ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தோன்றுவதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பு, ஜெயதேவ கோஸ்வாமி வங்காள மன்னர் ஸ்ரீ லட்சுமண சேனாவின் நீதிமன்ற பண்டிதராக பணியாற்றினார். ஜெயதேவ மற்றும் பத்மாவதி (அவரது மனைவி, ஒரு நடனக் கலைஞர்) ஸ்ரீ கிருஷ்ணரை தீவிர பக்தியுடன் வழிபடுவார்கள். சிறிது காலம் கழித்து, நவத்விபாவின் சம்பஹட்டியில் உள்ள ஒரு புல் குடிசையில் நிம்மதியாக வாழ அவர் செழிப்பான அரச வாழ்க்கையை விட்டுவிட்டார். அங்கு ஜெயதேவ கீத கோவிந்தத்தை எழுதினார்.
ஒரு நாள் ஜெயதேவர் கீத கோவிந்தம் எழுதும் போது, ”ஸ்ரீமதி ராதாரணியின் தாமரை பாதங்களைத் தொட ஸ்ரீ கிருஷ்ணர் விழைந்தார்” என்று எழுதத் தூண்டப்படுகிறார். முழுமுதற் கடவுள் ஸ்ரீ கிருஷ்ணரின் நிலையை குறைக்கக் கூடிய ஒன்றைச் சொல்ல ஜெயதேவர் தயங்கினார், ராதா-மாதவாவின் மகா-பிரசாதத்தை ஏற்க்கும் முன்பு கங்கை குளியல் மூலம் தன்னை தூய்மை படுத்திக் கொள்ளச் சென்றார்.அவர் இல்லாத சமயத்தில், ஜெயதேவராக வேடமணிந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், கீத கோவிந்தாவில் ஒரு வரி எழுதினார்: “தேஹி பாத பல்லவம் உதரம்.” இதை எழுதிய பகவான் பத்மாவதியிடம் இருந்து பிரசாதத்தையும் ஏற்றுக்கொண்டார். குளியழுக்கு பிறகு வீட்டிற்க்கு வந்த ஜெயதேவ அந்த வரியைக் கண்டு ஆச்சரியப்பட்டார். அந்த மர்மத்தைப் புரிந்துகொண்டு, ஜெயதேவ ஆன்மீக மகிழ்ச்சியில் அழுதார், “பத்மாவதி !, நாம் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். ஸ்ரீ கிருஷ்ணரே , தேஹி பாத பல்லவம் உதரம் என்ற வரியை எழுதி,உன் கையிலிருந்து பிரசாதத்தையும் எற்றுக்கொண்டார்”
ராஸ நடனத்திற்கு முன்பு ஸ்ரீமதி ராதாராணி உணர்ந்த பிரிவினையின் தீவிர உணர்வுகளை கீத கோவிந்தாவில் வெளிப்படுத்துகிறார். இது ஸ்ரீ ராதா-ஷியாமசுந்தராவின் மிக நெருக்கமான லீலைகளை விவரிக்கிறது. ஸ்ரீ ஜெகந்நாத பூரியில் பகவான் ஸ்ரீ சைதன்யாவின் கம்பீரா லீலாவின் போது, ஸ்வரூபா தாமோதரா மற்றும் முகுந்தா ஆகியோர் தினமும் பாடிய கீத கோவிந்தாவைக் கேட்டு பகவான் ஸ்ரீ சைதன்யர் ஆனந்தம் அடைவார்.
ஜெயதேவ கோஸ்வாமி: ” மகிழ்சிகரமான இசை, மிக இனிமையான கவிதை நயம் மற்றும் நேர்த்தியான கலை மூலம் கீத கோவிந்தாவை பண்டிதர்கள் அறியட்டும் என்றார்.
ஜெயதேவர் பிருந்தாவனத்திற்குச் சென்று, பின்னர் ஸ்ரீ ஜெகந்நாத பூரியில் தன் இறுதி வாழ் நாளை கழித்தார். பகவான் ஜெகந்நாதரின் மகிழ்ச்சிக்காக கோவிலில் கீத கோவிந்தாவைப் தினமும் பாடுவதை அறிமுகப்படுத்தினார். இவரது சமாதி 64 சமாதிகள் (ஸ்ரீ ஜெகந்நாத பூரியில்) பகுதியில் உள்ளது.
ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி
வழங்கியவர்: கீதா கோவிந்த தாஸி
*************************************************
(இன்று ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி மறைந்த தினம் (3-2-2021) இந்த நாளில் , இந்த தூய பக்தரை நினைவில் கொண்டு உள்ள தூய்மையடைவோம் .)
**********
ஸ்ரீ ஜெயதேவ கோஸ்வாமி இந்திய வரலாற்றின் இணையற்ற பக்தி கவிகளில் ஒருவர். இந்தியாவில் கிருஷ்ண பக்தி உணர்ச்சிகள் தழைத்து ஓங்குவதற்கு இவரது பக்திப் பாடல்கள் முக்கிய பங்கு வகித்து வந்துள்ளன. இவரது கீதா-கோவிந்தமும் அதன் பகுதியான தசாவதார பாடலும் இன்றும் பக்தர்களிடையே பிரபலமானவை. தலைசிறந்த பக்தரான இவரது வாழ்வினை அறிவோம், வாரீர்.
ஜெயதேவரின் பிறப்பு
**********
ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு இவ்வுலகில் அவதரிப்பதற்கு சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், ஜெயதேவர் 12ஆம் நூற்றாண்டில் போஜதேவருக்கும் ரமாதேவிக்கும் நன்மகனாகத் தோன்றினார். இவரது பிறப்பிடம் வங்காளத்தின் பிர்பும் மாவட்டத்திலுள்ள கெந்துபில்வா என்று சிலர் கூறுகின்றனர், வேறு சிலரோ ஒடிஸாவிலுள்ள கெந்துளி சாசன் என்று கூறுகின்றனர். ஜெயதேவரின் பிறப்பிடம் குறித்து ஒடியர்களுக்கும் வங்காளர்களுக்கும் பல நூற்றாண்டுகளாக விவாதங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்றும்கூட அறிஞர்களிடையே இதுகுறித்து அபிப்பிராய பேதம் காணப்படுகிறது.
ஜெயதேவர் தமது சமஸ்கிருதக் கல்வியை கூர்மபடகம் என்ற ஊரில் கற்றார் என்பதை கல்வெட்டுகளிலிருந்து அறிகிறோம். அங்கே அவர் பாடல், இசை, நடனம் முதலியவற்றைக் கற்றுள்ளார். மேலும், அங்கேயே அவர் ஆசிரியராகவும் செயல்பட்டதாகத் தெரிகிறது.
ராதா-மாதவர் விக்ரஹங்கள்
***********
கெந்துபில்வா கிராமமானது சியூரி என்னும் நகரத்திலிருந்து சுமார் இருபது கிலோமீட்டர் தொலைவில் அஜய் என்னும் நதியின் கரையில் அமைந்துள்ளது. ஜெயதேவ கோஸ்வாமிக்கு ராதா-மாதவரின் விக்ரஹங்கள் இந்த நதிக்கரையில் கிடைத்தனர். இன்று இந்த ராதா-மாதவர் ஜெய்பூரில் உள்ளனர். ஜெயதேவ கோஸ்வாமி விருந்தாவனத்தில் ராதா-மாதவரை வழிபட்டபோது பணக்கார வணிகர் ஒருவர் ஒரு பெரிய கோயிலைக் கட்டிக் கொடுத்தார் என்றும், பின்னர் இஸ்லாமிய மன்னர்களின் படையெடுப்பின்போது விக்ரஹங்களை ஜெய்பூர் மன்னர் ஒருவர் பாதுகாப்பாக ஜெய்பூரில் வைத்து விட்டார் என்றும் கெளடீய வைஷ்ணவ நூல்கள் கூறுகின்றன.
