by பக்தி யோகம் குழு
பாகவான் ஸ்ரீ சைதன்ய மகாபிரபு, ஸ்ரீ கிருஷ்ணரே ஆவார். கலியுகத்தில் மக்களுக்கு பக்தர் ஒருவர் எப்படி பகவானை வழிபட வேண்டும் என்பதை கற்றுக் கொடுப்பதற்காக, குறிப்பாக ஹரிநாமசங்கீர்த்தனத்தினை பரப்புவதற்காக தோன்றினார்.
பொதுவாக நாம் எவரையும் பகவானின் அவதாரம் என்று சாதாரணமாக ஏற்றுக் கொள்ள கூடாது. சாஸ்திரங்கள் மற்றும் சாதுக்கள் அவரை அவதாரம் என்று ஏற்றிருக்க வேண்டும். முக்கியமாக சாஸ்திரங்களில், அவருடைய ரூபம், செயல்கள், அவதரிக்கும் இடம், அவதார நோக்கம் என அனைத்தும் முங்குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும். இல்லையெனில் அவதாரமாக ஏற்கக் கூடாது.
இங்கு ஸ்ரீ சைதன்யர், முழுமுதற்கடவுளாகிய பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே தான் என்பதை வேத சாஸ்திரங்கள் வலியுறுத்துகிறன. அவற்றில் சில மேற்கோள்களை இங்கு காணலாம்.
1) ஸ்ரீமத் பாகவதம் (11.5.32)
கிருஷ்ண – வர்ணம் த்விஷா கிருஷ்ணம்
ஸாங்கோபாங்காஸ்த்ர – பார்ஷ்தம்
யக்ஞை: ஸங்கீர்த்தன-ப்ராயைர்
யஜந்தி ஹி ஸூ-மேதஸ:
கலியுகத்தில் சிறந்த புத்திமான்கள், சதா கிருஷ்ணருடைய நாமங்களைப் பாடிக் கொண்டிருக்கும் பகவானின் அவதாரத்தைக் (ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை) கீர்த்தனை என்ற யாகத்தாலேயே பூஜிக்கின்றனர். அவரது வர்ணம் கருமையில்லை என்றாலும் அவர் கிருஷ்ணரே ஆவார். அவர் தமது சகாக்களாலும், சேவகர்களாலும், ஆயுதங்களாலும், அந்தரங்கத் தோழர்களாலும் சூழப்பட்டிருக்கிறார்.
2 ) விஷ்ணு சஹஸ்ர நாம ஸ்தோத்ரா – 92
ஸ்வர்ண-வர்னோ ஹேமங்கோ வரங்கஸ் – சந்தனங்காதி
சந்யாச – க்ருச் சம: சாந்தோ நிஷ்த சாந்தி-பராயண:
ஸ்வர்ண-வர்னோ – அவர் பொன்னிற மேனியுடையவர்
ஹேமங்க – அவர் உருகியதங்கம் போன்றவர்
வரங்க – அவர் உன்னத அழகுடையவர்
சந்தன அங்காதி – பகவானின் உடல்முழுவதும் சந்தனம் பூசப்பட்டுள்ளன
சந்யாச-க்ருச் – அவர் தன்னடக்கமுள்ளவர். எல்லோரையும் சமமாக பாவிப்பவர்
சாந்த – அவர் முழு அமைதியுடையவர்.
நிஷ்தா – அவர் பகவானின் புனிதநாமத்தை ஜபிப்பதில் உறுதியானவர்.
சாந்தி-பராயண – அவர் பக்தி மற்றும் அமைதியின் மிக உயர்ந்த அடைக்கலம். அவர் மாயாவதி தத்துவ வாதங்களை வென்றார். அவர்களை வைஷ்ணவத்திற்கு மாற்றினார்
3. கருட புராணம்
அஹம் பூர்னோ பவிஷ்யாமி யுக-சந்த்யெள விஷேஷத;
மாயாபுரே நவத்வீபே பவிஷ்யாமி சசி-சூத:
கலியுகத்தின் முதல் பகுதியில் நான் பூரண ஆன்மீக உருவில் நவதீவுகளின் ஒன்றான மாயப்பூரில், சச்சிமாதாவின் மகனாக தோன்றுவேன்.
