Tuesday, January 28

குறளின் குரல் (நான் யார் ?)

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

நான் என்பது இந்த உடம்பு அன்று , ஆத்மா என்பதை பகவத் கீதை இரண்டாம் அத்யாயம் விளக்குகின்றது. ஆத்மா அழியாதது , உடல் விட்டு உடல் மாறக் கூடியது .

 ” வாஸாம்ஸி ஜீர்ணானி யதா விஹாய நவானி க்ருஹ்ணாதி நரோ (அ)

பராணி ததா ஷரீராணி விஹாய ஜீர்னான் யன்யானி ஸம்யாதி நவானி தேஹி”

(- பகவத் கீதை 2.22)

 “பழைய ஆடைகளைப் புறக்கணித்து , புதிய ஆடைகளை ஒருவன் அணிவதைப் போன்றே , பழைய , உபயோகமற்ற உடல்களை நீக்கி, புதிய உடல்களை ஆத்மா ஏற்கின்றது ” .

உடம்பு வேறு , உயிர் ( ஆத்மா ) வேறு , உடம்போடு உயிருக்குள்ள . உறவு , தான் இருந்த முட்டையெனும் கூடு தனியே இருக்க அதை விட்டு வேறிடத்திற்குப் பறவை பறந்தாற் போன்றது . இதை வள்ளுவர் தெளிவாக நிலையாமை அதிகாரத்தில் ,

“ குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே
   உடம்பொடு உயிரிமை நட்பு”

– திருக்குறள் 338

            இந்த உயிரானது பல உடம்பினுள் மீண்டும் மீண்டும் புகும் என்பதைக் காட்டி , துச்சமான , அறியாமையாகிய மயக்கத்தைக் கொடுக்கின்ற இந்த உடம்பினுள் இருக்கும் உயிருக்கு நிலையான வீடு அமையவில்லையா என்று கேட்கின்றார் .

“புக்கில் அமைந்தின்று கொல்லே உடம்பினுள்
துச்சில் இருந்த உயிர்க்கு “

– திருக்குறள் 340

நான் ஒரு ஆத்மா என்றுணர்ந்து , நிலையான இடம் தேடுதல் முக்கியம் , நிலையற்ற உடம்பு அழிவதைக் கண்டு வருந்தக் கூடாது . மேலும்  வள்ளுவர்

“இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக்
 கையாறாக் கொள்ளாதாம் மேல்
–  திருக்குறள் 627

 ” உடம்பு என்பது துன்பத்திற்கு இலக்காகக் கூடியது என்பதை உணர்ந்த அறிவிற் சிறந்த மேலோர் தன் உடலுக்கு ஏற்படும் துன்பத்தை ஒரு போதும் துன்பமாகக் கருத மாட்டார்கள் ” என்று கூறுகின்றார் .

 பகவான் கிருஷ்ணர் இந்தக் கருத்தை

 ” தேஹினோ ( அ ) எஸ்மின்யதா தேஹே கௌமாரம் யௌவனம் ஜரா
ததா தேஹான்தரப் பிராப்திர் தீரஸ் தத்ரத முஹ்பதி ”
-( பகவத் கீதை 2.13 )

“உடல் பெற்ற ஆத்மா சிறுவயதிலிருந்து இளமைக்கும் , இளமையிலிருந்து முதுமைக்கும் மாறுவது போலவே மரணத்தின் போது வேறு உடலுக்கு மாறுகின்றது . தன்னை உணர்ந்த ஆத்மா ( தீரன் ) இது போன்ற மாற்றத்தால் திகைப்பதில்லை “

உடல் முழுவதும் உணர்வு பரவியிருப்பதை அனைவரும் அறிந்து கொள்ள முடியும் . உடலின் ஒரு பகுதியிலோ உடல் முழுவதுமோ ஏற்படும் இன்ப துன்பங்களை அனைவரும் உணர்கின்றனர் . இவ்வாறு பரவியுள்ள உணர்வு , ஒருவரின் சொந்த சரீரம் என்ற வரம்பிற்கு உட்பட்டது . ஓர் உடலின் இன்ப துன்பங்கள் மற்றவர்களுக்கு தெரியாது . எனவே ஒவ்வொரு உடலும் தனி ஆத்மாவை உடையதாகும் . ஆத்மா உடலுள் உள்ளதால் தனிப்பட்ட உணர்வு உள்ளது . மேலும் உடலே எடுக்காவிட்டாலும் ஆத்மா உணர்வுள்ளது என்பதை வேத இலக்கியங்கள் மூலம் உணர்கின்றோம் .

