Wednesday, May 22

அயோத்தியா

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

அயோத்தியா
– பகவான் இராமசந்திரரின் திருத்தலம்


அழகான சரயு நதிக்கரை, 108 ஸ்ரீ வைஷ்ணவ திவ்ய தேசங்களில் ஒன்று, ஸ்ரீ இராமர் பிறந்த புண்ணிய பூமி. அவர் சுமார் 12,000 ஆண்டுகள் ஆட்சி செய்த ஸ்தலம், சமீப கால இந்தியாவில் பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய இடம் என பல்வேறு அடைமொழிகளைக் கொண்டு, உத்திர பிரதேச மாநிலத்தின் பைசாபாத் நகரிலிருந்து 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள அயோத்தியாவிற்குச் செல்ல வேண்டும் என்ற எமது நீண்டநாள் விருப்பம் சமீபத்தில் நிறைவேறியது.

இராம ஜென்ம பூமி

அயோத்தியாவிற்குச் செல்பவர்கள் அனைவரும் தவறாமல் பார்க்கக்கூடிய இடம், இராம ஜென்ம பூமி. பகவான் ஸ்ரீ இராமர் தனது லீலைகளை அரங்கேற்றுவதற்காக இவ்வுலகில் அவதரித்த இடம், தற்போது இராம ஜென்ம பூமி என்று அழைக்கப்படுகிறது. அந்த சிறப்பு வாய்ந்த இடத்தைக் காண்பதற்காக நாங்களும் சென்றோம். சமீப காலத்தின் பல்வேறு சர்ச்சைகளின் காரணமாக, இராம ஜென்ம பூமி தற்போது இராணுவ கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்விடத்தைச் சென்றடைய பல அடுக்கு பாதுகாப்பு சோதனைகளை கடக்க வேண்டும். செல்போன், கேமரா மட்டுமின்றி சிறிய பேனாவைக்கூட எடுத்துச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோயிலில் பகவானை தரிசிக்கச் செல்வதற்கு இவ்வளவு தடைகளா என்று நினைத்த வண்ணம் ஒவ்வொரு பாதுகாப்பு நிலையங்களையும் தாண்டிச் சென்றோம். இராம ஜென்ம பூமியின் புனிதத்துவமும் நாம் விரும்பும் தெய்வீக சூழ்நிலையும் இந்த பாதுகாப்பு நடவடிக்கையினால் சிதைவுற்று இருப்பதையும், யாத்திரிகரின் மனம் பகவான் இராமரிலிருந்து விலகி பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இதர சர்ச்சைகளையும் சிந்திக்கின்றது என்பது வருந்தத்தக்க உண்மை. இருப்பினும், இராம ஜென்ம பூமிக்கு அருகில் வந்தபோது. சூழ்நிலை திடீரென்று மாறுவதாகத் தோன்றியது. ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை கீர்த்தனம் செய்தபடி, புதியதோர் உற்சாகத்துடன் ஸ்ரீ இராமரின் விக்ரஹத்தை தரிசித்தோம்.

பாலகனின் உருவில் தனது சகோதரர்களுடன் வீற்றிருக்கும் இராமரின் விக்ரஹத்தை சற்று தொலைவில் இருந்துதான் தரிசிக்க இயலும். முறையான கோயில் ஏதுமின்றி, சிறிய குடிசை போன்ற அமைப்பில் இராமர் கருணையுடன் பக்தர்களுக்கு தரிசனம் தருகிறார். இராமரின் தரிசனத்தைப் பார்த்தவுடன் இராணுவ கட்டுப்பாடுகள். சிரமங்கள், இன்னல்கள் என அனைத்தும் விலகியதுபோல காணப்பட்டது. பகவான் ஸ்ரீ இராமர் பூலோகத்தில் அவதரித்த தினம். இராம நவமி என்ற பெயரில் மிகவும் விசேஷமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

தசரதரின் யாக கூடம்

இராம ஜென்ம பூமிக்கு அருகில் அமைந்திருப்பது தசரதரின் வேள்விக் கூடம். குழந்தை வேண்டி மாமன்னர் தசரதர் நிகழ்த்திய யாகம் இராமாயணத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

கௌசல்யா, சுமித்ரா, கைகேயி என மூன்று மனைவிகள் இருந்தும், பல வருடங்களாகியும் தனக்கு புதல்வன் பிறக்காத காரணத்தினால், அயோத்தியாவை தலைநகராகக் கொண்டு கோசல நாட்டை ஆண்டு வந்த மாமன்னர் தசரதர் புத்திர காமேஷ்டி யாகம் மேற்கொள்ளத் திட்டமிட்டார். இந்த திட்டத்தை கேள்விப்பட்ட தசரதரின் மூத்த அமைச்சரான சுமந்திரன், சிறந்த ரிஷியான ரிஷ்யசிருங்கரின் தலைமையில் ஆடம்பரமான யாகத்திற்கு ஏற்பாடு செய்தார்.

