Sunday, December 22

பகவத் கீதை – 2.70

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஆபூர்யமாணம் அசல-ப்ரதிஷ்டம்
ஸமுத்ரம் ஆப: ப்ரவிஷந்தி யத் வத்
தத் வத் காமா யம் ப்ரவிஷந்தி ஸர்வே
ஸ ஷாந்திம் ஆப்னோதி ந காம-காமீ


Synonyms:
ஆபூர்யமாணம் — என்றும் நிறைந்த; அசல-ப்ரதிஷ்டம் — உறுதியாக நிலைத்த; ஸமுத்ரம் — கடல்; ஆப: — நீர்; ப்ரவிஷந்தி — புகுந்து; யத்வத் — உள்ளபடி; தத்வத் — அதுபோல; காம: — ஆசைகள்; யம் — எவரிடம்; ப்ரவிஷந்தி — புகுந்து; ஸர்வே — எல்லா; ஸ: — அம்மனிதன்; ஷாந்திம் — அமைதி; ஆப்னோதி — அடைகிறான்; ந — அல்ல; காம-காமீ — ஆசைகளை பூர்த்தி செய்ய விரும்புவான்.


Translation:
நதிகள் கடலில் வந்து கலந்தாலும், கடல் மாறுவதில்லை. அது போல தடையின்றி வரும் ஆசைகளால் பாதிக்கப்படாதவன் மட்டுமே அமைதியை அடைய முடியும். அத்தகு ஆசைகளை நிறைவேற்றிக் கொள்ள விரும்புபவனல்ல.


Purport:
பெருங்கடலில் எப்போதும் நீர் நிரம்பியிருந்தாலும், மழைக்காலத்தில் குறிப்பாக மேன்மேலும் நீரால் நிரம்புகின்றது. ஆயினும் கடல் எப்போதும் போல நிலையாக உள்ளது; கிளர்ச்சியடைவதோ, தனது கரையைத் தாண்டுவதோ இல்லை. கிருஷ்ண உணர்வில் நிலைபெற்றவனின் விஷயத்திலும் இஃது உண்மையாகிறது. ஜடவுடல் இருக்கும் வரை புலனுகர்ச்சிக்கான ஆசைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். தனது பூரண நிலையால், பக்தன் இத்தகு ஆசைகளால் பாதிக்கப்படுவதில்லை. கிருஷ்ண பக்தனுக்கு எதுவும் தேவையில்லை; ஏனெனில், அவனது எல்லா பௌதிகத் தேவைகளையும் இறைவனே பூர்த்தி செய்கிறார். எனவே, அவன் தன்னில் முழுமையுடைய கடலைப் போன்றவன். கடலில் நதிகள் பாய்வதைப் போல அவனிடமும் ஆசைகள் வரலாம். ஆனால் புலன் நுகர்ச்சிக்கான ஆசைகளால் சற்றும் கிளர்ச்சி அடையாமல், அவன் தனது செயல்களில் உறுதி கொண்டுள்ளான். இதுவே கிருஷ்ண உணர்வில் உள்ளவனுக்கான சான்றாகும்—ஆசைகள் இருக்கும் போதிலும், பௌதிகப் புலனுகர்ச்சிக்கான எல்லா விருப்பத்தையும் அவன் இழந்துள்ளான். இறைவனின் திவ்யமான அன்புத் தொண்டில் திருப்தியுற்று இருப்பதால், கடலைப் போன்று நிலையாக இருந்து, அவனால் அமைதியை முழுமையாக அனுபவிக்க முடிகின்றது. முக்தியை விரும்புவோர் உட்பட (பௌதிக வெற்றியைப் பற்றி என்ன சொல்வது), மற்றவர் அனைவருமே ஒருபோதும் அமைதியை அடைவதில்லை. பலன்களை விரும்பி செயலாற்றுவோர், முக்தியை விரும்புவோர், யோகிகள் (சித்திகளை விரும்புவோர்) என எல்லாருமே திருப்தியடையாத ஆசைகளினால் மகிழ்ச்சியின்றி உள்ளனர். ஆனால் கிருஷ்ண பக்தனோ இறைவனின் தொண்டில் மகிழ்ச்சியாக உள்ளான், அவனிடம் நிறைவேற்றிக் கொள்வதற்கென்று எவ்வித ஆசையும் இல்லை. பந்தமாகக் கருதப்படும் பௌதிக உலகிலிருந்து முக்தி பெறுவதற்கும் அவன் ஆசைப்படுவதில்லை. எந்த பௌதிக ஆசையும் இல்லாததால், கிருஷ்ண பக்தர்கள் அமைதியின் பக்குவநிலையில் உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question