தானி ஸர்வாணி ஸம்யம்ய
யுக்த ஆஸீத மத் பர:
வஷே ஹி யஸ்யேந்த்ரியாணி
தஸ்ய ப்ரக்ஞா ப்ரதிஷ்டிதா
Synonyms:
தானி — எவரது புலன்கள்; ஸர்வாணி — அனைத்தும்; ஸம்யம்ய — அடக்கப்பட்டனவோ; யுக்த: — ஈடுபட்டதால்; ஆஸீத — நிலைபெற்று; மத்-பர: — எனது உறவில்; வஷே — முழுமையாக; ஹி — நிச்சயமாக; யஸ்ய — எவனது; இந்த்ரியாணி — புலன்கள்; தஸ்ய — அவனது; ப்ரக்ஞா — உணர்வு; ப்ரதிஷ்டிதா — நிலைபெறுகின்றது.
Translation:
புலன்களை அடக்கி, அவற்றை முழுக் கட்டுப்பாட்டில் வைத்து, தனது உணர்வை என்னில் நிறுத்துபவன், நிலைத்த அறிவுடையவன் என்று அறியப்படுகிறான்.
Purport:
யோகத்தின் உயர்ந்த நிலை கிருஷ்ண உணர்வே என்று இப்பதத்தில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஒருவன் கிருஷ்ண உணர்வில் இல்லாவிட்டால் புலன்களைக் கட்டுப்படுத்துவது சாத்தியமல்ல. முன்னரே கூறியது போல, மாமுனிவரான துர்வாஸர், மன்னர் அம்பரீஷருடன் கலகம் ஒன்றை ஏற்படுத்தினார். வீண் கர்வத்தால் கோபம் கொண்ட துர்வாஸ முனிவரால் தனது புலன்களைக் கட்டுப்படுத்த இயலவில்லை. மறுபுறத்தில், துர்வாஸரைப் போன்ற யோக சக்திகள் இல்லாதபோதிலும், பகவானுடைய பக்தராகத் திகழ்ந்த மன்னர், முனிவரின் அநீதிகளையெல்லாம் அமைதியுடன் சகித்துக் கொண்டதன் மூலம் வெற்றி கண்டார். ஸ்ரீமத் பாகவதத்தில் (9.4.18-20) கூறியுள்ள குணங்களைப் பெற்றிருந்ததால், மன்னர் அம்பரீஷரால் தனது புலன்களைக் கட்டுப்படுத்த முடிந்தது.
ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோர்
வாசாம்ஸி வைகுண்ட-குணாணுவர்ணனே
கரௌ ஹரேர் மந்திர-மார்ஜனாதி ஷு
ஷ்ருதிம் சகாராச்யுத-ஸத்-கதோதயே
முகந்த-லிங்கா லய-தர்ஷனே த்ருஷெள
தத்-ப்ருத்ய-காத்ர-ஸ்பர்ஷே (அ)ங்க-ஸங்கமம்
க்ராணம் ச தத்-பாத-ஸரோஜ-ஸௌரபே
ஸ்ரீமத்-துளள்ய ரஸனாம் தத் அர்பிதே
பாதௌ: ஹரே: க்ஷேத்ர-பாதானுஸர்பணே
ஷிரோ ஹ்ருஷீகேஷ-பதாபிவந்தனே
காமம் ச தாஸ்யே ந து காம-காம்யயா
யதோத்தம-ஷ்லோக-ஜனாஷ்ரயா ரதி:
“மன்னர் அம்பரீஷர், தனது மனதை கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகளில் நிலைநிறுத்தினார், வார்த்தைகளை பகவானின் திருநாட்டை (வைகுண்டத்தை) வர்ணிப்பதிலும், தனது கரங்களை பகவானின் ஆலயத்தைத் தூய்மைப்படுத்துவதிலும், தனது கண்களை பகவானின் ரூபத்தைக் காண்பதிலும், தனது உடலை பக்தர்களின் உடலைத் தொடுவதிலும், தனது மூக்கினை பகவானின் தாமரைப் பாதங்களுக்கு அர்பணித்த மலர்களை முகர்வதிலும், தனது நாவினை அவருக்கு அர்ப்பணித்த துளசியை சுவைப்பதிலும், தனது பாதங்களை அவரது ஆலயம் அமைந்த புனிதத் தலங்களுக்கு யாத்திரை செல்வதிலும், தனது தலையை பகவானுக்கு நமஸ்காரம் செய்வதிலும், தனது ஆசைகளை அவரது எண்ணங்களை பூர்த்தி செய்வதிலும் ஈடுபடுத்தினார்… இந்த குணங்களே அவரை இறைவனின் மத்-பர பக்தனாக ஆவதற்குத் தகுதியுடையவராக்கின.”
மத்-பர என்னும் சொல் இங்கே மிகவும் முக்கியமானதாகும். ஒருவன் எப்படி மத்-பர நிலையை அடைவது என்பது மன்னர் அம்பரீஷரின் வாழ்வில் விளக்கப்பட்டுள்ளது. மத்-பர பக்தர்களின் பரம்பரையில் வந்த சிறந்த பண்டிதரும் ஆச்சாரியருமான ஸ்ரீல பலதேவ வித்யாபூஷணர் கூறுகிறார், மத்-பக்தி-ப்ரபாவேன ஸர்வேந்த்ரிய-விஜய-பூர்விகா ஸ்வாத்ம-த்ருஷ்டி: ஸுலபேதி பாவ: “கிருஷ்ண பக்தித் தொண்டின் பலத்தினால் மட்டுமே புலன்களை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.” சில சமயங்களில் நெருப்பின் உதாரணமும் கொடுக்கப்படுவதுண்டு: “கொழுந்து விட்டெறியும் நெருப்பு ஓர் அறையிலுள்ள அனைத்தையும் எரிந்து விடுவதைப் போல, யோகியின் இதயத்தில் அமர்ந்துள்ள பகவான் விஷ்ணு எல்லாக் களங்கங்களையும் எரித்து விடுகிறார். யோக சூத்திரமும் விஷ்ணுவின் மீது தியானிப்தையே அறிவுறுத்துகிறது. சூன்யத்தில் மேலல்ல. விஷ்ணுவைத் தவிர, வேறு ஏதாவதொன்றின் மீது தியானம் செய்யும் பெயரளவு யோகிகள் ஏதோ மாயக் கண்ணாடியைத் தேடுவதில் தங்கள் நேரத்தை விரயம் செய்கின்றனர். பரம புருஷ பகவானுக்கு பக்தி செய்து நாம் கிருஷ்ண உணர்வுடையவராக இருக்க வேண்டும். இதுவே உண்மையான யோகத்தின் இலட்சியமாகும்.