பாஹ்ய-ஸ்பர்ஷேஷ்-வஸக்தாத்மா
விந்தத் யாத்மனி யத் ஸுகம்
ஸ ப்ரஹ்ம-யோக-யுக்தாத்மா
ஸுகம் அக்ஷயம் அஷ் னுதே
Synonyms:
பாஹ்ய-ஸ்பர்ஷேஷு — புறப் புலனின்பத்தில்; அஸக்த-ஆத்மா — பற்றுதல் கொள்ளாதவன்; விந்ததி — இன்புறுகிறான்; ஆத்மனி — ஆத்மாவில்; யத் — எதுவோ; ஸுகம் — சுகத்தை; ஸ: — அவன்; ப்ரஹ்ம-யோக — பிரம்ம யோகத்தால்; யுக்த-ஆத்மா — தன்னிறைவு கொண்டு; ஸுகம் — சுகம்; அக்ஷயம் — அளவற்ற; அஷ்னுதே — அனுபவிக்கிறான்.
Translation:
இத்தகு முக்திபெற்ற ஆத்மா ஜடப் புலனின்பங்களால் கவரப் படுவதில்லை, ஆனால் (ஸமாதி நிலையில்) எப்போதும் தன்னுள்ளே சுகத்தை அனுபவிக்கின்றான். இவ்விதமாக, பரத்தை தியானிப்பதால் தன்னுணர்வு உடையோன் எல்லை யற்ற சுகத்தை அனுபவிக்கின்றான்.
Purport:
மிகச்சிறந்த கிருஷ்ண பக்தரான யமுனாச்சாரியார் கூறுகிறார்:
யத் அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே
நவ-நவ-ரஸ தாமன்-யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத் அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச
” ஸ்ரீ கிருஷ்ணரின் திவ்யமான அன்புத் தொண்டில் ஈடுபட்ட பிறகு, அவரில் புதுப்புது ரஸங்களை உணரும் நான், காம சுகத்தைப் பற்றி எண்ணும் போதெல்லாம் அந்நினைவின் மீது காறி உமிழ்கிறேன். மேலும் என் உதடுகள் வெறுப்பினால் நெளிகின்றன.” பிரம்ம யோகத்தில் (கிருஷ்ண உணர்வில்) இருப்பவன், ஜடப் புலனின்பத்திற்கான சுவையை முற்றிலும் இழக்கும் அளவிற்கு இறைவனின் அன்புத் தொண்டில் மூழ்கியுள்ளான். ஜடத்தைப் பொறுத்தவரையில் காம சுகமே மிகவுயர்ந்த சுகமாகும். முழு உலகமும் இந்த மயக்கத்தில்தான் சுழன்று கொண்டுள்ளது. இந்த நோக்கம் இல்லையேல் லௌகீக மனிதனால் செயல்பட முடியாது. ஆனால் காம சுகத்தைத் தவிர்க்கும் கிருஷ்ண பக்தன், அஃது இல்லாமலே முழுத் திறனுடன் செயலாற்ற முடியும். இதுவே ஆன்மீக உணர்விற்கான சோதனையாகும். ஆன்மீகமும் காம சுகமும் வெவ்வேறு துருவங்கள். முக்தியடைந்த ஆத்மாவாக இருப்பதால், கிருஷ்ண பக்தன் எவ்வித புலனின்பத்தாலும் கவரப்படுவதில்லை.