கலே ப்ரதம-சந்த்யாயாம் லக்ஷ்மி-காந்தோ பவிஷ்யதி
தாரு-ப்ரம்ம சமீப-ஸ்த: சந்யாசி கெளர-விக்ரஹ:
கலியுகதின் துவக்கத்தில் முழுமுதற் கடவுள் பொன்னிற மேனி உடையவராய் ஸ்ரீ லெக்ஷ்மியின் கணவராக, பகவான் ஜெகன்னாதர் வசிக்குக் இடத்தின் அருகில் வசிப்பார்.
இதன்படி ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த போது, அவருடைய நித்தியதுணைவியான ஸ்ரீமதி லெக்ஷ்மிபிரியாவை மணந்தார். பின் தனது 24வது வயதில் சந்நியாசம் மேற்கொண்டார். அதன்பிறகு அவர் பகவான் ஜெகன்னாதரின் புனித ஸ்தலமான ஜெகன்னாத்புரியில் (ஒரிஸ்ஸா மாநிலம்) வசித்தார். பகவான் ஜெகன்னாதர், தாரு-ப்ரஹ்ம வடிவில் வீற்றிருக்கிறார் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது. தாரு என்றால் மரம் என்று சம்ஸகிருதத்தில் அறியப்படுகிறது.
4. நரசிம்ம புராணம்
சத்யே தைத்ய-குலாதி-நாச-சமயே
திம்ஹோர்த்வ- மர்தயக்ருதீஸ்
த்ரேதாயம் தஸ-கந்தரம் பரிபவன்
ராமேதி நாமக்ருதி
கோபாலான் பரிபாலயன் வ்ரஜ-புரே
பாரம் ஹரன் துவாபரே
கெளரங்க: ப்ரிய-கீர்த்தன:
கலி-யுகே சைதன்ய-நாம-ப்ரபு:
முழுமுதற்கடவுள் சத்ய யுகத்தில் பாதி மனிதன், பாதி சிங்கம் உருவில் அவதரித்தார். அப்போது தைத்யர்களை வெகுவாக பாதித்திருந்த பயங்கர நோயை குணப்படுத்தினார். திரேதாயுகத்தில் ஸ்ரீராமராக அவதரித்து பத்துதலை ராவணணை வென்றார். துவாபரயுகத்தில், யார் பூமியின் பாரத்தை குறைத்து வ்ரஜபுரியில் உள்ள கோபாலர்களைக் காப்பாற்றினாரோ, அவரே கலியுகத்தில் பகவான் ஸ்ரீசைதன்யராக தோன்றி பொன்னிற மேனி உடையவராய் பகவானின் புனித நாமங்களை துதிப்பதில் பேரின்பம் அடைவார்.
5. பத்ம புராணம்
கலே ப்ரதம- சந்த்யாயாம் கெளரங்கோதம் மஹீ-தலே
பகீரதி – ததே ரமீ பவிஷ்யாமி சசி-சூத:
கலியுகத்தின் முதற் பகுதியில் தங்கத் திருமேனி உடையவராய், கங்கை நதிக்கரையின் மிக அழகிய இடத்தில் நான் சச்சி தேவியின் மகனாகத் தோன்றுவேன்
6. நாரத புராணம்
அஹம் ஏவ கலெள விப்ர நித்யம் ப்ரச்சன்ன விக்ரஹ:
பகவத்-பக்த-ரூபேன லோகான் ரக்ஷாமி சர்வதா
பகவானின் பக்தன் என்ற உருவில் என்னை மறைத்துக் கொண்டு, கலியுகத்தில் நான் எல்லா உலகங்களையும், அனைவரையும் ரட்சிப்பேன்.
த்விஜ புவிஜயத்வம் ஜயத்வம் பக்த-ரூபின:
கலெள சங்கீர்த்தனாரம்பே பவிஷ்யாமி சசி-சூத:
ஓ தேவர்களே, நீங்கள் கலியுகத்தில் பூமியில் தோன்றுங்கள். சங்கீர்த்தன இயக்கத்தை தோற்றுவிக்க நான் சச்சி அன்னையின் மகனாக அவதரிப்பேன்.
7. பவிஷ்ய புராணம்
ஆனந்தாஸ்ரு-கலா-ரோம ஹர்ஷ-பூர்ணம் தபோ-தன
ஸர்வே மம ஏவ த்ரக்ஷ்யந்தி கலெள சந்யாச ரூபினம்
ஓ தவ முனிவரே, கலியுகத்தில் ஒவ்வொருவரும் என்னுடைய உன்னத சந்நியாச ரூபத்தைக் காண்பர். நான் உன்னத பரவசத்தில் ஆனந்த கண்ணீர் வடிப்பதையும் மயிர்க்கூச் செறிதலையும் காண்பர்.
