யோ மாம் பஷ்யதி ஸர்வத்ர
ஸர்வம் ச மயி பஷ்யதி
கதஸ்யாஹம் ந ப்ரணஷ்யாமி
ஸ ச மே ந ப்ரணஷ்யதி
Synonyms:
ய: — யாராயினும்; மாம் — என்னை; பஷ்யதி — காண்கிறானோ; ஸர்வத்ர — எங்கும்; ஸர்வம் — எதிலும்; ச — மேலும்; மயி — என்னில்; பஷ்யதி — காண்கிறான்; தஸ்ய — அவனுக்கு; அஹம் — நான்; ந — இல்லை; ப்ரணஷ்யாமி — இழந்துபோவது; ஸ: — அவன்; ச — மேலும்; மே — எனக்கு; ந — இல்லை; ப்ரணஷ்யதி — இழப்பது.
Translation:
என்னை எல்லா இடங்களிலும், எல்லாவற்றையும் என்னிலும் காண்பவன் என்னை ஒருபோதும் இழப்பதில்லை. நானும் அவனை ஒருபோதும் இழப்பதில்லை.
Purport:
கிருஷ்ண பக்தன், கிருஷ்ணரை எங்கும் காண்பதும், கிருஷ்ணரில் எல்லாவற்றையும் காண்பதும் நிச்சயமே. ஜட இயற்கையின் தனித்தனித் தோற்றங்களை அவன் காண்பதுபோல இருந்தாலும், எல்லாம் கிருஷ்ண சக்தியின் தோற்றங்களே என்பதை அறிந்து, ஒவ்வொன்றிலும் அவன் கிருஷ்ணரை உணர்கிறான். கிருஷ்ணரின்றி எதுவுமே இருக்க முடியாது, கிருஷ்ணரே எல்லாவற்றின் இறைவன்—இதுவே கிருஷ்ண உணர்வின் அடிப்படைக் கொள்கையாகும். கிருஷ்ண உணர்வு கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்ப்பதாகும்—இது ஜடத்திலிருந்து முக்தியடைவதை விட உயர்ந்த நிலையாகும். தன்னுணர்விற்கு அப்பாற்பட்ட கிருஷ்ண உணர்வின் இந்நிலையில், பக்தனுக்கு கிருஷ்ணரே எல்லாமாகி விடுவதாலும், பக்தன் கிருஷ்ணரின் மீதான அன்பில் முழுமையடைவதாலும், பக்தன் கிருஷ்ணருடன் ஒன்றாகிவிடுவதாகக் கூறலாம். பின்னர், கிருஷ்ணருக்கும் பக்தனுக்கும் இடையே ஒரு நெருங்கிய உறவு தொடங்குகிறது. அந்நிலையில் ஜீவனை அழிக்கவோ, பக்தனின் பார்வையிலிருந்து பரம புருஷரை விலக்கவோ இயலாது. கிருஷ்ணரில் கலப்பது ஆன்மீக அழிவாகும். பக்தன் அத்தகு அபாயத்தை ஏற்பதில்லை. பிரம்ம சம்ஹிதையில் (5.38) கூறப்பட்டுள்ளது:
ப்ரேமாஞ்ஜன-ச்சுரித-பக்தி-விலோசனேன
ஸந்த: ஸதைவ ஹ்ருதயேஷு விலோகயந்தி|
யம் ஷ்யாமஸுந்தரம் அசிந்த்ய-குண-ஸ்வரூபம்
கோவிந்தம் ஆதி-புருஷம் தம் அஹம் பஜாமி
“பிரேமை என்னும் மையினால் அலங்கரிக்கப்பட்ட பக்தரின் கண்களால் எப்போதும் காணப்படும் ஆதி புருஷரான கோவிந்தனை நான் வணங்குகிறேன். பக்தரின் இதயத்தில் வீற்றுள்ள அவர், தனது நித்தியமான சியாமசுந்தர ரூபத்தில் எப்போதும் காணப்படுகிறார்.”
இந்த நிலையிலுள்ள பக்தனின் பார்வையை விட்டு பகவான் விலகுவதில்லை, பக்தனும் அவரது தரிசனத்தை இழப்பதில்லை. இறைவனை இதயத்தினுள் பரமாத்மாவாகக் காணும் யோகியின் விஷயத்திலும் இதுவே உண்மை. தூய பக்தனாக மாறக்கூடிய இத்தகு யோகி, தனக்குள் இறைவனைக் காணாமல் ஒரு கணமும் வாழ முடியாதவனாகி விடுகிறான்.
Super