ஆத்மாவின் அளவு , ஒரு ரோம நுனியின் பத்தாயிரத்தில் ஒரு பங்கு என்று வர்ணிக்கப்பட்டுள்ளது . ஷ்வேதாஸ்வதர உபநிஷத் ( 5.9 ) இதனை உறுதிபடுத்தியுள்ளது .

“பாலக்ர ஷ பாகஸ்ய ஷத்தா கல்பிதஸ்ய ச
பாகோ ஜீவ : ஸ விக்ஞேயா ஸ சானந்த்யாய கல்பதே “

          ஆன்மீக அணுக்கள் எண்ணற்றவை . இந்த மிகச் சிறிய ஆன்மீகத்துகள் உணர்வுள்ளதால் , உடல் முழுவதும் உணர்வு பரவியுள்ளது . சக்தி வாய்ந்த மருந்தின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவுவதைப் போல ஆன்மீக ஆத்மாவின் ஆதிக்கம் உடல் முழுவதும் பரவியுள்ளது . உடலில் பரவியுள்ள உணர்வே ஆத்மா இருப்பதற்கு ஆதாரம் . உணர்வற்ற ஜடவுடல் பிணம் என்பதைப் பாமரனும் அறிவான் . எந்தவித பௌதிக , வேதியியல் முறையினாலும் பிணத்தினுள் உணர்வை மீண்டும் புதுப்பிக்க முடியாது . எனவே உணர்வென்பது ஜடப் பொருள்களின் கலவையினால் தோன்றுவதல்ல , ஆன்மிக ஆத்மாவினால் ஏற்படுகிறது . ஆன்மிக ஆத்மாவின் நிலை என்ன என்பதை எல்லா வேதங்களும் தெரிவிக்கின்றன . மேலும் அறிவுள்ள எந்த மனிதனாலும் இதனை அனுபவப் பூர்வமாக அறிய முடியும் .

       அறிவிழந்த இரு வகையினருள் , ஒரு வகையினர் ஆத்மா இல்லை என்று வாதாடுவர் . மற்றவர் இந்த ஆத்மாவை எங்கும் நிறைந்த விஷ்ணு தத்துவமாக எண்ணுவர் . உடலின் இயக்க சக்திகள் யாவும் இதயத்திலிருந்து உருவாகின்றன என்று விஞ்ஞானிகள் அறிவர் . ஆனால் சக்தியின் உற்பத்தி மூலம் , ஆத்மா என்பதை இவ்விஞ்ஞானம் காண இயலாமல் இருக்கின்றது . ஆத்மாவுக்கு இயல்பான இடம் உடம்பினுள் இதயம் என்றும் , அதனுடன் பரமாத்மாவாக இறைவன் இருக்கிறான் என்றும் , பகவத் கீதை , பாகவதம் போன்ற வேத நூல்கள் கூறுகின்றன .

         எப்படி சூரியக் கதிரில் நுண்ணிய ஒளி பொருந்திய மூலக் கூறுகள்  உள்ளனவோ ( ஃபோடான் ) அது போல் , எண்ணற்ற உணர்வுள்ள ஆத்மாக்கள் இறைவனுடைய பகுதிகளாக உள்ளன .

        எனவே வேத அறிவைப் பின்பற்றினும் சரி , நவீன அறிவைப் பின்பற்றினும் சரி , உடலில் ஆன்மீக ஆத்மா இருப்பதை யாராலும் மறுக்க இயலாது.பகவத் கீதையில் முழுமுதற் கடவுளான கிருஷ்ணர் ஆத்ம விஞ்ஞானத்தைத் தெளிவாகக் கூறுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question