ஸமோ (அ)ஹம் ஸர்வ-பூதேஷு
ந மே த்வேஷ்யோ (அ)ஸ்தி ந ப்ரிய:
யே பஜந்தி து மாம் பக்த்யா
மயி தே தேஷு சாப்-யஹம்
Synonyms:
ஸம — சமமானவன்; அஹம் — நான்; ஸர்வ-பூதேஷு — எல்லா உயிரினங்களுக்கும்; ந — யாருமில்லை; மே — எனக்கு; த்வேஷ்ய: — வெறுக்கின்ற; அஸ்தி — இருக்கின்றனர்; ந — இல்லை; ப்ரிய: — பிரியமான; யே — யாரொருவர்; பஜந்தி — திவ்யமான தொண்டில் ஈடுபட்டவர்; து — ஆயினும்; மாம் — எனக்கு; பக்த்ய — பக்தியில்; மயி — என்னில் உள்ளனர்; தே — அத்தகையோர்; தேஷு — அவர்களில்; ச — கூட; அபி — நிச்சயமாக; அஹம் — நான்.
Translation:
நான் யாரிடமும் பொறாமை கொள்வதோ, பாரபட்சம் காட்டுவதோ இல்லை. நான் அனைவருக்கும் சமமானவன். ஆயினும் பக்தியுடன் எனக்கு அன்புத் தொண்டு புரிபவன் யாராயினும், அவன் எனது நண்பன். அவன் என்னில் இருக்கிறான். நானும் அவனுக்கு நண்பனாகிறேன்.
Purport:
கிருஷ்ணர் எல்லாருக்கும் சமமானவர், அவருக்கு விசேஷமான நண்பர் எவரும் இல்லை என்றால், அவருடைய திவ்யமான தொண்டில் எப்போதும் ஈடுபட்டுள்ள பக்தர்களிடம் அவர் விசேஷ கவனம் செலுத்தவது ஏன்? என ஒருவர் கேள்வி எழுப்பலாம். ஆனால் இது பாரபட்சம் அல்ல, இயற்கையானது. இவ்வுலகில் கொடை வள்ளலாக விளங்கும் மனிதன். தன்னுடைய குழந்தைகளிடத்தில் விசேஷ கவனம் செலுத்துகிறான். எந்த உருவத்தில் இருந்தாலும் எல்லா உயிர்வாழிகளும் தனது மகன்களே என்று கூறும் பகவான், ஒவ்வொருவரின் வாழ்க்கைத் தேவைகளை தாராளமாக அளிக்கிறார். பாறை, நிலம், நீர் போன்ற வேறுபாடு ஏதுமின்றி எல்லா இடங்களிலும் மழையைப் பொழியும் மேகத்தை போன்றவர் அவர். இருப்பினும், தனது பக்தர்களிடம் தனிக்கவனம் செலுத்துகின்றார். எப்போதும் கிருஷ்ண உணர்வில் இருக்கும் அத்தகு பக்தர்கள், கிருஷ்ணரில் திவ்யமாக நிலை பெற்றிருப்பதாக இங்கே குறிப்பிடப்பட்டுள்ளது. “கிருஷ்ண உணர்வு” எனும் சொல், அத்தகு உணர்வில் இருப்பவர்கள் கிருஷ்ணரில் நிலைபெற்று ஜீவன் முக்தர்களாக வாழ்;கின்றனர் என்பதைக் குறிக்கின்றது. மயி தே, “அவர்கள் என்னில் உள்ளனர்” என்று பகவான் இங்கே மிகத் தெளிவாகக் கூறியுள்ளார். எனவே, பகவானும் அவர்களிடம் உள்ளார் என்பது இயற்கையே. இதுவே அன்புப் பரிமாற்றம். யே யதா மாம் ப்ரபத்யந்தே தாம்ஸ் ததைவ பஜாம்-யஹம், “யாரொருவன் என்னிடம் சரண்டைகிறானோ, அவனது சரணாகதிக்கு ஏற்ப அவனை கவனிக்கிறேன்” என்ற வரிகளும் இதே கருத்தை விளக்குகின்றன. இறைவன், பக்தன்—இருவருமே உணர்வுடையவர்கள் என்பதால் இத்தகு திவ்யமான அன்புப் பரிமாற்றம் சாத்தியமாகின்றது. தங்க மோதிரத்தில் வைரத்தை பதிக்கும்போது அது மிகவும் அழகாகத் தோன்றுகிறது. தங்கம் புகழ் பெறுகின்றது, அதே சமயத்தில் வைரமும் புகழப்படுகிறது. பகவானும் உயிர்வாழியும் நித்தியமாக ஜொலிக்கக்கூடியவர்கள், இருப்பினும், பரம புருஷரின் தொண்டில் உயிர்வாழி நாட்டம் பெறும்போது, அவன் தங்கத்தைப் போன்று தோன்றுகிறான். இறைவன் வைரம் என்பதால், இந்த சேர்க்கை மிகவும் அருமையானதாகும். உயிர்வாழிகள் தங்களது தூய நிலையில், ‘பக்தர்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். பரம புருஷர் தனது பக்தர்களின் பக்தனாக ஆகிறார். பக்தனுக்கும் பகவானுக்கும் இடையில் இத்தகு அன்பு பரிமாற்றம் இல்லையெனில், உருவவாத தத்துவத்திற்கு இடமே இல்லை. அருவவாதக் கொள்கையில், பரமனுக்கும் உயிர்வாழிக்கும் இடையில் எவ்வித அன்புப் பரிமாற்றமும் கிடையாது, ஆனால் உருவவாத தத்துவத்தில் அந்த பரிமாற்றம் உண்டு.
பகவான் கற்பக மரத்தை போன்றவர் என்றும் அவரிடமிருந்து எதை விரும்பினாலும் அதனை அவர் வழங்குகிறார் என்றும் அடிக்கடி உதாரணம் கொடுக்கப்படுகின்றது. இருப்பினும் இங்கே கொடுக்கப்பட்டுள்ள விளக்கம் மேலும் பூரணமாகனதாகும். பகவான் தனது பக்தர்களிடம் தனிக் கவனம் செலுத்திகிறார் என்று இங்கே கூறப்பட்டுள்ளது. இது பக்தர்களின் மீது பகவான் காட்டும் விசேஷ கருணையாகும். இறைவனின் இத்தகு உறவுப் பரிமாற்றத்தினை கர்ம விதிகளுக்கு உட்பட்டதாகக் கருதக் கூடாது. இந்தப் பரிமாற்றம், பகவானும் அவரது பக்தர்களும் செயல்படும் திவ்ய நிலையைச் சார்ந்ததாகும். பகவானுக்குச் செய்யப்படும் பக்தித் தொண்டு இந்த ஜடவுலகின் செயலல்ல; நித்தியமும் ஆனந்தமும் பூரண அறிவும் ஆதிக்கம் செலுத்தும் ஆன்மீக உலகைச் சேர்ந்ததாகும்.