யததோ ஹ்யபி கௌந்தேய
புருஷஸ்ய விபஷ் சித:
இந்த்ரியாணி ப்ரமாதீனி
ஹரந்தி ப்ரஸபம் மன:
Synonyms:
யதத: — முயற்சி செய்கையில்; ஹி — நிச்சயமாக; அபி — இருந்தும்கூட; கௌந்தேய — குந்தியின் மகனே; புருஷஸ்ய — மனிதனின்; விபஷ்சித: — பகுத்தறிவு நிறைந்த; இந்த்ரியாணி — புலன்கள்; ப்ரமாதீனி — கிளர்ச்சியுட்டும்; ஹரந்தி — பலவந்தமாக; ப்ரஸபம் — வலுக்கட்டாயமாக; மன: — மனதை.
Translation:
அர்ஜுனா, கட்டுப்படுத்த முயலும் பகுத்தறிவுடைய மனிதனின் மனதையும், பலவந்தமாக இழுத்துச் செல்லுமளவிற்குப் புலன்கள் சக்தி வாய்ந்ததும் அடங்காததுமாகும்.
Purport:
கற்றறிந்த முனிவர்கள், தத்துவவாதிகள், ஆன்மீகவாதிகள் என்று பலரும் புலன்களை வெற்றி கொள்ள முயற்சி செய்கின்றனர். ஆனால் தங்களது முயற்சிகளுக்கு மத்தியிலும், மனக் கிளர்ச்சியின் காரணமாக, இவர்களில் மிகச்சிறந்தவர்களும் பௌதிகப் புலனின்பத்திற்கு இரையாகி விடுகின்றனர். கடுமையான தவத்தையும் யோகப் பயிற்சியையும் மேற்கொண்டு புலன்களை அடக்க முயற்சி செய்த, பக்குவமான யோகியும் சிறந்த முனிவருமான விஸ்வாமித்திரர் மேனகையினால் பாலுறவு வாழ்விற்கு அழைத்து செல்லப்பட்டார். உலக சரித்திரத்தில் இதுபோன்ற பல சம்பவங்கள் இருப்பது உண்மையே. எனவே, பூரண கிருஷ்ண உணர்வின்றி புலன்களையும் மனதையும் கட்டுப்படுத்துதல் மிகமிக கடினமாகும். மனதை கிருஷ்ணரில் ஈடுபடுத்தாமல், இதுபோன்ற ஜட விவகாரங்களை நிறுத்துவது இயலாது. இதற்கான நடைமுறை உதாரணம், மிகச்சிறந்த சாதுவும் பக்தருமான ஸ்ரீ யமுனாசாரியாரால் கூறப்பட்டுளள்ளது:
யத் அவதி மம சேத: க்ருஷ்ண-பாதாரவிந்தே
நவ-நவ-ரஸ-தாமன்-யுத்யதம் ரந்தும் ஆஸீத்
தத் அவதி பத நாரீ-ஸங்கமே ஸ்மர்யமானே
பவதி முக-விகார: ஸுஷ்டு நிஷ்டீவனம் ச
“பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பாத கமலங்களின் தொண்டில் என் மனம் ஈடுபட்டிருப்பதால், என்றும் புதுமையாகத் திகழும் தெய்வீக இன்பத்தை நான் அனுபவித்துக் கொண்டுள்ளேன். பெண்களுடனான பாலுறவு வாழ்வினை நான் எப்போதாவது எண்ணினால், உடனே என் முகத்தை அதிலிருந்து திருப்பி அவ்வெண்ணத்தின் மீது நான் காறி உமிழ்கிறேன்.”
தானாகவே பௌதிக இன்பம் சுவையற்றுப் போகுமளவிற்கு, கிருஷ்ண பக்தி உன்னதமான சுவையுடையதாகும். சத்தான உணவுப் பொருள்களை போதுமான அளவு உண்பதன் மூலம், பசியிலிருப்பவன் தன் பசியைத் தீர்த்துக் கொள்வதைப் போன்றது இது. மனம் கிருஷ்ண உணர்வில் ஈடுபட்டிருந்ததால், அம்பரீஷ மகாராஜரால், பெரும் யோகியான துர்வாஸ முனிவரையும் வெல்ல முடிந்தது. (ஸ வை மன: க்ருஷ்ண-பதாரவிந்தயோர் வசாம்ஸி வைகுண்ட-குணானுவர்ணனே).