அச்சமயத்தில் தேவ லோகத்தில் இராவணனின் கொடூர செயல்களுக்கு தீர்வு வேண்டி தேவர்கள் அனைவரும் பிரம்மாவிடம் முறையிட்டனர். அங்கு தோன்றிய நாராயணர், கூடிய விரைவில் தான் தசரதரின் நான்கு மகன்களாக தோன்றி பூமியின் துயரத்தை நீக்குவேன் எனக் கூறி மறைந்தார்.

புத்திர யாகம் வெற்றிகரமாக முடியும் நேரத்தில் யாக குண்டத்திலிருந்து தோன்றிய விஷ்ணு தூதர், ஒரு சிறு கிண்ணத்தில் இருந்த பாயசத்தை தசரதனிடம் கொடுத்து,

மனைவிகளிடம் பகிர்ந்து கொடுக்குமாறு கூறி மறைந்தார். தசரதனும் அந்த பாயசத்தின் பாதி பங்கை கௌசல்யாவிற்கும், கால் பங்கை சுமித்ராவிற்கும், எட்டில் ஒரு பங்கை கைகேயிக்கும் கொடுத்தார்; அதன்பின்னர் எஞ்சியிருந்த பாயசத்தை மீண்டும் சுமித்ராவிற்கு கொடுத்தார். ஒரே வருடத்தில் கௌசல்யாவிற்கு இராமரும், சுமித்ராவிற்கு லக்ஷ்மணர், சத்ருகனர் என இரட்டை மகன்களும், கைகேயிக்கு பரதரும் தெய்வீக மகன்களாகத் தோன்றினர்.

தசரத மஹால்

மன்னர் தசரதர் வாழ்ந்த அரண்மனை தற்போது கோயிலாக உருவெடுத்துள்ளது. இக்கோயிலில் இலக்ஷ்மணர், பரதர், சத்ருகனர் ஆகியோருடன் கூடிய சீதா இராமரின் விக்ரஹங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளனர்.

தச என்றால் பத்து என்றும், ரத என்றால் தேர் என்றும் பொருள்படும். தசரதன் என்றால் ஒரே சமயத்தில் பத்து திசைகளிலும் ரதத்தை செலுத்தி போர் புரியும் திறமை கொண்டவர் என்று பொருள். அத்தகு போர் வலிமை கொண்ட தசரதர், தேவர்களின் அழைப்பின் பெயரில் அடிக்கடி அசுரர்களுக்கு எதிராக மேலுலகங்களில்கூட போரிடுவதுண்டு. சூரிய வம்சத்தில் வந்த தசரத மன்னர், கோசல மாகாணத்தை சிறப்பாக ஆட்சி செய்தார்.

image

சிறந்த தலைவர்களே நல்ல பிரஜைகளை உருவாக்க முடியும் என்பதற்கு தசரதரின் ஆட்சியும் ஸ்ரீ இராமரின் ஆட்சியும் சிறந்த முன்னுதாரணமாக திகழ்ந்தது. தர்ம நெறிமுறைகளைக் கடைபிடிப்பதற்கு போதிய பயிற்சி பெற்றிருந்த மக்கள். தங்களுக்கு ஒதுக்கப்பட்ட கடமையை செவ்வனே ஆற்றி வந்தனர். உடலின் துன்பங்கள், மன ரீதியிலான துன்பங்கள். புலம்பல், பயம் போன்றவை முழுமையாக மறைந்து, மக்கள் அமைதியுடனும் செழிப்புடனும் வாழ்ந்து வந்துள்ளனர்.

எளிமையான பக்தர்களாக வாழ்ந்த மக்கள். இராமரிடம் முழுமையாக சரணடைந்திருந்ததால் அவரின் ஐஸ்வர்யத்திலும் உரிமையுடன் பங்கு கொண்டனர். இராமரின் ஆட்சியில் மக்கள் மட்டுமல்லாமல், அனைத்து ஜீவன்களும் கவலையில்லாமல் இன்புற்று வாழ்ந்தனர். அயோத்தியாவாசிகள் இராமரை தங்களது உயிர்மூச்சாக கருதி, அவரது சேவைக்காக எல்லா தியாகங்களையும் மேற்கொள்ளத் தயாராக இருந்தனர். அதுவே இராமராஜ்யம்.