நவத்வீபத்தில் ஜெயதேவரின் வாழ்க்கை
**********
வங்காளத்தின் நவத்வீப பகுதியில் ஜெயதேவர் நீண்ட காலம் வாழ்ந்ததாகக் குறிப்புகள் கூறுகின்றன. ஸ்ரீல பக்திவினோத தாகூர் தமது நவத்வீப தாம மஹாத்மிய நூலில் இவரது நவத்வீப வாழ்க்கையைப் பற்றி பின்வருமாறு எழுதியுள்ளார்: “ஜெயதேவர் எழுதிய தசாவதார பாடல்களைக் கேட்டு வங்காள மன்னர் இலக்ஷ்மண சேனர் மிகவும் மகிழ்ச்சியுற்றார். மன்னருடைய தலைமைப் பண்டிதரான கோவர்தன ஆச்சாரியர் இப்பாடல்களை எழுதியவர் ஜெயதேவர் என்பதை மன்னருக்கு எடுத்துரைத்தார். ஜெயதேவரை சந்திக்க விரும்பிய மன்னர் இலக்ஷ்மண சேனர் மாறுவேடத்தில் அவரது இடத்திற்குச் சென்றார். ஜெயதேவரிடம் மிகவுயர்ந்த பக்தருக்கான அனைத்து குணநலன்களும் இருப்பதைக் கண்டு அவரிடம் தமது அடையாளத்தைக் காட்டினார், ஜெயதேவரை அரண்மனைக்கு வந்து தம்முடன் வசிக்கும்படி வேண்டினார். ஆனால் ஜெயதேவரோ அரண்மனையின் சுகபோக வாழ்வில் தமக்கு நாட்டமில்லை என்றும், வற்புறுத்தினால் உடனடியாக ஜகந்நாத புரிக்குச் சென்று விடுவேன் என்றும் உறுதியாகக் கூறினார். மன்னர் மன்னிப்பு கோரினார்; இருப்பினும், அருகிலிருந்த சம்பட்டி என்ற அமைதியான கிராமத்தில் வசிக்குமாறு வேண்டினார்.
“ஜெயதேவர் ஒப்புக்கொள்ள மன்னர் அவர் வாழ ஒரு குடிசையை அந்த ஊரில் அமைத்துக் கொடுத்தார். செண்பக மரங்கள் நிறைந்த அவ்விடத்தில் ஜெயதேவர் ஸ்ரீ ராதா-மாதவரை தரிசித்தார். மேலும், அவர்கள் இருவரின் இணைந்த வடிவமும் செண்பக நிற அவதாரமுமான ஸ்ரீ கௌராங்க மஹாபிரபுவையும் அங்கே தரிசித்தார்.”
கொல்கத்தாவைச் சேர்ந்த பாசுமரி சாஹித்ய மந்திர் வெளியிட்ட கீதா-கோவிந்த நூலில், ஜெயதேவ கோஸ்வாமி ஒடிஸா மன்னரின் அரசவைப் புலவர் என்றும், மன்னர் இலக்ஷ்மண சேனரின் ஆட்சிக் காலத்தில் ஜெயதேவருக்கு பெருமதிப்பு கொடுக்கப்
பட்டிருந்தது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜெயதேவரின் திருமணம்
*********
ஜெயதேவரின் திருமணம் பகவான் ஜகந்நாதருடைய விருப்பத்தினால் நிகழ்ந்தது.
பிராமணர் ஒருவருக்கு நெடுங்காலமாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்து, ஒரு பெண் குழந்தை பிறந்தது. ஜகந்நாதரின் தீவிர பக்தரான அவர் அப்பெண்ணை (பத்மாவதியை) திருமண வயது வந்தவுடன் புரி ஜகந்நாதரிடம் கொண்டு சேர்த்தார். பகவான் ஜகந்நாதர் தம் பக்தரான ஜெயதேவருக்கு பத்மாவதியை மணமுடிக்குமாறு கூறினார். அந்த பிராமணரும் ஜெயதேவரிடம் பத்மாவதியை ஒப்படைத்து விட்டுச் சென்று விட்டார்.
ஆனால் திருமண வாழ்வில் சற்றும் மனமில்லாத ஜெயதேவர் பத்மாவதியிடம், “நீ எங்குச் செல்ல விரும்புகிறாயோ அங்கே உன்னை பத்திரமாக விட்டு விடுகிறேன். ஆனால் நீ இங்கே இருக்க முடியாது,” என்று கூறினார். பத்மாவதி அழத் தொடங்கினாள், “என் தந்தை பகவான் ஜகந்நாதரின் ஆணையின் பேரில் தங்களுக்கு மணமுடிக்கவே என்னை இங்கு கொண்டு வந்தார். நீங்களே எனது கணவர், நீங்களே எனக்கு எல்லாம், உங்களைத் தவிர வேறு சொந்தம் எனக்கு இல்லை. என்னை ஏற்றுக்கொள்ளாவிடில் தங்கள் திருவடிகளியிலேயே உடலை மாய்த்துக் கொள்வேன்.”
