இரும்பனன் றுண்ட நீரும்
போதருங் கொள்க, என்றன் அரும்பிணி பாவ மெல்லாம்
அகன்றன என்னை விட்டு
சுரும்பமர் சோலை சூழ்ந்த அரங்கமா கோயில் கொண்ட
கரும்பினைக் கண்டு கொண்டென்
கண்ணினை களிக்கு மாறே
-திருக்குறுந்தாண்டகம் 13.
எந்நேரமும் வண்டுகள் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அழகிய சோலைகள் சூழ்ந்த அரங்கத்தில் பள்ளிகொண்ட கரும்பாகிய என் அரங்கனைக் கண்ட மாத்திரத்தில், சூடான இரும்பில் பட்ட நீர் எவ்வாறு வேகமாக உட்கவரப்பட்டு காணாமல் போகிறதோ அதுபோல், என் பாவமெல்லாம் என்னைவிட்டு பறந்தோடிவிட்டது என்று திருமங்கையாழ்வாரால் பாடிப் பரவசித்து மங்களாசாசனம் செய்யப்பட்ட இத்தலம் இன்றைய இந்தியாவிலேயே மிகச் சிறப்பான தலமாகும்.
ஸ்ரீரங்கம் ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் ஒரு கி.மீட்டருக்குக் குறைவான தூரமே, திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தூரமாகும்.
திருமாலின் திவ்ய தேசங்கள் 108ல் இத்திருவரங்கம் தலையாயது சோழநாட்டுத் திருப்பதிகளுள் முதன்மையானது. கோயில், திருமலை, பெருமாள் கோயில் என்று பிரதானமாகச் சொல்லப்பட்ட மூன்றினுள் முதன்மையானது. அதாவது கோயில் என்றால் ஸ்ரீரங்கம். திருமலை என்றால் திருப்பதி. பெருமாள் கோயில் என்றால் காஞ்சி வரதராஜப் பெருமாள் சன்னதி.
பெரிய கோயில் என்றும், பூலோக வைகுண்டம் என்றும் போக மண்டபம் என்றும் போற்றப்படும் இத்தலத்தை, அண்டர் கோன் அமரும் அணியரங்கமென்றும், தென்திருவரங்கமென்றும், செழுநீர்த் திருவரங்கமென்றும் திட்கொடிமதில் திருவரங்கமென்றும் ஆழ்வார்கள் மாந்தி மகிழ்வர்.
பரமபதம், திருப்பாற்கடல், சூரிய மண்டலம், யோகிகளுடைய உள்ளக்கமலம், இவையனைத்தும் இனியவை எனக்கருதி எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் தானே மனமுவந்து இங்கு வந்து தங்கி, தேனும் பாலும், கன்னலும், நெய்யும் அமுதும் கலந்தாற்போன்று மறைந்து உறைகின்றாற். இங்கெல்லாம். மறைந்துறைகின்ற எம்பெருமான், இப்பூவுலகில் மாந்தரெல்லாம் தன்னைக் கண்ணாரக்கண்டு, தன் பேரழகை அள்ளிப்பருகிக்களிப்பெய்த தானே ஒரு அரங்கத்தைத் தெரிவு செய்து பள்ளிகொண்ட இடம்தான் ஸ்ரீரங்கம்.
எம்பெருமானின் பள்ளிகொண்ட திருக்கோலத்தையே பெயராகத்தாங்கி ஸ்ரீரங்கநாதன் பள்ளியென்றே அழைக்கப்பட்ட இவ்விடம், தமிழில் திருச்சீ ரங்க நாதன் பள்ளியாகி அவ்விதமே அழைக்கப்பட்டு காலப்போக்கில் திருச்சிராப்பள்ளியாகி தற்போது திருச்சியாயிற்று.
வரலாறு
இத்தலம் பற்றி எண்ணற்ற புராணங்களும், வடமொழி நூற்களும் பண்டைத் தமிழ் இலக்கியங்களும் விவரங்களை வாரியிறைக்கிறது.
இங்கு பள்ளி கொண்டுள்ள பெருமாள் சத்தியலோகம் எனப்படும் பிரம்மலோகத்தில் பிரம்மதேவரால் தினமும் பூஜிக்கப்பட்ட திருவாராதனப் பெருமாள் ஆவார்.
