யே ஹி ஸம்ஸ்பர்ஷ-ஜா போகா
து: க-யோனய ஏவ தே
ஆத்-யந்தவந்த: கௌந்தேய
ந தேஷு ரமதே புத:
Synonyms:
யே — அவர்கள்; ஹி — நிச்சயமாக; ஸம்ஸ்பர்ஷ-ஜா — ஜடப் புலன்களின் தொடர்பினால்; போகா — இன்பம்; து: க — இன்பம்; யோனய: — மூலமான; ஏவ — நிச்சயமாக; தே — அவை; ஆதி — முதல்; அந்த — முடிவு; வந்த: — உட்பட்டவை; கௌந்தேய — குந்தியின் மகனே; ந — என்றுமில்லை; தேஷு — அவற்றில்; ரமதே — மகிழ்வடைவது; புத: — புத்தியுடையோர்.
Translation:
ஜடப் புலன்களின் தொடர்பினால் வரும் இன்பம், துன்பங்களுக்குக் காரணமாக இருப்பதால், அறிவுடையோன் அதில் பங்கு கொள்வதில்லை. குந்தியின் மகனே, இத்தகு இன்பங்களுக்கு ஆரம்பமும் முடிவும் இருப்பதால், அறிவுடையோன் இவற்றினால் மகிழ்ச்சியடைவதில்லை.
Purport:
பௌதிக புலன்களின் தொடர்பால் உண்டாகும் பௌதிக புலனின்பங்கள், தற்காலிகமானதாகும். ஏனெனில், உடலே தற்காலிக மானதுதானே. முக்தி பெற்ற ஆத்மா நிலையற்ற எதிலும் ஆர்வம் கொள்வதில்லை. திவ்யமான ஆனந்தத்தின் மகிழ்ச்சியினை நன்றாக அறிந்துள்ள முக்தி பெற்ற ஆத்மா, பொய்யான இன்பத்தைத் துய்ப்பதற்கு எவ்வாறு சம்மதிக்க முடியும்? பத்ம புராணத்தில் பின்வருமாறு கூறப்படுகிறது.
ரமந்தே யோகினோ (அ)னந்தே
ஸத்யானந்தே சித்-ஆத்மனி
இதி ராம-பதே நாஸெள
பரம் ப்ரஹ்மாபிதீயதே
“யோகிகள் பூரண உண்மையிடமிருந்து அளவற்ற இன்பத்தை அடைகின்றனர். எனவே, பரம பூரண உண்மையான முழுமுதற் கடவுள், ராம என்றும் அறியப்படுகின்றார்”.
ஸ்ரீமத் பாகவதத்திலும் (5.5.1) பின்வருமாறு கூறப்படுகின்றது:
நாயம் தேஹோ தேஹ- பாஜாம் ந்ரு-லோகே
கஷ்டான் காமான் அர்ஹதே விட்-புஜாம் யே
தபோ திவ்யம் புத்ரகா-யேன ஸத்த்வம்
ஷுத்த்யேத் யஸ்மாத் ப்ரஹ்ம-ஸெளக்யம் த்வனந்தம்
“எனதன்பு மகன்களே, புலனின்பத்திற்காக கடினமாக உழைக்க வேண்டிய அவசியம் இம்மனிதப் பிறவியில் இல்லை. மலத்தை உண்ணும் பன்றிக்குக் கூட இவ்வின்பம் கிடைக்கத்தானே செய்கின்றது. மாறாக, இவ்வாழ்வில் நீங்கள் தவங்களைப் புரிந்து உங்களது நிலையைத் தூய்மைப்படுத்த வேண்டும். அதன் பலனாக அளவற்ற திவ்யமான ஆனந்தத்தை உங்களால் அனுபவிக்க முடியும்”.
எனவே, உண்மையான யோகிகளும் கற்றறிந்த ஆன்மீகிகளும், பௌதிக வாழ்வின் சுழற்சிக்குக் காரணமாக விளங்கும் புலனின்பங்களால் கவரப்படுவதில்லை. ஒருவன் எந்த அளவிற்கு ஜட இன்பங்களில் மயங்குகின்றானோ, அந்த அளவிற்கு அவன் ஜடத் துன்பங்களால் சூழப்படுவான்.