Wednesday, October 30

பகவத் கீதை – 6.35

இந்த பதிவை எளிதில் பகிர 👇🏻

ஸ்ரீ-பகவான் உவாச
அஸம்ஷயம் மஹா-பாஹோ
மனோ துர்நிக்ரஹம் சலம்
அப்யாஸேன து கௌந்தேய
வைராக்யேண ச க்ருஹ்யதே

Synonyms:

ஸ்ரீ-பகவான் உவாச — புருஷோத்தமரான முழுமுதற் கடவுள் கூறினார்; அஸம்ஷயம் — சந்தேகமின்றி; மஹா-பாஹோ — பலம் பொருந்திய புயங்களை உடையவனே; மன: — மனம்; துர்நிக்ரஹம் — அடக்கக் கடினமானது; சலம் — சஞ்சலமானது; அப்யாஸேன — பயிற்சியினால்; து — ஆனால்; கௌந்தேய — குந்தியின் மகனே; வைராக்யேண — பற்றின்மையினால்; ச — மேலும்; க்ருஹ்யதே — கட்டுப்படுத்தக்கூடியது.

Translation:
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்: பலம் பொருந்திய புயங்களை உடைய குந்தியின் மகனே, அமைதியற்ற மனதை அடக்குவது சந்தேகமின்றி மிகவும் கடினமே. ஆனால் தகுந்த பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியமாகும்.

Purport:

அடங்காத மனதைக் கட்டுப்படுத்துவது சிரமம் எனும் அர்ஜுனனின் கூற்று, முழு முதற் கடவுளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், அதே சமயத்தில் பயிற்சியினாலும் பற்றின்மையாலும் அது சாத்தியம் என்கிறார் அவர். அஃது என்ன பயிற்சி? புனித ஸ்தலத்தில் வசித்தல், பரமாத்மாவின் மீது மனதைச் செலுத்துதல், புலன்களையும் மனதையும் அடக்குதல், பிரம்மசரியத்தைப் பின்பற்றுதல், தனிமையாக இருத்தல் போன்ற கடுமையான சட்டதிட்டங்களை தற்காலத்தில் யாராலும் கடைப்பிடிக்க முடியாது. ஆனால் கிருஷ்ண உணர்வின் ஒன்பது விதமான பக்தித் தொண்டில் ஈடுபட முடியும். இந்த ஒன்பது பக்தி நெறிகளில் முதலாவதும் முக்கியமானதும், கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதாகும். எல்லாக் களங்கத்திலிருந்தும் மனதை விடுவிக்க, இஃது ஒரு சக்திவாய்ந்த திவ்யமான வழிமுறையாகும். கிருஷ்ணரைப் பற்றி எந்த அளவிற்கு ஒருவன் கேட்கின்றானோ, அந்த அளவிற்கு, கிருஷ்ணரிடமிருந்து மனதைப் பிரிக்கும் விஷயங்களிலிருந்து விடுபட்டு அவன் தெளிவடைகிறான். இறைவனுக்கு பக்தி செய்யாத செயல்களிலிருந்து மனதை விலக்குவதால், எளிதாக வைராக்யத்தை (பற்றின்மையை) கற்க முடியும். வைராக்ய என்றால் மனதை பௌதிகத்திலிருந்து விடுத்து ஆன்மீகத்தில் ஈடுபடுத்துவதாகும். அருவவாத ஆன்மீகத் துறவைக் காட்டிலும் மனதை கிருஷ்ணரிடம் பற்றுதல் கொள்ளச் செய்தல் எளிதானதாகும். கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பவன் இயற்கையாகவே பரமாத்மாவின்மீது பற்றுதல் கொள்வதால், இது நடைமுறைக்கு உகந்ததாகும். இந்தப் பற்றே பரேஷானுபவ (ஆன்மீகத் திருப்தி) என்று அழைக்கப்படுகிறது. இது பசிமிக்கவன் தான் உண்ணும் ஒவ்வொரு கவளத்திலும் திருப்தியடைவதைப் போன்றதாகும். பசியுடன் உள்ளவன், எந்த அளவிற்கு உண்கின்றானோ, அந்த அளவிற்கு திருப்தியும் பலமும் பெறுகிறான். அதுபோலவே, பக்தித் தொண்டை நிறைவேற்றுவதால், மனம் ஜடப் பொருள்களிலிருந்து விடுபட, ஒருவன் திவ்யமான திருப்தியை உணர்கிறான். இது நல்ல மருத்துவ சிகிச்சையின் மூலமும் முறையான உணவின் மூலமும் நோயை குணப்படுத்துவதைப் போன்றதாகும். எனவே, பைத்தியம் பிடித்த மனதிற்கான சிறந்த மருந்து பகவான் கிருஷ்ணரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதாகும், மேலும், துன்பப்படும் நோயாளிக்கான உகந்த உணவு கிருஷ்ணருக்குப் படைக்கப்பட்ட உணவை உண்பதாகும். இந்த மருத்துவமே கிருஷ்ண உணர்வின் வழிமுறையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: ஹரே கிருஷ்ண !! Click What\\\\\\\'s app button below.
Question