விஹாய காமான் ய: ஸர்வான்
புமாம்ஷ் சரதி நி:ஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்கார:
ஸ ஷாந்திம் அதிகச்சதி
Synonyms:
விஹாய — விட்டுவிட்டு; காமான் — புலனுகர்ச்சிக்கான பௌதிக ஆசைகள்; ய: — எவன்; ஸர்வான் — எல்லா; புமான் — ஒருவன்; சரதி — வாழ்கிறான்; நிஸ்ப்ருஹ: — ஆசைகளின்றி; நிர்மம: — உரிமையாளன் என்ற உணர்வின்றி; நிரஹங்கார: — அஹங்காரமின்றி; ஸ: — அவன்; ஷாந்திம் — பக்குவமான அமைதி; அதிகச்சதி — அடைகிறான்.
Translation:
புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பங்களைத் துறந்தவனும், ஆசைகள் இல்லாதவனும், உரிமையாளன் என்னும் எல்லா உணர்வுகளைத் துறந்திருப்பவனும், அஹங்காரம் இல்லாதவனுமான ஒருவனே உண்மை அமைதியை அடைய முடியும்.
Purport:
விருப்பங்களைத் துறப்பது என்றால், புலனுகர்ச்சிக்காக எதையும் விரும்பாமல் இருப்பது என்று பொருள். வேறு விதமாகக் கூறினால், கிருஷ்ண உணர்வை அடைவதற்கான விருப்பமே, விருப்பமற்ற நிலையாகும். இந்த ஜடவுடலே தான் என்று தவறாகக் கருதாமல், இவ்வுலகின் எந்தப் பொருளுக்கும் தவறான உரிமை கொண்டாடாமல், தன்னை கிருஷ்ணரின் நித்தியத் தொண்டனாக உணர்ந்து கொள்வதே கிருஷ்ண உணர்வின் பக்குவமான நிலையாகும். இவ்வாறு பக்குவமாக நிலை பெற்றவன், கிருஷ்ணரே அனைத்திற்கும் உரிமையாளர் என்று அனைத்தையும் அவரது திருப்திக்காக உபயோகப்படுத்த வேண்டும் என்றும் அறிவான். அர்ஜுனன் தனது சுய புலனுகர்ச்சிக்காக போரிட மறுத்தான். ஆனால் பூரண கிருஷ்ண உணர்வை அடைந்த போது, அவன் போரிட வேண்டும் என்பதை கிருஷ்ணர் விரும்பியதால், போரில் ஈடுபட்டான். தனக்காகப் போரிடுவதற்கு அவனுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், கிருஷ்ணருக்காக என்பதால் தனது முழுத் திறமையும் உபயோகித்து போர் புரிந்தான். கிருஷ்ணரைத் திருப்திபடுத்த விரும்புவதே உண்மையில் ஆசைகளற்ற நிலையாகும். ஆசைகளை செயற்கையாக அழிக்க முயல்வது ஆசையற்ற நிலையாகாது. விருப்பங்களும் அறிவும் இன்றி இருக்க ஜீவனால் முடியாது. ஆனால் அந்த ஆசைகளின் தன்மையை மட்டும் மாற்ற வேண்டும். பௌதிகத்தில் பற்றுதல் இல்லாமல் திகழ்பவன், எல்லாம் கிருஷ்ணருக்கு சொந்தமானவை (ஈஷாவாஸ்யம்-இதம் ஸர்வம்) என்பதை அறிந்து, எதன் மீதும் தவறாக உரிமை கொண்டாட மாட்டான். இந்த திவ்யமான ஞானம் தன்னுணர்வை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒவ்வொரு உயிர்வாழியின் ஆன்மீக அடையாளம், கிருஷ்ணரின் நித்திய அம்சம் என்றும், உயிர்வாழியின் நித்தியமான நிலை ஒரு போதும் கிருஷ்ணருக்குச் சமமானதோ உயர்ந்ததோ அல்ல என்றும் நன்றாக அறிந்திருப்பதாகும். கிருஷ்ண உணர்வை இவ்வாறு புரிந்து கொள்வதே உண்மையான அமைதிக்கு அடிப்படையாகும்.