கனக பவன்

தசரத மஹாலுக்கு சற்று தொலைவில் அமைந்திருப்பது கனக பவன், இராமச்சந்திர பகவானின் திருமணத்திற்கும் கனக பவனுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. இராமசந்திர பகவானுக்கு பதினாறு ஆனபோது தசரதரின் அரண்மனைக்கு விஜயம் செய்த விஸ்வாமித்திரர், தன்னுடைய யாகத்திற்கு பாதுகாப்பாக, தன்னுடன் இராமரையும் இலக்ஷ்மணரையும் அனுப்பி வைக்கும்படி தசரதரிடம் கேட்டுக் கொண்டார். தசரதருக்கு மனம் இல்லாவிடினும், பிராமணருக்கு கொடுத்த வாக்கினைக் காப்பாற்றுவதற்காக, தன் உயிரினும் மேலான இராமரை இலக்ஷ்மணரின் துணையுடனும் வசிஷ்டரின் அனுமதியுடனும் அனுப்பி வைத்தார். யாகத்திற்கு அவர்களும் தடையாக செயல்பட்ட தாடகை, ஸுபாஹு எனும் அசுரர்களை வதம் செய்தனர்.

image 1

பின் இராமரை விஸ்வாமித்திரர் மிதிலைக்கு அழைத்து சென்று. ஜனக மன்னரின் மகளான சீதாதேவியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வைத்தார். சுயம்வரத்தில் இராமர் சிவபெருமானின் வில்லை தூக்கி உடைத்தபோது மூவுலகமும் அதிர்ந்தது

இராமர் சீதாதேவியை மணந்து அயோத்தியா வந்தபோது, அவர்களைக் கண்ட கைகேயி ஆனந்தத்தின் உச்சியில், கனக பவன் என்னும் ஆடம்பரமான மாளிகையை சீதாதேவிக்கு மணபரிசாக அளித்தாள்.

கனக என்றால் தங்கம் என்று பொருள், கற்பனைக்கு அப்பாற்பட்ட பேரழகுடன் தங்க மாளிகையாக ஜொலித்த கனக பவன், இன்றும் மஞ்சள் நிற வர்ணத்துடன் அழகுற விளங்குகின்றது. இதனை விட்டு வெளியே வர எந்த யாத்திரிகருக்கும் மனம் வராது. சீதாதேவி வாழ்ந்த இடம் என்பதால் கனக பவன் மிகவும் கருணை வாய்ந்த இடமாக அயோத்தியாவில் போற்றப்படுகிறது. இங்கு இராமரும் சீதையும் தங்க கிரீட கோலத்தில் காட்சியளிப்பது மிகவும் விசேஷமானதாகும்.

கோப பவன்

இராம ஜென்ம பூமிக்கு போகும் வழியில் கோப பவன் அமைந்துள்ளது. அயோத்தியா செல்பவர்களில் பெரும்பாலான நபர்கள் கைகேயியின் இந்த மாளிகையினை வெளியிலிருந்து மட்டுமே பார்க்கின்றனர், உள்ளே செல்வதில்லை. ஏனெனில், இங்குதான் கைகேயி தசரதனிடம் தனது இரு வரங்களைப் பூர்த்தி செய்து கொண்டாள். தனது மகன் பரதனைக் காட்டிலும் இராமரின் மீது அதிக பற்றுதல் கொண்டிருந்த கைகேயி, புத்தி பேதலித்த காரணத்தினால், இராமர் 14 வருடங்கள் காட்டிற்குச் செல்ல வேண்டும் என்றும், பரதன் முடிசூட்டப்பட வேண்டும் என்றும் தசரதரிடமிருந்து வரம் பெற்றாள்.

பகவான் ஸ்ரீ இராமருக்கு முடிசூட்டுவதற்கான ஏற்பாடுகளை தசரதர் செய்து கொண்டிருந்த தருணம் அது. அப்போது வளைந்த உடலைக் கொண்ட மந்தாரை, கைகேயியை அணுகி மறுநாள் இராமரை அரியணையில் ஏற்றப் போகிறார்கள் என்ற செய்தியை தெரிவித்தாள். அந்த இன்ப செய்தியைக் கேட்ட கைகேயி தன்னையறியாமல், தன் கழுத்தில் இருந்த தங்க மாலையை கழற்றி மந்தாரைக்கு பரிசாகக் கொடுத்தாள். இதை கண்ட மந்த்ரா உடனடியாக கைகேயியை பார்த்து, “ஏன் முட்டாள்தனமாக செயல்படுகிறாய்? இராமர் அரியணையில் ஏறிவிட்டால் பரதனும் நீயும் வேலைக்காரர்களாக மாறிவிடுவீர்கள்” என விஷத்தை கக்கினாள்.

அந்த சமயத்தில் (பகவானின் தெய்வீக ஏற்பாட்டின்படி) புத்தியை இழந்த கைகேயி, இராமரை காட்டிற்கு அனுப்பவும் பரதனுக்கு முடிசூட்டவும் முடிவு செய்து, இதயத்தை கல்லாக்கிக் கொண்டு, கோப பவனில் தலைவிரி கோலத்துடன் தரையில் விழுந்து புரண்டு அழுதாள். தான் விரும்பிய இரு வரங்களை தசரதனிடமிருந்து எப்படியோ பூர்த்தி செய்து கொண்டாள்.