இப்பூவுலகில் சூரிய குலத்தில் வந்த மனு குமாரரான இட்சுவாகு என்னும் மன்னன் பிரம்மனைக் குறித்து கடுத்தவமியற்றினான். இவர் தவத்தை மெச்சிய பிரம்மன் இவருக்கெதிரில் தோன்றி வேண்டிய வரம் கேள் என்றான். அதற்கு இட்சுவாகு, பிரம்மனே. உம்மால் தினந்தோறும் பூஜிக்கப்படும் திருமாலின் திருவாராதன விக்ரகமே எனக்கு வேண்டுமென்று கேட்க பிரம்மனும் மறுப்பின்றி வழங்கினார். அப்பெருமானை அயோத்திக்கு கொணர்ந்த இட்சுவாகு பூஜைகள் நடத்தி வந்தான். திருப்பாற்கடலில் பள்ளிகொண்ட வண்ணத்தில் உள்ள இப்பெருமானே இட்சுவாகு மன்னன் முதல் இராம பிரான் வரையில் உள்ள சூரிய குலமன்னரெல்லாம் வழிபட்டு வந்த குலதெய்வமாயினார்.
இட்சுவாகு மன்னனால் விண்ணுலகில் இருந்து இங்கு கொண்டுவரப்பட்டு அவர் குலத்தோர்களால் பூஜிக்கப்பட்டு பின்பு எல்லோருக்கும் உரியவனானார். இப்பெருமாள் இட்சுவாகுவால் கொணரப்பட்டதால் இப்பெருமாள் இட்சுவாகு குலதனம் என்றே அழைக்கப்பட்டார்.
திரேதா யுகத்தில் இராமாவதாரம் மேற்கொண்ட திருமால் இராவணனையழித்து, அயோத்தியில் பட்டம் சூட்டிக்கொண்டார். இலங்கையிலிருந்து தன்னுடன் போந்த விபீஷணனுக்கு விடைகொடுத்து அனுப்பும்போது, தன் முன்னோர்களால் பிரம்மனிடமிருந்து கொணரப்பட்ட திருவாராதனப் பெருமாளை விபீஷணனுக்கு சீதனமாக கொடுத்தார். விபீஷணனும் இப்பெருமானைப் பெற்றுத் திரும்பியதை வால்மீகி தமது இராமாயணத்தில்
விபிஷனோபி தர்மாத்மா எஹ தைர் நைர்ருதைர்ஷபை
லப்தவா குலதனம் ராஜா லங்காம் ப்ராயாந்த மஹாயா
என்று கூறுகிறார்.
(வால்மீகி இராமாயணம் யுத்த காண்டம் 128 வது ஸர்க்கம், 87வது சுலோகம்.)
மிக்க பயபக்தியுடன் ப்ரணா வாக்ருதி என்ற விமானத்துடன் அப்பெருமானை எழுந்தருளச் செய்து இலங்கைக்கு விபீஷணன் கொண்டுவருங்காலை, வண்டிணம், முரல, குயில் கூவ, மயிலினம் ஆட, செழுநீர் சூழ தன் சிந்தைக்கு இனிய அரங்கமாகத் தோன்றிர். இந்த காவிரி, கொள்ளிட நதிகட் கிடையில் பள்ளி கொள்ள விரும்பிய திருமால் விபீஷணனுக்கு சற்றுக் களைப்பையும் அசதியையும் உண்டு பண்ண விபீஷணன் இப்பெருமாளை இவ்விருநதிக்கிடைப்பட்ட இவ்விடத்தில் சற்றே கிடத்தினான்.
அப்பொழுதே தன் உள்ளங்கவர்ந்த இடமாதலால் அசைக்க இயலா அளவிற்கு விபீஷணனும் செல்ல வேண்டிய தென்றிசை நோக்கி இன்றுள்ள வடிவில் பள்ளி கொண்டார்.
விபீஷணனும் விழுந்தான். தொழுதான், அழுதான் அலறினான். ஆற்றொன்னாமையால் அலமந்தான். இப்பகுதியை ஆண்டுவந்த சோழமன்னன் தர்ம வர்மன், என்பவன் இந்திகழ்ச்சியை அறிந்து ஓடிவந்து பெருமாளையும் தொழுது விட்டு விபீஷணனுக்கும் ஆறுதல் கூறினான்.
