போது குருட்சேத்திரத்திற்கு சென்று அங்கு
விருந்தாவனத்து வாசிகளுடனான அவரது சந்திப்பைப் பிரதிபலிக்கும் நினைவாலயமாகும்.
இச்சந்தர்ப்பத்தில் ராதாவும், கிருஷ்ணரும் சந்தித்தது பரிதாபத்திற்குரிய ஒரு கதையாகும்.
மேலும் பகவான் ஸ்ரீ சைதன்யர் ஜகன்நாத்புரியில், ராதாராணியின் பரவச நிலையில்
இருந்து கொண்டு, பகவான் ஸ்ரீ கிருஷ்ணருக்காக, எப்பொழுதும் ஏக்கத்துடன் காத்திருப்பார்.
அர்ஜுனன் துவாரகையில் இருந்தபொழுது, சுபத்ராவை தனது ராணியாக அடைய விரும்பி,
தனது விருப்பத்தை ஸ்ரீ கிருஷ்ணரிடம் தெரிவித்தார். தமது மூத்த சகோதரரான ஸ்ரீ பலதேவர்
அவளது திருமண ஏற்பாட்டை வேறொரு இடத்தில் செய்து வருவதை ஸ்ரீ கிருஷ்ணர் நன்கு
அறிந்திருந்தார். மேலும் ஸ்ரீ பலதேவரின் ஏற்பாடுகளை எதிர்க்கத் துணிவில்லாமல்,
சுபத்ராதேவியை கடத்திச் செல்லும்படி அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் அறிவுரை கூறினார்.
எனவே அவர்கள் அனைவரும் ரைவத மலையில் ஒரு இன்பச் சுற்றுலாவை
மேற்கொண்டிருந்த பொழுது, ஸ்ரீ கிருஷ்ணரின் திட்டப்படி அர்ஜுனன் சுபத்ராவைக் கடத்திச்
செல்வதில் வெற்றி பெற்றார். ஸ்ரீ பலதேவர் அர்ஜுனனிடம் கடுங்கோபம் கொண்டு அவரைக்
கொன்றுவிட விரும்பினார். ஆனால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அவரது சகோதரரிடம்
அர்ஜுனனை மன்னித்துவிடும்படி மன்றாடி கேட்டுக்கொண்டார். பிறகு அர்ஜுனனை
முறைப்படி திருமணம் செய்து கொண்ட சுபத்ராவிற்கு அபிமன்யு பிறந்தார். ஆனால்
அபிமன்யுவின் அகால மரணத்தினால் மிகவும் துக்கத்திற்குள்ளான சுபத்ரா, பரீட்சித்
பிறந்ததும் மகிழ்ந்து ஆறுதலடைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question