பகவான் சைதன்யார், கிருஷ்ணரின் நாமங்களை பாடி ஆடி சங்கீர்த்தன்ம் பண்ணும் போது ஆனந்த பரவசக்க்கடலில் மூழ்கிவிடுவார். அவர் பகவானிடமிருந்து பிரிந்த துயரத்தில் வாடினார். பக்தி பரவசத்தின் பகவானிடம் பக்தி ப்ரேமை அறிகுறிகளை கண்ணீர் பெருகுதல், குரல் தழதழத்தல். மயிர்க்கூச்செறிதல் போன்றவற்றை வெளிப்படுத்துவார்.
8. வாயு புராணம்
பெளர்ணமஸ்யம் பல்குணஸ்ய பல்குணி-ரிக்ஷ யோகத:
பவிஷ்யே கெளர-ரூபேன சசி-கர்பே புரந்தராத்
பெளர்ணமி தினம், பல்குண மாதம், பல்குணி நட்சத்திரத்தில், நான் பொன்னிற மேனியில் புரந்தரரால் சச்சியின் கர்பத்தில் தோற்றுவிக்கப்பட்டு அவதரிப்பேன்.
பக்தி-யோக ப்ரதாணாய லோகஸ்ய அநுக்ரஹாய ச
சந்யாச-ரூபம் ஆஸ்தாய க்ருஷ்ண-சைதன்ய நாம த்ருக்
மக்களை பக்தி சேவையில் ஈடுபடுத்த, அவர்கள் மேல் கருணை பொழிய நான் சந்தியாசம் ஏற்று “கிருஷ்ண சைதன்யர்” என்ற பெயரை ஏற்பேன்.
9. மத்ஸ்ய புராணம்
முண்டோ கெளர: ஸுதிர்காங்கஸ்
திரி- ஸ்ரோதஸ்-திர-சம்பவ:
தயாளு: கீர்த்தன-க்ரஹி பவிஷ்யாமி கலெள யுகே
கலியுகத்தில், நான் பொன்னிற மேனி உடைய வனாகவும், நான் உயரமானவனாகவும், தலை மழித்தும் இருப்பேன். நான் அவதரிக்கும் இடம் மூன்று நதிகள் சங்கமம் ஆகும். நான் மிகவும் கருணை வாய்ந்தவனாய் இருப்பேன். நான் எப்போதும் கிருஷ்ணனின் புனித நாமங்களை ஜபம் செய்வேன்.
பகவான் சைதன்யர், ஏக தண்ட சந்நியாசி, தலை மழித்து காணப்படுபவர். அது சந்நியாசிகளின் வழக்கம். மூன்று நதிகள் – கங்கை, யமுனை, சரஸ்வதி. (தற்போது மறைந்த உருவத்தில் உள்ளது) நவத்வீப்பில் ஓடுகின்றன.
10. ஸ்கந்த புராணம்
அந்த: கிருஷ்ண: பஹிர் கெளர:
சாங்கோபாங்கஸ்த்ர-பார்ஸத:
சசி-கர்பே சமாப் நூயாம் மாயா-மனுஷ-கர்ம-க்ருத்
உள்ளே கிருஷ்ணராகவும், ஆனால் வெளியில் தங்க உருவிலும், என்னுடைய சகாக்கள், சேவையாளர்கள், ஆயுதங்கள் மற்றும் அந்தரங்க சகாக்கள் சூழ வீற்றிருக்கும் நான், சச்சிதேவியின் கர்ப்பத்தில் தோன்றி, ஒரு மனித உருவை ஏற்றுக் கொள்வேன்.
11. முண்டக உபநிஷ்த் (3.3)
யதா பஷ்ய: பஷ்யதே ருக்ம வர்ணம்
கர்தாரம் ஈஸம் புருஷம் ப்ரஹ்மயோனிம்
ததா வித்வான் புண்ய பாபே விதுயா
நிரஞ்சன: பரமம் சம்யம் உபைதி
பிரம்மத்தின் மூலமும், பொன்னிற உருவத்தை உடையவருமான பகவானை யார் ஒருவர் உணர்கின்றாரோ, அவர் மிக உன்னத அறிவை அடைகிறார். மேலும் அவர் பாவ புண்ணிய செயல்களை கடந்து, உலக பிணைப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பகவானின் ஆன்மீகத்தளத்தை அடைகின்றார்.
HareKrishna