கூடா நட்பு எவ்வளவு பொல்லாதது என்பதை கூனியுடனான கைகேயியின் உறவிலிருந்து அறியலாம்.

image

ஹனுமான் கடி

இங்கிருக்கும் குகைக் கோயிலில் ஹனுமானின் தாயாரான அஞ்சனா தேவியின் மடியில் குழந்தை ஹனுமான் அமர்ந்த கோலத்தில் காட்சியளிக்கிறார். எழுபதுக்கும் மேற்பட்ட படிக்கட்டுகளை கொண்ட இக்கோயில் அயோத்தியாவில் மிகவும் பிரபலமானதாகும். இவ்விடத்தில் நித்யமாக வசிக்கும் ஹனுமான், இராம ஜென்ம பூமியை பாதுகாக்கிறார். தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து பிரார்த்தனைகளை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

image 1

குப்தார் காட்

இராமர் தனது இறுதி லீலையை சரயு நதியில் அரங்கேற்றினார்; அங்கிருந்துதான் அவர் நமது பௌதிக கண்களுக்கு மறைந்து போனார். இராமர் மறைந்த அந்த நதிக்கரை. குப்தார் காட் என்று அழைக்கப்படுகிறது. இவ்விடத்தில் 300 வருடம் பழமை வாய்ந்த இராமரின் விக்ரஹம் வழிபடப்படுகின்றது. நரசிம்மர் மற்றும் ஹனுமான் கோயிலும் இந்த நதிக்கரையில் அமைந்துள்ளன.

நந்திகிராம்

அயோத்தியாவின் ஒதுக்குப்புறத்தில், ஊரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள நந்திகிராம், பகவான் இராமரின் மீதான பரதரின் மாசற்ற அன்பிற்கு இலக்கணமாகத் திகழ்கிறது. இராமர் 14 வருடங்கள் வனவாசம் மேற்கொண்டிருந்த தருணத்தில், இராமர் இல்லாமல் அயோத்தியாவில் வாழ விரும்பாத பரதன், அயோத்தியாவின் ஓரத்தில் உள்ள இவ்விடத்தில், ஒரு சிறு குடிசையை அமைத்து இராமர் காட்டில் மேற்கொள்ளும் அதே தவ வாழ்வினை (இன்னும் சொல்லப்போனால், அதைவிட அதிகமான தவ வாழ்வினை) மேற்கொண்டார்.

இராமரின் பாதுகைகளை அரியணையில் வைத்து, பரதன் 14 வருடம் இங்கிருந்து கொண்டே நாட்டை ஆண்டார். இராமர் அயோத்தியா திரும்பும் வரை, பரதன் இவ்விடத்தில் ஜடா முடியுடன் மரப்பட்டையை வஸ்திரமாக அணிந்து, பழம் மற்றும் கிழங்குகளை மட்டுமே உட்கொண்டார். இராமரின் காலத்தில் காடாக இருந்த நந்திகிராம் இப்போதும் நந்தவனம்போல காட்சியளிக்கிறது. இவ்விடத்தில் பரத குண்டம் அமையப் பெற்றுள்ளது. இராமர் புஷ்பக விமானத்தில் அயோத்தியாவிற்குத் திரும்பிய போது. பரதரின் மனப்பான்மையினை ஹனுமானின் மூலமாக அறிந்து கொண்ட பிறகு, நந்திகிராமத்தில் தரையிறங்கினார்.

image 2

அப்போது இராமரைக் கண்ட பரதன் அவரை நமஸ்கரித்து உணர்ச்சி பொங்க தழுவிக் கொண்டார். அயோத்தியாவாசிகள் அனைவரும் நந்திகிராமிற்கு வருகைப் புரிந்து இராமரை வரவேற்றனர்.

அயோத்தியாவாசிகள் இன்றும் ஸ்ரீ இராமரின் நினைவில் வாழ்கின்றனர். எங்கு சென்றாலும், இராம நாமம் தெளிவாக ஒலிக்கின்றது. அயோத்தியாவில் தங்கும் அனைவரும் இராமாயணம் நமக்கு வழங்கியிருக்கும் நல்ல அறிவுரைகளையும் பக்தி மார்க்கத்தையும் நினைவு கொள்ளாமல் இருக்க முடியாது. நாங்களும் அவற்றினை நினைத்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரம் கீர்த்தனம் செய்தபடி. விலக மனமின்றி அயோத்தியாவிலிருந்து புறப்பட்டோம்.

Thanks to BTG Tamil

+6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question