அதன் பிறகு அவளைக் கைவிட மனமின்றி, ஜெயதேவர் இல்லற வாழ்வில் ஈடுபட்டார்.
ஜெயதேவர் வாழ்வில் நிகழ்ந்த அற்புதங்கள்
*********
அவர் கெந்துபில்வாவில் வாழ்ந்து வந்த சமயத்தில் தினமும் கங்கையில் நீராடச் செல்வார். ஒருநாள் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கங்கைக்குச் செல்லவில்லை. ஆயினும், அன்று கங்கா தேவியே அவரது கிராமத்திற்கு வந்துவிட்டாள். அதன் நினைவாக இன்றும் இந்தியாவில் மாக மாதம் முதல் நாளன்று (சங்கராந்தி நாளன்று) “ஜெயதேவ மேளா” என்ற பெயரில் திருவிழா நடைபெறுகிறது.
கீதா-கோவிந்தத்தின் மகிமை
**********
ஜெயதேவரின் பாடல்களில் ராதா-கிருஷ்ணரின் லீலைகளை எடுத்துரைக்கும் கீதா-கோவிந்தம் தலைசிறந்த நூலாகத் திகழ்கிறது. இந்நூல் அந்த தெய்வீகக் காதலை அற்புத வரிகளுடன் அழகான இசையுடன் வழங்குகிறது. ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு கீதா-கோவிந்தத்தின் பாடல்களைத் தமது மிக அந்தரங்க சேவகர்களான ஸ்வரூப தாமோதரர் மற்றும் இராமானந்த ராயருடன் இணைந்து, கேட்டு, விவாதித்து பிரேமையின் பரவசத்தில் திளைப்பது வழக்கம்.
கீதா-கோவிந்தத்தின் முன்னுரையில் ஜெயதேவர் பின்வருமாறு எழுதியுள்ளார்: “கீதா-கோவிந்தம் என்னும் இந்த இலக்கியம் ராதா-கிருஷ்ணரின் நெருக்கமான லீலைகளை வர்ணிக்கின்றது. பக்தியில் முதிர்ச்சிபெற்ற பக்தர்களால் பகவானுக்குத் தொண்டு புரிந்து வழிபட வேண்டிய நூல் இது. எப்போதும் தங்கள் மனதில் ஸ்ரீ ஹரியை நினைத்துக் கொண்டிருக்கும் பக்தர்களுக்காக, பகவானின் அந்தரங்க லீலைகளை தெய்வீகப் பாடல்களாக இங்கே எழுதியுள்ளேன். ஆன்மீகத்தில் முன்னேறியுள்ள தூய ஆத்மாக்கள் கவனத்துடன் இதைக் கேட்க வேண்டுகிறேன்.”
