அனன்யாஷ் சிந்தயந்தோ மாம்
யே ஜனா: பர்யுபாஸதே
தேஷாம் நித்யாபி யுக்தானாம்
யோக-க்ஷேமம் வஹாம்-யஹம்
Synonyms:
அனன்யா: — வேறு குறிக்கோள் இன்றி; சிந்தயந்த: — ஒருமுகப்படுத்தி; மாம் — என்னை; யே — எந்த; ஜனா: — ஜனங்கள்; பர்யுபாஸதே — முறையாக வழிபடுகின்றனரோ; தேஷாம் — அவர்களுக்கு; நித்ய — நித்தியமாக; அபியுக்தானாம் — பக்தியில் நிலைபெற்று; யோக — தேவைகள்; க்ஷேமம் — பாதுகாப்பு; வஹாமி — அளிக்கின்றேன்; அஹம் — நான்.
Translation:
ஆனால் எனது திவ்ய ரூபத்தின் மீது தியானம் செய்துகொண்டு, களங்கமற்ற (அனன்ய) பக்தியுடன் என்னை நித்தியமாக வழிபடுபவர்களுக்கோ, அவர்களுக்கு வேண்டியவற்றைக் கொடுத்தும், அவர்களிடம் இருப்பவற்றை காத்தும் நான் பாலிக்கின்றேன்.
Purport:
கிருஷ்ண உணர்வின்றி ஒரு நொடியும் வாழ இயலாதவன், கேட்டல், கூறுதல், நினைத்தல், பிரார்த்தனை செய்தல், வழிபடுதல், பகவானின் தாமைரத் திருவடிகளுக்குத் தொண்டு செய்தல், இதர தொண்டுகளைப் புரிதல், நட்பு கொள்ளுதல், பூரணமாக பகவானிடம் சரணடைதல் போன்ற பக்தித் தொண்டுகளில் ஈடுபட்டுள்ளதால், இருப்பதுநான்கு மணி நேரமும் கிருஷ்ணரைத் தவிர வேறு எதையும் நினைக்க இயலாதவனாக உள்ளான். மங்களகரமானதும் ஆன்மீக சக்தியால்; நிறைந்ததுமான இச்செயல்கள், பரம புருஷ பகவானுடன் உறவு கொள்வதே தனது ஒரே விருப்பம் எனும் நிலைக்கு பக்தனை தன்னுணர்வில் பக்குவமடையச் செய்கின்றன. அத்தகு பக்தன் கடினமின்றி பகவானை அணுகுகிறான் என்பதில் ஐயமில்லை. இதுவே யோக என்று அழைக்கப்படுகின்றது. பகவானின் கருணையினால், இத்தகு பக்தன் ஜட வாழ்விற்கு ஒருபோதும் திரும்புவதில்லை. க்ஷேம என்பது பகவானின் கருணையான பாதுகாப்பினைக் குறிக்கின்றது. கிருஷ்ண உணர்வை அடைய பக்தனுக்கு பகவான் உதவி செய்கிறார், அவன் பூரண கிருஷ்ண உணர்வை அடையும்போது, துன்பமயமான கண்டுண்ட வாழ்வில் மீண்டும் வீழ்ச்சியடையாமல் பகவான் அவனைப் பாதுகாக்கிறார்.