பித்துப் பிடித்த நிலையில் சின்னாட்கள் இங்கு தங்கியிருந்த விபீஷணனின் கனவில் வந்த எம்பெருமான் தான் இவ்விடத்தே பள்ளிகொள்ளத் திருவுள்ளம் பற்றியதை தெரிவித்து. நீ செல்லக்கூடிய பாதையை நோக்கியே கொண்டுள்ளேன். கவலை வேண்டாம் என்று கூறி, ஆண்டுக் கொருமுறை வந்து தன்னை. நான் பள்ளி வழிபட்டுச் செல்லுமாறும் அருளினார்
இதைத்தான் தொண்டரடிப் பொடியாழ்வார்.
‘”குடதிசை முடியை வைத்து
குணதிசை பாதம் காட்டி
வடதிசை பின்பு காட்டி
தென்திசை இலங்கை நோக்கி
கடல்நிறக் கடவுள் எந்தை
அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகு மாலோ
என் செய்கேன் உலகத்தீரே” என்பார்.
பின்னர் தர்மவர்மன் அவ்விமானத்தைச் சுற்றி சிறிய கோவில் எழுப்பி வழிபாடு செய்ய ஆவன செய்தான். இக்கோவில் காவிரியாற்றின் வெள்ளப் பெருக்கால் சிதல் மடைந்து, மண் அரித்துக் காடு சூழ்ந்து யாருக்கும் தெரியாவண்ணம் மறைந்து இருக்கையில் தர்மவர்மாவின் மரபில் வந்த கிள்ளிவளவன் இக்காட்டிற்கு வேட்டையாட வந்து ஒரு மர நிழலில் தங்கியிருக்கும்போது அம்மரத்தின் மீதிருந்த கிளி ஒன்று வைகுண்டத்தில் உள்ள மகாவிஷ்ணுவின் கோவிலான திருவரங்கம் இருந்த இடம் இது. இப்போதும் அக்கோவிலைக் காணலாமெனத் திரும்பத் திரும்பச் சொல்லியது. இதைக்கேட்டுப் பலவிடத்தும் தேடியலைந்தும் கோவிலைக்காணாது அயர்ந்த கிள்ளிவளவனின் கனவில் தன் இருப்பிடத்தை எம்பெருமான் தானே காட்டியருளினார். அவ்விடத்தைக் கண்ட கிள்ளிவளவன் மெய்சிலிர்த்து தொழுது நின்று மீளவும் மதிலும் கோபுரமும் எழுப்பினான்.
இவனுக்குப் பின் வந்த சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர மன்னர்கள், ஆழ்வார்கள், ஆச்சார்யார்கள் ஆகியோரின் தொடர்பணியால் இன்று உள்ள அளவு உயர்ந்தோங்கி செம்மாந்து நிற்கிறது திருவரங்கம்.
மூலவர்
ஸ்ரீரெங்கதாதன், பெரிய பெருமாள்
நம் பெருமாள், அழகிய மணவாளன் என்னும் திருப்பெயர்களும் உண்டு. ஆதிசேடன் மேல் பள்ளி கொண்டு தெற்கே திருமுகம் காட்டிய புஜங்க சயனம்
உற்சவர் – நம் பெருமாள்
தாயார் – ஸ்ரீரங்க நாச்சியார்
தீர்த்தங்கள்
இங்கு மொத்தம் 9 தீர்த்தங்கள்
1. சந்திரபுஷ்கரணி
2. வில்வ தீர்த்தம்
3. நாவல் தீர்த்தம்
4. அரசு தீர்த்தம்
5. புன்னை தீர்த்தம்
6. மகிழ் தீர்த்தம்
7. பொரசு தீர்த்தம்
8. கடம்ப தீர்த்தம்
9. மா தீர்த்தம்
இதில் இன்று இருப்பதும் பிரதானமானதும் சந்திர புஷ்கரணியே.
ஸ்தல விருட்சம் – புன்னை
விமானம் – ப்ரணா வாக்ருதி
காட்சி கண்டவர்கள்
வீடணன், தர்மவர்மன், கிள்ளிவளவன, சந்திரன்.
மேலும் சிறப்புக்கள்… விரைவில்….
Nice hare Krishna