இருப்பினும், நமது ஆச்சாரியரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இதுகுறித்து நமக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுக்கிறார்: “கீதா-கோவிந்தம் பக்தித் தொண்டின் தெய்வீக ரஸங்கள் நிறைந்த விசேஷ பாடல்களைக் கொண்ட நூலாகும். இது பரபிரம்மனின் மிகவுயர்ந்த லீலைகளை வர்ணிக்கின்றது. இவ்வுலகில் இதற்கு இணையான நூல் வேறு எதுவும் கிடையாது. சாதாரண மக்களால் பரபிரம்மனின் சிருங்கார ரஸத்தினை உணர முடியாது என்பதாலும், அவர்கள் எப்போதும் பௌதிக இன்பத்தில் ஆர்வம் கொண்டிருப்பதாலும், ஸ்ரீ கீதா-கோவிந்தத்தினைக் கற்பது அவர்களுக்கு நல்லதல்ல. ஜெயதேவ கோஸ்வாமி தமது நூலை அத்தகு வாசகர்களுக்கு வழங்கவில்லை, உண்மையில் அத்தகையோர் நூலைப் படிப்பதற்கு அவர் தடை விதித்துள்ளார்.” (ஸஜ்ஜன தோஷணி 7/2)
பகவான் ஜகந்நாதரின் ஆர்வம்
*********
கீதா-கோவிந்தத்தின் பாடல்களை பகவான் ஜகந்நாதர் எப்போதும் விரும்பிக் கேட்பார். ஒருமுறை இளம் பெண் ஒருத்தி கத்தரிக்காய் தோட்டத்தில் கீதா-கோவிந்தத்தைப் பாடிக் கொண்டிருந்தாள். அதில் மயங்கிய ஜகந்நாதர் அவள் பின்னாலேயே போகத் தொடங்கினார். அவருடைய ஆடைகள் கத்தரிக்காய் தோட்டத்து முட்களால் கிழிந்து போனதைக் கண்ட பூஜாரிகளும் மன்னரும் காரணத்தைக் கண்டறிந்தனர். எனவே, தினந்தோறும் கோயிலிலேயே கீதா-கோவிந்த பாடல்களைப் பாடுவதற்கு அவர்கள் ஏற்பாடு செய்தனர்.
கிருஷ்ணரே எழுதிய வரிகள்
************
ஜெயதேவரைப் பற்றி பல கதைகள் உள்ளன. அவற்றில் கீழ்க்காணும் சம்பவம் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
அது ஜெயதேவர் கீதா-கோவிந்தத்தை எழுதிக் கொண்டிருந்த சமயம். அதில் அவர் ஒரு குறிப்பிட்ட உணர்ச்சிகரமான நிகழ்வை, ராதாராணிக்கும் கிருஷ்ணருக்கும் இடையிலான நெருக்கமான உறவை வர்ணித்துக் கொண்டிருந்தார். இதில் கிருஷ்ணர் ராதாராணியைவிட தாழ்ந்த நிலையில் இருப்பதாகத் தோன்றவே, ஜெயதேவர், அவ்வாறு எழுதலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில், அதை அப்படியே விட்டுவிட்டு கங்கைக்கு நீராடச் சென்றார்.
அப்போது கிருஷ்ணரே ஜெயதேவரின் வடிவில் அவரது வீட்டிற்கு வந்து, மேஜையிலிருந்த ஓலைச்சுவடியில் ஒரு வரியை எழுதி, பத்மாவதியிடம் உணவருந்தி விட்டுச் சென்றார். கங்கையில் நீராடித் திரும்பிய உண்மையான ஜெயதேவர் பத்மாவதியிடம் பிரசாதம் பரிமாறும்படி கூற, பத்மாவதி, “இப்போதுதானே சாப்பிட்டீர்கள்!” என ஆச்சரியப்பட்டு, நடந்ததை விவரித்தாள்.
ஜெயதேவர் ஓலைச்சுவடியில் புதிதாக எழுதப்பட்ட வரிகளில் மை காயாமல் இருந்ததைக் கண்டார். தேஹி பத பல்லவம் உதரம் என்ற வரிகளே அவை. அதன் பொருள், “கிருஷ்ணர் ஸ்ரீ ராதையின் தாமரைத் திருவடிகளுக்கு தலைவணங்குகிறார்,” என்பதாகும். ஜெயதேவர் கண்களில் கண்ணீர் ததும்பியபடி பத்மாவதியிடம் கூறினார், “என்னே அதிசயம்! எதை எழுதத் தயங்கினேனோ அதுவே எழுதப்பட்டுள்ளது. கிருஷ்ணரே தம் கையால் இவ்வரிகளை எழுதியுள்ளார். நீ மிகவும் அதிர்ஷ்டசாலி, உன் கையால் அவர் பிரசாதத்தையும் ஏற்றுள்ளார்.”
ஸ்ரீல பக்திவினோத தாகூர் கூறுகிறார்: “சண்டிதாஸர், வித்யாபதி, பில்வமங்கல தாகூர், ஜெயதேவ கோஸ்வாமி ஆகியோர் சைதன்ய மஹாபிரபுவின் காலத்திற்கு முன்பாக வாழ்ந்திருந்தாலும், சைதன்ய மஹாபிரபுவின் இதயத்தில் தோன்றிய பக்தி பாவனைகளை இவர்கள் அப்படியே எழுதியிருக்கிறார்கள்.”
கொள்ளையர்களுக்கும் கருணை
*********
ஒருமுறை ராதா-மாதவரின் சேவைக்காக ஜெயதேவர் செல்வம் ஈட்டி வரும் வழியில், கொடும் கொள்ளையர்கள் நால்வர் அவரிடமிருந்து அச்செல்வத்தைப் பறித்து, கை கால்களை உடைத்து பாழும் கிணற்றில் தள்ளி விட்டு சென்று விட்டனர். பகவானின் கருணையினால் அவ்வழியே வந்த அந்நாட்டு மன்னர், ஜெயதேவரைக் காப்பாற்றி அரண்மனைக்குக் கொண்டு வந்தார், ஜெயதேவரும் நலமடைந்தார்.
சிறிது காலம் கழித்து, இந்தக் கொள்ளையர்கள் மன்னரின் அரண்மனைக்கு நல்லவர்களைப் போல வந்தனர். ஜெயதேவர் அவர்களைக் கண்டுபிடித்து விட்டார். இருப்பினும், அவர் அவர்களை மன்னித்தது மட்டுமின்றி, மன்னரிடம் பரிந்துரை செய்து அவர்களுக்கு செல்வத்தையும் கொடுத்து அனுப்பினார், வழித்துணைக்காக வீரர்கள் சிலரையும் அனுப்பினார்.
என்ன நல்லது செய்தாலும் கொள்ளையர்கள் தீயவர்கள்தானே! சிறிது தூரம் சென்றவுடன் கொள்ளையர்கள் அந்த வீரர்களிடம் கூறினர், “இதுவரை எங்களுக்குப் பாதுகாப்பு கொடுத்தது போதும். இனிமேல் நாங்களே சென்று விடுவோம். ஆனால் நாங்கள் கூறும் ஒரு விஷயத்தை மன்னரிடம் கூறவும். இந்த ஜெயதேவர் மாபெரும் குற்றத்தைச் செய்து அண்டை நாட்டு மன்னரால் தண்டிக்கப்பட்டவர். அந்த தண்டனையை நாங்கள்தான் நிறைவேற்றினோம். இந்த நாட்டு மன்னரிடம் நாங்கள் இதைக் கூறிவிடக் கூடாது என்பதற்காக ஜெயதேவர் எங்களுக்கு நிறைய செல்வத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார்.” இவ்வாறு அவர்கள் ஜெயதேவரின் மீது வீண்பழியைச் சுமத்த, உடனடியாக பூமி இரண்டாகப் பிளந்து அவர்கள் நால்வரையும் உள்ளே இழுத்துக் கொண்டது.
மறைவு
******
ஜெயதேவரின் இரண்டு பாடல்கள் சீக்கிய மதத்தின் குரு கிரந்த ஸாகிப்பிலும் இடம் பெற்றுள்ளன. அவர் வாழ்ந்து எட்டு நூற்றாண்டுகள் ஆனபோதிலும், அவரது அஷ்டபதிகள் இன்றும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பிரபலமாகத் திகழ்கின்றன. இவரது பாடல்கள் வங்காளம், ஒடியா மட்டுமின்றி, ஆந்திரா, தெலுங்கானா, தமிழ்நாடு, கேரளா ஆகிய பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. குச்சுப்பிடி, கதகளி, பரதநாட்டியம் ஆகியவற்றில் இவரது பாடல்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
ஜெயதேவ கோஸ்வாமி தமது இனிமையான பாடல்களின் மூலமாகத் தூய பக்தியில் நிலைபெற்றிருந்தார். அவருடைய மறைவுகுறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. அவருடைய சமாதி ஜகந்நாத புரியில் 64 சமாதிகளுக்கு அருகில் இருப்பதை வைத்து, அவர் புரியில் மறைந்தார் என்று ஆச்சாரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
“இக்கதை பகவத் தரிசனம் என்னும் பத்திரிகையிலிருந்து எடுக்கப்பட்டது. http://www.tamilbtg.com“